Wednesday 13 July 2011

செய்திகள் 13/07


பேச்சு நடத்தி தீர்வைக் காண வலியுறுத்தல்
கூட்டமைப்புடனான பேச்சுகளை இழுத்தடிக்காமல் அரசு தனது தீர்வுத் திட்டத்தை முன்வைத்து கூட்டமைப்புடன் தொடர்ந்து பேச்சு நடத்தி இணக்கப்பாட்டுக்கு வரவேண்டும என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
இணக்கப்பாட்டுடன் எட்டப்படும் தீர்வை அரசு நாடாளுமன்றில் சமர்பிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகவியலாளர் மாநாடு எதிர்க்கட்சித் தலைவரின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றிய அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இக் கோரிக்கையை விடுத்தார். இனப்பிரச்சினைத் தீர்வு விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும், அரசுக்கும் இடையில் நடத்தப்படுகின்ற பேச்சுகள் குறித்து ஐக்கிய தேசியக் கட்சி அவதானித்து வருகிறது.
இந்தப் பேச்சுகளில் எடுக்கப்படும் இணக்கப்பாடுகள், அரசு முன்வைக்கும் யோசனைகள் ஆகியன குறித்து அரசு நாடாளுமன்றில் தெரிவிக்கவேண்டும்.
எனினும், இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் விடயத்தில் அரசு தாமதம் செய்கிறது. அதற்கான யோசனைத் திட்டங்களை அரசு முன்வைக்காமல் இழுத்தடித்து வருகின்றது.
எனவே, இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் பேச்சுகளில் இனிமேலும் அரசு இழுத்தடிக்காது தீர்வுத்திட்ட யோசனைகளை முன்வைக்க வேண்டும். இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது யாழ். அளவெட்டியில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலானது, ஜனநாயகத்துக்கு எதிரான செயல் என்று தாம் ஏற்கனவே தெரிவித்திருந்தததையும் சுட்டிக்காட்டினார். ஆனால், இந்தத் தாக்குதல் இடம்பெற்று இற்றைவரை எவரும் கைதுசெய்யப்படவில்லை. அத்துடன், விசாரணைகளும் மந்தகதியிலேயே இடம்பெறுகின்றன.
துப்பாக்கிக்குப் பதிலாக வாக்காளர் அட்டையை அறிமுகப்படுத்தும்போது மீண்டும் துப்பாக்கியை திரும்பிப் பார்க்காத அளவு அந்தப் பகுதி மக்களின் மனங்களை அரசு வெல்லவேண்டும். என்றும் அவர் தெரிவித்தார்.
*****************

இராணுவத்தின் ஜனநாயக விரோதம்?
ஜே.வி.பியின் தேர்தல் நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினர் இடையூறு விளைவித்தமை தொடர்பாக நேற்று கிளிநொச்சி காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஜே.வி.பியின் கிளிநொச்சி மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிநிதி லலித்குமார் வீரராஜினால் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜே.வி.பி. விடுத்துள்ள அறிக்கையில், கடந்த 8ஆம் திகதி தர்மபுரம் பிரதேசத்தில் மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த ஜே.வி.பியின் வேட்பாளர்கள் உள்ளிட்ட ஆதரவாளர்களின் நடவடிக்கைக்கு இராணுவ உடை தரித்திருந்த குழுவால் இடையூறு ஏற்படுத்தப்பட்டது எனத் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்றுக்காலை 8.30மணிக்கு ஜீப்பில் வந்த குழு ஒன்று ஜே.வி.பியின் கிளிநொச்சி அலுவலகத்தை வீடியோ எடுத்துள்ளது. அந்த ஜீப்பின் சாரதியான இராணுவ உடை தரித்திருந்த நபராலேயே வீடியோ எடுக்கப்பட்டது.
அத்தோடு யாழ். கிளிநொச்சி உள்ளிட்ட வடக்கு மாகாணத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வானில் வந்த இராணுவ உடை அணிந்தவர்கள் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்தனர்.  அவர்களால் ஜே.வி.பியின் சுவரொட்டிகள் கிழித்தெறியப்பட்டன என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*****************
புதிய போத்தலில் பழைய வைன்!
இலங்கையில் இனப்பிரச்சினை தீர்வுக்காக அமைக்கப்படவுள்ள நாடாளுமன்ற தெரிவுக்குழு புதிய போத்தலில் பழைய வைன் என்ற அடிப்படையிலேயே அமைந்துள்ளதாக லக்பிம செய்திதாள் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க காலத்தில் மங்கள முனசிங்க குழு, அதன் பின்னர் அரசுத தலைவர் மஹிந்த ராஜபக்சவின் முதல் பதவிக் காலத்தில் சர்வகட்சிக்குழு என்பன நாடாளுமன்ற பிரதிநிதிகளை உள்ளடக்கிய வகையிலேயே அமைந்திருந்தன.
எனினும் அவற்றின் வரைபுகள் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை. இந்தநிலையில் புதிதாக நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைத்து சாதிக்க போவது எதுவும் இல்லை. இது காலத்தை கடத்தும் ஒரு வேலைத்திட்டமே என்று எதிர்க்கட்சிகள் கூறுவதாக லக்பிம தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது. மறுபுறத்தில் நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கப்படுகிறது. எனவே இது முரண்பாடுகள் நிறைந்த செயற்பாடு என லக்பிம குறிப்பிட்டுள்ளது.
சர்வதேச அழுத்தம் காரணமாக இனப்பிரச்சினைக்கான தீர்வை எதிர்க்கட்சிகளிடம் திணிக்கும் செயற்பாடாகவே தாம் இதனை பார்ப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளமையையும் லக்பிம சுட்டிக்காட்டியுள்ளது.
*****************
ஸ்ரீலங்காவின் இனவாத கருத்துக்கு சவால்!
தமிழீழ விடுதலைப் புலிகளின் அமைப்பு கனடாவில் கனேடியன் தமிழ் காங்கிரஸ் என்ற பெயரின் கீழ் இயங்குவதாக ரொஹான் குணவர்த்தன இலங்கை பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றின் போது தெரிவித்துள்ளார் எனக்கூறி டொரன்டோ உச்சநீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொரப்பட்டுள்ளது.
தம்மீது மீண்டும் மீண்டும் அவதூறு கூறுபவருக்கு எதிராக எப்போதும் எவரும் சவால் விடுத்ததில்லை என கனேடியன் தமிழ் காங்கிரஸ் பேச்சாளர் டேவிட் பூபாலப்பிள்ளை தெரிவித்துள்ளார்.  இதேவேளை, தனிநபர் ஒருவரும் ரொஹான் குணரட்னவுக்கு எதிராக வழக்கு தொடுத்துள்ளார்.
இவ்வழக்கில் ரொஹான் குணரட்ன அவதூறு கூறுவதினை நிறுத்த வேண்டும் எனவும் இல்லாவிட்டால் அவர் கூறுகின்றவற்றை நிரூபிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
12 பக்கங்கள் கொண்ட வழக்கு தாக்கல் ஆவணத்தில் காங்கிரஸ் தீவிரவாதத்துக்கும் ஆட்கடத்தலுக்கும் மற்றும் வன்முறை செயற்பாடுகளுக்கும் துணைபோவதாக ரொஹான் போலிக்குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான போலிக்குற்றச்சாட்டுகளால் காங்கிரஸ் கட்சிக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான தொடர்பு குறித்து கனேடிய அரசு விசாரணைகள் நடத்துவதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
*****************
நல்லிணக்க ஆணைக்குழுவின் முறுகல்
அரசுத் தலைவரினால் அமைக்கப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் கருத்தை விமர்சித்துள்ளது.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பேச்சாளர் லச்மன் விக்கிரமசிங்க, அண்மையில் அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜேசிங்க, பிபிசி ஹாட் டோக் நிகழ்ச்சியில் தெரிவித்த கருத்தை விமர்ச்சித்துள்ளார்.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து ஹாட் டோக் தயாரிப்பாளர் ஸ்டீபன் சக்குர், ரஜீவ விஜேசிங்கவிடம் கேள்வி ஒன்றை தொடுத்திருந்தார்.
இதன்போது கருத்துரைத்த ரஜீவ விஜேசிங்க, நல்லிணக்க ஆணைக்குழு தற்போது செல்லும் வேகத்தை விட இன்னும் பணிகளை செய்திருக்கலாம் என தாம் நம்புவதாக குறிப்பிட்டிருந்தார்.
அத்துடன் அந்தக்குழு மற்றும் ஒரு இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்திருக்கலாம் என்று அவர் தெரிவித்திருந்தார். ஆணைக்குழுவின் தாமதம் அதன் பணிகளை பாதித்து விடக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டிந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள ஆணைக்குழுவின் பேச்சாளர் லச்மன் விக்கிரமசிங்க, தமது ஆணைக்குழு ஒழுங்குமுறையான திட்டத்தின் கீழ் இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.
தமது பணிகளில் தாமதங்கள் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்
*****************
சிங்களவர்களை முட்டாளாக்க முனையும் மகிந்த!
மகிந்த சிந்தனையின் விளைவாக ராஜபக்ச தென்னிலங்கை சிங்களவர்களை மீண்டும் முட்டாளக்க முயற்சிக்கிறார் தென்னிலங்கை ஊடகம் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.
ஆனால், சிறிலங்காவின் அண்டை நாடுகளை மகிந்த ராஜபக்சவால் முட்டாளாக்கி விட முடியாது என்று கொழும்பைத் தளமாகக் கொண்ட வுhந ளுரனெயல டுநயனநச ஆங்கில ஊடகத்தில் குசலபெரெரா எழுதியுள்ள அரசியல் பத்தியில் எழுதியுள்ளார்.
எல்லாரையும் எல்லா நேரத்திலும் ஒருவர் முட்டாளாக்க முடியாது. இங்கு எல்லோரும் என்பது சிங்களவர்களாகவும், 'ஒருவர்' என்பது ராஜபக்சவாகவும் இருக்காதுவிடின், எல்லோரையும் எல்லா நேரத்திலும் ஒருவர் முட்டாளாக்கிவிடமுடியாது. இது மகிந்த சிந்தனையின் தத்துவார்த்தமாகக் காணப்படுகின்றது.
மகிந்த சிந்தனையின் விளைவாக ராஜபக்ச தென்னிலங்கை சிங்களவர்களை மீண்டும் முட்டாளக்க முயற்சிக்கிறார். ஆனால், சிறிலங்காவின் அண்டை நாடுகளை மகிந்த ராஜபக்சவால் முட்டாளாக்கி விட முடியாது.
ஏனெனில் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தின் மீது பழிசுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றங்கள் தொடர்பான இராஜதந்திர நகர்வுகளுக்கான ஆதரவுகளைத் திரட்டிக் கொள்வதற்காக 'பொய்யான' வாக்குறுதிகளுடன் மகிந்த ராஜபக்ச டெல்லிக்கு எத்தனை தடவைகள் சென்றுள்ளார்கள் என்பது இவ் அயல் நாடுகளுக்கு நன்கு தெரியும்.
அதாவது, சிறிலங்காவில் வாழும் தமது தமிழ் உறவுகளுக்கு அரசியல் தீர்வொன்றை வழங்குவதற்கு முதல் அங்கே இடம்பெற்ற யுத்தக் குற்றங்கள் தொடர்பான சரியான பதிலை அளிக்க வேண்டும் என புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் அழுத்தம் கொடுத்துவரும் இந்நிலையிலேயே மகிந்த தனக்கான ஆதரவை பெற்றுக் கொள்வதற்கான இராஜதந்திர நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.
இந்நிலையில் சிறிலங்காவில் தற்போது ஆட்சியிலுள்ள மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வொன்றை வழங்குவதைத் தவிர்ப்பதில் தொடர்ந்தும் ஒரேவிதமான அணுகுமுறையையே கடைப்பிடித்து வருகின்றது.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக மகிந்த அரசாங்கம் விட்டுக்கொடுப்பைக் கடைப்பிடித்து அவர்களுக்கு அரசியல் தீர்வொன்று வழங்குவதன் மூலம் அதன் மீது பழி சுமத்தப்பட்டுள்ள யுத்தக் குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான விசாரணைகளின் போது பல அனுகூலங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பதை மகிந்த அரசாங்கம் விளங்கிக் கொள்ளத் தவறிவிட்டது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
*****************
இனவாதத்தை தூண்ட துணை போவோர்
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தனக்குள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மை அரசாங்க பலத்தை பயன்படுத்தி 13 ஆவது திருத்தத்தை இரத்துச் செய்வதோடு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும் என்று தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இலங்கையில் பிரிவினையை ஏற்படுத்தும் இந்தியாவினதும், மேற்குலகத்தினதும் முயற்சிக்கு அரசுடன் இணைந்துள்ள சில அமைச்சர்கள் துணைபோவதாகவும் அவ் ஒன்றியம் குற்றஞ்சாட்டியது.
கொழும்பு விஜேராம மாவத்தையிலுள்ள சௌசிரிபாயா கேட்போர் கூடத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே தேசிய அமைப்புக்களின் ஒன்றியம் இதனை தெரிவித்தது.
இங்கு உரையாற்றிய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவரும், தேசிய அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளருமான டாக்டர் குணதாச அமரசேகர, பூட்டானை அடிமைப்படுத்தி வைத்திருப்பது போல், இலங்கையையும் அடிமைப்படுத்தவே உடன்படிக்கையை கைச்சாத்திடப் போவதாக அன்று இலங்கை இந்திய ஒப்பந்தத்தில் கையெழுத்திட இலங்கைக்கு வரு முன்பு ராஜீவ்காந்தி சென்னையில் தெரிவித்தார்.
இதனை இன்று நிறைவேற்றுவதற்காக இந்தியா மேற்குலகுடன் இணைந்து நிகழ்ச்சி நிரலை தயாரித்து முன்னெடுத்து வருகிறது. அதற்காகவே 13 ஆவது திருத்தத்தை அமுல்படுத்த வேண்டுமென அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கிறது. இந்த அரசியலமைப்பு சட்ட விரோதமானது.
எனவே அரசுத தலைவர் தனது அரசாங்கத்திற்கு உள்ள மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பயன்படுத்தி 13 ஆவது திருத்தத்தை இரத்து செய்ய வேண்டும். அத்தோடு புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும்.
வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அமைக்கப்படவுள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மட்டுமே அங்கத்துவம் வகிப்பார்கள். இவர்களின் தீர்வுகளை ஏற்றுக் கொள்ள முடியாது.
இத் தெரிவுக் குழுவில் தேசிய அமைப்புக்களும் உள்ளடக்கப்பட வேண்டும் அவ்வாறான தெரிவுக் குழுவினால் முன் வைக்கப்படும் தீர்வு தொடர்பில் மக்கள் கருத்து கணிப்பு நடத்தப்பட வேண்டும் என்றார்.
இங்கு உரையாற்றிய ஒன்றியத்தின் உறுப்பினரான டொக்டர் வசந்த பண்டார, சூடானை பிரிப்பதற்காக தயாரிக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலே தமது நாட்டையும் பிரிப்பதற்கு சர்வதேசத்தால் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதனை தாம் தோல்வியடையச் செய்தோம்.
இன்று சூடானை பிரித்துவிட்டார்கள். அதனை இங்கு மேற்கொள்ள புதிய முயற்சிகளை இந்தியாவும் மேற்குலகமும் முன்னெடுக்கிறது. இந்த முயற்சிக்கு அரசாங்கத்துடன் இணைந்துள்ள சில அமைச்சர்களும் துணை போகின்றார்கள்.
இவ்வாறானவர்களே 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்ற தீர்வை வழங்குமாறு கருத்துக்களை வெளியிடுகின்றனர். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிநிதித்துவப் படுத்தவில்லை.
எனவே அவர்களோடு பேசுவதால் பலனில்லை. யுத்தம் முடிந்து இரண்டு வருடங்கள் கழிந்து விட்டது. ஆனால் தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்னவென்பதை அறிந்து கொள்ள அரசாங்கம் முயற்சிக்கவில்லை.
எனவே அரசாங்கம் தமிழ் மக்களின் கருத்துக்களை அறிவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசாங்கத்துடன் இணைந்து செயற்படத் தயாரென கூறும் ஐ.தே.கட்சி 13 ஆவது திருத்தத்தை முன்னெடுக்கவே முயற்சிக்கிறது.
ஜே.வி.பி இன்று அரச சார்பற்ற நிறுவனத்தைப் போன்று செயற்படுகின்றது. நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்துவதற்காக இளைஞர்களை ஜே.வி.பி தயார்ப்படுத்துகிறது என்றார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் எல்லே குணவன்ச தேரர், ஒமாரே கஸ்ஸப்ப தேரர், முன்னாள் ஓய்வு பெற்ற நீதியரசர், ராஜாவனசுந்தர, பேராசிரியர் பியசேன திஸாநாயக்க ஆகியோர் கலந்து கொண்டனர்.
*****************
தெற்காசிய கடல்சார் பாதுகாப்பு மகாநாடு
தெற்காசிய கடல்சார் பாதுகாப்பு மாநாடு சிறிலங்காவில் நேற்று ஆரம்பமாகியுள்ளது.
கொழும்பு கலதாரி விடுதியில் நடைபெறும் இந்த மாநாட்டில் பங்களாதேஸ், மாலைதீவுகள், சிறிலங்கா, அவுஸ்ரேலியா, அமெரிக்கா ஆகிய ஐந்து நாடுகளின் கடற்படை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
நேற்று ஆரம்பமான இந்த மாநாடு எதிர்வரும் 15ம் நாள் வரை தொடர்ந்து நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுவர் பற்றீசியா புற்றெனிஸ், சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சோமதிலக திசநாயக்க ஆகியோர் இந்த மாநாட்டை நேற்றுக்காலை ஆரம்பித்து வைத்தனர்.
சிறிலங்கா கடற்படையுடன் இணைந்து பொதுமக்கள் இராணுவ உறவுகளுக்கான நிலையமும், ஐக்கிய அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடமும் இந்த மாநாட்டுகான ஒழுங்குகளைச் செய்துள்ளன.
தெற்காசிய கடல்சார் பாதுகாப்பு மாநாடு என்று அறிவிக்கப்பட்டுள்ள போதும், தெற்காசியாவின் இரு பிரதான கடற்படைகளைக் கொண்டுள்ள இந்தியாவும் பாகிஸ்தானும் இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
*****************