Monday 11 July 2011

செய்திகள் 11/07

தடுத்து வைக்கப்பட்டோரின் உண்ணாவிரதம்
எவ்வித விசாரணைகளுமின்றித் தாம் நீண்ட காலமாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகக் கூறி வவுனியா சிறைச்சாலையைச் சேர்ந்த ஐந்து தமிழ் அரசியல் கைதிகள் இன்று முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தாம் நீண்டகாலமாக பயங்கரவாத தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள போதிலும் இதுவரையில் தமது விசாரணைகள் மேற்கொள்ளப்படவில்லையென அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் பல்வேறு தடவைகள் வலியுறுத்தியபோதிலும் இதுவரையில் அது தொடர்பில் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லையென்றும் எனவே தம்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பிலான விசாரணைகள் துரிதப்படுத்தப்பட்டு தமது விடுதலை தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்கும் வரை தமது உண்ணாவிரத போராட்டம் தொடரும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
***************
படையினரை பயன்படுத்தி அச்சுறுத்தல்
வடக்கில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி வேட்பாளர்களை அச்சமூட்டுவதற்கு சக்திவாய்ந்த சில அரசியல் கட்சிகள் பாதுகாப்புப் படையினரைப் பயன்படுத்துவதாக ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது.
கிளிநொச்சி தர்மபுரம் பகுதியில் தமது ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்வதை இக்கட்சிகள் பாதுகாப்புப் படையினரை பயன்படுத்தி தடுத்ததாக ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் தெரிவித்தார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் ஒருவரின் நாயொன்று கொல்லப்பட்டு, அதன் தலை குறித்த வேட்பாளரின் வீட்டு வாசலில் தொங்கவிடப்பட்டிருந்தது எனவும் விஜித ஹேரத் கூறினார்.
வடக்கைச் சேர்ந்த பெண்களிடம் அரச சார்ப்பு கருத்துக்களை வெளியிடச் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியொன்று தோல்வியில் முடிவடைந்தது எனவும் அவர் தெரிவித்தார்.
அரச தொலைக்காட்சியொன்றில் அப்பெண்கள் செவ்வி காணப்பட்டபோது, தாம் எதிர்கொள்ளும் சமூக பொருளாதார பிரச்சினைகளையே அவர்கள் வெளிப்படுத்தியதாக அவர் கூறினார்.
சக்திவாய்ந்த கட்சிகள், இத்தகைய ஜனநாயகமற்ற முறையில் பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
***************
முறைப்பாட்டில் பயன் என்ன?
சாவகச்சேரி பிரதேச சபையின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளரின் தீவிர ஆதரவாளரின் வீட்டின் முற்றத்தில் மலர் வளையம் வைக்கப்பட்டதுடன் அவரின் வீட்டுச் சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகள் மீது கழிவு எண்ணெய் ஊற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சம்பவம் நேற்று அதிகாலை மிருசுவில் தவசிகுளத்தில் இடம்பெற்றுள்ளது.
அதே இடத்தைச் சேர்ந்த கந்தையா அசோகலிங்கம் என்பவர் சம்பவம் குறித்து கொடிகாமம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.
அங்கு சென்ற காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மலர் வளையத்தையும் எடுத்துச் சென்றனர்.
***************
தொடரும் அச்சுறுத்தல்!
உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு பிரசாரத்தில் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கத்துடன் கூட்டமைப்பு வேட்பாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
இதுகுறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் இன்று எழுத்து மூலம் முறைப்பாடு செய்யும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக யாழ்.குடாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்கள், வன்முறைச் சம்பவங்கள் ஆகியவற்றைப் பட்டியலிட்டுக் காட்டவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ். குடா நாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை இந்தத் தேர்தலில் தோற்கடிக்க அடாவடித்தனங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கடந்த 16ஆம் திகதி அளவெட்டியில் கூட்டமைப்பின் கலந்துரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்த மண்டபத்துக்குள் அத்துமீறிப் புகுந்த இராணுவச் சீருடை அணிந்தோர் அடாவடித்தனத்தில் ஈடுபட்டது.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டோர் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர் என அரசு அறிவித்தது.
இது தொடர்பான விசாரணைக்கு இரு காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன என காவல்துறை பேச்சாளர் தெரிவித்திருந்தார்.
சம்பவம் இடம்பெற்று ஒரு மாதம் கடந்த பின்னரும் இது தொடர்பாக எந்தவொரு விசாரணையும் நடைபெற்றதாகத் தெரியவில்லை.
இதேவேளை, இப்போது கூட்டமைப்பு வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படும் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கடந்த புதன்கிழமை இரவு மானிப்பாயில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளரது வீட்டுக்கு முன்னால் தலை துண்டிக்கப்பட்ட நாயின் உடல் காணப்பட்டது.
நாயின் தலை வீட்டு வாசலில் தொங்கவிடப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சனிக்கிழமை அதிகாலை கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபைக்கு கூட்டமைப்பு சார்பில் போட்டியிடும் வேட்பாளருமான எம்.கே.சிவாஜிலிங்கத்தின் அலுவலகம் மற்றும் வலிகாமம் மேற்கு பிரதேச சபை வேட்பாளர் திருமதி.நா.ஐங்கரனின் வீடு ஆகியவற்றின் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன.
சிவாஜிலிங்கத்தின் அலுவலகம் மீது சாக்கடைக் கழிவுகள் வீசப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
***************
தபால் மூல வாக்களிப்பு நாளை
64 உள்ளூராட்சி சபைகளுக்கான தபால் மூல வாக்கெடுப்பு நாளை 12ம் திகதி இடம்பெறவிருக்கின்றது.
இத்தேர்தலில் 60 ஆயிரத்து 546 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருப்பதாக தேர்தல் செயலக அதிகாரியொருவர் நேற்றுத் தெரிவித்தார்.
இதேவவேளை, இந்த தபால் மூல வாக்களிப்பை கண்காணிக்கும் பணியில் நூறு தொண்டர்களை ஈடுபடுத்தவிருப்பதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோகன ஹெட்டியாராச்சி குறிப்பிட்டார்.
இந்நிலையில், தபால் மூல வாக்களிப்பை அமைதியாகவும், நீதியாகவும் நடத்துவதற்கு தேவையான சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்களுக்குப் பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் பி.கே.காமினி நவரட்ண தெரிவித்துள்ளார்.
***************
அரசுக்குள் குழப்பம்!
இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பான சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்துடன் இணைந்து நடத்தப்பட்ட விவாதத்தில் சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவெல பங்கேற்றது பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
இதன் காரணமாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சும் பாதுகாப்பு அமைச்சும் ஒன்றின் மீது ஒன்று குற்றம்சாட்டியுள்ளதுடன், முறுகலான நிலை ஒன்றும் ஏற்பட்டிருப்பதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் என்ற ஆவணப்படத்துடன் இணைந்ததாக நேரடி விவாத நிகழ்வு ஒன்றையும் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி ஒளிபரப்பியிருந்தது.
கடந்த 8ம் நாள் இரவு இடம்பெற்ற இந்த நேரலை விவாதத்தில் சிறிலங்காவின் இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவெல செய்மதித் தொழில்நுட்பத்தின் மூலம் பங்கேற்றிருந்தார்.
சென்னையில் இருந்து இந்த நிகழ்ச்சி நேரலையாக ஒளிப்பரப்பப்பட்டது.
இந்த விவாதத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் உரிய வகையில் பதிலளிக்கவில்லை என்றும் நிகழ்ச்சியில் எதிர்த்தரப்பில் எழுப்பப்பட்ட பல வாதங்களுக்கு அவர் பொருத்தமான பதில் கூறாமல் விட்டதாகவும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
அதேவேளை, இந்த நிகழ்ச்சி முழுவதுமே விடுதலைப் புலிகளுக்கு சார்பாகவே நடத்தப்பட்டதாகவும், நிகழ்ச்சியின் பின்னணியில் விடுதலைப் புலிகளின் கொடியும் கூட காண்பிக்கப்பட்டதாகவும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இராணுவப் பேச்சாளர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் அது பக்கச்சார்பற்றது என்ற அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதாகவும், இதற்கான சந்தர்ப்பத்தை வழங்கியது சிறிலங்கா அரசின் தரப்பில் இழைக்கப்பட்ட மிகப்பெரிய தவறு என்றும் சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் இராணுவப் பேச்சாளரே பதிலளிக்க வேண்டும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் மூத்த அதிகாரிகளே அழுத்தம் கொடுத்துள்ளனர்.
இந்த நிகழ்ச்சி குறித்து முழுமையாக ஆராயாமல், இராணுவப் பேச்சாளரை இதில் பங்கேற்க வைப்பதற்காக சிறிலங்கா அதிபர் ஊடாக வெளிவிவகார அமைச்சு மேற்கொண்ட நடவடிக்கை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார்
நிகழ்ச்சியின் மைய நோக்கத்தை புரிந்து கொள்ளாமல், சிறிலங்கா அதிபரின் மூலம் இந்த நிகழ்ச்சியில் இராணுவப் பேச்சாளரை பங்கேற்க வைத்தது வெளிவிவகார அமைச்சு செய்த மிகவும் மோசமான முட்டாள்தனமான காரியம் என்றும் அவர் மேலும் விமர்சித்துள்ளார்.
இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜஸ்வந்த் சிங், பிரித்தானியாவின் முன்ளாள் வெளிவிவகார அமைச்சர் டேவிட் மில்லிபான்ட், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களப் பேச்சாளர் மார்க் ரோனர், அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் தம்பித்துரை, காங்கிரஸ் கட்சிப் பேச்சாளர் அபிசேக் பானு, நடிகரும் சட்டமன்ற உறுப்பினருமான சரத்குமார், கேணல் ஹரிகரன் ஆகியோர் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியை ராகுல் கன்வால் ஒருங்கிணைத்து நடத்தியிருந்தார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களில் பெரும்பாலானவர்கள் சிறிலங்காவில் போர்க்குற்றங்கள் நடந்திருந்தால், அனைத்துலக விசாரணைகளுக்கு அனுமதிக்கப்பட வேண்டும் என்றே கருத்து வெளியிட்டிருந்ததாகவும் ஆங்கில ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
***************
தீர்வு வழங்கத் தவறும் அரசு
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்க அரசாங்கம் தவறியுள்ளதாக தேசிய தொழிற்சங்க சம்மேளனத்தின் தலைவர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதனை விடவும், அரசாங்கம் தனது இருப்பை உறுதி செய்துகொள்வதற்கு கூடுதல் ஆர்வம் காட்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டுக்கு சேவையாற்றக் கூடிய முற்போக்கான தலைவர்களை உருவாக்க வேண்டியது மக்களின் கடமையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் உத்தேச நாடாளுமன்ற தீர்வுத் திட்ட யோசனை வெற்றியளிக்காது என்பது யாவரும் அறிந்ததே என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ் மக்களை மீள் குடியேற்றுதல், காணாமல் போனவர்கள் பற்றிய தகவல்களை வழங்குதல், கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுதலை செய்தல், குற்றச் செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக வழக்குத் தொடர்தல், வடக்கில் இராணுவ ஆட்சிய நீக்கி, சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்தல் போன்ற முக்கிய விடயங்கள் குறித்து அரசாங்கம் உரிய கவனம் செலுத்தவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் இவ்வாறான உதாசீனமான போக்கே சர்வதேச சக்திகள் இலங்கை விவகாரத்தில் தலையீடு செய்ய ஏதுவாகின்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
***************
லியாம் பொக்ஸ் நாடு திரும்பினார்
இருநாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு சென்றிருந்த பிரித்தானியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் லியாம் பொக்ஸ் நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பினார்.
பிரத்தானியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் தலைமையிலான குழுவினர் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து விசேட விமானத்தின் மூலமாக நேற்றுக்காலை 10.15 மணியளவில் டோஹா கட்டார் நோக்கி புறப்பட்டு சென்றதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கு சென்றிருந்த லியாம் பொக்ஸ் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு பேருரையில் கலந்துகொண்டு நினைவு சொற்பொழிவாற்றினார்.
இலங்கைக்கு விஜயத்தின் போது அவர் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல் பீரிஸ், பொருளாதார அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதுடன் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையும் சனிக்கிழமை காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
அரசுத் தலைவருடனான பேச்சுவார்த்தையின் போது பல்தரப்பட்ட விடயங்கள் தொடர்பில் இருவரும் விரிவாக ஆராய்ந்துள்ளதுடன் இலங்கை மன்ற கல்லூரியில் நடைபெற்ற லக்ஷ்மன் கதிர்காமரின் நினைவு சொற்பொழிவில் கற்றறிந்த பாடங்களுக்கான நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதியறிக்கையை நவம்பர் மாத்திற்குள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை லியாம் பொக்ஸ் எதிர்க்கட்சி பிரதிநிதிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டபோதிலும் அவர் எதிர்தரப்பில் எவரையும் சந்திக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
***************