Monday 13 June 2011

செய்திகள் 13/06


மீண்டும் இழுத்தடிக்கும் முயற்சி!
இனப்பிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்ற தெரிவுக்குழு அமைக்கும் அரசாங்கத்தின் முயற்சியானது காலத்தை வீணடிப்பதற்கான நடவடிக் கையாகும் என்றும் இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
கடந்த காலங்களில் பல குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும் அவற்றின் அறிக்கைகளோ பரிந்துரைகளோ இதுவரை நடைமுறைப் படுத்தப்படவில்லை.
மங்கள முனசிங்க தலைமையிலான பாராளுமன்றத் தெவுக்குழு அமைக்கப்பட்டது.
இதேபோல் நிபுணர்கள் குழு, சர்வகட்சி பிரதிநிதிகள் குழு என குழுக்கள் அமைக்கப்பட்ட போதிலும் அவற்றினால் கண்ட பலன் எதுவுமில்லை.
எனவே எதிர்காலத்திலும் பாராளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதென்பது தேவையற்ற நடவடிக்கையாகும் என்றும் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்திய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன் தலைமையிலான குழு அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தது.
இந்தப் பேச்சுவார்த்தையின்போது இனப்பிரச்சினைக்கு தீர்வினைக் காண பாராளுமன்ற தெரிவுக் குழுவினை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசுத் தலைவருடனான சந்திப்பையடுத்து இந்திய தூதுக்குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்தச் சந்திப்பின்போது இனப்பிரச்சினை தீர்வுக்கு பாராளுமன்றத் தெரிவுக் குழுவை அமைக்க அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளதாக இந்திய தூதுக்குழுவினர் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெவித்துள்ளனர்.
இதற்கு கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் பாராளுமன்ற தெரிவுக்குழு என்பது காலத்தை இழுத்தடிப்பதற்கான முயற்சியாகும்.
இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
****************
தடுத்து வைக்கப்பட்டோரின் விபரம்?
இறுதிக் கட்டப்போரின்போது படையினரிடம் சரணடைந்து பயங்கரவாத விசாரணைப் பிரிவின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், கைதாகி விடுவிக்கப்பட்டோர் குறித்த தகவல்களை அவர்களுடைய நெருங்கிய உறவினர்கள் பெற்றுக்கொள்ளமுடியும் என அறிவிவக்கப்பட்டள்ளது.
கொழும்பு, வவுனியா, பூஸா ஆகிய இடங்களில் உள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவில் தொடர்பு கொண்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளோரின் விவரங்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத விசாரணைப் பிரிவுப் பணிப்பாளர் இது தொடர்பாக அறிவித்துள்ளார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் மனைவி, கணவர், பிள்ளைகள், பெற்றோர் அல்லது சகோதர, சகோதரிகள் தாம் வசிக்கும் பிரதேச காவல் நிலையப் பொறுப்பதிகாரி அல்லது கிராம சேவகரின் கடிதத்துடன் இந்த இடங்களிலுள்ள பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்குச் சென்று தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுத் தொடர்களின் போது போரின் இறுதிக் கட்டத்தின் போது படையினரிடம் சரண் அடைந்தவர்களின் விவரங்களை வெளியிடுமாறு கூட்டமைப்புக் கோரிவந்தது.
வவுனியா பயங்கரவாதத் தடுப்பு பிரிவுக்கு வருமாறு கூட்டமைப்புக்கு அரசு அழைப்பும் விடுத்திருந்தது.
இரு தடவைகளும் கூட்டமைப்பினர் வவுனியாவுக்குச் சென்றபோதிலும் பட்டியல் ஏதும் கையளிக்கப்படவில்லை.
தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள் விவரம் பத்திரிகைகளில் வெளியிடப்படும் என்று அரசு தெரிவித்திருந்தது.
அதன் பிரகாரம் பயங்கவரவாத விசாரணைப் பிரிவு, தடுத்துவைக்கப்பட்டுள்ளவர் விவரங்களை அவர்களது உறவினர்களுக்குத் தெரிவிக்க மூன்று நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக இப்போது அரசு அறிவித்துள்ளது.
கைதாகித் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள், தடுத்துவைக்கப்பட்டு விடுவிக்கப்பட்டவர்கள் ஆகியோரின் விவரங்களை மேற்குறிப்பிட்ட மூன்று நிலையங்களிலும் இன்றிலிருந்து பெற்றுக்கொள்ளலாம் என்று வவுனியா பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரி தெரிவித்தார்.
இந்த அறிவித்தலின் பிரகாரம், குறிப்பிட்ட இடங்களுக்குச் சென்று விவரங்களைப் பெற்றுக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் கேட்டுள்ளனர்.
*************
பிரித்தானிய நாடாளுமன்றில் ஸ்ரீலங்கா மனு!
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் தலைமையில் சுயாதீன அனைத்துலக விசாரணைப் பொறிமுறை அமைக்கப்பட வேண்டும் எனக்கோரி பிரித்தானிய நாடாளுமன்றத்தில் மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் கொன்சவேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்கொட் லீ இந்த மனுவை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சுயாதீன அனைத்துலக விசாரணைக்குழு அமைக்கப்படவேண்டும் என்று ஸ்கொட் லீ இனால் சமர்ப்பிக்கப்பட்ட மனு தொடர்பில் பிரித்தானியா நாடாளுமன்றம் இன்னும் விவாதங்களை ஆரம்பிக்கவில்லை.
அதேவேளை எதிர்வரும் 14 ஆம் திகதி பிரித்தானியாவின் சனல்-4 தொலைக்காட்சி ஒளிபரப்பும் ஸ்ரீலங்காப் படையினர் மேற்கொண்ட படுகொலைகள் தொடர்பான காணொளியை அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் பார்வையிட வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்.
சனல் - 4 முன்னர் ஒளிபரப்பிய காணொளி உண்மையானது என்பதை ஐ.நாவின் சுயாதீன நிபுணர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
இதேவேளை கடந்த சில வருடங்களாக இலங்கை அரசுக்கும் லிபியாவின் கேணல் கடாபியின் அரசுக்கும் இடையில் உள்ள நெருக்கமான பிணைப்புக்கள் தொடர்பான மனு ஒன்றையும் பிரித்தானியா நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.
கொன்சவேட்டிவ், தொழிற்கட்சி, லிபரல் டெமோகிரட், டொமோகிரட்டிக் யூனியன் ஆகிய கட்சிகளை சேர்ந்த 12 நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் இந்த மனு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
லிபியா மீதான நேட்டோ படையினரின் தாக்குதலை இலங்கை அரசு வன்மையாக கண்டித்ததுடன், ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை மீது கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை லிபியா எதிர்த்ததாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது
****************
தொடரும் இனப்படுகொலை................
பொஸ்னியாவை போன்று இலங்கையிலும் பெண்கள் போரின் போது பிரதான இலக்குகளாக துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டதாக நியூமேன் என்பவர் தெரிவித்துள்ளார்.
போல் நியூமேன், இலங்கையின் வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தோர் மற்றும் மனித உரிமை மீறல் தொடர்பிலான பெங்களுர் பல்கலைக்கழகத்தை சேர்ந்த கலாநிதியாவார்.
அத்துடன், இலங்கைக்கு எதிரான போர்க்குற்ற நிரந்தர தீர்ப்பாயத்தின் நான்கு பேச்சாளர்களில் ஒருவருமாவார்.
எனினும் உலக நாடுகள், இலங்கையின் வடக்கு கிழக்கில் பெண்கள் மீது படையினரால் மேற்கொள்ளப்பட்ட துஸ்பிரயோகங்களை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று நியூமன் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் நிபுணர் குழு தமது அறிக்கையில் ஸ்ரீலங்காப் படையினர் இறுதி யுத்தத்தின் போது பொதுமக்களை குறிப்பாக பெண்களை காப்பாற்ற தவறிவிட்டது என்பதை சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்காக போரின் போது பெண்கள் பாலியல் ரீதியில் துன்புறுத்தப்பட்டமையை அது குறிப்பிட்டுள்ளது.
எனினும் இலங்கையின் அதிகாரிகள் இந்த செய்திகளை பொய்யானது. அடிப்படையற்றது என்று கூறிவருகின்றனர்.
இலங்கையி;ல் முன்னர் இடம்பெற்ற இனமுறுகல் மற்றும் வன்முறை சம்பவங்களை கொண்டு புதிய பாடங்களை கற்றுக்கொள்வதற்காக அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழுவுக்கு பெண்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
இதன்போது சரணடைந்தவர்கள் குறிப்பாக பெண்கள் பலர் காணாமல் போனதாக முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற போர்க்காரமாக சுமார் 80 வீதமான பெண்களும் சிறுவர்களுமே பாதிக்கப்பட்டனர்.
இதேவேளை, விசாரணைகளை மேற்கொண்டு வரும் நல்லிணக்க ஆணைக்குழுவிலும் 8 ஆண்கள் இருக்கும் நிலையில் ஒரு பெண் மாத்திரமே அங்கம் வகிப்பதாக போல் நியூமன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே அந்தக்குழுவால் பெண்களின் பாதிப்புக்களை புரிந்துக் கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்பவதே அவரின் வாதமாக அமைந்துள்ளது.
பிரித்தானிய செனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய போர்க்குற்ற காட்சிகளின் போது பெண்கள் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் மதிப்பீட்டின்படி வடக்கு, கிழக்கில் மாத்திரம் 90 ஆயிரம் தமிழ்ப்பெண்கள் கணவர்மாரை இழந்துள்ளனர்.
இதன் காரணமாக அவர்கள் ஆண்கள் மேற்கொள்ளும் கடினமான பணிகளை மேற்கொண்டு தமது குழந்தைகளை காப்பாற்றும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.
இதனை தவிர, வடக்கு, கிழக்கின் குடிப்பரம்பலை மாற்றுவதற்காக, சிங்கள படையினர் இளம் தமிழ் யுவதிகளை திருமணம் செய்ய அரசாங்கம் ஊக்கமளித்து வருகிறது.
இது பொஸ்னியாவிலும் மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன் தாய்லாந்தை போன்று சுற்றுலாத்தளங்களை தமிழர் பிரதேசமான வடக்கிலும் அமைக்க அரசாங்கம் முயற்சித்து வருகிறது.
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு விடுவிக்கப்பட்ட முன்னாள் போராளிப் பெண்களையும் ஆண்களையும் தொடர்ந்தும் படையினர் அவர்களின் வீடுகளுக்கு சென்று கிரமமாக கவனித்து வருகின்றனர்.
புனர்வாழ்வுக்கு பின்னரும் அவர்கள் முன்னாள் போராளிகள் என்ற முத்திரைக்குத்தப்பட்டு இந்த கவனிப்பு இடம்பெற்று வருகிறது.
இந்தநிலையில் இவ்வாறான சம்பவங்களை விசாரணை செய்ய இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் சர்வதேச விசாரணை பொறிமுறை தேவை என்று போல் நியூமன் வலியுறுத்தியுள்ளார்.
********************
தீர்வு என்ன? கேட்கும் எதிர்க்கட்சி
அரசியலமைப்பின் பதின்மூன்றாம் திருத்தச்சட்டத்தையே இன்னும் முழுமையாக அமுல்படுத்தாமல் அதற்கப்பால் சென்று எவ்வாறு அதிகாரப் பகிர்வை மேற்கொள்ள முடியும் என்று ஐ.தே.க. பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கேள்வியெழுப்பியுள்ளார்.
பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்துக்கு அப்பால் சென்று தமிழ் மக்களுக்கான அதிகாரப் பரவலாக்கலை மேற்கொள்ள இந்தியாவிடம் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
ஆயினும் இன்னும் 13வது திருத்தச்சட்டமே முழுமையாக அமுல்படுத்தப்படாத நிலையில் அதற்கப்பால் சென்று அதிகாரப் பகிர்வை எவ்வாறு மேற்கொள்ள முடியும் என்று அவர் வினாத் தொடுத்துள்ளார்.
இந்திய - இலங்கை அரசாங்கங்களுக்கிடையிலான அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான இணக்கப்பாடு குறித்து இன்றைய திவயின சிங்களப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிகாரப் பரவலாக்கல் தொடர்பில் இந்தியாவுடன் இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திக் கொள்வதற்கு முன் நடைமுறையில் இருக்கும் பதின்மூன்றாவது திருத்தச்சட்டத்தை முழுமையாக செயற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
அரசாங்கம் இந்தியாவுடன் இரகசிய பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு நாட்டுக்கு தீமை பயக்கும் விதத்திலான தீர்வுத்திட்டங்களை முன்வைத்தால் ஐக்கிய தேசியக் கட்சி ஒருபோதும் அதற்கு ஆதரவு வழங்காது.
பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் அதனை எதிர்க்கும்.
அரசியல் தீர்வொன்றை முன்வைப்பதாயின் நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் அனைத்து இன மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்படும் விதத்தில் அதனை முன்வைக்க வேண்டும்.
மூன்று தசாப்த கால யுத்தம் காரணமாக நாட்டின் பல்லாயிரக்கணக்கான உயிர்களும் பலகோடி ரூபா பெறுமதியான சொத்துக்களும் இழக்கப்பட்ட பின் அன்றைக்கு முன்வைக்கப்பட்ட அதே கோரிக்கையின் பிரகாரம் அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு முன் அது குறித்து அரசாங்கம் இன்னொரு தடவை கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் மேலும் வலியுறுத்தியுள்ளார்.
*****************

பொருளாதார தடை அவசியம் - பழ.நெடுமாறன்
இலங்கை அரசின் இன அழிப்புக் கொள்கைக்கு எதிராக அந்த நாட்டின் மீது பொருளாதாரப் புறக்கணிப்பு நடவடிக்கையை மேற்கொள்ள உலக நாடுகளிடையே இந்தியா ஆதரவு திரட்ட வேண்டும் என்று இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை மேற்கொள்வதன் மூலம் இலங்கையில் வாழும் தமிழர்களும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்ற கருத்தும், அதேபோல, சீனா இலங்கைக்குத் தேவையான உதவிகளைச் செய்யும் என்ற கருத்தும் ஏற்கத்தக்கவையல்ல.
தென்னாபிரிக்க வெள்ளை அரசின் நிறவெறிக் கொள்கைக்கு எதிராக ஐ.நா பேரவையில் இந்தியா கொண்டு வந்த பொருளாதாரத் தடை தீர்மானம் பெரும்பாலான நாடுகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
தென்னாபிரிக்காவில் பெரும்பான்மையினராக வாழும் கறுப்பின மக்களுக்கும், இந்தியர்களுக்கும் அதனால் பாதகம் விளையும் என்று யாரும் வாதாடவில்லை.
அமெரிக்கா, பிரிட்டன் உள்பட மேற்கு நாடுகள் சில இந்தத் தீர்மானத்துக்கு எதிராகச் செயல்பட்டன.
ஆனாலும், பெரும்பாலான உலக நாடுகளின் ஆதரவு நடவடிக்கையின் விளைவாக தென்னாபிரிக்க அரசு இறுதியில் பணிய நேர்ந்தது.
எனவே, இலங்கை மீது பொருளாதாரத் தடை விதிக்க உலக நாடுகளின் ஆதரவை இந்தியா திரட்ட வேண்டும் என்பதைத் தமிழக முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து வலியுறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொளவதாக அவா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
****************