Friday 29 July 2011

செய்திகள் 29/07


தூங்கிக் கிடக்கும் மூன்?
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்குற்றங்கள் குறித்து விசாரணை செய்வது இலங்கை அரசாங்கத்தின் கடமை எனவும் அதனை கண்காணிப்பது ஐக்கிய நாடுகள் சபையின் பொறுப்பு எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலுள்ள சனல் 4 தொலைக்காட்சி நேற்று முன்தினம் இரவு வெளியிட்ட இலங்கையின் போர்குற்ற ஆதார காணொளி குறித்து நேற்று ஐநா அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது கேள்வி எழுப்பப்பட்டது.
சனல் 4 காணொளி குறித்து ஐநா நடவடிக்கை எடுக்குமா என எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த ஐநா செயலாளர் நாயகத்தின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்க்கி, சனல் 4 கூறிய விடயங்கள் நிபுணர் குழு அறிக்கையிலும் உள்ளடக்கப்பட்டுள்ளதென தெரிவித்தார்.
நடவடிக்கை எடுப்பது குறித்த விடயங்களை ஐக்கிய நாடுகளின் நிர்வாக பிரிவுகளிடம் ஒப்படைப்பது குறித்து கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக மார்டின் நெசர்க்கி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் கொலைக்களங்கள் காணொளியை, ஐநா பொதுச்செயலாளரின் சிரேஷ்ட ஆலோசகர்கள் பார்த்துள்ள நிலையில், பொதுச் செயலாளர் பார்த்தாரா இல்லையா என்பது தொடர்பில் தன்னால் கூறமுடியாது என மார்ட்டின் கூறியுள்ளார்.
**************
தீர்மானம் எப்போது?
மனிதாபிமான உதவிகள் தவிர்ந்த இலங்கைக்கான ஏனைய உதவிகளை நிறுத்திக் கொள்வது தொடர்பில் இன்னும் தீர்மானம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்க ராஜாங்க அமைச்சர் ரொபர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கான உதவிகளை ரத்து செய்யும் யோசனைத் திட்டம் தொடர்பில் சட்ட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படும் வரையில் எவ்வித தீர்மானங்களும் எடுக்கப்படமாட்டாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
**************
தீர்வுக்கு அழுத்தம் கொடுத்த தமிழர்கள்
வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் தங்களின் பாரம்பரிய தாயகத்தின் இறைமை ஆட்சி,அதிகாரம் தங்களிடமே இருக்க வேண்டும் என்பதை கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தெட்டத்தெளிவாக இலங்கை அரசாங்கத்திற்கும் சர்வதேச சமூகத்திற்கும் தெரிவித்துள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
திருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் நடைபெற்ற திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபை, குச்சவெளி பிரதேச சபை, சேருவில பிரதேச சபை ஆகியவற்றுக்கான தேர்தல்களில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய வேட்பாளர்கள் மற்றும் கட்சியின் ஏனைய வேட்பாளர்களுடனான கலந்துரையாடல் ஒன்று கடந்த புதன்கிழமை மாலை சம்பந்தனின் வாசஸ்தலத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் துணைப்பொதுச் செயலாளரும் மாவட்டக் கிளையின் தலைவருமான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரெட்ணசிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
அப்போது உரையாற்றிய சம்பந்தன், தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய அரசியல் தீர்வு ஒன்றை இலங்கை அரசாங்கம் முன்வைக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை சர்வதேச சமூகம் எடுத்துள்ளது.
எதிர்வரும் வாரங்கள், மாதங்களில் இது விடயம் முக்கியமானதாக அமையப்போகிறது என்றும் தெரிவித்துள்ளார்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தல்களில் தமிழ் மக்கள் வடக்கு, கிழக்கைப் பொறுத்த வரை இறைமைக்கு மதிப்புக்கொடுத்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு இருக்க வேண்டும் எனவும், நாட்டின் சமமான பிரஜைகளாக பாதுகாப்புடன் கௌரவமாக வாழ வழி செய்யப்பட வேண்டும் என்பதை தெட்டத்தெளிவாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
எப்போதுமே இல்லாத வகையில் சர்வதேச சமூகம், ஐ.நா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் ஐரோப்பிய யூனியன் ஆகியன இலங்கை பல்லின நாடு என்பது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றும் அங்கு தமிழ் மக்கள் சம உரிமை பெற்று வாழ்வதற்கு உரித்துடையவர்கள், அவர்கள் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் என்று தெளிவாகக் கூறியுள்ளன.
பாராளுமன்றத் தேர்தல் முடிந்தவுடன் தமிழ் மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான அரசியல் தீர்வு ஒன்றை காண வேண்டும் என்று சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்த காரணமாகத் தான் அரசுக்கும் கூட்டமைப்புக்கும் இடையேயான பேச்சுவார்த்தை ஆரம்பமானது.
அரசாங்கமும் தமிழ்த் தேசிக் கூட்டமைப்பும் பேச்சுவார்த்தை மூலம் காணப்படும் தீர்வு எதுவாக இருப்பினும் அதனை ஏற்றுக் கொள்ளத் தயாரென்று பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
ஏனைய அரசியல் கட்சிகளும் இந்த நிலைப்பாட்டையே எடுக்கப்போகின்றார்கள்.
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகளை சர்வதேச சமூகம் பரிபூரணமாக ஏற்றுக் கொள்கிறது.
தமிழ் மக்களின் நியாயமான கோரிக்கைகள் ஏற்கப்பட வேண்டும்; இல்லாவிடில் மீண்டும் ஒரு நெருக்கடி ஏற்படக் கூடும் என்று சர்வதேச சமூகம் எண்ணுகிறது.
தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய அரசியல் தீர்வு உருவாகவேண்டும்; உருவாக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
**************
கைது செய்யப்பட்ட சர்வதேச ஊடகவியலாளர்கள்
யாழ்ப்பாணத்தில் வைத்து கைது செய்யப்பட்ட நெதர்லாந்து ஊடகவியலாளர்கள் இருவரும் விசாரணைகளின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சனல் 4 தொலைக்காட்சியினால் வெளியிடப்பட்ட இலங்கையின் கொலைக்களங்கள் காணொளி தொடர்பாக சாட்சியங்களை திரட்டும் நேக்கில் இவர்கள் இருவரும் நெதர்லாந்திலிருந்து வந்திருந்தனர்.
இவர்கள் நெதர்லாந்தின் வானொலி ஊடகவியலாளர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சுற்றுலாப்பயணிகள் போல் இவ் வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் யாழ்பாணத்தில் சிற்றூண்டிச்சாலை ஒன்றிலிருந்த முன்னாள் தமிழீழ விடுதலைப்புலி உறுப்பினர்கள் சிலருடன் ரகசியமான முறையில் கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பில் காவல்துறையினருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டை அடுத்தே இவர்கள் கைது செய்யப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாம் சுற்றுலாப்பயணிகள் என ஆரம்பத்தில் காவல்துறையினரிடம் கூறிய போதும் பின்பு விசாரணைகளின் போது அரசல்லாத ஒரு இயக்கத்தினால் தம்மை வடக்கிற்கு சென்று தகவல் திரட்டும்படி அனுப்பியதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
**************
தீர்வுக் குழுவின் நிலை என்ன?
அரசாங்கத்திற்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் அடுத்தவாரம் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் பின்னரே இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை தயாரிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்கான பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் இடம்பெறும் பேச்சுவார்த்தையின்போது பாராளுமன்ற தெவுக்குழு தொடர்பில் அந்தக் கட்சி முன்வைக்கும் யோசனை குறித்து ஆழமான முறையில் கவனத்திற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வை தயாரிப்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் தற்போதைய நிலைமை குறித்து விபரிக்கையிலேயே ஆளும் கட்சியின் பிரதம கொறடா இவ்வாறு கூறினார்.
இதேவேளை பாராளுமன்ற தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எடுக்கின்ற தீர்மானத்திலேயே தமது கட்சியின் தீர்மானம் தங்கியுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.
இந்நிலையிலேயே தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்க் கூட்டமைப்பின் யோசனைகள் பெரிதும் முக்கியத்துவம் பெறுகின்றன.
எனவே தமிழ்த் தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பின் பின்னர் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண்பதற்கான பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் முன்வைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
**************
நிலை தடுமாறும் அரசு!
வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றிபெற்ற சகல உள்ளூராட்சி சபைகளுக்கும் தேவையான நிதி உட்பட சகல வசதி வாய்ப்புக்களையும் அரசாங்கம் பெற்றுக்கொடுக்கும் என அமைச்சரவையின் பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்தி நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதி வழங்கப்படும்.
அபிவிருத்தி செயற்பாடுகளை இனி அவர்களே முன்னெடுக்க முடியும். எனினும், தேவையான நிதியையும் வசதிகளையும் அரசு செய்து கொடுக்கும். இது அரசின் கடமையுமாகும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிலையில் எதிர்வரும் 4 ஆம் திகதி நடைபெறவுள்ள அரசுக்கும், கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் உள்ளூராட்சி சபைகளின் விடயங்களும் முக்கிய இடம்பெறும் என்றும் தெரியவருகிறது.
**************
பதவி பறிபோகும் நிலையிலும் நண்பனைக் காக்க முயற்சி
இலண்டன் வந்துள்ள எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நேற்றைய தினம் பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸை சந்தித்துள்ளார்.
இதன் போது இலங்கையின் நடப்பு விவகாரங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் வடக்கில் யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, 13ஆம் திருத்தச் சட்டம் மற்றும் அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்பில், அரசாங்கம் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு இடையில் இடம்பெறுகின்ற பேச்சவார்த்தைகள் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
**************
நல்லிணக்க ஆணைக்குழுவின் நிலைப்பாடு?
இலங்கையில் நடந்ததாக கூறப்படும் யுத்த குற்றம் தொடர்பில் சனல் 4 அலைவரிசையின் மூன்றாவது வீடியோ அண்மையில் வெளியிடப்பட்டுள்ள நிலைமையில், பலரும் நினைப்பது போல சனல் 4 இன் வீடியோக்களுக்கு தனது அறிக்கையில் அதிக முக்கியத்துவம் வழங்கப்படமாட்டாது என கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக் குழு கூறியுள்ளது.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை வந்த பின்னர் யுத்தக் குற்றம் தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து தீர்மானிக்கும் என அரசாங்கம் கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தமது அறிக்கை, வழங்கப்பட்ட ஆணைக்குள் அமையும் விடயங்களில்தான் முக்கிய கவனத்தை செலுத்தும். தமது அறிக்கை இந்த பிரச்சினைக்குரிய வீடியோ பற்றிய கருத்துக்களை கூறினாலும் அதற்கு முக்கியத்துவம் வழங்க மாட்டாது என ஆணைக்குழு கூறியுள்ளது.
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு, சனல் 4 அலைவரிசையின் முதலாவது வீடியோவை ஆராய்வதற்கு கணினி நிபுணரான சத்துர டி சில்வாவின் சேவையை பெற்றிருந்தது.
இரண்டாவது வீடியோவை ஆணைக்குழு ஆராயவுள்ளது. மூன்றாவது வீடியோவை ஆணைக்குழு இன்னும் பார்வையிடவில்லை.
இதேவேளை, ஐ.நா.வின் மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் நவநீதம்பிள்ளை, யுத்த குற்றம் தொடர்பில் ஆராய்வதற்கு இலங்கை தொடர்ந்தும் தாமதிக்குமாயின், அதன் மீது சர்வதேச சமுதாயம் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் உள்ளது என கூறியுள்ளார்.
**************