Saturday 30 July 2011

செய்திகள் 30/07


பிரித்தானியா பதிலடி!
பொறுப்பற்ற வீடியோவை ஒளிபரப்பிய சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக பிரித்தானிய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ஷ கூறியமைக்கு பிரித்தானிய அரசாங்கம் உடனடியாக கருத்து வெளியிட்டுள்ளது.
கொழும்பிலுள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகரலாயம், ஊடகங்களின் உள்ளடக்கங்களை பிரித்தானிய அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை எனத் தெரிவித்துள்ளது.
சனல் 4 என்பது சுயாதீனமான ஒரு ஒளிபரப்பாளராகும்.
ஒவ்வொரு ஜனநாயகத்திலும் சுதந்திர ஊடகம் முக்கியமானது என பிரிட்டன் நம்புகிறது.
ஊடக நிறுவனங்கள் பொருத்தமான ஒழுக்க மற்றும் சட்ட ரீதியான தராதரங்களை பேணுவதை உறுதிப்படுத்துவதற்கான வலுவான பொறிமுறையை பிரிட்டன் கொண்டுள்ளது.
ஆனால் ஊடகங்களின் உள்ளடக்கங்களை அரசாங்கம் கட்டுப்படுத்துவதில்லை என பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
சுயாதீன ஒழுங்குபடுத்துனரான ழுகஉழஅ, சுயாதீன பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழு மற்றும் வழக்கமான அவதூறு தொடர்பான சட்டங்கள் என்பன ஊடகங்களை ஒழுங்குபடுத்தும் பிரித்தானிய பொறிமுறையில் அடங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இதன் மூலம் பிரித்தானியா ஒருபோதும் தமது நாட்டு ஊடகங்களை தாம் கட்டுப்படுத்துவது இல்லை என்பதனை இலங்கைக்கு வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.
இதனை இலங்கையும் பின்பற்றலாமே என்ற மறைமுகக் கருத்தையும் இது உணர்த்தி நிற்கிறது.
கோத்தபாயவின் கருத்துக்கு பிரித்தானிய அரசு கொடுத்த பதிலடி இதுவாகும்.
********************
புலம்பும் சவேந்திர சில்வா
தனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதன் பொறுப்பை சனல் 4 ஊடகம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கை பிரதி வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு தமது பயணங்கள் தொடர்பில் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டனின் சனல் 4 ஊடகவியலாளர்கள் திடீரென தம்மிடம் நேர்காணல் ஒன்றை நடத்தியதாகவும், இதன் மூலம் புலிகள் தரவுகளை திரட்டி வருவது புலனாகியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
சனல் 4 ஊடகத்தினால் வெளியிடப்பட்ட காணொளி உண்மைக்குப் புறம்பானது, அதில் தோன்றியவர்கள் இராணுவத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
45 நிமிடங்கள் நேர் காணல் நடத்திய போதிலும், இரண்டு நிமிடங்கள் மட்டுமே ஒளிபரப்புச் செய்யப்பட்டது எனவும் முடியுமென்றால் நேர் காணலை முழுமையாக ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பை வழி நடாத்தும் ருத்ரகுமாரன், தனது வாசஸ்தலத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் வாழ்ந்து வருகின்றார் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
********************
பாதுகாப்பு அச்சுறுத்தல்
சிறீலங்காவில் உள்ள ஜக்கியநாடுகள் சபை அலுவலகத்திற்கும் அதன் துணைஅலுவலகங்களுக்கும் மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக சிறீலங்காவிற்கான ஜ.நாபிரதிநிதி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் உள்ள ஜ.நா அலுவலக அதிகாரியால் அதன் தலைமை அலுவலகத்திற்கு இந்ததகவல் விடுக்கப்பட்டுள்ளது.
மனிதாபிமான நடவடிக்கையில் ஈடுபட்டுவரும் ஜ.நா அமைப்பிற்கு ஒத்துழைப்பு வழற்குமாறு சிறீலங்கா அரசை ஜ.நா தலைமையகம் கேட்டுக்கொள்ளவேண்டும் என முறையிடப்பட்டுள்ளது.
ஜ.நா நிபுணர்குழு அறிக்கை மற்றும் சனல்-4 தொலைக்காட்சியின் புதிய காணொளி வெளியிட்டுள்ளதை தொடர்ந்து சிறீலங்காவில் உள்ள ஜ.நா அலுவலகங்களுக்கு மீண்டும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
********************
உலக உணவுத் திட்ட உதவி
வடக்கு, கிழக்கு பகுதிகளில் தாய், சேய் நலன் மற்றும் போஷாக்குணவு வழங்கல் என்பவற்றுக்காக உலக உணவுத் திட்டம் 4 கோடியே 86 இலட்சத்து 24,632 அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது.
வடக்கில் மன்னார், வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ். மாவட்டங்களிலும் கிழக்கில் தெரிவுசெய்யப்பட்ட சில பகுதிகளிலும் நீண்டகால, நிவாரண அடிப்படையிலான வேலைத் திட்டங்களுக்கென வழங்கப்படும் உலக உணவு திட்டத்தின் நிதி உதவியின் ஊடாக 3 லட்சத்து, 71ஆயிரம் பேர் நன்மையடையவுள்ளனர்.
அவசர அனர்த்த நிவாரண செயற்பாடுகளுக்கென உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்படும் நிதியின் ஊடாக கிழக்கில் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும், வடமத்திய மாகாணத்தின் அனுராதபுரம், பொலன்னறுவை மாவட்டங்களில் சுமார் 5 இலட்சம் பேர் நன்மையடையவுள்ளனர்.
தாய், சேய் நலன் மற்றும் போஷாக்குணவு திட்டம், தெரிவு செய்யப்பட்ட ஆரம்ப பாடசாலை மாணவர்களின் சத்துணவு வழங்குதல், உணவுக்கான வேலை திட்டத்தை நடைமுறைப்படுத்தல், முகாம்களில் தங்கியுள்ள இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உலர் உணவு பெற்றுக் கொடுத்தல் போன்ற திட்டங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
********************
விசாரணை நடத்தக் கோரிக்கை
காணாமல் போய் 17 மாதங்களுக்கு பின்னர் சடலமாக மீட்கப்பட்ட மனித உரிமை நடவடிக்கையாளரின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்தப்படவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை வலியுறுத்தியுள்ளது.
பட்டானி ராசிக் என்ற புத்தளத்தை தளமாகக்கொண்ட இந்த மனித உரிமை நடவடிக்கையாளர், கடந்த 2010 ஆம் ஆண்டு பொலநறுவையில் வைத்து காணாமல் போனார்.
இந்தநிலையில் அவர் மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள வீடு ஒன்றின் புதைக்குழியில் இருந்து நேற்று முன்தினம் சடலமாக மீட்கப்பட்டார்.
இதனையடுத்து, இது தொடர்பில் உரிய விசாரணைகளை நடத்தவேண்டும் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரத்தின் பேச்சாளர் ரவீனா சம்தாசனி, இலங்கை அரசாங்கத்தை கோரியுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் அவசியமானது. ஏற்கனவே இவ்வாறான பல காணாமல் போன சம்பவங்கள் தொடர்பில், இன்னமும் உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்று ரவீனா வலியுறுத்தினார்.
குறித்த மனித உரிமைகள் நடவடிக்கையாளரின் கொலை தொடர்பிலான சந்தேகநபர்கள், அரசியல் செல்வாக்கு காரணமாக கடந்த ஒரு வருடத்துக்கு பின்னர் கடந்த சில வாரங்களுக்கு முன்பே கைதுசெய்யப்பட்டனர்.
குறித்த கொலையின் பிரதான சந்தேகநபர், இலங்கையின் கைத்தொழில் மற்றும் வர்த்தகத்துறை முன்னாள் அமைச்சரின் நெருங்கிய நண்பர் என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் இந்தக்கொலை விசாரணையில் காட்டிய முனைப்பை காவல்துறையினர், ஏனைய காணாமல் போனோர் விடயத்திலும் காட்டவேண்டும் என்று மன்னிப்பு சபை கேட்டுள்ளது.
இலங்கையில் தற்போது வரையில் 5ஆயிரத்து 653 காணாமல் போனோர் தொடர்பிலான விசாரணைகள் தேங்கியுள்ளன.
********************
காவல்துறையின் தடுப்பில் அதிகரிக்கும் உயிரிழப்புக்கள்
காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளார்.
போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பொரளை பிரதேசத்தைச் சேர்ந்த சன்ன இசாகர என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தார்.
உயிரிழந்த சந்தேக நபரின் உறவினர்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் சம்பவம் குறித்து முறைப்பாடு செய்துள்ளனர்.
இதன்படி சந்தேக நபரின் மரணம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறையினர் தாக்குதல் நடத்தியுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும், மாரடைப்பினால் சந்தேக நபர் இயற்கை மரணமடைந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
********************
தேர்தலை நடத்தக் கோரி வழக்கு
கொழும்பு மாநகர சபைத் தேர்தலை உடன் நடத்தும்படி தேர்தல்கள் திணைக்களத்திற்கு உத்தரவிடும்படி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணை செப்டெம்பர் 7 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆர்வலரான கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்துவும் பதிவுசெய்யப்பட்ட வாக்காளர்கள் இருவரும் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தனர்.
கொழும்பு மாநகர சபைக்காக இறுதியாக நடந்த தேர்தலில் தெரிவு செய்யப்பட்ட அங்கத்தவர்களின் பதவிக்காலம் ஜூன் 2, 2006 ஆம் திகதி ஆரம்பமாகியது.
மாநகர சபை கட்டளைச்சட்டம், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் கட்டளைச்சட்டம் என்பவற்றுக்கு அமைய கொழும்பு மாநகர சபைக்கான தேர்தல் ஜூன் 2 2010 ஆம் திகதிக்கு முன் நடத்தப்பட்டிருக்க வேண்டும் என மனுதாரர் தெரிவித்துள்ளார்.
********************
கடத்தப்பட்ட சிறுமி மீட்பு
சாவகச்சேரி நுணாவில் மேற்குப் பகுதியில் பத்து தினங்களுக்கு முன்னர் கடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் 15 வயதுச் சிறுமியை காவல்துறையினர் மீட்டதுடன் அவரைக் கடத்திச் சென்ற நபரையும் கைது செய்துள்ளனர்.
இந்தச் சிறுமி காணாமற்போனது தொடர்பாக அவரது பெற்றோரால் சாவகச்சேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்ததையடுத்து மேற்கொண்ட முயற்சியின் பயனாக பத்து தினங்களின் பின்னர் அவர் மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது.
நுணாவில் மேற்கைச் சேர்ந்த நபரையும் மீட்கப்பட்ட சிறுமியையும் காவல்துறையினர் நேற்றுமுன் தினம் சாவகச்சேரி நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.
வழக்கை விசாரித்த நீதிவான் மா. கணேசராஜா இந்த நபரை ஓகஸ்ட் 10 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிட்டதுடன் சிறுமியை யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதித்து மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும் பணித்தார்.
********************