Thursday 30 June 2011

செய்திகள் 30/06


தீர்வு ஆவணம் எங்கே?
இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பது தொடர்பான எந்தவொரு எழுத்து மூல ஆவணத்தையும் நேற்று நடைபெற்ற பேச்சுக்களின் போது சிறிலங்கா அரசதரப்பு சமர்ப்பிக்கவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் விசனம் வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா அரச பிரதிநிதிகளுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான எட்டாவது சுற்றுப் பேச்சுக்கள் நேற்று மாலை 4 மணியளவில் சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடைபெற்றன.
நேற்றைய பேச்சுக்களின் போது, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்த சிறிலங்கா அரசின் பரிந்துரைகள் அடங்கிய எழுத்துமூல ஆவணத்தை தருவதாக அரசதரப்பு பிரதிநிதிகள் உறுதியளித்திருந்தனர்.
இந்த ஆவணம் நேற்று தமது கைகளில் கிடைக்கும் என்று கூட்டமைப்பின் பிரதிநிதிகள் பெரும் எதிர்பார்ப்புடன பேச்சுக்குச் சென்றிருந்தனர்.
ஆனால் நேற்றைய பேச்சுக்களில் அத்தகைய எழுத்துமூல ஆவணம் எதையும் சிறிலங்கா அரசதரப்பு கையளிக்கவில்லை.
எனினும் எதிர்வரும் சந்திப்புகளின் போது இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பான எழுத்துமூல ஆவணம் சமர்ப்பிக்கப்படும் என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.
அதேவேளை, நேற்றைய பேச்சுக்கள் தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன், இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான அடுத்த கட்டப் பேச்சுக்களை எதிர்வரும் ஜூலை மாதம் 6ம் நாள் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.
கடந்த சந்திப்புக்களைப் போன்றே இந்தமுறையும் பழைய விடயங்கள் குறித்தே ஆராயப்பட்டதாக சிறிலங்கா அரசதரப்புக் குழுவுக்குத் தலைமை தாங்கும் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவும் கூறியுள்ளார்.
இவ்வாறான நிலையில் மீண்டும் எதிர்வரும் 6ம் திகதி இருதரப்பும் சந்தித்துக் கலந்துரையாட இணக்கம் காணப்பட்டுள்ளது.
*************
ஆலோசனை யாருக்கு?
நாட்டின் முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்ட போது, அரசாங்கம் நாடாளுமன்றின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளவில்லை என ஜே.வி.பி சுட்டிக்காட்டியுள்ளது.
இவ்வாறான ஓர் பின்னணியில் திடீரென தேசிய இனப்பிரச்சினை குறித்த விவகாரத்தில் அரசாங்கம் பாராளுமன்றின் உதவியை நாடுவது புரியாத புதிராக அமைந்துள்ளது என ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
17 ஆம் திருத்தச் சட்ட மூலம் ரத்து செய்யப்பட்டமை, 18ம் திருத்தச் சட்ட மூலம் அமுல்படுத்தப்பட்டமை போன்ற சந்தர்ப்பங்களில் அரசாங்கம் நாடாளுமன்றின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக சுயாதீன ஆணைக்குழுக்களை அமைத்தல் மற்றும் அரசுத் தலைவரின் தவணைக் காலத்தை நீடித்தல் போன்ற யோசனைத் திட்டங்களின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினை தொடர்பில் மட்டும் தனியான தீர்மானம் எடுக்க முடியாது நாடாளுமன்றின் கருத்துக்கள் கேட்கப்பட வேண்டும் என அரசுத் தலைவர் அறிவித்துள்ளமை ஆச்சரியமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆளும் கட்சிக்கு நிகராக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியும் தெளிவற்ற கொள்கைகளை பின்பற்றி வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக் குழு தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு இதுவரையில் வெளிப்படுத்தப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார
*************
யார் பிரதிநிதிகள்?
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகபிரதிநிதகள் இல்லையென்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று அரசாங்கமும் சிங்கள மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று தங்களைப் பற்றி தம்பட்டம் அடித்துக் கொள்ள முடியாது என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
இன்றைய சிங்கள நாளேடான லக்பிம பத்திரிகைக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே இந்த விடயங்களை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு என்பது தமிழ் மக்களின் பெரும்பான்மையான ஆதரவைப் பெற்ற கட்சி.
அதே போன்று அரசாங்கம் சிங்கள மக்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ளது.
அதன் காரணமாக அவ்விரு தரப்புகளும் கலந்துரையாடி அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் ஒரு தீர்மானத்துக்கு வந்தால் அதனை ஏற்றுக் கொள்ள தாங்கள் தயாராக இருக்கின்றோம் எனத் தெரிவித்தார்.
ஆனால் இந்த அரசாங்கம் அதிகாரப் பரவலாக்கல் விடயத்தில் நேர்மையாக நடந்து கொள்ளும் என்று கொஞ்சம் கூட தான் நம்பத் தயாராக இல்லை எனவும் கூட்டிக்காட்டினார்.
இருந்தாலும் தமிழ் மக்கள் இந்நாட்டில் தலைநிமிர்ந்து வாழத் தக்கதான முறையில் அவர்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் இருக்க வேண்டும் என்பதே தங்கள் கோரிக்கையாகும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
வடமாகாண சபைக்கான தேர்தல் நடைபெற்றால் அங்கு செல்வாக்கு அதிகமாகவுள்ள தமிழ்த் தேசியக்கூட்டமைப்பே அதன் அதிகாரத்தைக் கைப்பற்றும் என்ற பயத்தில் தேர்தலை நடத்தாது காலம் தாழ்த்திக் கொண்டிருப்பது அரசாங்கத்துக்கு அழகல்ல என்றும் மனோ கணேசன் தனது பேட்டியில் மேலும் தெரிவித்துள்ளார்.
*************
பிளவு வேண்டாம் - கோரும் தயாசிறி!
ஐக்கிய தேசியக் கட்சித் தலைவராக செயற்குழு ரணில் விக்கிரம சிங்கவை ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ள நிலையில் தொடர்ந்தும் தாம் முரண்பட்டுக்கொண்டிருக்க முடியாதெனத் தெரிவித்திருக்கும் குருநாகல் மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கட்சிக்குள் இரண்டுபட்டுக் கொண்டிராமல் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார்.
கட்சித் தலைமைப்பதவிக்கு ரணில் விக்கிரம சிங்கவை எதிர்த்து யாரும் போட்டியிடாத நிலையிலேயே அவர் ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அவரைக் கட்சியில் சகலரும் தலைவராக ஏற்று அவரது வழி நடத்தலில் கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்ல ஒன்றுபட்டுப் பாடுபட வேண்டுமெனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கையிலேயே பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனைக் குறிப்பிட்டார்.
நாடு இன்று பாரிய நெருக்கடிக்குள் சிக்குண்டுள்ளது. அரசு அடுத்தடுத்து பிரச்சினைகளைத் தோற்றுவித்து வருகின்றது.
இவ்வாறானதொரு நிலையில் கட்சிக்குள் முரண்பட்டுக் கொண்டிருக்க முடியாது.
நாட்டு மக்களிடம் சென்று நாட்டின் இன்றைய நிலைமையை எடுத்துக்கூறி அரசுக்கு எதிராக மக்களை அணி திரட்ட வேண்டும்.
அரசுக்கெதிரான சக்தியைக் கட்டியெழுப்பக் கூடிய பலம் ஐக்கிய தேசியக் கட்சியிடம் மாத்திரமே உள்ளது.
அவ்வாறான நிலைமையில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் முரண்பாடு நீடிக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
*************
இந்திய - ஸ்ரீலங்கா இராணுவ ஒத்துழைப்பு!
இந்திய- சிறிலங்கா இராணுவ அதிகாரிகள் மட்டத்திலான மூன்று நாள் கலந்துரையாடல் புதுடெல்லியில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.
இருநாட்டு இராணுவங்களுக்கும் இடையிலான உறவுகளைப் பலப்படுத்திக் கொள்வதற்கான திட்டத்தின் ஒரு கட்டமாகவே இந்தச் சந்திப்பு நடைபெறுகிறது.
சிறிலங்கா இராணுவத் தளபதியின் செயலர் மேஜர் ஜெனரல் எச்.சி.பி குணதிலக தலைமையிலான ஐந்து உயர்மட்ட அதிகாரிகள் கொண்ட குழு இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்க புதுடெல்லி சென்றுள்ளது.
இந்தியத்தரப்புக் குழுவுக்கு இநதிய இராணுவத்தின் அனைத்துலக ஒத்துழைப்புக்கான மேலதிக பணிப்பாளர் மேஜர் ஜெனரல் ஐ.பி.சிங் தலைமை தாங்குகிறார்.
நேற்று ஆரம்பமான இந்தக் கலந்துரையாடல் நாளை வெள்ளிக்கிழமை வரை தொடர்ந்து இடம்பெறும்.
இந்தக் கலந்துரையாடலின் போது போர் தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வது, கிளர்ச்சி முறியடிப்புத் தொடர்பாக கோட்பாடுகள் குறித்தே அதிக கவனம் செலுத்தப்பட்டு வருகிறது.
இரண்டு நாடுகளுக்கும் இடையில் மிகநெருக்கமான உறவுகள் இருந்து வரும் நிலையில் இந்தக் கலந்துரையாடல் முக்கியமானதொரு மைல் கல்லாக அமையும் என்று இந்திய இராணுவத் தலைமையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுபோன்ற செயற்பாடுகளின் விளைவாக இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்திக் கொள்ளும் சாத்தியங்கள் உள்ளதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
*************
எதற்காக இத்தனை செலவு?
பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டிகளை ஹம்பாந்தோட்டையில் நடத்துவதற்கான வாய்ப்பை பெற்றுக் கொள்வதற்காக 8ஆயிரத்து 585 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
2018ம் ஆண்டு பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியை இலங்கையில் நடாத்துவதற்கு பல்வேறு வழிகளில் முயற்சிக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரச்சார நடவடிக்கைகளுக்காக 264 மில்லியன் ரூபா பிரிட்டன் நிறுவனத்திற்கு செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையில் விளையாட்டுப் போட்டியை நடாத்துவது தொடர்பிலான கைநூல் ஒன்றினை அச்சிட்டு வெளியிடுவதற்காக 46.2 மில்லியன் அமெரிக்க டொலர் செலவிடப்பட்டுள்ளது.
பொதுநலவாய நாடுகள் விளையாட்டுப் போட்டியை நடாத்துவதற்காக 440 பில்லியன் ரூபா செலவாகும் என ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார
*************
சீனாவின் நண்பன்
சீனாவின் யுவான் நாணயத்தை இலங்கை ஊடாக சர்வதேச நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த இலங்கை மத்திய வங்கி அனுமதி அளித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீட்டு வசதிகளை மேம்படுத்தும் முகமாகவே இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மத்திய வங்கி மேலும் 13 நாடுகளின் வெளிநாட்டு நாணயங்களை சர்வதேச வங்கி நடவடிக்கைகளுக்காக இலங்கையில் பயன்படுத்தவும் அனுமதி அளித்துள்ளது.
இவற்றில் அவுஸ்திரேலிய டொலர், கனேடியன் டொலர், டொன்மார்க் க்ரோனர், யூரோ, ஹொங்கொங் டொலர், ஜப்பானிய யென், நியூசிலாந்து டொலர், நோர்வே க்ரோனர், ஸ்டெர்லிங் பவுண், சிங்கப்பூர் டொலர், சுவிஸ் பிராங்க் மற்றும் அமெரிக்க டொலர் என்பன அடங்கும்.
*************