Tuesday 5 July 2011

செய்திகள் 05/07


கரும்புலிகள் தினம் இன்று!

காலக்கருக்கலில் வந்துதித்த நெருப்புச் சூரியர்களின் நினைவு நாள் இன்றாகும்.
கந்தகத்தை நெஞ்சில் சமந்து சாவுக்கு தேதி குறித்து சிரித்தபடி கையசைத்து விடைபெறும் சந்தன மேனியினரின் நினைவுகள் சுமந்து வணங்கும் நாள் இன்றாகும்.
1987 ஆம் ஆண்டு முதல் தேசியத் தலைவனின் எண்ணக்கருவில் பிரவசமான நெருப்புக்குழந்தைகள் இவர்கள்.
செயற்கரிய ஈகத்தை மிக எளிதில் செய்து விட்டு முகம் காட்டாமலே செல்கின்ற ஈசைக் செம்மல்களை நினைவு கூரும் இந்hளில் உலகெங்கும் உள்ள தன்மானத் தமிழர்கள் அவர்களை நினைவு கூர்ந்து வணக்க நிகழ்வுகள் பலவற்றை ஒழுங்கு செய்துள்ளனர்.
விலை மதிப்பற்ற மனித உயிர்களை எதிர் கால சந்ததியினரின் சுதந்திரத்திற்காகவும் சுபீட்சமான நிம்மதியான வாழ்வுக்காகவும் ஈகம் செய்து சரித்திரத்தில் நிலையான இடத்தினைப் பிடித்தவர்கள்.
தமிழீழப் போராட்டத்தில் காலத்திற்குக் காலம் எதிர்வரும் தடைகளை நீக்கிட தடைநீக்கிகளாக தேசியத் தலைவனின் எண்ண வீச்சிலிருந்து உருவானவர்கள் கரும்புலிகள்.
1987 ஆம் ஆண்டு யூலை 5ஆம் திகதி நெல்லியடி மகாவித்தியாலயத்தில் முகாமிட்டு எம் மக்களுக்கு இடையூறு பல விளைவித்து வந்த சிங்கள இராணுவத்தினரின் முகாமினுள் புகுந்து சின்னாபின்னமாக்கிய முதல் கரும்புலி மாவீரன் கப்டன் மில்லரின் நினைவாக ஆண்டு தோறும் யூலை 5 ஆம் திகதி கரும்புலிநாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது.
வரலாற்றினை வழிநடத்த வரலாறாகவே ஆனவர்களை நின்றொரு கணம் நினைத்தொரு பொழுது விழி உகுக்கும் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து இரும்புப்பூக்களைத் தொழுதெழும்காலமிது.
காற்றில் கரைந்தவர்களுக்கு நடுகல் நட்டு தொழுதெழும் வேளை அவர்கள் கனவுகளை நனவாக்கிட உறுதியெடுத்துக் கொள்வோம்.
****************

அவுஸ்திரேலியாவில் சனல்4வின் "ஸ்ரீலங்காவின் கொலைக்களம்"
சிறிலங்கா அரசாங்கத்தின் கடும் எதிர்ப்புகளைப் புறக்கணித்து அவுஸ்ரேலியாவின் ஏபிசி தொலைக்காட்சி சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை நேற்று ஒளிபரப்பியுள்ளது.
ஏபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நான்கு கோணங்கள் என்ற புலனாய்வு நிகழ்ச்சியிலேயே இந்த ஆணவப்படம் நேற்றிரவு 8.30 மணியளவில் ஒளிபரப்பப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் மீண்டும் இன்றிரவு 11.35 மணியளவில் ஏபிசி தொலைக்காட்சியின் முதலாவது அலைவரிசையில் ஒளிபரப்பாகவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சனிக்கிழமைகளில் இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகும் ஏபிசி நியூஸ் 24 அலைவரிசையிலும் சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் ஒளிபரப்பப்படவுள்ளது.
அத்துடன் ஏபிசி தொலைக்காட்சி இந்த ஆவணப்படத்தை அவுஸ்ரேலியாவில் வசிப்பவர்கள் மட்டும் பார்வையிடும் வகையில் தமது இணைத்தளத்திலும் வெளியிட்டுள்ளது.
ஏபிசி தொலைக்காட்சி இந்த ஆவணப்படத்தை ஒளிபரப்பாமல் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் கடும் முயற்சிகளை மேற்கொண்டிருந்த போதும் அது வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் ஏபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பானதை அடுத்து அவுஸ்ரேலியாவில் சிறிலங்காவுக்கு எதிரான உணர்வலைகளைத் தோற்றுவித்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே இந்தியாவில் எதிர்வரும் வியாழன், வெள்ளி, சனிக்கிழமைகளில் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.
இந்தியத் தொலைக்காட்சியில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாவதைத் தடுக்கும் நகர்வுகளில் ஈடுபட்டுள்ள சிறிலங்கா அரசாங்கம் புதுடெல்லியுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
****************
அவுஸ்திரேலியாவின் கருத்து?
இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தின் போது பொதுமக்கள் மீதான கொடூரங்கள் தொடர்பான புதிய தகவல்கள் ஆச்சரியப்பட வைப்பதாக அவுஸ்திரேலியாவின் வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் தெரிவித்துள்ளார். 
பிரித்தானிய தொலைக்காட்சியொன்று இலங்கை மக்கள் மீதான இராணுவத்தினரின் தாக்குதல்கள் தொடர்பான ஆவணப்படமொன்றை ஒளிபரப்பு செய்துள்ளது.
யுத்தத்தின் போது சுமார் 40ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரினால் நியமிக்கப்பட்டிருந்த நிபுணர் குழு நம்பத்தகுந்த ஆதாரங்களுடன் அறிக்கை வெளியிட்டது.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழு மீள் விசாரணை செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.
அவர்களின் கருத்தை தான் நம்புவதாகவும் இருப்பினும் இந்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்றும் கூறிய அவர் அவுஸ்திரேலிய அரசும் இந்த நிலைபாட்டுடனேயே காணப்படுகின்றது எனத் தெரிவித்துள்ளார்.
ஜெனீவாவிலுள்ள அவுஸ்ரேலிய உயர் ஸ்தாகனிகராலயத்தின் ஊடாக மனித உரிமை ஆணையகத்திற்கு இந்த ஆதாரங்கள் தொடர்பில் மீள் ஆய்வு செய்ய வேண்டும் என தான் கோரவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் கெவின் ரூட் குறிப்பிட்டார்.
****************
இந்தியாவின் நழுவல்!
இலங்கைக்கு எதிராக ஐ.நா.நிபுணர்கள் குழுவினால் தெரிவிக்கப்பட்டுள்ள போர்க் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் தொடர்பாக தமது நிலைப்பாடு என்ன என்பதை இலங்கை அரசாங்கமே சர்வதேசத்துக்குத் வெளிப்படுத்த வேண்டும் எனத் தெரிவித்திருக்கும் இந்தியா, 13 ஆவது திருத்தம் தொடர்பாகவும் இலங்கையே இறுதி முடிவை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருக்கின்றது.
இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளிலிருந்து இந்தியத் தலைநகர் புதுடில்லிக்கு விஜயம் செய்துள்ள பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மத்தியில் நேற்றைய தினம் உரையாற்றிய போதே இந்தியாவின் வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் இந்தக் கருத்துகளை முன்வைத்தார்.
ஐ.நா.நிபுணர் குழுவினால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கையின் போர்க் குற்றம் பற்றிய அறிக்கை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா.பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு இலங்கைக்கு எதிரான தீர்மானம் ஏதாவது எடுக்கப்படும் பட்சத்தில் இலங்கையைப் பாதுகாக்க இந்தியா முன்வருமா என இலங்கைப் பத்திரிகையாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போதே நிருபமா ராவ் இதனைத் தெரிவித்தார்.
புதுடில்லியில் சவுத்புளொக் எனப்படும் வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் இலங்கை மற்றும் மாலைதீவுடனான இந்தியாவின் உறவுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
இதில் இந்திய வெளிவிவகார அமைச்சின் இணைச் செயலாளர் விஷ்ணு பிரசாத் மற்றும் ஹர்ஷ் சிறிங்லா ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இந்தியாவைப் பொறுத்தவரையில் அதன் அண்டை நாடுகளான மாலைதீவு மற்றும் இலங்கையுடனான உறவுகள் முக்கியமானவை எனத் தெரிவித்த நிருபமா ராவ், அவற்றுடனான பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதாகத் தெரிவித்தார்.
மறைமுக வேலைத்திட்டம் எதனையும் அடிப்படையாகக் கொண்டு இதற்கான செயற்பாடுகளை இந்தியா மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்த அவர், இவ்விடயத்தில் ஊடகங்களின் பங்களிப்பின் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
இலங்கையின் நலன்விரும்பியாகவே இந்தியா இருக்கின்றது எனவும் தெரிவித்த அவர், போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீடமைப்பு மற்றும் வடபகுதியில் இந்தியா மேற்கொள்ளும் திட்டங்களையும் விளக்கினார்
****************
தமிழ்க் கூட்டமைப்பின் நிலைப்பாடு?
அரசியல் தீர்வு யோசனையைத் தயாரிப்பதற்கான உத்தேச நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிப்பதா, இல்லையா என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாளை கொழும்பில் கூடிதீர்மானிக்கும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
பிரதான எதிர்க்கட்சிகளின் அதிருப்திக்கும் எதிர்ப்புகளுக்கும் மத்தியில் இனப்பிரச்சினைக்கான தீர்வுத்திட்டத்தைத் தயாரிப்பதற்கான உத்தேச நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பது தொடர்பான பிரேரணை இன்று கூடவுள்ள நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படும் என்று சபாநாயகர் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
எனினும், நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் திட்டத்துக்கு எதிரணியினர் தமது நிலைப்பாட்டை உத்தியோகபூர்வமாகத் தெரிவிக்கவில்லை என்றும், அதனால், நாடாளுமன்றில் இது தொடர்பான நிலைப்பாடுகளை கட்சிகள் அறிவிக்க வேண்டும் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கேட்டுக்கொண்டார்.
இந்த நிலையில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் விடயம் தொடர்பிலான இறுதி முடிவு நாளை எடுக்கப்படும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கூறினார்.
இதேவேளை, நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் அரசின் யோசனைக்குப் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி தனது எதிர்ப்பை வெளியிட்டிருந்தது.
அத்துடன் தெரிவுக்குழுவை பகிஷ்கரிப்பதாகவும் ஐ.தே.கவின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க கூறியிருந்தார்.
இருப்பினும், இது தொடர்பான இறுதி முடிவு 7ஆம் திகதியின் பின்னர் எடுக்கப்படும் என்று திஸ்ஸ அத்தநாயக்க நேற்றுக் கூறினார்.
இத் தெரிவுக்குழுத் திட்டத்துக்கு ஜே.வி.பி. எதிர்ப்பை கடந்த வாரம் வெளியிட்டிருந்தது.
****************
அரசுத் தலைவரின் அதிகாரம் என்ன?
கடந்த காலங்களில் தமிழர்களை அடக்குவதற்கு தன்னுடைய நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்திய அரசுத் தலைவர் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை முன்வைப்பதற்கு மட்டும் தெரிவுக் குழுவை அமைத்து காலத்தை இழுத்தடிக்க முனைவது ஏன்? என மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தெரிவுக்குழு காலத்தை இழுத்தடிக்கும் நடவடிக்கையாகும்.
இது போன்ற தெரிவுக் குழுக்களை கடந்த 61வருடங்களாக தமிழர்கள் பார்த்திருக்கிறார்கள், பேசியிருக்கிறார்கள், ஆனால் இதுவரை நடந்தது ஒன்றுமில்லை.
இதுபோன்ற எத்தனை குழுக்களை அமைத்தாலும் தமிழர்களின் உரிமைகளை இலங்கை அரசு தரப்போவதில்லை.
மாறாக காலத்தை இழுத்தடித்து சர்வதேசத்தையும் தமிழர்களையும் ஏமாற்றுவதற்கே இந்த தெரிவுக் குழு அமைக்கப்படுகின்றது.
தமிழர்களை அடக்கி ஆட்சி செய்வதற்கு நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்திய அரசுத் தலைவர் தமிழர்களுக்கான அரசியல் தீர்வை பெற்றுக்கொடுப்பதற்கு மட்டும் ஏன் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்த முடியாது.
இந்தியாவின் அழுத்தத்தையும் மீறி தெரிவுக்குழு அமைக்கும் அரசுத் தலைவரின் முடிவு தமிழ் மக்களுக்கான தீர்வை வழங்குவதற்கு அரசுத் தலைவர்க்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
****************
மீள் குடியமரும் மக்களின் அவலம்!
வடமராட்சி கிழக்கில் மீள் குடியமர்வதற்குக் அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் தொடர்ந்தும் அப்பகுதிப் பாடசாலைகளில் அடிப்படை வசதிகளற்ற நிலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வடமராட்சி கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்து வன்னியில் தங்கியிருந்த மக்கள் இறுதியாக முள்ளிவாய்க்காலில் இருந்து அல்லாரை நலன்புரி முகாமில் 2 வருட காலமாக தங்கியிருந்தனர்.
இம்மக்களை மீள் குடியமர்வதற்கு சனிக்கிழமை நண்பகல் ஆயத்தமாக இருக்குமாறு இராணுவத்தினரால் தெரிவிக்கப்பட்டு அன்று நள்ளிரவு 1 மணியளவில் வாகனத்தில் ஏற்றி அதிகாலை 3, 4 மணிக்கு வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்திலும் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இங்கு 418 குடும்பங்களைச் சேர்ந்த 1425 அங்கத்தவர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
போக்கறுப்பு, கட்டைக்காடு, வெற்றிலைக்கேணி பகுதிகளைச் சேர்ந்த மக்களே இவ்வாறு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இம்மக்களை அப்பகுதி இராணுவத்தினர் நீண்ட நேரமாக விசாரணை மேற்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொண்டதாகவும் இவர்களுக்கு எவ்விதமான அடிப்படை வசதிகளும் செய்துகொடுக்கப்படவில்லை.
இம்மக்கள் இன்னும் ஓரிரு தினங்களில் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும், அதுவரை அவர்களுக்கு சமைத்த உணவுகளைத் தாம் வழங்கவுள்ளதாக மருதங்கேணி உதவி அரசாங்க அதிபர் பணிமனை தெரிவித்துள்ளது.
****************