Sunday 31 July 2011

செய்திகள் 31/07


தமிழ் செய்தியாளர் மீது தாக்குதல் நடத்தியவர்கள் யார்?
யாழ்ப்பாணத்தில் உதயன் செய்தித்தாளின் செய்தியாசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதலை பல்வேறு அமைப்புகளும் கண்டித்துள்ளன.
செய்தியாளர்கள் மீதான வன்முறை அலையை மீண்டும் ஆரம்பிக்கும் விதமாக இந்த சம்பவம் அமைந்துவிடலாம் என்று சுளுகுஎன்ற எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.
அதிர்ச்சியளிக்கும் இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் துரிதமாக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த அமைப்பு கோரியிருக்கின்றது.
யாழ் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்தும் மயக்க நிலையில் உள்ள குகநாதனின் உடல் நிலை குறித்து 36 மணித்தியாலங்கள் கழிந்த பின்பே தெரிவிக்க முடியும் என வைத்தியர்கள் கூறியிருப்பதாக உதயன் செய்தித்தாளின் நிர்வாகப் பணிப்பாளராகிய ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை நடத்தி வருகின்ற போதிலும் இதுவரையில் எவரும் கைது செய்யப்பட்டதாகத் தெரியவில்லை எனவும் சரவணபவன் கூறினார்.
மூத்த செய்தியாளராகிய குகநாதன் மீது நடத்தப்பட்ட தாக்குதலைத் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் கண்டித்திருக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் கருத்து மற்றும் பேச்சு சுதந்திரம் தொடர்ச்சியாக மறுக்கப்பட்டு வருவதையே குகநாதன் மீதான இந்தத் தாக்குதல் எடுத்துக் காட்டுகின்றது என தெரிவித்துள்ள இலங்கைத் தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டு பிடித்து நீதியின் முன் நிறுத்துவதற்கு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருக்கின்றது.
இதற்கிடையில் முல்லைத்தீவு மாவட்டம் கொக்காவில் இராணுவ முகாமில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு ஒன்றை ஆரம்பித்து வைப்பதற்காக ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல அங்கு சென்றிருந்தார்.
குகநாதன் மீதான தாக்குதல் குறித்து கேள்வி அவரிடம் எழுப்பப்பட்டபோது, இந்த ஒரு சம்பவத்தை மட்டும் வைத்துக்கொண்டு செய்தியாளர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்கின்றன என்று கூறிவிட முடியாது என்று ரம்புக்வெல்ல பதிலளித்தார்.
எனினும் இத்தகைய சம்பவங்கள் குறித்து தாங்கள் அக்கறை செலுத்த வேண்டும், எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என்றும் ரம்புக்வெல்ல கூறினார்.
இதனை ஒரு சாதாரண சம்பவம் எனக் கூறி, அதனை புறந்தள்ளி விடுவதற்கு தான் முயற்சிக்கவில்லை என்றும் இத்தகைய தாக்குதல்கள் தொடர்பில் பல்வேறு கோணங்களில் ஆராயப்பட வேண்டிய தேவை இருப்பதாகவும் இலங்கை ஊடகத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
எனினும் இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்பட்டு குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர் கூறினார்.
************
தமிழர்களின் கொலைக்கு நியாயம் கிடைக்குமா?
அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 19வது கூட்டத் தொடரில் சிறிலங்கா அதிபர் நியமித்துள்ள நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று சிறிலங்கா அரசுக்கு அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்காவினது முறைப்படியான இந்த இராஜதந்திர நிலைப்பாடு, சிறிலங்கா வெளிவிவகார அமைச்சுக்கு கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் ஊடாக கடந்தமாதம் கையளிக்கப்பட்டது.
இதற்கு சிறிலங்கா இன்னமும் அதிகாரபூர்வமாக பதில் எதையும் வெளியிடவில்லை.
ஆனால், பெரும்பாலும் அமெரிக்காவின் இந்த வேண்டுகோளை சிறிலங்கா அரசாங்கம் நிராகரிக்கும் என்று தனது பெயரை வெளியிட விரும்பாத சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
அமெரிக்காவின் இந்தக் கோரிக்கைக்கு தாம் இணங்கினால் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தொடர்ச்சியான கண்காணிப்பில் இருக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
அதேவேளை, இந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டால், சிறிலங்காவுக்கு எதிராக அமெரிக்கா நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு சாத்தியங்கள் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
************
சீனாவுக்கு மீண்டும் மகிந்த!
அரசுமுறைப் பயணமாக மகிந்த ராஜபக்ச அடுத்த மாதம் சீனாவுக்குச் செல்லவுள்ள போதும் அதற்கான நாள் இன்னமும் தீர்மானிக்கப்படவில்லை என்று சிறிலங்கா அரசாங்க வட்டாரங்கள் கூறியுள்ளன.
கடைசியாக கடந்த நவம்பர் மாதம் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.
பத்து மாதங்களுக்குள் இரண்டாவது பயணத்தை அவர் சீனாவுக்கு மேற்கொள்ளவுள்ளார்.
2007ம் ஆண்டுக்குப் பின்னர் மகிந்த ராஜபக்ச மூன்று தடவைகள் சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவின் பாரிய அபிவிருத்தித் திட்டங்களில் சீனா முதலீடுகளைச் செய்துள்ளதுடன், சிறிலங்காவுக்கு கடன் வழங்கும் நாடுகளில் முதன்மை இடத்தையும் சீனாவே வகித்து வருகிறது.
************
ஈரானிடம் உதவி கோரும் பசில்!
இலங்கை உட்பட பொருளாதார ரீதியில் வளர்ந்து வரும் நாடுகளை அழிக்க மேற்குலக நாடுகள் மேற்கொண்டு வரும் முயற்சிகளை தடுத்து நிறுத்த ஈரான் முன்வர வேண்டும் என சிறிலங்காவின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஈரான் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட காங்கேயனோடை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட 70 வீடுகளை பயனாளிகளிடம் கையளிக்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே பசில் ராஜபக்ச இவ்வாறு கூறியுள்ளார்.
ஈரானிய இஸ்லாமிய குடியரசின் நிதியுதவி மூலம் இலங்கையில் பாரிய வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிதியுதவி மூலம் இலங்கையில் பாரிய நீர் விநியோக திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், 1000 கிராமங்களுக்கான மின்சாரத்தை பெற்றுக் கொடுக்கும் பாரிய திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் அபிவிருத்திக்கு மட்டுமல்லாது மனிதாபிமான அடிப்படையிலும் பாரிய உதவிகளை ஈரானிய அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது.
எனவே இவற்றைக் கொண்டு அனைவரும் ஒன்று சேர்ந்து இக்கிராமத்தை கட்டியெழுப்ப வேண்டும் என அவர் தனதுரையில் தெரிவித்தார்.
************
தமிழரிடம் பிடுங்கி சிங்களவரிடம் தாரை வார்ப்பு!
யாழ்ப்பாண மாவட்டத்தில் வாக்களார்களின் எண்ணிக்கை எதிர்காலத்தில் அதிகரிக்குமானால் அங்கு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று இலங்கையின் தேர்தல்கள் ஆணையாளர், மஹிந்த தேசப்பிரிய உறுதிமொழி வழங்கியுள்ளார்.
2010 ம் ஆண்டின் வாக்காளர் கணக்கெடுப்பின்படி 320 ஆயிரம் வாக்காளர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.
1989 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையிலேயே கடந்த அரசுத் தலைவர் தேர்தலும் பொதுத்தேர்தலும் நடத்தப்பட்டன.
இந்தநிலையில் அரசியல் அமைப்பின்படியே தாம் செயற்பட்டதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டார்.
1989 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து 11 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவாகினர்
அது, 2000 ம் ஆண்டு 10 ஆகவும் 2004 ல் 9 ஆகவும் குறைவடைந்தன.
அதுபோல எதிர்வரும் காலங்களில் வாக்காளர் எண்ணிக்கையைப் பொறுத்தே பாராளுமன்ற பிரதிநிதித்துவம் அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
************
உண்மையான சாட்சிகளே - சனல்-4!
சனல் 4 இறுதியாக வெளியிட்ட காணொளியில் தோன்றிய சாட்சியாளாகள் நம்பகமான தகவல்களையே வழங்கியுள்ளதாக சனல்4 ஊடகத்தின் ஊடகவியலாளர் ஜொனதன் மில்லர் தெரிவித்துள்ளார்.
உறுதிப்படுத்தாமல் சாட்சியங்கள் தொடர்பான தரவுகள் ஒளிபரப்புச் செய்யப்படமாட்டாது.
கொழும்பிலிருந்து வெளியாகும் சண்டே லீடர் செய்தித்தாளுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய நேர் காணலில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு தரப்பினரின் குற்றச்சாட்டுக்களை எவ்வித உறுதிப்படுத்தலுமின்றி வெறுமனே ஒளிபரப்புச் செய்வதில்லை.
சாட்சியாளர்கள் தொடர்பில் தாமும் தமது செய்தி ஆசிரியர்களும் பூரண திருப்தி கொண்டுள்ளதாக மில்லர் குறிப்பிட்டுள்ளார்.
சாட்சியாளர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்ளப்பட்டது என்பதனை கூற முடியாது, அவர்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையக் கூடும்.
சாட்சியாளர்களின் குரல்கள் ஒளிபரப்புச் செய்யப்படவில்லை எனவும் பின்னணி பேசியவர்களே அவர்களது சாட்சியங்களுக்கு குரல் கொடுத்துள்ளதாகவும் மில்லர் தெரிவித்துள்ளார்.
எல்லா வழிகளையும் பயன்படுத்தி போராட்டத்தை முடிவுறுத்துமாறு சவேந்திர சில்வா 58 படையணிக்கு கட்டளையிட்டதாக சாட்சியாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவின் உத்தவிற்கு அமைய சவேந்திர சில்வா விசேட கூட்டமொன்றை கூட்டி படையினருக்கு இந்த அறிவிப்பினை விடுத்ததாக சாட்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, சனல்4 ஊடகத்திற்கு எதிராக பிரிட்டன் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பாதுகாப்புச் செயலாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும், ஊடகங்களின் சுதந்திரத்தில் தலையீடு செய்யப் போவதில்லை என பிரிட்டன் உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
************
காலம் கடந்த ஞானமா? தற்காத்துக் கொள்ளும் தந்திரமா?
போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இலங்கை கவனமாக ஆராயவேண்டும் என்று இந்திய வெளியுறவு செயலாளர் நிரூபமா ராவ் கோரியுள்ளார்.
இலங்கையின் அரச பத்திரிகையான சண்டே ஒப்சேவர் இந்த செய்தியை பிரசுரித்துள்ளது.
இலங்கை தம்மீது சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் சனல் 4 காணொளியின் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.
இன்றுடன் நிரூபமா ராவ், இந்திய வெளியுறவு செயலாளர் பதவியில் இருந்து விலகி, இந்தியாவின் அமெரிக்காவுக்கான தூதுவராக பதவியேற்கவுள்ளார்.
இந்தநிலையில் இலங்கை சென்றிருக்கும் அவரிடம் சனல் 4 காணொளி தொடர்பாக கேட்டபோது, இந்த சம்பவங்கள் போர் வலயத்துக்குள் இடம்பெற்றுள்ளன.
எனினும் அவற்றை நியாயப்படுத்த முடியாது. இந்தநிலையில் இலங்கை கவனமாக அது தொடர்பில் ஆராயவேண்டும் என்று நிரூபமா கூறியுள்ளார்.
இந்தவிடயத்தில் மூன்றாம் தரப்பின் தலையீடு அவசியம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
************
அரசியலான தஞ்சக் கோரிக்கை!
அவுஸ்திரேலிய கடல் படையினரால் கடந்த ஞாயிற்றுக் கிழமை இடைமறித்து பிடிக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் 54 பேர் விரைவில் மலேசியாவிடம் கையளிக்கப்பட உள்ளார்கள்.
அவுஸ்திரேலியாவுக்கும் மலேசியாவுக்கும் இடையில் கடந்த 25 ஆம் திகதி அகதிகள் பரிமாற்ற ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
புதிதாக வருகின்ற முதல் 800 அரசியல் தஞ்சக் கோரிக்கையாளர்களும் மலேசியாவிடம் கையளிக்கப்படுவார்கள் என்பது இவ்வொப்பந்தத்தின் அம்சமாகும்.
ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்ட பின்னர் முதலில் வந்த சட்டவிரோத பயணிகள் குழு இதுவே ஆகும்.
இக்குழுவினர் விரைவில் மலேசியாவிடம் கையளிக்கப்படுவார்கள் என்று அவுஸ்திரேலிய உள்நாட்டு அமைச்சு அறிக்கை மூலம் அறிவித்து உள்ளது.
************