Wednesday 27 July 2011

செய்திகள் 27/07


அமெரிக்க இந்திய ஒற்றுமை தமிழருக்கு நன்மை தருமா?
போர்க் குற்றச்சாட்டுகள் உட்பட இலங்கை தொடர்பான முக்கியமான சகல விடயங்களிலும் புதுடில்லியினதும் வாஷிங்டனினதும் கருத்துகள் ஒரே விதமான தன்மையையே கொண்டிருப்பதாக அமெரிக்காவின் தெற்காசிய, மத்திய ஆசியாவுக்கான உதவி வெளிவிவகார அமைச்சர் ரொபேர்ட் பிளேக் கூறியுள்ளார்.
கடந்த வாரம் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இந்தியாவுக்கு மேற்கொண்டிருந்த விஜயம் தொடர்பாக வாஷிங்டனிலுள்ள வெளிநாட்டு பத்திரிகையாளர் நிலையத்தில் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கையிலேயே ரொபேர்ட் பிளேக் இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை வெளிநாட்டுச் செய்தியாளர்களுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தியா ருடே குழுமத்தின் ஹெட்லைன்ஸ் ருடேயின் தேஜிந்தர் சிங் எழுப்பியிருந்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிளேக் இதனைக் கூறியிருந்தார்.
மனிதாபிமான உதவியைத் தவிர இலங்கைக்கான ஏனைய உதவிகளை நிறுத்தப் போவதாக அமெரிக்க காங்கிரஸ் குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது தொடர்பாக பிளேக்கிடம் கருத்துக்கேட்கப்பட்ட போது, அந்த சட்டமூலம் நிலுவையாக இருப்பதால் தான் கருத்து தெரிவிக்க விரும்பவிலலையென கூறியுள்ளார்.
அந்தத் தீர்மானமானது சட்ட மூலத்திருத்தம் என்றும் அது இன்னமும் நிறைவேற்றப்படவில்லையெனவும் நிலுவையாக இருக்கும் சட்டமூலம் குறித்து கருத்துத் தெரிவிப்பதில்லையெனவும் ரொபேட் பிளேக் தெரிவித்திருக்கிறார்.
இலங்கை தொடர்பாக ஹிலாரி கிளின்டனும் ஜெயலலிதாவும் நீண்ட கலந்துரையாடலை நடத்தியிருந்ததாகவும் பிளேக் கூறியுள்ளார்.
*********************
பேச்சுக்கள் ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்திவரும் பேச்சுவார்த்தைகள் மூலம் ஆக்கபூர்வமான தீர்வொன்று எட்டப்பட வேண்டும் என்பதை நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் மீண்டும் வலியுறுத்தியிருப்பதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்துவதாயின் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனேயே நடத்தப்பட வேண்டும் என்ற செய்தியையும் இந்தத் தேர்தல் முடிவு தெளிவாக்கியுள்ளது.
இவ்வாறான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் நடத்திவரும் பேச்சுவார்த்தைகளின் மூலம் ஆக்கபூர்வமான தீர்வொன்று எட்டப்படவேண்டும் என்பது மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவிடயம் தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், வடக்கு, கிழக்கில் நடத்தப்பட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் தமிழ் மக்கள் அனைவரும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு தன்னிகரற்ற ஆதரவை வழங்கியுள்ளனர்.
தமிழர்களின் ஏகோபித்த கட்சி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற செய்தியை மக்கள் இத்தேர்தல் மூலம் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள் என்றும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டார்.
அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன.
இப்பேச்சுவார்த்தைகள் வெறுமனே காலத்தை இழுத்தடிக்கும் செயற்பாடாக அல்லாமல் ஆக்கபூர்வமான தீர்வொன்றைப் பெறும் முயற்சியாக அமையவேண்டும் என்பதே தமது எதிர்பார்ப்பு எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த சனிக்கிழமை நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வடக்கு, கிழக்கு மாகாணத்திலிருந்து தெரிவுசெய்யப்பட்டவர்களின் பதவியேற்புத் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் கூடி ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் என்று குறிப்பிட்ட அவர், வெற்றிபெற்ற உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளை எவ்வாறு முன்னெடுத்துச் செல்வது என்பது பற்றியும் தீர்மானம் எடுக்கப்படும் என்றும் கூறினார்.
*********************
ஆட்சி அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்
ஆட்சி அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும்; இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் பொருளாதார சமூக கலாசார பண்பாட்டு செயற்பாடுகள் பேணப்படவேண்டும். இதுவே, உள்ளூராட்சித் தேர்தலில் அரசுக்கு தமிழர்கள் வழங்கிய தீர்க்கமான செய்தி என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களைப் பொறுத்தவரை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்கள் வழங்கிய முடிவுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீதான நம்பிக்கைக்கும் தங்களது எதிர்கால சுபீட்த்திற்கும் அவர்கள் வழங்கிய அழிக்க முடியாத தீர்ப்பு.
பல்வேறு அழுத்தங்கள், பயமுறுத்தல்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் துணிந்து இத்தகைய முடிவினை அரசுக்கு வெளிப்படுத்தியுள்ளனர்.
ஜனநாயக ரீதியாக மக்களால் வழங்கப்பட்ட இந்த ஆணையை ஏற்று தமிழ் மக்களுக்கென நீதியானதும் நியாயமானதுமான அரசியல் தீர்வினை அரசு வழங்க முன்வரவேண்டும்.
1956இல் இருந்தே தமிழ் மக்கள் ஜனநாயகரீதியில் தங்கள் முடிவினை ஒரே மாதிரி வெளிப்படுத்தி வருகின்றனர்.
எனினும் அரசுகள் இது தொடர்பில் உருப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ளாததன் விளைவாகவே இன்றைய நிலை உருவாகியது.
இதனை உணர்ந்து இனியாவது அரசு தமிழ் மக்களுக்கான உரிய தீர்வினை வழங்க முன்வரவேண்டும்
கடந்த காலங்களில் இல்லாத அளவு இந்தத்தேர்தலில் அடாவடித்தனங்கள் இடம்பெற்றுள்ளன.
எப்படியாவது வெற்றி பெற்று விடவேண்டும் என்று அரசு பல தந்திரங்களைக் கையாண்டது.
ஆனால் மக்களின் மனங்களை அவர்களால் வெல்ல முடியவில்லை.
ஆட்சி அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும், தமிழ் மக்களின் பொருளாதார சமூக கலாசார பண்பாட்டு செயற்பாடுகள் பேணப்படவேண்டும் என்ற செய்தியையே இந்தத் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இன்று சர்வதேசமும்கூட தமிழ் மக்களின் ஜனநாயக உரிமைகள் பேணப்படவேண்டும் ஜனநாயகம் மதிக்கப்படவேண்டும் என்ற செய்தியை வெளிப்படுத்தி வருகிறது.
அரசுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பற்கும் இடையிலான பேச்சு ஆக்கபூர்வமாக அமைய வேண்டும் எனவும் சர்வதேச சமூகம் வலியுறுத்தி வருகின்றது.
அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளும் இதனையே வலியுறுத்துகின்றன.
இந்தத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று தமிழ் மக்கள் தங்கள் பக்கம் இருக்கின்றனர் என்று சர்வதேசத்திற்குக் காட்ட அரசு முனைப்புடன் செயற்பட்டது.
ஆனால் அரசின் போலித்தனமான நடவடிக்கைகளுக்கு மக்கள் அமைதியாக இருந்தவாறே தமது பதிலை வெளிப்படுத்தி விட்டனர்.
தமிழ் மக்களின் நம்பிக்கையை வீணடிக்காமல் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்மைப்பு ஆக்கபூர்வமான செயற்பாடுகளை மேற்கொள்ளும் என்று சம்பந்தன் தெரிவித்தார்.
*********************
சுயநிர்ணய உரிமையை அரசு அங்கீகரிக்க வேண்டும்
உள்ளுராட்சி தேர்தலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வெற்றிபெற்றமை அரசாங்கத்தின் ஜனநாயக செயற்பாடு என்றும் தமிழ் மக்கள் இப்போதுதான் ஜனநாயக வழிக்கு வருகிறார்களெனவும் விமர்சித்து திசை திருப்பாமல் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை அரசாங்கம் அங்கீகரிக்க வேண்டுமென தேசிய சமாதான பேரவையின் தலைவர் ஜெஹான் பெரேரா தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அமோக வெற்றியீட்டியமை தொடர்பாக அமைச்சர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக அரசாங்கத்துக்கு சாதகமான முறையில் கருத்துக்களை கூறுவது வேடிக்கையானதென அவர் கூறினார்.
கொழும்பு இதழியல் கல்லுரியின் கேட்போர் கூடத்தில் நேற்றுக் காலை ஊடகத்துறை மாணவர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு ஒன்றை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய அவர், சிங்கள ஆங்கில ஊடகங்கள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகள் தொடர்பான விடயங்களை திரிவுபடுத்தி வெளியிடுவதாக குற்றம் சாட்டினார்.
தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகள் உறுதியாக உள்ளதாகவும், தமிழர்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அபிவிருத்தியை மட்டும் அரசாங்கம் பயன்படுத்த முற்பட்டமை தவறான அனுகுமுறையெனவும் ஜெஹான் பெரேரா கூறினார்.
நிவாரணங்கள், சலுகைகள், அபிருத்தி என்பவற்றை தமிழ் மக்கள் எதிர்பாhத்திருந்தால், அவர்கள் அரசதரப்பு வேட்பாளர்களுக்கு வாக்களித்திருப்பார்களெனவும் அவர் கூறினார்.
யுத்தத்தில் வெற்றி பெற்றதைப் போன்று தமிழர்களின் அரசியல் கோரிக்கைகளை தோல்வி அடைய செய்ய முடியாதெனவும், ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு கிழக்கு மாகாணத்தக்கு அதிகாரங்களை பரவலாக்க அரசாங்கம் தயாராக வேண்டுமெனவும் ஜெஹான் பெரேரா தெரிவித்தார்.
பொருளாதார உதவிகளை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்காவில் எடுக்கப்பட்ட தீர்மானத்தைப் போன்ற தீர்மானத்தை ஐரோப்பிய நாடுகளும் எடுக்கக்கூடுமென அவர் எச்சரிக்கை விடுத்தார்.
*********************
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை அச்சுறுத்தும் அமைச்சர்.
ஒரு சில பிரதேசங்களில் பெற்றுள்ள வெற்றியைக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சமஷ்டி நிர்வாக அதிகாரங்களைக் கோரமுடியாது என்று ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்தவரும் சிறிலங்கா அமைச்சர்களில் ஒருவருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் தொடர்பாக கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தத் தேர்தலில் வடக்கிலுள்ள 16 சபைகளை கைப்பற்றியதை வைத்துக் கொண்டு, நாட்டின் பெரும்பான்மை வாக்காளர்களின் விருப்புக்கு எதிராக- காவல்துறை, காணி அதிகாரங்களைக் கேட்டுக் கொண்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் வரக்கூடாது என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஆவேசம் பொங்க அமைச்சர் சம்பிக்க ரணவக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களான இரா.சம்பந்தன், சுரேஸ் பிறேமச்சந்திரன் ஆகியோரின் பெயர்களைக் கூறி எச்சரிக்கை செய்த விதம், ஊடகச் சந்திப்பில் பங்கேற்ற ஊடகவியலாளர்களை அதிர்ச்சியடைய வைத்தது.
பிரபாகரன் ஊடாக சிங்கள தேசத்தை மண்டியிட வைக்க முடியும் என்று நினைத்தவர்கள் இன்று அமெரிக்கா ஊடாக அதனைச் செய்ய முயற்சிப்பதாக கூறிய சம்பிக்க ரணவக்க, அது ஒருபோதும் நடக்காது என்றும் சவால் விட்டுள்ளார்.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆதரவாக வடக்கு உட்பட நாடு முழுவதும் 56 வீதமான வாக்காளர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கே வாக்களித்துள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கில் 4 லட்சத்து 35ஆயிரத்து 507 பதிவு செய்யபட்ட வாக்களார்கள் இருந்தபோதும், 1 லட்சத்து 49ஆயிரத்து 053 பேர் மட்டுமே, அதாவது 34 வீதமானோர் மட்டுமே கூட்டமைப்புக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
*********************
அவசாரகால சட்டம் நீக்கப்படுமா?
அவசரகாலச்சட்டத்தை தளர்த்துவது குறித்து அல்லது நாட்டின் தற்போதைய சூழலில் அவசியமல்லாத பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் சில பிரிவுகளை நீக்குவது குறித்து சிறிலங்கா அமைச்சரவையில் இன்று கலந்துரையாடப்படலாம் என்று மூத்த அரசாங்க வட்டாரம் ஒன்று கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றிடம் தகவல் வெளியிட்டுள்ளது.
அவசரகாலச்சட்டத்தை நீக்குவதற்கு இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டால், அடுத்த மாதம் நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்டத்தை நீடிக்கும் பிரேரணையை சிறிலங்கா அரசாங்கம் சமர்ப்பிக்காது என்றும் அந்த வட்டாரம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
அதேவேளை அவசரகாலச்சட்டத்தின் சில குறிப்பிட்ட பிரிவுகளை நீக்குவதற்கு அமைச்சரவை முடிவு செய்தால், அவற்றை நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் நாடாளுமன்றத்தில் பிரேரணை ஒன்றைக் கொண்டு வரும் என்றும் கூறப்படுகிறது.
அவசரகாலச் சட்டத்தை நீக்குவதற்கு சிறிலங்கா அரசாங்கம் முடிவு செய்தால், எஞ்சியுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை அரசாங்கம் உடனடியாக நடத்த வேண்டிய பிரச்சினையை எதிர்கொள்ள நேரிடும்.
அவசரகாலச்சட்டத்தின் கீழேயே சிறிலங்கா அரசாங்கம் 23 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை டிசம்பர் 31ம் நாள் வரை பிற்போட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்ளூரிலும் அனைத்துலக ரீதியிலும் அவசரகாலச்சட்டத்தை நீக்குமாறு கொடுக்கப்பட்ட அழுத்தங்களின் காரணமாகவே அவசரகாலச்சட்டத்தை முழுமையாகவோ பகுதியாகவோ நீக்குவது பற்றி முடிவு எடுக்கப்படவுள்ளதா என்று எழுப்பிய கேள்விக்கு அந்த அரசாங்க வட்டாரம் விரிவாகப் பதிலளிக்க மறுத்து விட்டது.
எனினும், அவசரகாலச்சட்டத்தை நீக்குவதற்கு அனைத்துலக அழுத்தங்கள் இருப்பதை அந்த வட்டாரம் ஒப்புக்கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் அவசரகாலச்சட்டத்தை நீக்க வேண்டும் என்று சிறிலங்கா அரசாங்கத்தை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றன.
அதேவேளை அவசரகாலச்சட்டத்தை நீக்கினால், சிறிலங்கா அரசாங்கம் கொழும்பு, அனுராதபுரம், பதுளை, தெகிவளை-கல்கிசை, காலி, கம்பகா, கல்முனை, கண்டி, குருணாகல, மாத்தறை, மொறட்டுவ, நீர்கொழும்பு, நுவரெலிய, இரத்தினபுரி, சிறி ஜெயவர்த்தனபுர கோட்டே மாநகரசபைகளுக்கும், அம்பாந்தோட்டை, கொலன்னாவ நகரசபைகளுக்கும், வேறு ஐந்து பிரதேசசபைகளுக்கும் உடனடியாக தேர்தல் நடத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
*********************
ஐயாயிரம் தமிழ் இளைஞர்கள் மர்ம முகாம்களில்!
அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் உட்பட தேசிய மூலச் சட்டத்திற்கு முரணான வகையில் தமிழ் அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
இரகசியமான மர்ம முகாம்களில் 5 ஆயிரம் வரையிலான தமிழ் இளைஞர், யுவதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்கள் என்று சோஷலிச இளைஞர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
அரசியல் கைதிகள் மற்றும் மர்ம முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை அரசாங்கம் உடனடியாக வெளிப்படுத்த வேண்டும்.
அவ்வாறு இல்லையென்றால் அவர்களின் விபரங்களை தாம் விசேட நடவடிக்கைகள் ஊடாக பாராளுமன்றில் சமர்ப்பிக்க நேரிடும் என்றும் அந்த சங்கம் எச்சத்துள்ளது.
பத்தரல்லையில் அமைந்துள்ள ஜே.வி.பி. யின் தலைமையகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே இவ்வவாறு தெரிவிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய சோஷலிச இளைஞர் சங்கத்தின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்னாயக்க கூறுகையில்,
1983 ஆம் ஆண்டில் ஜூலை மாதம் 23 ஆம் திகதி நடைபெற்ற தமிழர்களுக்கு எதிரான வன்செயல்களினால் தேசிய அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டது மட்டுமின்றி பிரிவினைவாதம் ஆயுதப் போராட்டம் என்று இன முரண்பாடு தீவிரமடைந்தது.
ஆனால் தற்போது முப்பதாண்டுகால யுத்தம் முடிவடைந்தும் இனங்களுக்கு இடையிலான ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்கான சிறந்த சந்தர்ப்பம் காணப்படுகின்ற போதிலும் அதனை முறையாக பயன்படுத்துவதில் நடைமுறை தலைமைத்துவம் தோல்வி கண்டுள்ளது.
ஜனநாயகம் மீதும் தேசிய அரசியல் மீதும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் அரசின் செயற்பாடுகள் அமையவும் இல்லை.
கடந்த 10 வருடத்திற்கும் அதிகமான காலங்களாக தமிழ் அரசியல் கைதிகள் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பலர் இரகசிய முகாம்களிலும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
தமது தேடல்களின் மூலம் இந்தச் சட்ட விரோதமான தடுத்து வைத்தல் இனம் காணப்பட்டுள்ளது.
ஆனால் அரசாங்கம் காணாமல் போனவர்கள் தொடர்பாகவோ, அரசியல் கைதிகள் தொடர்பாகவோ விசாரணைகளை முன்னெடுப்பதும் இல்லை. விபரங்களை வெளியிடுவதும் இல்லை.
பயங்கரவாதம் இல்லாத போதிலும் நடைமுறையில் உள்ள அவசரகாலச் சட்டம் மற்றும் பயங்கரவாத தடுப்புச் சட்டம் போன்றவற்றில் கூட விசாரணைகள் மற்றும் நீதிமன்றில் ஆஜர்படுத்தல் போன்ற சட்ட வழி முறைகள் உள்ளன.
ஆனால் சிறை வைக்கப்பட்டுள்ள, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு எந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது என்பதே தெரியவில்லை.
எனவே அரசாங்கம் தொடர்ந்தும் மௌனம் காக்காமல் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும்.
தம் வசம் குறிப்பிட்ட விபரங்கள் உள்ளது. அவற்றை விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிப்போம் என்றும் தொடர்ந்தும் தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதை அனுமதிக்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.
*********************
வடக்கின் புதிய கட்டளைத் தளபதி
வடக்கின் புதிய கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் மானவடு நியமிக்கப்பட்டுள்ளார்.
வட மாகாண கட்டளைத் தளபதியாக இன்று முதல் மேஜர் ஜெனரல் எஸ்.ஆர். மானவடு செயற்படுவார் என தெரிவிக்கப்படுகிறது.
பனாகொடை இராணுவத் தலைமையகத்தில் இருந்து கொண்டு வட மாகாண கட்டளைத் தளபதி பணிகளை ஆற்றுவார் என சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கொழும்பு, கம்பஹா, களுத்துறை உள்ளிட்ட 15 மாவட்டங்களின் பாதுகாப்பு தொடர்பிலான கட்டளைத் தளபதியாக மேஜர் ஜெனரல் மானவடு ஏற்கனவே கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
*********************