Wednesday 6 July 2011

செய்திகள் 06/07

ஓப்புக் கொண்டால் மட்டும் போதாது!
இலங்கையில் இடம்பெற்ற இறுதி கட்ட யுத்தத்தின் போது ஐயாயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இலங்கையில் யுத்தம் நடந்த போது சமாதானச் செயலகத்தின் பணிப்பாளராக கடைமையாற்றியவரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினறுமான ராஜீவ விஜயசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் இறுதி மாதங்களில் நடைபெற்ற படை நடவடிக்கைகளை மனித நேய மீட்பு நடவடிக்கைகள் என இலங்கை அரசு வர்ணித்து வந்துள்ளது.
படை நடவடிக்கைகள் காரணமாக பொதுமக்களுக்கு உயிரிழப்பு ஏற்படக் கூடாது என்பதே தமது கொள்கையாக இருந்தது என்றும் அது கூறி வந்தது.
பொதுமக்கள் யாரும் கொல்லப்படவில்லை என்று அந்நாட்டுத் தலைவர்கள் கூறிவந்தனர்.
ஆனால் இதனை மனித நேய அமைப்புக்கள் நிராகரித்தன.
யுத்தம் முடிந்து 26 மாதங்களான பின்னர் அரசுக்கு எத்தனை பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்பது குறித்து இப்போதாவது தெரியுமா என்ற கேள்விக்கு பதிலளித்த ராஜீவ விஜயசிங்க ஒட்டு மொத்தமாக 5 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றார்.
இதில் பொரும்பான்மையானவர்கள் டிசம்பர் 2008 ஆம் ஆண்டுக்கும் மே 2009 ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
ஐ.நா பொதுச் செயலாளர் நாயகத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழுவும் பிற அமைப்புக்களும் இறுதி யுத்தத்தில் நாற்பதாயிரம் பேர்வரை உயிரிழந்திருக்கலாம் என்று கணித்துள்ளனர்.
இலங்கை அரசு பொதுமக்கள் தரப்புக்கு உயிர் இழப்பு இல்லை என்று கூறி வரும் நிலையில் அரசின் மூத்த அதிகாரி தற்போது பீபீசிக்கு வழங்கிய செவ்வியில் ஐந்தாயிரம் பேர் வரை கொல்லப்பட்டனர் என்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
***************
இரகசியத்தை இன்னும் காக்க விரும்பும் மூன்?
சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
நேற்றுப் பிற்பகல் 3.30 மணியளவில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவும் இந்தச் சந்திப்புக்காக பான் கீ மூனின் செயலகத்துக்குச் சென்றிருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பின் போது ஒளிப்படம் எடுப்பதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தச் சந்திப்பை ஒளிப்படம் எடுப்பதற்கு அனுமதிக்குமாறு ஊடகவியலாளர்கள் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்தவாரம் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் சிபி லிவ்னி, ஐ.நா பொதுச் செயலர் பான் கீ மூனைச் சந்தித்த போது அதை ஒளிப்படம் எடுக்க அனுமதித்த ஐ.நா அதிகாரிகள் நேற்றைய சந்திப்பை ஒளிப்படம் எடுக்க ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை வழக்கமாக ஐ.நா பொதுச்செயலரின் சந்திப்புகள் தொடர்பாக அவரது அதிகாரபூர்வ இணையத்தளத்தில் ஒளிபடங்கள் வெளியிடப்படுவது வழக்கமாக இருந்தாலும்- அதிலும் எந்த ஒளிப்படமும் வெளியிடப்படவில்லை.
இந்தச் சந்திப்புப் பற்றிய தகவல்களும் அதில் பிரசுரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
***************
அதிகாரப்பகிர்வு அறிக்கை கிடைக்குமா?
அதிகாரப் பகிர்வு தொடர்பான அரசாங்கத்தின் எழுத்து மூலப் பதிலறிக்கை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் இன்று வழங்கப்படும் என்று தெரிய வருகின்றது.
தமிழ் மக்களுக்கான அதிகாரப் பகிர்வு தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும், அரசாங்கத்தின் பிரதிநிதிகளுக்குமிடையில் இன்று மாலை நடைபெறும் கலந்துரையாடலின் போதே பிரஸ்தாப பதிலறிக்கையை அரசாங்கம் வழங்கவுள்ளது.
இருதரப்புப் பிரதிநிதிகளுக்கிடையிலான பிரஸ்தாப கலந்துரையாடல் இன்று மாலை ரெசுத் தலைவர் செயலகத்தில் நடைபெறவுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அரசாங்கத் தரப்பு பிரதிநிதிகள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கிடையில் இதுவரை ஏழு கலந்துரையாடல்கள் நடைபெற்றுள்ளன.
இன்று எட்டாவது சுற்று கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இதற்கிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்த்துள்ள போதிலும், அதிகாரப் பரவலாக்கல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழு தொடர்பான அரசாங்கத்தின் யோசனைக்கு தமிழ், முஸ்லிம் கட்சிகளின் ஆதரவு கிடைத்து வருவதாகவும் அரசாங்கம் அறிவித்துள்ளது.
***************
தீர்வு கூட்டமைப்புக்கு ஊடாகவே!
தமிழர்களுக்கான அரசியல் தீர்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே வழங்கப்படவேண்டும் என செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் தமிழர்களின் குரலாக ஒலித்து வருகின்றது. தீர்வைப் பெறுவதற்காக அரசுடன் பேச்சுக்களை நடத்தி வருகின்றது என்றும் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் நாடாளுமன்றில் நேற்று இடம்பெற்ற அவசரகாலச்சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது கூறினார்.
அவசரகாலச்சட்டம் தொடர்ந்தும் நடைமுறையில் இருப்பதால் எமது தமிழ் மக்கள் மிகவும் துன்பத்தை அனுபவிக்கின்றனர்.
தமிழர்களைத் தொடர்ந்தும் அடிமையாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காகவே அரசு அவசரகாலச்சட்டத்தைத் தொடர்ந்தும் நடைமுறைப்படுத்துகின்றது.
இந்த நாட்டில் மக்கள் சுதந்திரமாக வாழ்கின்றனர். ஜனநாயகம் வேறூன்றி உள்ளது. அபிவிருத்தி இடம்பெறுகின்றது என்று கூறிக்கொண்டு ஒவ்வொரு மாதமும் அவசரகாலச்சட்டம் புதுப்பிக்கப்படுகின்றது.
பயங்கரவாதம் முற்றாகத் தோற்கடிக்கப்பட்டுவிட்டது என்று அரசு கூறுகின்றது.
ஏதோவொரு விதத்தில் பயங்கரவாதம் தொடர்கிறது என்றும் கூறுகின்றது.
அவசரகாலச்சட்டத்தை நீடிப்பதற்காகவே அரசு இவ்வாறு கூறுகின்றது.
இந்த அவசரகாலச்சட்டம் நடைமுறையில் இருப்பதால் வடக்கு கிழக்கு மக்கள் கடும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர்.
மீண்டும் கைதுகள் இடம்பெறுகின்றன. மீள்குடியேற்றப்பட்ட கிராமங்களில் படையினரின் நிர்வாகம் இடம்பெறுகின்றது.
இந்த அவசரகாலச்சட்டத்தால் வடக்கு, கிழக்கில் அரச நிர்வாகம் செயலிழந்து போயுள்ளது.
தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்படும் இவ்வாறான கொடுமைகளைத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தட்டிக் கேட்டால் அது நிராகரிக்கப்படுகின்றது.
இந்த நாட்டில் சிங்கள மக்கள் அனுபவிக்கும் அனைத்து உரிமைகளும் எமது மக்களுக்கும் உண்டு.
அவற்றை அனுபவிக்க அரசு இடமளிக்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புதான் தமிழர்களின் பிரச்சினைகளுக்காகக் குரல் எழுப்புகின்றது.
அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதற்காக அரசு பேச்சு நடத்துகின்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகவே தமிழர்களுக்கு அரசியல் தீர்வு கிடைக்கவேண்டும் என்றும் அவர் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
***************
தொடரும் அவசரகாலச் சட்டம்
அவசரகாலச் சட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் 56 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
பிரேரணைக்கு ஆதரவாக 95 வாக்குகளும் எதிராக 39 வாக்களும் கிடைக்கப்பெற்றதையடுத்து பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக பிரதி சபாநாயகர் சந்திமவீரக்கொடி அறிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிப்பதற்கான பிரேரணை நேற்று சபையில் பிரதமர் தி.மு.ஜயரட்ணவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இருதரப்புவாத பிரதிவாதங்களின் பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தன் பிரேரணையை வாக்கெடுப்புக்கு விடுமாறு சபையில் கேட்டுக் கொண்டார்.
இதன் பிரகாரம் கோரம் ஒலிக்கப்பட்டு பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 95 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.
ஐக்கிய தேசியக்கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜனநாயக தேசியக் கூட்டணி ஆகியவற்றைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தனர்.
இதன்பிரகாரம் 39 வாக்குகள் கிடைக்கப்பெற்றன.
இதன்போது பிரேரணை மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டதாக சபைக்கு தலைமை தாங்கிய பிரதி சபாநாயகர் சந்திமவீரக்கொடி அறிவித்தார்.
***************
தமிழர்களை இழிவுபடுத்தும் படையினர்
தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளை நீதிமன்றத்துக்கு அழைத்துச்செல்லும் போது பெண் இராணுவச் சிப்பாய்கள் பகிரங்க இடத்தில் அவர்களைச் சோதனையிடுவதனால் கைதிகள் வெட்கத்தால் கூனிக் குறுகிப்போவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல ஆண்கள் பார்த்திருக்க சோதனையிடுவதால் பெண் கைதிகள் உளவியல் ரீதியில் பாதிக்கப்பட்டு சுகயீனம் அடைகின்றனர் என "நாம் இலங்கையர்'' அமைப்பு விசனம் தெரிவிக்கின்றது.
நீதிமன்ற விசாரணைகளுக்காக தமிழ் அரசியல் கைதிகள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்னரும், சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின்னரும் அதிகாரிகள் அவர்களை சோதனையிடுவது வழக்கம்.
தனி அறையில் வைத்தே அவர்களை இராணுவத்தினர் சோதனையிட வேண்டும்.
ஆனால் தமிழ்க் கைதிகளின் நிலை மாறுபட்டதாகவே உள்ளது.
இவர்கள் நீதிமன்ற விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படும் போதும், மீண்டும் சிறைச்சாலை திரும்பும் போதும் பல்வேறு இன்னல்களை உடல், உள ரீதியாக எதிர்நோக்குகின்றனர் என நாம் இலங்கையர் அமைப்பு தெரிவிக்கின்றது.
***************

இந்திய நிலைப்பாடு என்ன?
சிறிலங்காவின் உள்நாட்டு விவகாரங்களில் இந்தியா எந்த வழியிலும் தலையிடாது. ஆனால், அங்கு நிரந்தர அமைதிய ஏற்பட எல்லாவிதமான உதவிகளையும் செய்யும் என்று இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி சென்றுள்ள சிறிலங்காவின் ஊடக ஆசிரியர்களைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
புதுடெல்லி சவுத்புளொக் செயலகத்தில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இந்திய வெளிவிவகார இணைச் செயலர் விஷ்ணு பிரசாத், இணைச் செயலர் சுரேஷ் பிரான் சிறிங்லா ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்தச் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நிருபமா ராவ், சிறிலங்காவில் நிரந்தர அமைதி ஏற்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியுடனும் ஆர்வத்துடனும் இருப்பதாகவும், இதற்காக எத்தகைய அழுத்தங்களையும் இந்தியா கொடுக்காது என்றும் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைக்கு 13வது திருத்தத்துக்கும் அதிகமான அதிகாரங்களுடன்- ஒற்றையாட்சிக்குள்- அரசியல்தீர்வு காணப்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு என்றும் அவர் கூறியுள்ளார்.
தெற்காசிய பிராந்தியத்தின் பெரிய அண்ணனாக இருக்க இந்தியா விரும்பவில்லை என்றும் இந்தப் பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளுடனும் நட்புறவுடன் செயற்படவே விரும்புவதாகவும் நிருபமா ராவ் தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து சிறிலங்கா அரசாங்கமும், மக்களுமே தீர்மானிக்க வேண்டும்.
அந்தப் பொறுப்பு சிறிலங்காவிடமே உள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அண்மையில் சந்தித்த போது இதனையே வலியுறுத்தியதாகவும் அவர் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் நடைபெற்று வரும் பேச்சுக்கள் மூலம் தேசியப்பிரச்சினைக்கு அனைவரும் ஏற்றுக் கொள்ளத்தக்க தீர்வு காணப்பட்டால் இந்தியா மகிழ்ச்சியடையும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வடக்கையும் கிழக்கையும் இணைக்கும் திட்டத்தை 1987ம் ஆண்டில் இந்தியா முன்வைத்தது. ஆனால் சிறிலங்காவின் நீதிமன்றத் தீர்ப்புக்கமைய வடக்கும், கிழக்கும் பிரிக்கப்பட்டுள்ளன.
இந்த மாகாணங்களை இணைக்க வேண்டுமா இல்லையா என்பதை சிறிலங்கா அரசாங்கமும், அரசியல் கட்சிகளுமே தீர்மானிக்க வேண்டும்.
இதில் இந்தியா, எந்த வகையிலும் தலையிடாது என்றும் இந்திய வெளிவிவகாரச் செயலர் மேலும் கூறியுள்ளார்.
சிறிலங்காவில் நிரந்தர அமைதி ஏற்பட வேண்டும் என்பதே இந்தியாவின் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ள நிருபமா ராவ், சிறிலங்காவில் தமிழ் மக்களுக்கு உரிமையை வழங்கி, ஏனைய சமூகங்களுடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தீர்வை எட்ட வேண்டிய பொறுப்பு சிறிலங்கா அரசாங்கத்துக்கு உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா போரில் வெற்றி கண்டு விட்ட போதிலும் அமைதியை ஏற்படுத்துவதில் இன்னமும் வெற்றி காணவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல்லைதாண்டி மீன்பிடிக்கும் மீனவர்களை சிறிலங்கா மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும் என்றும் நிருபமா ராவ் வலியுறுத்தியுள்ளார்.
எல்லைதாண்டும் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படுவதை எந்த வகையிலும் ஏற்க முடியாது என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வடக்கில் இந்தியா கட்டிக் கொடுக்கவுள்ள 50,000 வீடுகளில் 20 வீடுகள் இந்த மாத இறுதிக்குள் கையளிக்கப்படும் என்றும் 1000 வீடுகள் இந்த ஆண்டு முடிவடைவதற்குள் பொதுமக்களிடம் கையளிக்கப்படும் என்றும் நிருபமாராவ் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனாவின் முதலீடுகள் குறித்து இந்தியா பொறாமைப்படவோ ஆத்திரப்படவோ இல்லை என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இரு நாடுகளுக்கிடையிலும் நட்புறவும், எல்லைப் பிரச்சினைகளும் இருந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்நாட்டில் ஆறரைக் கோடி மக்கள் இருக்கிறார்கள். அவர்கள் இந்த நாட்டின் ஒரு பகுதியினர்.
மத்திய அரசின் மீது அவர்கள் தமது அழுத்தங்களைக் கொண்டு வரும்போது இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்து சிறிலங்கா புரிந்து கொண்டு செயற்பட வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றலாம். அல்லது கோரிக்கைகளை முன்வைக்கலாம்.
ஆனால், இறுதித் தீர்மானத்தை எடுப்பது மத்திய அரசாங்கமே என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
***************