Friday 10 June 2011

செய்திகள் 10/06


அமெரிக்க இரட்டை வேடம்!

போருக்குப் பின்னரான சூழலில் அமெரிக்கா தொடர்ந்தும் சிறிலங்கா கடற்படைக்கு உதவிகளை வழங்கும் என்று அமெரிக்கக் கடற்படையின் பசுபிக் பிராந்திய கட்டளைத் தளபதி அட்மிரல் றொபேட் எவ்.வில்லாட் உறுதியளித்துள்ளார்.
சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்கவை சிங்கப்பூரில் சந்தித்துப் பேசிய போதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.
சங்கிரிலா கருத்தரங்கு என்ற பெயரில் சிங்கப்பூரில் நடத்தப்பட்ட ஆசிய பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்கச் சென்றிருந்த போதே, அமெரிக்க- சிறிலங்கா கடற்படைத் தளபதிகளுக்கு இடையிலான இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறிலங்கா அரசாங்கம் வெற்றி பெறுவதற்கு அமெரிக்கா வழங்கிய உதவிகள் குறித்து தாம் எப்போதும் மதிப்புடன் நோக்குவதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி இந்தச் சந்திப்பின்போது, அமெரிக்கத் தளபதியிடம் கூறியுள்ளார்.
அதேவேளை, சிறிலங்காவின் போருக்குப் பிந்திய நிலைமைகள் தொடர்பாக அமெரிக்கத் தளபதி விபரங்களைக் கேட்டறிந்துள்ளார்.
குறிப்பாக சிறிலங்கா கடற்படை தொடர்பாகவும், விடுதலைப் புலிகளின் ஆயுதக் கப்பல்களை மூழ்கடிக்கும் நடவடிக்கையில் பங்கேற்ற- அமெரிக்கா வழங்கிய 'சமுத்திர' என்ற போர்க்கப்பலின் செயற்பாடு பற்றியும் அவர் விபரங்களைக் கேட்டறிந்து கொண்டுள்ளார்.
அமைதி திரும்பியுள்ள நிலையில் அமெரிக்கப் போர்க்கப்பல்கள் சிறிலங்கா துறைமுகங்களுக்கு வரமுடிந்துள்ளதாகவும், எனவே சிறிலங்காவுக்கான பயணங்களை அவை மேற்கொள்ள வேண்டும் என்றும் சிறிலங்கா கடற்படைத் தளபதி இந்தச் சந்தப்பின் போது வேண்டுகோள் விடுத்துள்ளார்.
************

தடுத்து வைக்கப்பட்டுள்ளோர் எத்தனை பேர்?
பூஸா, கொழும்பு, வவுனியா தடுப்புமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 839 தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க அங்கத்தவர்களில் இருவருக்கு எதிராக மாத்திரமே குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் அறிவித்தது.
ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்ககையில் அரசாங்கத் தரப்பு பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன இதைத் தெரிவித்தார்.
அரசாங்கம் தெரிவித்த எண்ணிக்கையை ஆட்சேபித்த அநுரகுமார திசாநாயக்க அமைச்சர்கள் 11ஆயிரம், 12ஆயிரம், 15ஆயிரம் என பல்வேறு எண்ணிக்கையில் விடுதலைப் புலிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தனர்.
ஆனால் இன்று அரசாங்கத் தரப்பு பிரதம கொறடா 839 பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்.
பூஸா, வவுனியா, கொழும்பு ஆகிய 3 தடுப்பு முகாம்கள் மாத்திரமே குறிப்பிடப்பட்டது.
தனக்குத் தெரிந்தவரை வெலிகந்தை, திருகோணமலை ஆகிய இடங்களிலும் தடுப்புமுகாம்கள் உள்ளன என்றார்.
அப்போது அமைச்சர் தினேஷ் குணவர்தன பேசுகையில், பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே தான் பதிலளித்தாக தெரிவித்தார்.
இதேவேளை, தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலியினருக்கு எதிரான நீதிவிசாரணைகள் சிங்கள மொழியில் நடத்தப்படுவதால் அவர்கள் பெரும் பிரச்சினையை எதிர்நோக்குவதாக அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.
அப்போராளிகள் சிங்கள மொழி பரிச்சயமானவர்கள் அல்லர் எனவும் அத்தகைய ஒருவருடன் தான் பேசியதாகவும் அவருக்கு நீண்ட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் அதை அறிந்திருக்கவில்லை என அவர் கூறினார்.
************

நோர்வேயுடன் உறவு?
நோர்வேயுடன், போருக்குப் பின்னரான புதிய அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்கான பேச்சுக்களில் ஈடுபட அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதுவராக செயற்பட்ட எரிக் சொல்ஹெய்முடன் ஒஸ்லோவில் பேச்சுக்கள் நடத்த மகிந்த ராஸபக்ஸ அனுமதியளித்துள்ளதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
பாணந்துறையில் உள்ள புதிய மீன்பிடித் துறைமுகத்தை திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
போருக்கு பின்னர் இயல்புநிலையை ஏற்படுத்துவதற்காக அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் மீள்கட்டுமானப்பணிகள் தொடர்பாக எரிக் சொல்ஹெய்மிடம் விளக்கமளிக்கவுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
இலங்கை மக்களை பாதிப்படையச் செய்யக்கூடிய பொருளாதாரத்தடையை இலங்கை மீது விதிக்கக்கூடாது என்று ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த பிரிதிநிதிகளை ஏற்கனவே சந்தித்து கலந்துரையாடியுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
************
இராணுவ மயமாகும் தேசம்!
அமெரிக்க கடவுச் சீட்டை உடைய அரசாங்கத்தின் உயரதிகாரியொருவர் நாட்டை இராணுவ மயப்படுத்த முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளும் இராணுவ மயப்படுத்தப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக மாத்தறை மாவட்டம் அரசாங்கத்தின் திட்டங்களினால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் பூர்த்தியடைந்த போதிலும் அரசாங்கம், மக்களை அமைதியாக வாழ்வதற்கு இடமளிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
****************
நீதிமன்ற அவமதிப்புக்கு அனுமதியா?
யாழ் மாவட்டத்தில் சிவில் உடையில் வரும் இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று புதிய முறையில் இராணுவப் பதிவுகளை மேற்கொள்வதனாலும், வீட்டிலுள்ளவர்களை வித்தியாசமான கோணங்களில் விசாரணை செய்து வருவதனாலும் மக்கள் மத்தியில் பீதியும் பதற்றமுமானதொரு நிலை காணப்படுகின்றது.
இராணுவத்தினர் வீட்டில் உள்ளவர்களை குடும்பமாக புகைப்படம் எடுப்பதுடன் தனித்தனியாகவும் குடும்ப உறுப்பினர்களைப் புகைப்படம் எடுத்து வருகின்றார்கள்.
உடுவில், தெல்லிப்பளை, கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுகளில் உள்ள சில பகுதிகளில் இத்தகைய நடவடிக்கைகள் இடம் பெற்றுள்ளன.
இது சம்பந்தமாக யாழ் மாவட்டத்தின் நிர்வாகத்திற்குப் பொறுப்பாக இருக்கும் யாழ் மாவட்ட அரச அதிபரோ அன்றி யாழ் மாவட்ட படைகளின் கட்டளைத்தளபதியோ பொது அறிவித்தல் எதனையும் விடாத நிலையில் எவ்வாறு இத்தகைய பதிவுகளை இராணுவத்தினர் தான் மேற்கொள்கின்றார்கள் என உறுதிப்படுத்த முடியும் என பொது மக்கள் பலத்த சந்தேகத்துடன் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதே வேளை யாழ். நகரை அண்டிய பகுதியிலுள்ள சில வீடுகளுக்கு இதே பாணியில் கடந்த வாரம் சிவிலுடையில் சென்ற இராணுவத்தினர் இராணுவப் பதிவு அட்டைகளை காட்டுமாறு கோரி, வீட்டிலுள்ளவர்களை தனித்தனியாக விசாரித்துமுள்ளனர்.
குறிப்பாக புனர்வாழ்வு பெற்று விடுதலையான முன்னாள் போராளிகளின் வீடுகளுக்கு சென்று இராணுவத்தினர் இத்தகைய விசாரணைகளை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
*****************
கடத்தப்பட்டவர் படுகொலை!
நீர்கொழும்பு பிரதேசத்தில் நேற்று கடத்தப்பட்ட வர்த்தகர் இன்று படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிலாபம் பகுதியில் வைத்தே கத்திக்குத்துக் காயங்களுடன் வர்த்தகரின் சடலம் இன்று மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பைச் சேர்ந்த வர்த்தகரான 58 வயதுடைய எம்.கிருஷாந்த என்பவர் நேற்று தனது வாகனத்தில் சென்றுகொண்டிருந்த போது வாகனத்துடன் கடத்தப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் நீர்கொழும்பை அண்மித்த பிரதேசமான சிலாபம் நயினாமடு என்ற இடத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட வாகனம் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
வர்த்தகரின் உடல், மற்றுமொரு இடத்தில் வைத்து மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இவரின் உடலின் கத்திக்குத்து காயங்கள் காணப்படுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பிரேத பரிசோதனைக்காக சடலம் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு மற்றும் சிலாபம் காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்பட்டதாக தகவல் இல்லை.
ஊடகவியலாளர் பிரகீத் கடத்தப்பட்டு 500நாட்கள் கடந்த நிலையில் நேற்று கொழும்பில் கடத்தப்பட்டு காணாமல் போனவர்கள், மனித உரிமை அமைப்புக்கள் ஆர்ப்பாட்டத்தை நடத்திக்கொண்டிருந்த வேளையில் நீர்கொழும்பில் வைத்து வர்த்தகர் கடத்தப்பட்டுள்ளார்
*******************