Friday 24 June 2011

செய்திகள் 24/06


தமிழருக்கு என தனியான கணக்கெடுப்பு!
இராணுவ பதிவு நடைமுறைக்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் தனது நேரடிக் கண்காணிப்பில் தனியான சனத்தொகை விபரம் திரட்டல் நடவடிக்கையொன்றை மேற்கொள்ள பாதுகாப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
யாழ். குடாநாட்டிலும் வன்னியிலும் இராணுவம் பதிவுகளை மேற்கொள்வதற்கு அரசியல் கட்சிகளிடம் இருந்தும் மக்களிடம் இருந்தும் கடுமையான எதிர்ப்புக் கிளம்பியதை அடுத்தே பாதுகாப்பு அமைச்சின் மூலம் தனியான குடிசன மதிப்பீடுகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
சனத்தொகை மதிப்பீட்டுப் புள்ளிவிவரத் திணைக்களம் மேற்கொள்ள உள்ள சனத்தொகைக் கணக்கெடுப்புப் பணிகளுக்கு மேலதிகமாக வடக்கில் மட்டும் இந்த விசேட கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.
இதற்கென தெற்கில் இருந்து சிறப்பு அதிகாரிகள் குழுக்களும் வருகைதரவுள்ளன.
புள்ளிவிவரத் திணைக்களத்தினால் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட முதல்கட்டப் பணிகளின் அடிப்படையில் பாதுகாப்பு அமைச்சின் சனத்தொகை மதிப்பீட்டுப் பணிகள் இடம்பெறும் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அமைச்சின் குடிசன மதிப்பீட்டில் வீட்டில் உள்ளவர்கள், வெளியில் உள்ளவர்கள், காணாமல்போனவர்கள், அண்மையில் மரணம் அடைந்தவர்கள், வீட்டில் தங்கியிருக்கும் வெளியாட்கள் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.
வடக்கில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் பதிவுகள் கூட்டமைப்பின் நீதிமன்ற நடவடிக்கைகளை அடுத்துக் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் பாதுகாப்பு அமைச்சின் தனியான கணக்கெடுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
********************

இனப்படுகொலையை மூடிமறைப்பது எப்படி? ஆலோசிக்கும் மகிந்த
அனைத்துலக ரீதியாக எழுந்துள்ள போர்க்குற்றச்சாட்டுகளைத் தோற்கடிப்பது குறித்து, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச நியுயோர்க்கிலுள்ள ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுடன் தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார்.
சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த ஆவணப்படத்தை முன்னிறுத்தி சிறிலங்காவுக்கு எதிரான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்த பரப்புரைகள் நியுயோர்க்கில் தீவிரமடைந்துள்ள நிலையிலேயே மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுடன் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கலந்துரையாடியுள்ளார்.
நேற்று இடம்பெற்ற இந்த தொலைபேசி மூலமான உரையாடலின் போது, சனல்-4 ஆவணப்படத்தைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் சிறிலங்காவுக்கு எதிரான பரப்புரைகளை முறியடிக்க எல்லாவிதமான உத்திகளையும் கையாளுமாறு சிறிலங்கா அதிபர் பணித்துள்ளார்.
அத்துடன் சனல்-4 ஆவணப்படத்தின் மூலம் சிறிலங்காவின் பெயரைக் கெடுக்க அனைத்துலக நிறுவனங்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை முறியடிப்பதில் திறமையாகச் செயற்படுவதாக மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவுக்கு சிலங்கா அதிபர் பாராட்டும் தெரிவித்துள்ளார்.
ஐ.நா வளாகத்தில் தேவாலய நிலையத்தில் இந்த ஆவணப்படம் திரையிடப்பட்டபோது அங்கு அழையா விருந்தாளியாக நுழைந்த மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா அதைக் குழப்பும் வகையில் தன்னிலை விளக்கம் கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்காகவே, சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவினால் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா பாராட்டப்பட்டுள்ளார்.
சனல்-4 குற்றச்சாட்டுகள் பொய்யானது- போலியானது என்று சவீந்திர சில்வா நிருபிப்பார் என்றும் சிறிலங்கா அதிபர் இந்த தொலைபேசி உரையாடலின் போது நம்பிக்கை வெளியிட்டதாகவும் சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
********************
தீர்வுக்கு தயாரா? ஐதேக
சகலரும் ஏற்றுக்கொள்ளத்தக்கதான அரசியல் தீர்வொன்றை அரசாங்கம் முன்வைக்கும் பட்சத்தில் ஐ.தே.க. அதற்கு ஆதரவு வழங்கத் தயாராக இருப்பதாக அதன் உபதலைவரான லக்ஷ்மண் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
மேலும் ஐக்கிய தேசியக்கட்சியானது ஆரம்பம் தொட்டு இனப்பிரச்சினை விடயத்தில் அரசியல் தீர்வுக்கான நடைமுறைகளை ஆதரித்து வந்திருப்பதாகவும் அவர் தொடர்ந்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் பதவிக்கு வந்த பின் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு மற்றும் அதன் பின் நியமிக்கப்பட்ட சர்வகட்சிக் குழு என்பன மூலம் அரசியல் தீர்வு குறித்து முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை தமிழ்த்தரப்பினரும் ஏற்றுக் கொண்டுள்ள நிலையில், அதனை அடிப்படையாக வைத்துக் கொண்டு அரசியல் தீர்வுக்கான முயற்சிகளை முன்னெடுப்பது பொருத்தமானதாக இருக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அரசியல் தீர்வுக்கான செயற்பாடுகளை விரைவாக முன்னெடுப்பதுடன், நாடாளுமன்றக் குழு போன்ற காலம் தாழ்த்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் கைவிட வேண்டும் என்றும் அவர் மேலும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
********************
நம்பிக்கையில்லாத பேச்சு!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் நேற்று இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் கூட நம்பிக்கை ஊட்டக் கூடியதான முன்னேற்றத்துக்குரிய சமிக்ஞைகளை வெளிப்படுத்தவில்லை எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
அரசுடனான நேற்றைய பேச்சுவார்த்தை தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 13 ஆவது திருத்தச் சட்டமூலத்தின் ஊடான மாகாண சபை முறையில் குறித்துரைக்கப்படும் ஒத்தியங்கல் பட்டியல் தொடர்பில் தாம் சுட்டிக் காட்டி இந்த ஒத்தியங்கல் பட்டியலிலுள்ள பல விடயங்களை மாகாண சபைக்கு வழங்க வேண்டுமென்றும் தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
ஆனால் அரசு தரப்பினர் இதனை முழுமையாக ஏற்க மறுத்து விட்டனர் என்றும் ஒத்தியங்கல் பட்டியலிலுள்ள சில விடயங்களை மட்டும் மாகாண சபைக்கு வழங்குவது குறித்து கவனம் செலுத்த முடியுமென்ற கருத்தையே அவர்கள் அங்கு வெளியிட்டனர் என்றுநும் தெரிவித்துள்ளார்.
அவர்கள் இவ்வாறு தெரிவித்தமை தம்மைப் பொறுத்த வரையில் திருப்பதியளிக்கக் கூடியதாக இருக்கவில்லை எனவும் குறிப்பிட்டார்.
"ஒத்தியங்கல் பட்டியல்" தொடர்பில் ஒரு வாரத்துக்குள் ஓர் ஆவணத்தை தம்மிடம் தருவதாகவும் அவர்களால் தமக்கு உறுதியளிக்கப்பட்டது என்றும் அந்த ஆவணம் தொடர்பில் மீண்டும் 26 ஆம் திகதி இருதரப்பும் கூடும் போது தமது கருத்துகளைத் தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
********************
நடக்காத பேச்சு எதற்கு? துரைரட்ணசிங்கம்.
அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையிலான பேச்சில் உடன்பட்ட விடயங்கள் எவற்றையும் அரசாங்கம் மேற்கொள்ளாததால் திருமலை மாவட்ட மக்கள் இந்தப் பேச்சுக்களில் அவநம்பிக்கை கொண்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.துரைரட்ணசிங்கம் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்; தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் 8க்கும் மேற்பட்ட தடவைகள் பேச்சுகள் இடம்பெற்றுள்ளன.
எனினும் பேச்சில் உடன்பட்ட விடயங்கள் எவற்றையும் அரசாங்கம் நிறைவேற்றவில்லை.
தனக்கு தெரிந்தளவில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் எவையும் மேற்கொள்ளப்படவில்லை.
உதாரணமாக, உயர்பாதுகாப்பு வலயமெனக் கூறி வெளியேற்றப்பட்ட சம்பூர் மக்கள் மீள்குடியேற்றப்படவில்லை.
இதனால் இம்மக்கள் இன்றும் இடம்பெயர்ந்து முகாம்களில் அகதி வாழ்வை வாழ்கின்றனர்.
இங்கு 800 ஏக்கரில் 350 ஏக்கரில் மக்களை முதல் கட்டமாக மீளக்குடியேற்றினால் அங்குள்ள வளமான காணிகளில் தமது வாழ்க்கையை மக்கள் கொண்டு செல்வதற்கு உதவியாக அமையும்.
அதுமட்டுமன்றி நாட்டின் பொருளாதாரத்துக்கும் அம்மக்களால் பங்களிப்புச் செய்ய முடியும்.
இம்மக்கள் மீள்குடியேற்றப்படாது கஷ்டத்தின் மத்தியில் வாழ்கின்றனர்.
அதேபோல தம்பலகமம், புதுக்குடியிருப்பு, பாரதிபுரம் பகுதியில் தமிழ் மக்கள் காணிகளிலும் பொது இடங்களிலும் விரஜயபுர வீட்டுத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
முதல்கட்ட 30 வீட்டுத் திட்டத்தில் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு முறையே தலா பத்து வீடுகள் வழங்கப்பட்டன.
இரண்டாவது கட்டத்தில் கட்டப்படவுள்ள 30 வீடுகள் கொண்ட தொகுதியில் இரு வீடுகள் தமிழருக்கும் 4 வீடுகள் முஸ்லிம்களுக்கும் 24 வீடுகள் சிங்கள மக்களுக்கும் அளிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகின்றது.
முதலில் வீட்டுத் திட்டமென ஆரம்பித்து பின் சிங்களவர்களை குடியேற்றும் நடவடிக்கை இடம்பெறுகின்றது.
இம்மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் வீடின்றியிருக்க வெளியிடங்களைச் சேர்ந்தவர்களுக்கு இவை வழங்கப்படுகின்றமை எந்தளவு நியாயமானது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
இதனால் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையிலான பேச்சில், குறிப்பாக தமது மாவட்ட மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.
********************
இனப்படுகொலை அணியின் துடுப்பாட்டத்தை புறக்கணிக்க அழைப்பு
சிறிலங்காவிற்கும் இங்கிலாந்திற்குமிடையில் எதிர்வரும் 25ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2:30 மணிக்கு பிரிஸ்டல் கவுன்றி மைதானத்தில் நடைபெறவிருக்கும் 20:;20 கிரிக்கெட் விளையாட்டின்போது, பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினால் மேற்கொள்ளப்படவிருக்கும் சிறிலங்கா கிரிக்கெட் புறக்கணிப்பு போராட்டத்தில் பங்குபற்றி போராட்டம் முழு வெற்றி பெறுவதற்கு ஆதரவளிக்குமாறு, பிரித்தானிய தமிழர் பேரவை தமிழ் மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
கடந்த மே மாதம் இங்கிலாந்தின் பல்வேறு மைதானங்களிலும் சிறிலங்காவிற்கும் இங்கிலாந்திற்குமிடையில் நடைபெற்ற கிரிக்கெட் போட்டிகளின்போது தமிழ் இளையோர் அமைப்பு தொடர்ச்சியாக சிறிலங்கா கிரிக்கெட் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தியிருந்தது.
இந்தப் போராட்டங்களில் கலந்து கொண்ட தமிழ் மக்கள், சிறிலங்கா அரசாங்கத்தின் தமிழ் மக்களுக்கெதிரான இன அழிப்பு பற்றிய தகவல்களை பார்வையாளர்களுக்கு எடுத்துக்கூறியும், துண்டுப் பிரசுரங்களை வழங்கியும் சிறிலங்காவின் கிரிக்கெட்டை புறக்கணிக்குமாறு கோரி வருகின்றமை பல்வேறு மட்டங்களிலும் கவனத்தை ஈர்த்திருக்கின்றது.
இந்த நிலையில், எதிர்வரும் 25ஆம் திகதி பிரிஸ்டலில் (டீசளைவழட) நடைபெறவிருக்கும் முதலாவது 20-20 போட்டியின்போது ஏராளமான பார்வையாளர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுவதால், அன்றைய தினம் நடைபெறவிருக்கும் சிறிலங்கா கிரிக்கெட் புறக்கணிப்பு போராட்டத்தில் பெரும் எண்ணிக்கையில் தமிழ் மக்கள் பங்குபற்ற வேண்டும் என்று பிரித்தானிய தமிழர் பேரவை கேட்டுக்கொள்கின்றது.
சனல் 4 தொலைக்காட்சியில் சிறிலங்காவின் கொலைக்களங்கள் எனும் மிகக் கொடூரமான ஆவணப்படம் வெளியாகி அனைத்து இன மக்களும் சிறிலங்கா அரசின் இன அழிப்பினை அறிந்திருக்கும் இந்த வேளையில், இந்தப் போட்டியில், போர்க்குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள அரசாங்கமான மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் சனத் ஜெயசூரியாவும் விளையாட இருப்பதால், அன்றைய போராட்டம் முக்கியம் பெறுகின்றது.
சிறிலங்கா அரசாங்கம் அதன் மீதான போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச ரீதியிலான சுயாதீனமான விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டனைக்கு உட்படுத்தப்படும்வரை சர்வதேச ரீதியிலான சகல விளையாட்டுப் போட்டிகளிலும் சிறிலங்கா பங்குபற்றுவதை தடை விதிப்பதற்கு, அழுத்தம் கொடுக்கும் போராட்டங்களை தமிழ் மக்கள் சர்வதேச அளவில் இனிவரும் காலங்களில் தீவிரப்படுத்த வேண்டும்.
இதன் ஒரு பகுதியாக இங்கிலாந்து கிரிக்கெட் சபை, சர்வதேச கிரிக்கெட் வாரியம், சர்வதேச விளையாட்டு வீரர்கள், உள்ளுர் விளையாட்டுக் கழகங்கள், ஊடகங்கள், கிரிக்கெட் கவுன்டிஸ் (ஊசiஉமநவ உழரவெல), உள்ளூர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நகரசபை உறுப்பினர்கள் ஆகியோரிற்கு இலங்கையின் இன அழிப்பு தொடர்பாகவும், தாய்நாட்டில் தமிழர்களின் இன்றைய அவல நிலை தொடர்பாகவும் கடிதங்கள் எழுதி, ஆவணங்களை அனுப்பி அவர்கள் மூலமாக சர்வதேச விளையாட்டு அரங்குகளில் இருந்து சிறிலங்காவை தடைசெய்ய உதவுமாறு பிரித்தானிய தமிழர் பேரவை வேண்டுகோள் விடுக்கின்றது.
இப்புறக்கணிப்புப் போராட்டத்தில் பங்குபற்றுவதற்காக பிரித்தானியாவின் சகல பகுதிகளில் இருந்தும் போக்குவரத்து ஒழுங்குகளை தமிழ் இளையோர் அமைப்பு செய்துள்ளதையும், பிரித்தானிய தமிழர் பேரவை சுட்டிக்காட்டியுள்ளது.
********************