Sunday 24 July 2011

செய்திகள் 24/07


அரச அடக்குமுறையை ஜனநாயக வழியில் தோற்கடித்த தன்மானத் தமிழருக்கே வெற்றி!
நேற்று நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழர்களுக்குப் பெரு வெற்றி கிடைத்துள்ளது.
அரச அடக்குமுறைக்கு எதிராக மக்களை வாக்களிக்கக் கோரிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குத் தமது ஏகோபித்த ஆதரவைத் தெரிவித்ததன் மூலம் தமிழர்கள் இந்தப் பெரு வெற்றியைப் பெற்றுள்ளார்கள்.
வடக்கில் உள்ள 20 பிரதேச சபைகளில் 18 சபைகளையும் கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் நடந்த இரு சபைகளையும்கூட கூட்டமைப்பே கைப்பற்றி உள்ளது.
யாழ். மாவட்டத்தில் 3 நகரசபைகளுக்கும் 13 பிரதேச சபைகளுக்கும் கிளிநொச்சியில் 3 பிரதேச சபைகளுக்கும் முல்லைத்தீவில் ஒரு பிரதேச சபைக்கும் தேர்தல் நடத்தப்பட்டது.
கிழக்கில் அம்பாறை மாவட்டத்தில் 2 பிரதேச சபைகளுக்கும் வாக்களிப்பு இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்டத்தில் 3 பிரதேச சபைகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.
வன்னியில் சுமார் 30 வருடங்களின் பின்னர் முதல் தடவையாக உள்ளூராட்சித் தேர்தல் நடைபெற்றுள்ளது.
படையினரின் கெடுபிடிகள், அச்சுறுத்தல்கள் மற்றும் லஞ்சம் கொடுத்தல் ஆகிய பல முறைப்பாடுகள் பதிவாகி இருந்த நிலையிலும் வாக்காளர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே தமது பெரும் ஆதரவையும் வழங்கி உள்ளனர்.
அரச தரப்பினரின் சட்டவிரோதச் செயற்பாடுகள், கடும் அச்சுறுத்தல்கள், அராஜகங்களின் மத்தியில் வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட்ட நிலையிலும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களித்திருப்பது அவர்களின் தேசிய உணர்வைக் காட்டுகின்றது என்று கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் தெரிவித்தார்.
தமக்குப் பெரு வெற்றியை ஈட்டித் தந்த தமிழ் மக்களுக்கு கூட்டமைப்பினர் தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.
*****************

தமிழரின் தாகம் தணியாது என்பது மீள் நிரூபணம்
நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 65 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 45 சபைகளை கைப்பற்றியுள்ளது.
இலங்கை தமிழரசுக் கட்சி 18 உள்ளூராட்சி சபைகளை வென்றது.
தமிழர் விடுதலைக் கூட்டணி 2 பிரதேச சபைகளை கைப்பற்றியது.
வடக்கு கிழக்கில் இலங்கை தமிழரசுக் கட்சி பெரு வெற்றி பெற்றுள்ளது.
யாழ்ப்பாணத்தில் தேர்தல் நடைபெற்ற 16 சபைகளில் 13 சபைகளை இலங்கை தமிழரசுக் கட்சி வென்றது.
ஊர்காவற்துறை, நெடுந்தீவு, வேலணை பிரதேச சபைகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியது. 
முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச சபை, கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச சபை என்பனவும் தமிழரசு கட்சி வசமாகின.
கிளிநொச்சியின் பச்சிலைப்பள்ளி மற்றும் கரைச்சி பிரதேச சபைகளை தமிழர் விடுதலைக் கூட்டணி சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியது.
அம்பாறையில் தேர்தல் நடைபெற்ற காரைதீவு பிரதேச சபை மற்றும் திருக்கோவில் பிரதேச சபைகளை தமிழரசுக் கட்சி கைப்பற்றியது.
திருகோணமலையில் பட்டணமும் சூழலும் பிரதேச சபை தமிழரசுக்கட்சி வசமானது.
அங்கு தேர்தல் நடந்த குச்சவெளி, சேருவில, கந்தளாய் பிரதேச சபைகளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியது.
இத்தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகியன ஒரு சபையையும் கைப்பற்றவில்லை.
*****************

முறைகேடான தேர்தல் பற்றிய முறைப்பாடு
கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபை மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபை ஆகியவற்றிற்கு நடத்தப்பட்ட தேர்தல்களில் இடம்பெற்ற அச்சுறுத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் காரணமாக மக்கள் சுதந்திரமாக வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாகப் பொருத்தமான நடவடிக்கைகளில் ஒன்றாக தற்போதைய தேர்தலை ரத்துச் செய்துவிட்டு வேறொரு தினத்தில் புதிதாகத் தேர்தலை நடத்துவதாக அமைய வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தேர்தல் ஆணையாளருக்கு திருகோணமலையிலிருந்து அனுப்பிய அவசர தொலைநகல் மூலமான கடிதத்தில் கேட்டுள்ளார்.
முறைகேடுகள் பற்றி தகவல் கிடைத்ததும் சம்பந்தன் முதலில் தேர்தல் ஆணையாளருடன் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு விபரங்களைத் தெரிவித்தார்.
பின்னர் தொலைநகல் மூலம் அனுப்பிய கடிதத்தில், கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட வட்டக்கச்சி, இராமநாதபுரம், கல்மடுநகர், சம்புக்குளம், மாயவனூர், மலையாளபுரம், கிருஷ்ணபுரம், பாரதிபுரம், கோணாவில், உருத்திரபுரம், செல்வநகர், திருவையாறு, தெட்சணாபுரம் கிராமங்களில் ஆயுதங்களுடனான குழுக்கள் இரவு முதல் சனி காலை வரை வீடுவீடாகச் சென்று வாக்காளர் அட்டைகளைப் பறித்து வாக்களிக்கச் செல்லக்கூடாது என்று அச்சுறுத்தியுள்ளனர்.
சில இடங்களில் அடையாள அட்டைகளைப் பறித்துள்ளனர்.
பச்சிலைப்பள்ளி பிரதேச சபை எல்லைக்குள் வரும் அரசர்கேணி, செந்தில்நகர், தம்பலகமம், முள்ளியடி, பளைநகரம், பெரியபளை ஆகிய கிராமங்களிலும் வாக்காளர்கள் இவ்வாறு அச்சுறுத்தப்பட்டுள்ளனர்.
எனவே இப்பகுதிகளில் சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் உறுதி செய்யப்பட வேண்டும் அல்லது தேர்தலை இரத்துச் செய்து வேறொரு திகதியில் புதிதாகத் தேர்தலை நடத்த வேண்டும் என்று சம்பந்தன் தேர்தல் ஆணையாளரைக் கேட்டுள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் நீதியாகவும் நேர்மையாகவும் இடம்பெறவில்லையென்ற சம்பவங்களைக் குறிப்பிட்டு கிளிநொச்சி மாவட்டத்தின் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலை இரத்து செய்யுமாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா கடிதம் மூலம் தேர்தல்கள் ஆணையாளருக்கு நேற்று சனிக்கிழமை மாலை அனுப்பியுள்ளார்.
இல்லையேல் குறிப்பிட்ட சம்பவங்கள் இடம்பெற்ற தொகுதிகளில் வாக்களிப்பை மீள நடத்துமாறும் அவர் கேட்டுள்ளார்.
இதேவேளை கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி மற்றும் பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச சபை வாக்காளர்களின் வீடுகளுக்கு ஆயுதத்துடன் புகுந்த சிலர் அவர்களது வாக்கு அட்டைகளைப் பறித்துச் சென்றதாக புத்திஜீவிகள் ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த பகுதிகளின் வாக்காளர்கள் தங்களது வாக்குகளை அளிப்பதற்கான உரிய நடவடிக்கையை எடுத்து நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தல் நடைபெறுவதற்கான சூழலை ஏற்படுத்துமாறு அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி பேராசிரியர் உதித குணசேகர தேர்தல்கள் ஆணையாளருக்குக் கடிதம் எழுதியதாகத் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் சுமுகமாக இடம்பெற்ற போதும் கிளிநொச்சியில் வாக்காளர் அட்டைகள் அபகரிக்கப்பட்டமை பாரதூரமான செயலெனவும் தேர்தலைக் கண்காணிப்பதற்கான அமைப்பான கபே தெரிவித்துள்ளதுடன் கிளிநொச்சியில் 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
65 உள்ளூராட்சி சபைகளின் தேர்தல் வாக்களிப்பு தொடர்பில் அந்த அமைப்பு நேற்று சனிக்கிழமை மாலை கொழும்பிலுள்ள நிப்பொன் ஹோட்டலில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அதன் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தேர்தல் தினத்தன்று தேர்தலுடன் தொடர்புபட்ட 73 சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இதில் தேர்தல் சட்ட விதிகள் மீறப்பட்ட 32 சம்பவங்களையும் சட்டவிரோத பிரசாரம் தொடர்பில் 12 முறைப்பாடுகளும் அடங்குகின்றன.
அதேபோல், 20 அச்சுறுத்தல் சம்பவங்கள் தொடர்பாகவும் ஆறு தாக்குதல் சம்பவங்களும் இடம்பெற்ற நிலையில் மரணம் உட்பட பல சம்பவங்கள் உள்ளன.
தெற்கில் தேர்தல் சுமுகமாக இடம்பெற்றாலும் கடுவல, மினுவாங்கொட உட்பட ஏனைய சில பகுதிகளில் சட்டவிரோத பிரசாரம் இடம்பெற்றுள்ளது.
இவை தவிர மக்கள் சாதாரண சூழ்நிலையில் வாக்களித்தனர்.
எனினும் கிளிநொச்சியில் வாக்காளர் அட்டைகள் அபகரிக்கப்பட்ட பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.
இங்கு 20 க்கும் மேற்பட்ட கிராமங்களில் வாக்காளர் அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இத்தேர்தலில் இது பாரதூரமான விடயமாகவுள்ளது.
நாடு முழுவதும் 55 முதல் 58 வீதம் வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவில் 62 வீதமும் கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணத்தில் தலா 55 வீதமான வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
*****************
ஊர்வலங்களுக்குத் தடை
இன்று முதல் ஒருவார காலத்திற்கு ஊர்வலங்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் சட்டத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும், காவல்துறை அத்தியட்சகருமன பிரிஷாந்த ஜயகொடி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய பேரணிகள் வாகன ஊர்வலங்கள் என்பவற்றிற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
தேர்தல் நடைபெற்ற நேற்றைய தினத்தில் அமைதியான சூழ்நிலை நிலவியதாகவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
*****************
கறுப்பு யூலை நினைவேந்தலில் பெரும் எண்ணிக்கையிலான தமிழர்கள்
தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் முக்கிய நாளான கறுப்பு ஜூலை படுகொலைகளை நினைவேந்தி, பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன்பாக நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வு உணர்வு பூர்வமாக இடம்பெற்றது.
இதில் ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் கலந்துகொண்டனர்.
கறுப்பு ஜூலை இன அழிப்பு மற்றும், அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணைகளை வலியுறுத்தும் துண்டுப் பிரசுரங்களை மாலை 3:00 மணி முதல் 6:00 மணிவரை பொதுமக்கள் மத்தியில் வழங்கல் செய்த பிரித்தானிய தமிழர் பேரவையின் தொண்டர்களும், பொதுமக்களும், மாலை 6:00 முதல் இரவு 9:00 மணிவரை நினைவு நிகழ்வை நடத்தியிருந்தனர்.
மக்கள் தமது உள்ளுணர்வை வெளிப்படுத்தும் வகையில் கறுப்புடை அணிந்து காணப்பட்டதுடன், கறுப்புக் கொடிகளையும் தாங்கி நின்று, இழந்த எம் உறவுகளுக்காக மெழுகுவர்த்தி கொழுத்தி ஆத்ம வணக்கம் செலுத்தினர்.
இந்த நினைவு வணக்க நிகழ்வில் இன அழிப்பிற்கு எதிரான தமிழர்கள் அமைப்பைச் சேர்ந்த ஜனனி ஜனநாயகம், பிரித்தானிய தமிழர் பேரவையின் முக்கிய உறுப்பினர் ரவிக்குமார் ஆகியோர் உரையாற்றியிருந்தனர்.
ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா இனவெறி அரசாங்கங்கள் மேற்கொண்டுவந்த இன அழிப்பின் ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக 1983 கறுப்பு ஜூலைப் படுகொலைகள் திகழ்கின்றன.
இதேவேளை, சர்வதேச மன்னிப்புச் சபையும் அனைத்துலக சுயாதீன போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தி கையெழுத்துப் பெறும் போராட்டத்தை இன்று நடத்தியிருந்தது.
*****************

போர்க் குற்றவாளிகள் - தமிழில் புத்தகமாக!
ஐ.நா.நிபுணர் குழு, இலங்கையின் மீது சுமர்த்தியுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய ஆவண அறிக்கையை மனிதம் வெளியீடு தமிழில் மொழி மாற்றம் செய்துள்ளது.
போர்க் குற்றவாளி என்ற தலைப்புடைய இப்புத்தகம் இன்னும் சில தினங்களில் தமிழகம் மற்றும் உலக முழுக்க விற்பனைக்கு வர உள்ளது.
முதல் பாகத்தில், ஐ.நா.நிபுணர் குழு அறிக்கையை சார்ந்துள்ள பல்வேறு செய்திகளை கொண்ட நான்கு கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளன.
இரண்டாம் பாகம் முழுவதும், 444 குறிப்பு எண்களைக் கொண்டுள்ள ஐ.நா.நிபுணர் குழுவின் அறிக்கை படங்களோடு, முழுமையாக வாசிப்புத் தமிழில் தொகுக்கப்பட்டிருக்கிறது.
வடகிழக்கு மனித உரிமை செயலகத்தால் தொகுக்கப்பட்ட, தமிழினப் படுகொலைகள் என்ற புத்தகத்தை 2009-ல் தமிழிலும், ஆங்கிலத்திலும் வெளியிட்டு உலக முழுக்க பரவ செய்துள்ள, மனிதம் வெளியீட்டாளரின் இரண்டாவது ஆவணப் புத்தகமாக, "போர்க் குற்றவாளிகள்" வெளிவருகிறது.
*****************
ஸ்ரீலங்கா இராணுவத்தின் மீது குற்றம் சாட்டும் அரச சார்பற்ற நிறுவனங்கள்
இராணுவத்தினர் மீது போர்க் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு மூன்று அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சி மேற்கொண்டுள்ளதாக திவயின சிங்களப் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
எனினும், இந்த முயற்சியில் தோல்வியடைந்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
2011ம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பு புதிய பிரகடனம் ஒன்றை அறிவித்துள்ளது.
எனினும், இந்தப் பிரகடனத்தின் கீழ் கடந்த காலச் சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பில் இந்தப் பிரகடனத்தின் அடிப்படையில் குற்றச்சாட்டுக்களை சுமத்துவதற்கு குறித்த சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்கள் முயற்சித்துள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்துதல், சம்பந்தப்பட்டவர்களை பெயரிடுதல் போன்ற விடயங்கள் புதிய பிரகடனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நெருக்கடிக் குழு, அனைத்துலக மன்னிப்புச் சபை மற்றும் நாடு கடந்த தமிழீழ இராச்சிய அமைப்பு ஆகியன இவ்வாறு அரசாங்கத்திற்கும் படையினருக்கும் எதிராக குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருவதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சிறுவர் பாதுகாப்பு அமைப்பினால், பாதுகாப்புச் சபைக்கு சனல்4 காணொளி தொடர்பில் அறிவிக்கப்பட்டிருந்தாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விடயம் அம்பலமானதன் பின்னர், தமக்கும் இந்த முறைப்பாட்டிற்கும் தொடர்பில்லை என சிறுவர் பாதுகாப்பு சபையின் பிரதிநிதி ராதிகா குமாரசுவாமி தெரிவித்துள்ளார் என செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*****************