Monday 18 July 2011

செய்திகள் 18/07

உயிரை வேட்டையாடியோர், வாக்கை வேட்டையாட தயார்!
வன்னியில் எமது இளைஞர்களின் யுவதிகளின் ஆடைகளைக் களைந்து கண்களையும் கைகளையும் கட்டிச் சுட்டுக்கொன்றவர்களே இன்று தேர்தலுக்காக வந்து எம்மக்களுக்கு இலவச வேட்டியும் சேலையும் கொடுக்கிறார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத்தேர்தலை ஒட்டிய முதலாவது தேர்தல் பரப்புரைக் கூட்டத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிளிநொச்சியில் நேற்று நடத்தியது.
இராணுவத்தினரின் அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் கடுமையாக இருப்பதாகக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்து வந்த நிலையில், நேற்றைய கூட்டத்தில் நூற்றுக்கணக்கான வன்னி மக்கள் கலந்துகொண்டனர்.
மக்கள் தமக்கு நீதி கேட்டு இந்த அரசுக்கு இந்தத் தேர்தலில் தக்க பதிலடியை வழங்குவார்கள் என்று அந்தக் கூட்டத்தில் பேசிய மாவை சேனாதிராசா தெரிவித்தார்.
போரில் வெற்றி பெற்றதாகக் கூறும் அரசு இந்தத் தேர்தலின் மூலம் ஜனநாயகத்திலும் தான் வெற்றி பெற்றதாகக் காட்ட முயற்சிக்கிறது என்று கூறினார்.
வடபகுதிக்கு அனைத்து அமைச்சர்களும் படையெடுத்து வந்து அபிவிருத்தி என்ற மாயையை ஏற்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.
****************
மோசடித் தேர்தலுக்கு அரசு ஆயத்தம் - ஜே.வி.பி
வடக்கில் எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், 1981ஆம் ஆண்டு நடைபெற்ற யாழ். மாவட்ட சபைத் தேர்தல்களைப் போன்று ஊழல் மோசடிமிக்க தேர்தலாக இருக்கும் என்று ஜே.வி.பி. குற்றம் சாட்டியுள்ளது.
ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் இது தொடர்பாக கூறுகையில், வடக்கு உள்ளூராட்சி சபைகளின் தேர்தல்களில் எதிர்க்கட்சியினர் பிரசாரம் செய்ய படையினரும், காவல்துறையினரும் இடையூறாக இருக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தாம் தேர்தல் ஆணையாளர் உட்பட பல தரப்புகளிடமும் முறைப்பாடு செய்தும் உருப்படியாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் குறிப்பிட்டார்.
பெரும்பாலான அமைச்சர்கள் யாழ். குடா நாட்டில் முகாமிட்டுள்ளனர்.
இலவசமாகப் பல பொருட்கள் வழங்கப்படுகின்றன.
அபிவிருத்திப் பணிகள் என்ற பெயரில் அடிக்கல் நடும் விழாக்கள், வளப் பகிர்வுகள் இடம் பெறுகின்றன.
அரச சொத்துகள், வளங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்படுகின்றன.
அத்துடன், சில பகுதிகளில் அடாவடித்தனங்களும் இடம்பெறுகின்றன.
மொத்தத்தில் இது ஒரு சுதந்திரமான, நேர்மையான தேர்தலாக இருக்கப்போவதில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
****************
அரச நிதி மோசடி?
வடமாகாண சபைக்கு உரித்தான 25 மில்லியன் ரூபாவை தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அரசு பயன்படுத்துவது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தேர்தல் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்யவுள்ளது.
கூட்டமைப்பின் இணைச் செயலர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று இதனைத் தெரிவித்தார்.
வடக்கு மாகாண சபைக்குரிய இந்த நிதியை வடமாகாண ஆளுநர் வழங்கியிருக்கிறார் எனத் தெரியவந்துள்ளது.
வடக்கு மக்களின் நலன்புரித் திட்டங்களுக்கு என ஒதுக்கப்பட வேண்டிய இந்த நிதியைத் தேர்தலில் வெற்றிபெறும் நோக்கில் அரசு திட்டமிட்டு செலவிடுகிறது.
இந்த நிதியில் வேட்டி, பட்டுச்சேலை, தையல் இயந்திரங்கள், ஜெனரேட்டர்கள் என்பன இலவசமாக வழங்கப்படுகின்றன.
இது உள்ளூராட்சித் தேர்தல்கள் சட்டத்தின்படி குற்றமாகும்.
உள்ளூராட்சித் தேர்தல்கள் சட்ட விதிகளின் 89ஆவது ­சரத்தின்படி இவ்வாறு தேர்தல் அறிவிக்கப்பட்டு, வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட பின்னர் வாக்காளர்களுக்கு இலவசமாகப் பொருட்களை வழங்குவது இலஞ்சமாகக் கருதப்படும்.
இதைக் கொடுப்பதும் வாங்குவதும் இந்தச் ­சரத்தின்படி குற்றமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
****************
தேர்தலை கண்காணிக்கும் அமெரிக்கா!
யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுவது தொடர்பாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவே அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் அங்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்தவாரம் யாழ்ப்பாணம் சென்ற அமெரிக்கத் தூதரக அதிகாரி யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைதீவு மாவட்டங்களின் அரசாங்க அதிகாரிகளையும், பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசியிருந்தார்.
இவர் யாழ்ப்பாணத்தின் தேர்தல் நிலைமைகள் குறித்து கண்காணிக்கவே சென்றதாக கருதப்படுகிறது.
ஆனால் அதுபற்றி கருத்து வெளியிட கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் மறுத்து விட்டது.
இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர், தமது தூதரக அதிகாரிகள் தொடர்ச்சியாக சிறிலங்காவில் அரச அதிகாரிகளையும் பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசுவதும் நடப்பு விவகாரங்கள் தொடர்பாக கலந்துரையாடுவதும் வழக்கமே என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் கடந்தவாரம் யாழ்ப்பாணம் சென்றிருந்தார்.
அவர் நடத்திய தனிப்பட்ட கலந்துரையாடல் மற்றும் சந்திப்புகள் தொடர்பாக அமெரிக்க அரசாங்கம் கருத்து எதையும் வெளியிடாது என்றும் அந்த அதிகாரி மேலும் கூறியுள்ளார்.
எனினும் அமெரிக்கத் தூதரக அதிகாரி வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல் நிலைமைகள் குறித்தே மதிப்பீடு செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
****************
கண்காணிப்பாளர்கள் நிறுத்தப்படுவர் - பவ்ரல்
வடக்கின் சகல வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பாளர்கள் நிறுத்தப்பட உள்ளதாக பெபரல் அமைப்பு அறிவித்துள்ளது.
தேர்தல் நடைபெறும் ஏனைய பிரதேசங்களுக்கும் கண்காணிப்பாளர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு கண்காணிப்பாளர்கள் விரைவில் அந்தப் பிரதேசத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக பெபரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
இவற்றுக்கு மேலதிகமாக வடக்கு மற்றும் ஏனைய பிரதேசங்களில் தேர்தல் நடைபெறும் தினம் நடமாடும் கண்காணிப்பாளர்கள் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.
****************
அரசியல் கைதிகள் தொடர்பில் அவசர நடவடிக்கை தேவை - சிறைச்சாலைத் திணைக்களம்
சிறிலங்காவில் சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளால் தமக்கு நெருக்கடி ஏற்படுவதாகவும், அவர்கள் மீதான சட்ட நடவடிக்கை குறித்து விரைவாக தீர்மானம் எடுக்கும் படியும் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சிறிலங்காவின் சிறைசாலைகள் திணைக்களம் அவசர வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள், தமது விடுதலை மற்றும் விசாரணையை விரைவுபடுத்தக் கோரி அடிக்கடி போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
தற்போது வவுனியா சிறையில் உள்ள 40 அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டுள்ளனர்.
இவர்களில் ஒருவரின் நிலை மோசமடைந்துள்ளதை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தநிலையிலேயே இத்தகைய உண்ணாவிரதப் போராட்டங்களை இனிமேலும் தம்மால் எதிர்கொள்ள முடியாது என்று சிறைச்சாலைகள் திணைக்களம் முடிவு செய்துள்ளது.
இதனால் அரசியல்கைதிகள் மீதான சட்ட நடவடிக்கை குறித்து உடனடியாகத் தீர்மானம் ஒன்றை எடுக்குமாறு கோரி சட்டமாஅதிபர் திணைக்களத்துக்கு சிறைச்சாலைகள் ஆணையாளர் மேஜர் ஜெனரல் வி.ஆர் டி சில்வா கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
இந்தக் கடிதத்தில் அரசியல் கைதிகள் குறித்து துரிதமாக சட்டநடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அவர் சட்டமா அதிபர் திணைகளத்தைக் கோரியுள்ளார்.
அத்துடன் வுனியாவில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகள் தாம் சிறைச்சாலை அதிகாரிகளுடன் பேச முடியாது என்று கூறிவிட்டனர்.
சட்டமா அதிபர் திணைக்களத்துடன் மட்டுமே பேச வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளதால், இது குறித்து அவசர நடவடிக்கை எடுக்குமாறும் மேஜர் ஜெனரல் வி.ஆர். டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
****************
பணம் சம்பாதிப்பதிலேயே குறியாகவுள்ள அரசியல்வாதிகள்
தற்போது ஆட்சியில் உள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கம் பணத்தை சம்பாதித்துக் கொள்வதில் கூடுதல் நாட்டம் காட்டுவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
அக்குரனை பிரதேச்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பென்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போது புதிய வகையிலான தேசப்பற்றாளர்கள் உருவாகியுள்ளதாகவும் அவர்களுக்கு தேசத்தின் மீதான பற்று இல்லையெனவும் பணத்தின் மீதே அதிக பற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
தேசப்பற்றுக்காக உரக்கக் குரல் கொடுக்கும் பலர் மெய்யாகவே தேசத்தின் மீது பற்றுடையவர்கள் அல்ல எனவும், சுயநலவாத அரசியலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் பணத்தில் சிறிய தொகுதியை மக்கள் நலனுக்காக ஒதுக்கி ஏனைய பெரும் பகுதியை சொந்த தேவைக்காகப் பயன்படுத்தும் கலாச்சாரம் உருவாகியுள்ளது என அவர் வருத்தம் வெளியிட்டுள்ளார்.
****************
வேட்பாளர் மீது தாக்குதல்!
வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் பருத்தித்துறைப் பிரதேச சபை வேட்பாளர் ஒருவர் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் உயர் அதிகாரி ஒருவரால் கடுமையாகத் தாக்கப்பட்டது குறித்து முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மருதங்கேணி சந்தியிலிருந்து தாளையடி செல்லும் வீதியில் சுமார் 100 மீற்றர் தூரத்தில் ஐக்கிய தேசியக் கட்சி வேட்பாளர் அவரது ஆதரவாளர்களுடன் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த வேளையிலேயே இந்த வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் கத்தியவாறு அமைச்சின் அதிகாரி தன்மீது தாக்குதல் நடத்தியதாக தாக்குலுக்குள்ளான ஐ.தே.க. வேட்பாளர் தெரிவித்தார்.
இத் தாக்குதல் தொடர்பாக ஐ.தே.க. யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரனுக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து அவ்விடத்துக்குச் சென்ற அவர் தாக்குதலுக்குள்ளான வேட்பாளரைச் சந்தித்து சம்பவம் தொடர்பாகக் கேட்டறிந்ததுடன், இத்தாக்குதல் தொடர்பாக அவர் யாழ்ப்பாணத்திலுள்ள தேர்தல் கண்காணிப்பு அலுவலகத்திலும் முறைப்பாடு செய்துள்ளார்.
****************
ஆயுதக் களைவு?
கிழக்கு மாகாணத்தில் செயற்படும் ஆயுதக் குழுக்கள் அவற்றிடமுள்ள ஆயுதங்களை விரைவாக ஒப்படைக்க வேண்டுமென பாதுகாப்பு அமைச்சு மூலம் காவல் நிலையங்கள் ஊடாக நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் அறிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில், கொள்ளை நடவடிக்கைகளில் பயன்படுத்துவதற்காக சில குழுக்கள் ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் சில குழுக்கள் சில அரசியல் கட்சிகளுடன் தொடர்புபட்டுள்ளதாகவும் சந்தேகம் தெரிவிக்கப்பட்டுவருகின்ற நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மட்டக்களப்பு மாவட்டத்தின் சகல பிரதேச காவல் நிலையங்கள் ஊடாகவும் ஒலிபெருக்கி மூலம் காவல்துறையினர் இந்த அறிவிப்பை செய்துவருகின்றனர்.
ஆயுதங்கள் வைத்திருப்போர் எதிர்வரும் 30ஆம் திகதிக்கு முன்னர் தங்களது பகுதிகளில் இருக்கும் விசேட அதிரடிப்படை முகாம் மற்றும் இராணுவ முகாம்களில் ஆயுதங்களை கையளிக்கலாம் என பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆயுதங்களை வைத்திருப்போர் அதனை நேரடியாக கொண்டுவந்து ஒப்படைக்கமுடியாதவிடத்து அதனை ஏதாவது ஒரு இடத்தில் வைத்துவிட்டு அறிவித்தால் அந்த ஆயுதங்களும் மீட்கப்படும் எனவும் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அவ்வாறு ஆயுதங்கள் கையளிக்கப்படாதவிடத்து அவை பற்றிய தகவல்கள் கிடைத்து மீட்க்கப்பட்டால் அவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்கப்படும் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேநேரம் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இராணுவ உயர் அதிகாரி ஒருவர், கடந்த சில வாரங்களில் தாம் பல ஆயுதங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கிராம மட்டத்தில் பகிரங்க அறிவித்தல்களை விடுக்கவுள்ளதாகவும், சட்டவிரோதமாக ஆயுதங்களை வைத்திருப்பவர்கள் குறித்து பெறுமதியான தகவல்களை தருபவர்களுக்கு தாம் அன்பளிப்புகளையும் வழங்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இப்பகுதியில் பயங்கரவாத குழுக்கள் இல்லை. ஆனால் சில குழுக்கள் கொள்ளைகளுக்கு பயன்படுத்துவதற்காக ஆயுதங்களை வைத்திருக்கின்றன என அவ்வட்டாரங்கள் கூறின.
****************