Friday 15 July 2011

செய்திகள் 15/07

பீரிஸின் அவசர சந்திப்பு?
கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் அவசரமாக அழைத்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரித்தானியா, நெதர்லாந்து, ருமேனியா போன்ற நாடுகளின் தூதுவர்கள் பங்கேற்றதாக சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
சிறிலங்கா வெளிவிவகார அமைச்சின் செயலர் கருணாதிலக அமுனுகம மற்றும் மூத்த அதிகாரிகள் பலரும் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
எனினும் இந்தச் சந்திப்பின் போது பேசப்பட்ட முக்கிய விடயங்கள் பற்றிய தகவல்கள் எதையும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிடவில்லை.
இரண்டு நாள் பயணமாக நேற்று பாகிஸ்தான் புறப்பட முன்னர் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் ஐரோப்பிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்துப் பேசியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
****************
அமெரிக்காவில் ஸ்ரீலங்காவின் கொலைக்களம்
அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் கப்பிற்றல் விசிற்றர் நிலையத்தில் இன்று சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் காண்பிக்கப்படவுள்ளது.
ஜனநாயகக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜிம் மக் கொவென் இந்த ஆவணப்படத்தை திரையிடும் நிகழ்வில் முக்கிய பேச்சாளராக கலந்து கொண்டு அறிமுகவுரை நிகழ்த்தவுள்ளார்.
இன்று பிற்பகல் 3 மணியளவில் காண்பிக்கப்படவுள்ள சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை அடுத்து சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் குறித்த விவாதம் ஒன்றும் நடைபெறவுள்ளது.
சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த இந்த ஆவணப்படம் கடந்த மாதம் ஜெனிவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது முதன்முறையாக காண்பிக்கப்பட்டது.
பின்னர் அது நியுயோர்க்கில் ஐ.நா தலைமையக வளாகத்திலும் காண்பிக்கப்பட்டது.
சனல் -4 தொலைக்காட்சி கடந்த மாதம் 14ம் நாள் ஒளிபரப்பிய இந்த ஆவணப்படத்தை அவுஸ்ரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சியும் இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியும் மறு ஒளிபரப்புச் செய்துள்ளன.
உலகெங்கும் கோடிக்கணக்கான மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள இந்த ஆவணப்படத்தை வொசிங்டனில் உள்ள அமெரிக்க காங்கிரசின் கப்பிற்றல் விசிற்றர் நிலையத்தில் இன்று திரையிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அனைத்துலக மனிதஉரிமை அமைப்புகளின் ஏற்பாட்டிலேயே இந்த ஆவணப்படம் அமெரிக்க காங்கிரசில் காண்பிக்கப்படவுள்ளது.
****************
எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்பட அரசு முயற்சி!
எதிர்க்கட்சிகளுடன் இணைந்து செயற்படும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளினால் இலங்கை மீது பிரயோகிக்கப்படும் அழுத்தங்களை சமாளிக்கும் நோக்கில் இந்த முயற்சி எடுக்கப்படுவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
கூட்டு அசியல் பயணம் ஒன்றை ஆரம்பிப்பது குறித்து ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒரு பிரிவினர் முயற்சித்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது.
எதிர்க்கட்சியுடன் இணைந்து சுமுகமான முறையில் ஆட்சி நடத்துவது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த யோசனைத் திட்டத்திற்கு அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ இதுவரையில் ஒப்புதல் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தின் போது இது குறித்து விவாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசாங்கதை கவிழ்க்கும் சதித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பில் சகல உறுப்பினர்களும் நிதானத்துடன் செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் டி.எம். ஜயரட்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
****************
தேர்தல் கண்காணிப்புக்கான வலியுறுத்தல்
யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தல்களை கண்காணிப்பதற்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகளை அனுப்ப வேண்டும் என தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
யாழ் மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாகவும் தமது பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதிருப்பதாக எதிர்க்கட்சிகள் முறைப்பாடு செய்வதாகவும் பவ்ரல் அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுவரை தேர்தல் விதிமுறை மீறல்கள் மற்றும் முறைக்கேடுகள் தொடர்பாக 18 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
இந்தத் தேர்தல் ஒரு தேசிய தேர்தல் போன்ற தன்மையை பெற்றுவருகிறது.
இத்தேர்தல் அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பான யாழ் மக்களின் கருத்தை அளவிடுவதற்கான ஓர் அக்னி பரீட்சையாகும்.
இது ஒரு மினி தேர்தலாக இருந்தபோதிலும் அரசாங்கத்திற்கு மேலும் முக்கியமானதாகும்.
தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொள்ள முடியாமல் இருப்பது குறித்து ஜே.வி.பி. மற்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடமிருந்து தாம் பல முறைப்பாடுகளைப் பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
சூழ்நிலையை கண்காணிப்பதற்காக அங்கு ஒரு குழுவை அனுப்புமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தாம் எழுத்துமூலம் கோரிக்கை விடுக்கவுள்ளதாகவும், தாமும் அங்கு விசேட குழுவொன்றை கண்காணிப்பில் ஈடுபடுத்துவோம் என அவர் கூறினார்.
****************
நியாயமான தேர்தல் வேண்டும்
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெற வேண்டுமானால் வடக்கு மக்கள் அச்சமின்றி வாக்களிக்க வேண்டுமானால் தேர்தல் பணிகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்படக் கூடாது என்று தேர்தல்கள் ஆணையாளரையும் அரசாங்கத்தையும் வலியுறுத்தியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சர்வதேச கண்காணிப்பாளர்களை பணியில் ஈடுபடுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குடாநாட்டு மக்களை அச்சுறுத்தி கூட்டமைப்புக்கான வாக்குகளை முடக்கி கிடைக்கப் பெறுகின்ற வாக்குகளில் வெற்றிபெற வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திட்டமாகும்.
எனினும் அரசாங்கத்தின் இரட்டை வேடத்தன்மையை எமது மக்கள் புரிந்து கொண்டிருப்பதால் கூட்டமைப்பின் வெற்றி உறுதியென்பது தெளிவாகியிருப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.
யாழ். குடாநாடு உள்ளிட்ட வடக்கின் அனைத்துப் பகுதிகளிலும் தேர்தல் பிரசாரங்கள் சூடு பிடித்திருக்கும் நிலையில் அங்குள்ள நிலைவரங்கள் குறித்து விபரிக்கையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்தார்.
****************
மாறுபடும் அரச கொள்கை
அரசாங்கத்தின் கொள்கை நாளுக்கு நாள் மாறுபட்டு செல்கின்றது என சரத் பொன்சேகா குற்றம் சாட்டியுள்ளார்.
தன்னை வைத்தியசாலைக்கு அழைத்து வருவதிலும் முரண்பட்ட கருத்துக்களே இருக்கின்றன.
இவ்வாறான நிலையில் தன்னை சிறையில் அடைப்பதற்கு உத்தரவிட்டவர் என்றோ ஒரு நாள் முழந்தாளிடுவார் என்று முன்னாள் இராணுவத்தளபதி தெரிவித்தார்.
கன்னங்களில் படரும் தேமலுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்வதற்காக சரத்பொன்சேகா கடந்த திங்கட்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தனியார் வைத்தியசாலையில் அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள், கன்னங்களில் படரும் தேமலுக்கு சிகிச்சையளித்ததுடன் அவரைப் பீடித்திருந்த தொண்டைக்கரகரப்பு உபாதைக்கும் சிகிச்சையளிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.
அதனடிப்படையிலேயே பொன்சேகா நேற்றும் வைத்தியசாலைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக்கொண்டதன் பின்னர் வைத்தியசாலையை விட்டு வெளியேறிய பொன்சேகா அரசாங்கத்திடமோ அரச நிறுவனங்களிடமோ சரியான கொள்கையில்லை. நாளுக்கொரு கொள்கையில் செயற்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
முதலில் விடுத்த உத்தரவை பின்னர் வாபஸ் பெற்றுக்கொள்கின்றது.
சண்டித்தனத்தை காண்பித்து எடுத்த முடிவுகளை பின்னர் முழந்தாளிட்டு வாபஸ் பெற்றுக்கொள்கின்றது.
இவ்வாறான நிலையில் தன்னை சிறையில் அடைப்பதற்கு உத்தரவிட்டோரும் விரைவில் முழந்தாளிடுவார் என்றும் தெரிவித்தார்.
****************
பீரிஸ் பாகிஸ்த்தான் விஜயம்
வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று வியாழக்கிழமை காலை பாகிஸ்தான் சென்றடைந்தார்.
இந்த விஜயத்தின்போது பாகிஸ்தான் அரசுத் தலைவர் அசிப் அலி சர்தாரி, பிரதமர் யூசுப் ராசா கிலானி மற்றும் அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஆகியோரை ஜீ.எல். பீரிஸ் சந்தித்து பேச்சுநடத்தவுள்ளார்.
பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் தொடர்புகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தும் பொருட்டே வெளிவிவகார அமைச்சர் பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளதாக அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் வெளிவிவகார அமைச்சின் உயரதிகாரி மேலும் குறிப்பிடுகையில், பாகிஸ்தானுக்கு அமைச்சர் பீரிஸ் மேற்கொண்டுள்ளது வழமையான விஜயமாகும் எனத் தெரிவித்தார்.
சார்க் அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் நாடுகளின் பிரதிநிதிகள் அடிக்கடி சந்தித்து பேச்சு நடத்துவது வழமையாகும்.
வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அண்மையில் இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
அந்த வகையில் தற்போது பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது இருதரப்பு உறவுகள் தொடர்பில் ஆராயப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
****************
கடத்தல்!
மீகஹதென்ன பகுதியைச் சேர்ந்த விமானப்படை அதிகாரி ஒருவரின் மனைவியும் அவரது பத்து வயதான மகனும் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர்.
பிரத்தியேக வகுப்பொன்றுக்குச் சென்ற தனது மகனும் அவரை அழைத்துச் செல்வதற்காகச் சென்ற தனது தனது மனைவியும் காணாமல் போயுள்ளதாக குறிப்பிட்ட விமானப்படை அதிகாரி முறைப்பாடு செய்துள்ளார்.
பிள்ளையை விடுவிப்பதற்காக ஐந்து இலட்சம் ரூபாவை, தாயின் வங்கிக் கணக்கில் வைப்பு செய்யுமாறு இனந்தெரியாத ஒருவர் நேற்றிரவு தொலைபேசி ஊடாக தெரிவித்ததாக முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக கிடைக்கப்பெற்றுள்ள தகவல்களின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
****************