Thursday 2 June 2011

செய்திகள் 02/06


தாக்குதலுக்கு யார் காரணம்? மூடி மறைக்க முயற்சி!

இலங்கையில் தனியார் ஓய்வூதிய திட்டத்துக்கு எதிராக நேற்று முன் தினம் ஆர்ப்பாட்டம் நடத்திய சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களில் அநேகமானோரின் அந்தரங்க உறுப்புக்களை இலக்கு வைத்து காவல் துறையினர் தாக்குதல் நடத்தி உள்ளார்கள் என்று ஐக்கிய தேசிய கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வைத்தியக் கலாநிதியுமான ஜெயலத் ஜயவர்தன குற்றம் சாட்டி உள்ளார்.
ஆர்ப்பாட்டம் நடத்திய கட்டுநாயக்க வர்த்தக வலய ஊழியர்களில் அதிகமானோரின் அந்தரங்க உறுப்புகள் மீது காவல் துறையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். பெண்களின் அந்தரங்க உறுப்புக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது எனவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான ஊழியர்களில் ஒரு தொகையினர் சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.
அந்தரங்க உறுப்புக்கள் மீது தாக்குதலுக்கு உள்ளான பெண் ஊழியர்கள் பலர் வெட்கம் காரணமாக வைத்தியசாலைக்கு வராமல் வீடுகளில் உள்ளார்கள்.
அத்தோடு அச்சம் காரணமாகவும் வைத்தியசாலைக்கு வர மறுக்கின்றனர்.
தாக்குதலுக்கு உள்ளானவர்கள் சேர்க்கப்பட்டிருக்கும் வைத்தியசாலையில் அரச உளவாளிகள் நிறுத்தப்பட்டு உள்ளனர் எனவும் ஜெயலத் ஜெவர்த்தனா தெரிவித்துள்ளார்.
*************

மனித உரிமை ஆணைக்குழுவின் அவசர விசாரணை! உள்நோக்கம் என்ன?
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் இடம்பெற்ற காவல் துறையினரின் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு தனது விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
தனியார் துறை ஊழியர்களுக்கான ஓய்வூதியத்திட்டத்தின் சட்டமூலத்தை எதிர்த்து கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் பணியாற்றும் ஊழியர்கள் ஒன்று திரண்டு மேற்கொண்ட ஆர்ப்பாட்டங்களின் போது அதனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் காவல் துறையினர் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டிருந்தனர்.
அதன் போது எட்டு நபர்கள் காயமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதுடன், அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
பொதுவாக தொழிற்சங்க ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது காவல் துறையினர் எக்காரணம் கொண்டும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதற்கு அனுமதியில்லை என்பதுடன் அவ்வாறு மேற்கொள்ளப்பட்டால் அது அப்பட்டமான மனித உரிமை மீறலாகவே கருதப்படும்.
அவ்வாறான நிலையில் கட்டுநாயக்க துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் தற்போது மனித உரிமைகள் ஆணைக்குழு தனது விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களினதும், சாட்சிகளினதும் வாக்குமூலங்களைப் பெற்றுக் கொள்ளவும் மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை அமர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இவ்வாறானதோர் துப்பாக்கிப் பிரயோகமும், அதன் காரணமான உயிரிழப்பும் ஸ்ரீலங்காவுக்கு சர்வதேச ரீதியில் மேலும் கெட்ட பெயரையே ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதால் அரசாங்கம் கடும் நெருக்கடிக்குள் சிக்கியுள்ளது.
************

துப்பாக்கிச் சூடு நடத்தி சிறப்பு ஓய்வூதியம் வழங்கும் முன்னணி நாடு ஸ்ரீலங்கா!
இலங்கையில் அல்லாது உலகின் எந்த நாட்டில் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது என புதிய இடதுசாரி முன்னணித் தலைவர் விக்ரமபாகு கருணாரட்ன கேள்வி எழுப்பியுள்ளார்.
கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலய ஊழியர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து நடத்தப்பட்ட போராட்டத்தில் கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஊழியர்களின் கை கால்களை முறித்து அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் ஒரே நாடு இலங்கை மட்டுமே எனவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தாக்குதலை நடத்திய சில காவல் துறை உத்தியோகத்தர்களை சிறையில் அடைத்து அவர்களை பாதுகாக்க அரசாங்கம் முயற்சிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார;.
ஆனால் இலட்சக்கணக்கில் தமிழர்கள் வகைதொகையின்றி கொல்லப்பட்டபோது சிங்கள தேசம் வாய்மூடி மௌனியாக இருந்தமை மனித உரிமைகள் குறித்த அவர்களின் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துக் காட்டுவதாக தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.
************

இல்லாதை குலைப்பதாக குரைக்கும் ஸ்ரீலங்கா!
நாட்டின் ஸ்திரத்தன்மையை சீர்குலைப்பதற்கு சில தரப்பினர் முயற்சி மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.
சில அரசியல் சக்திகள் தங்களது மறைமுக நோக்கங்களை பூர்த்தி செய்து கொள்வதற்காக சதித் திட்டங்களில் இறங்கியுள்ளதாக அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
காவல்துறையினருடன் மோதலை ஏற்படுத்தி மீண்டும் நாட்டில் பதற்ற நிலையை உருவாக்க சிலர் முயற்சிப்பதாகவும், 71, 83 மற்றும் 88,89 ஆண்டு கிளர்ச்சிகளைப் போன்றே மீண்டும் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கப்படுவதாகம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசாங்கம் மக்கள் மீது பலவந்தமாக எதனையும் திணிக்காது எனவும், மக்களின் தேவைகளை அறிந்து அதற்கு ஏற்றவாறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்டுநாயக்க சுதந்திர வலய போராட்டம் ஓர் சதித் திட்டமாகவே கருதப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏனெனில் ஊழியர் அல்லாதவர்களும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளதென அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*****************

சட்டத்தை மதிப்பதாக கூறும் இனவழிப்பு படை!
யுத்த வெற்றியின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சர்வதேச கருத்தரங்கில் கலந்துகொண்டு, யுத்தகால கள நிலவரங்களை விளக்கிய மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவிடம் வௌ;ளைக் கொடி விவகாரம் தொடர்பில் சர்வதேசத்துக்கு தெளிவுபடுத்துமாறு வெளிநாட்டு பிரதிநிதியொருவரினால் முன்வைக்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார். 
யுத்த களத்தில் இராணுவத்தின் 58ஆவது படையணியின் தளபதியாக சவேந்திர சில்வா பணியாற்றியமை குறிப்பிடத்தக்கது. 
இந்நிலையில், இராணுவத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட யுத்த வெற்றியின் அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் சர்வதேச கருத்தரங்கு கொழும்பில் தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.
இரண்டாம் நாள் நிகழ்வின் போது, யுத்த களத்தில் முன்னெடுக்கப்பட்ட இராணுவ நடவடிக்கைகள் தொடர்பான விளக்கங்கள் சர்வதேசப் பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டன. 
இதில் கலந்துகொண்ட மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, தனது படையணியினால் முன்னெடுக்கப்பட்ட இராணுவ மற்றும் மனிதாபிமான நடவடிக்கைகள் தொடர்பில் விளக்கமளித்தார்.
இதனையடுத்து இடம்பெற்ற கேள்வி - பதில் நேரத்தின் போது கருத்தரங்கில் கலந்துகொண்ட அமெரிக்க இராணுவ உயரதிகாரி ஒருவரினால் இக் கேள்வி முன்வைக்கப்பட்டது. 
அந்த கேள்விக்கு பதிலளித்த சவேந்திர சில்வா, நீதிமன்ற விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள விவகாரமொன்று தொடர்பில் கருத்து தெரிவிக்கும் அதிகாரம் சட்டங்களை மதிக்கும் கொள்கையைப் பின்பற்றிவரும் இலங்கையர்களாகிய தமக்கு கிடையாது எனத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய சூழ்நிலையில் இந்த கேள்விக்கு பதிலளிப்பது என்பது தமது நாட்டின் இறைமைக்கு ஏற்படுத்தப்படும் பாதிப்பாகும்.
எனவே இந்த வௌ;ளைக்கொடி விவகாரம் தொடர்பில் தான் எதுவும் சொல்வதற்கில்லை. வெகு விரைவில் இந்தக் கேள்விக்கான விடை அனைவருக்கும் கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
***********

நெருக்கடியை தவிர்க்கவே பேச்சாம்? சர்வதேசத்துக்கும் தெரியப்படுத்துமா?
சிறிலங்கா அரசாங்கத்திற்கு எதிராக சர்வதேச ரீதியாக நெருக்கடிகளும், அழுத்தங்களும் ஏற்பட்டு வருகிறது.
தமக்கெதிராக எழுந்து வரும் அதிருப்திகளை முறியடிப்பதற்கே சிறிலங்கா அரசாங்கம் தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேசி வருகிறது என தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம். சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கல்முனைக்கு விஜயம் செய்த தமிழ் தேசியக்கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு அங்கு பொதுமக்களை சந்தித்து சமகால அரசியல் நிலமைகள், தமிழ் மக்கள் எதிர்நோக்கி வரும் அன்றாட பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடல் ஒன்றை நடத்தினர்.
இதன் போது அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக்கூட்டமைப்பிற்கும் இடையிலான பேச்சுவார்த்தை குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் விளக்கினார்.
அரசாங்கத்தின் கபடநோக்கத்தின் ஆதாரங்களை தாம் திரட்டி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்புடன் பேசுகிறோம் என சர்வதேசத்திற்கு காட்டுவதற்காகவே இந்த பேச்சுவார்த்தையை சிறிலங்கா அரசாங்கம் பயன்படுத்துகிறதே தவிர இதய சுத்தியோடு செயற்படவில்லை என்பதை தாம் அறிவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அதற்காக தமிழ் தேசியக்கூட்டமைப்பு அரசாங்கத்திடம் தோற்றுப்போய்விட்டது என யாரும் நினைக்க கூடாது என்றும் தாம் இடையில் பேச்சுவார்த்தைகளிலிருந்து விலகினால் தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு பேச்சுவார்த்தையில் நம்பிக்கையில்லை, குழப்பிவிட்டார் என்று சிறிலங்கா அரசாங்கம் பிரசாரம் செய்யும். இதற்கு இடமளிக்க கூடாது என்பதற்காகவும், சில இராஜதந்திர நகர்வுகளை மேற்கொள்வதற்காகவும், தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நீதியான தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காகவும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு அர்ப்பணிப்புடன் செயற்படுவதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
*************