Sunday 3 July 2011

செய்திகள் 03/07


பார்த்த பின்னர் என்ன செய்வார்? உறங்குவாரா? உருப்படியாக ஏதும் செய்வாரா?
அமெரிக்கா சென்றுள்ள ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீமூனும் ஒன்றாக இருந்து இலங்கையின் கொலைக்களம் சனல் 4 ஆவணத் திரைப்படத்தை பார்வையிடுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுதினம் பான் கீ மூனைச் சந்தித்து ரணில் பேச்சு நடத்தவுள்ளார்.
அந்த நேரத்தில் இருவரும் ஒன்றாக அமர்ந்து போர்க் குற்றங்கள் மற்றும் திகிலூட்டும் காட்சிகள் அடங்கிய இந்த ஆவணப்படத்தை பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் ரணில், அரசின் உயர்மட்டத் தவைர்கள் மற்றும் பல்வேறு தரப்பினருடனும் பேச்சுக்களை நடத்தி வருகின்றார்.
விஜயத்தின் இறுதியாக நாளை மறுதினம் ஐ.நாவின் செயலாளர் நாயகம் பான் கீ மூனைச் சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தவுள்ளார்.
கடந்த மாதம் 15 ஆம் திகதி சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட இலங்கையின் கொலைக்களம் ஆவணப் படம் இதுவரை தாம் பார்க்கவில்லை என்று பான் கீ மூன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
***************
போராட்டம் வெடிக்கும் - எச்சரிக்கும் மாவை!
தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்யக்கூடிய தீர்வு ஒன்றை வழங்க இலங்கை அரசு மறுக்குமானால் அல்லது தொடர்ந்தும் தமிழ் மக்களை ஏமாற்றுமானால் ஜனநாயக ரீதியான போராட்டம் வெடிக்கும் என மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்..
இந்தப் போராட்டத்துக்கு இந்தியா உள்ளிட்ட சர்வதேச சமூகம் ஆதரவை வழங்கும் என்ற முழு நம்பிக்கையும் தமக்கு உண்டு எனறும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா இத்தகவலைத் தெரிவித்தார்.
ஏழாலை உதயசூரியன் சனசமூக நிலைய மண்டபத்தில் இடம்பெற்ற உள்ளூராட்சிச்சபைத் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றுகையில் அவர் இதனைத் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் நிலங்கள் எழுந்தமானமாக ஆக்கிரமிக்கப்பட்டு இராணுவ முகாம்களும் இராணுவ குடியிருப்புகளும் ஆங்காங்கே அமைக்கப்படுகின்றன.
தமிழ் மக்கள் பாரம்பரியமாக மீன்பிடி தொழில் செய்த பிரதேசம், விவசாயம் செய்து வந்த நிலங்கள் இன்று சிங்கள மீனவர்களினதும் சிங்கள விவசாயிகளினதும் தொழில் செய்யும் இடங்களாக மாறி வருகின்றன.
புத்தர் சிலைகளும் சின்னங்களும் இந்து கிறிஸ்தவ மக்கள் வாழும் தமிழ்ப் பிரதேசங்களில் எழுந்தமானமாக நிறுவப்படுகின்றன.
இதனால் தமிழ் மக்களின் நிலங்கள் இராணுவ சிங்கள மயமாக்கப்பட்டு வருவது மட்டுமல்ல தமிழர்களின் மொழி மத கலாசாரங்கள் சீரழிக்கப்பட்டு வருகின்றன.
தமிழர்கள் பாரம்பரியமாக வாழ்ந்த தொடர்ச்சியான நிலப்பரப்புகள் இக் காரணங்களால் துண்டாடப்படுகின்றன.
தமிழ் மக்கள் செறிந்து பெரும்பான்மை பலத்துடன் வாழுகின்ற இடங்கள் இத்தகைய நடவடிக்கையினால் அவர்கள் தமது சொந்த நிலத்திலேயே சிறுபான்மையினராக்கப்படும் நிலை உருவாகி உள்ளது.
இத்தகைய செயல்கள் தமிழர்களது அரசியல் வேட்கையை அபிலாஷைகளை மழுங்கடித்தும் சீரழிக்கும் செயல்களாக அமைகின்றன.
தனித்தமிழ் பிரதேசங்களை கலப்பினப் பிரதேசங்களாக மாற்றியமைப்பதே அரசின் இந்த சூழ்ச்சித் திட்டமாகும்.
இதை விரைந்து தடுத்து நிறுத்த வேண்டியவர்களாக இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான அ.விநாயகமூர்த்தி, சி.சிறீதரன் உட்பட பலர் உரையாற்றினர்.
***************
இனப்படுகொலைக்கான இந்திய உதவி அதிகரிப்பு!
ஸ்ரீலங்கா இராணுவத்திற்கு மேலும் உதவிகளை வழங்க இந்தியா முன்வந்துள்ளது.
இந்திய பாதுகாப்புப் படை பயிற்சி நிறுவனங்கள் இராணுவக் கல்லூரிகள் முதலியவற்றில் ஸ்ரீலங்கா இராணுவத்தினருக்கு கூடுதலான ஆசனங்களை ஒதுக்குவதற்கு இந்தியா தீர்மானித்துள்ளது.
அத்துடன் கிளர்ச்சி முறியடிப்பு அனுபவங்களையும் இந்தியா பகிர்ந்துகொள்ளவுள்ளது.
வெள்ளிக்கிழமை இந்தியாவில் முடிவுற்ற இலங்கை இந்திய இராணுவ அதிகாரிகளுக்கிடையிலான 3 நாள் பேச்சுவார்த்தையின்போது இத்தீர்மானங்கள் அறிவிக்கப்பட்டன.
மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த நிவாரணங்களுக்கான அனுபவ மற்றும் ஸ்தாபன கட்டமைப்பையும் இலங்கையுடன் இந்தியா பகிர்ந்துகொள்ளவுள்ளது.
இப்பேச்சுவார்த்தைகளில்ஸ்ரீலங்காவின் சார்பில் இராணுவ செயலாளர் மேஜர் ஜெனரல் எச்.சி.பி. குணதிலக்க தலைமையிலான 5 பேர் கொண்ட இராணுவ அதிகாரிகள் பங்குபற்றினர்.
இந்தியாவின் சார்பில் சர்வதேச கூட்டுறவுக்கான மேலதிக பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஐ.பி.சி. சிங் தலைமயிலான குழுவினர் பங்குபற்றினர்.
ஸ்ரீலங்கா அதிகாரிகள் இவ்விஜயத்தின்போது இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் வி.கே. சிங்கையும் சந்தித்துப் பேசினர்.
***************
தொடரும் அமெரிக்க அழுத்தம் (தமிழருக்கு) தீர்வைப் பெற்றுத் தருமா?
சுதத்திரமான விசாரணைகளை முன்னெடுக்க தவறினால் சர்வதேச விசாரணைக்குத் தள்ளப்படுவது தவிர்க்க முடியாது என ரிச்சார்ட் ஆமிரேச் ரணிலிடம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா சென்றுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கரமசிங்க அமெரிக்க முன்னாள் பிரதி ராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் அமீட்டேஜ்யை சந்தித்துப் பேசியுள்ளார்.
இந்தச் சந்திப்பு நேற்று இடம்பெற்றதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆமிரேச் உடனான இந்தச் சந்திப்பின் போது இலங்கை அரசியல் நிலவரம் தொடர்பில் இருவரும் நீண்ட நேரம் உரையாடியதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பின்போது யுத்தத்தின்; பின்னரான இலங்கையின் அரசியல் நிலவரம் மீள்குடியேற்றப்பட்ட தமிழ் மக்களுக்கான வாழ்வாதார நிலைப்பாடு, அகதிமுகாம்களில் வாழும் மக்களின் நிலைமை மற்றும் செனல் 4 தொலைக் காட்சியின் இலங்கைக் கொலைக்களம் ஆவணக் காணொளி குறித்து கருத்துகள் பரிமாறிக் கொள்ளப்பட்டதாக தெரியவருகிறது.
சர்வதேச ரீதியாகத் சிக்கலான நிலைக்குள் தள்ளப்பட்டுள்ள இலங்கை அரசாங்கம் தன்னைக் குற்றமற்றமற்றவர் என நிரூபிக்கும் வகையில் எந்தப் பின்னடிப்புகளும் இன்றி யுத்தக் குற்றங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் குறித்து சுதத்திரமானதும் விரைவானதுமான விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர் அவ்வாறு இலங்கை அரசாங்கம் நடந்து கொள்ளத் தவறினால் சர்வதேச ரீதியான விசாரணைக்குத் தள்ளப்படுவது தவிர்க்க முடியாது போய்விடும் என்றும் ரணிலிடம் தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது.
இதேவேளை, ரணில் விக்கிரமசிங்கவின் அமெரிக்க விஜயத்தின் நிகழச்சி நிரலுக்கு அப்பாலும் அவர் பல ராஜதந்திரிகளைச் சந்தித்து இலங்கை நிலவரம் தொடர்பில் விளக்கியுள்ளார்.
கனேடிய அரசாங்கத்தின் அமைச்சரான ஜேம்ஸ் மூரையும் அமெரிக்க காங்கிரஸின் உயர் மட்ட அதிகாரிகளையும் அவர் வாஷிங்டனில் சந்தித்துப் பேசியுள்ளார்.
சிறைவைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா தொடர்பிலும் இந்தச் சந்திப்பின் போது பிரஸ்தாபிக்கப்பட்டதாகத் தெரிய வருகிறது.
இதேவேளை ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த சமாதான காலத்தில் அமெரிக்காவுடன் மிக நெருங்கிய உறவுகளைக் கொண்டிருந்தார்.
அப்போது முன்னாள் பிரதி ராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் அமீட்டேஜ் உடன் நட்புடையவராக இருந்தார் என்பதுடன் அப்போதைய காலத்திலேயே இராணுவ ரீதியான மிக முக்கிய ஒப்பந்தங்களை இலங்கை அமரிக்காவுடன் மேற்கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
***************
அடிமையாக்க முயற்சியாம் - அழுது வடிக்கும் அமைச்சர்!
போர்க்குற்றச்சாட்டுகள் உட்பட பாரதூரமான குற்றச்சாட்டுக்களை அடிப்படையாக வைத்து இலங்கையை அடிமைப்படுத்திக்கொள்ள சில நாடுகள் முயற்சித்து வருகின்றன என ஸ்ரீலங்கா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனினும் இந்தச் சதிகளுக்கு அடிபணிந்து அந்த நாடுகளிடம் மஹிந்த ராஜபக்ஷ ஒருபோதும் மண்டியிட மாட்டார் என்று பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரை பிரதேசத்தில் 20 மில்லியன் ரூபா செலவில் புதிதாக அமைக்கப்பட்ட பிரதேச செயலகக் கட்டடத்தை வெள்ளிக்கிழமை அமைச்சர் திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் செனவிரத்ன இதனைக் கூறினார்.
அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் ஆசியாவிலுள்ள மிகவும் அபிவிருத்தி அடைந்த நாடுகளின் வரிசையில் இலங்கையை நிறுத்துவதே மஹிந்த ராஜபக்சவின் பிரதான இலக்காக இருக்கின்றது என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த இலக்கை அடைவதற்காகவே ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுடன் மாத்திரமன்றி, ஏனைய உலக நாடுகளுடனும் இணைந்து செயற்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் சில மேற்குலக நாடுகள் இலங்கையை மீண்டும் அடிமைப்படுத்தி, தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர சதித்திட்டம் தீட்டி வருகின்றன.
எவ்வாறாயினும், மஹிந்த ராஜபக்ச அந்த நாடுகளிடம் ஒருபோதும் மண்டியிட மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார்.
***************
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் தமிழர் விவகாரம்
சிறிலங்காவுக்கு எதிரான ஆரம்பநாள் பிரேரணை மீதான விவாதம் ஒன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடத்தப்படவுள்ளது.
இதுதொடர்பான பிரேரணை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விவாதம் எப்போது நடைபெறும் என்ற சரியான நாளை வெளியிட முடியாது என்று கூறியுள்ள கன்சர்வேட்டிவ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லீ ஸ்கொட், இந்த விவாதம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரேரணை மீதான விவாதம் சிறிலங்காவில் உள்ள அனைவருக்கும் அமைதியையும் நீதியையும் கொண்டு வரும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவுக்கு எதிரான ஆரம்பநாள் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு ஆதரவாக பிரித்தானியாவின் 52 நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் கையெழுத்துப் பெறப்பட்டுள்ளது.
சிறிலங்காவில் நீதியையும் உண்மையையும், நல்லிணக்கத்தையும் உறுதிப்படுத்துவதற்கு சுதந்திரமான அனைத்துலகப் பொறிமுறை ஒன்றை ஐ.நா உருவாக்க வேண்டும் என்று இந்தப் பிரேரணை மூலம் கேட்டுக் கொள்ளப்படவுள்ளது.
பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்படும் இந்தப் பிரேரணைக்கு பெரும்பாலான லிபரல் கட்சி உறுப்பினர்களும் ஆதரவளிப்பார்கள் என்று நம்பப்படுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
***************
இழுத்தடிப்பில் இணையுமா ஐதேக?
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் இணைந்து கொள்வது குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு வழங்காது மேலும் காலத்தை தாழ்த்துவதற்கான முயற்சியாக தாம் இதனை நோக்குவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மட்டுமன்றி ஏனைய கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்துவதில் தவறில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனினும், பேச்சுவார்த்தைகள் ஆக்கபூர்வமானதாக அமைய வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
பிரச்சினையிலிருந்து தப்பித்துச் செல்வதற்காக அரசாங்கம் இவ்வாறான முயற்சிகளை மேற்கொண்டால் அதற்கு இடமளிக்கப்படக் கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
***************
மீளக் குடியேற்றம் தொடர்பில் மகிந்தவின் பொய் அம்பலம்!
வடக்கில் சுமார் இரண்டு லட்சம் இடம்பெயர் மக்கள் இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லை என ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அகதிகள் தினத்தை முன்னிட்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
நம்பகரமான தரவு மூலங்களின் அடிப்படையில் இந்த புள்ளி விபரத் தகவல் வெளியிடப்பட்டுள்ளதாக அகதிகளுக்கான முகவர் நிறுவனத்தின் அதிகாரி எலினா பெர்ட்டெரி தெரிவித்துள்ளார்.
புத்தளம் பிரதேசத்தில் இடம்பெயர்ந்து வாழும் மக்கள் மீள் குடியேற்றப்பட்டால் இந்த எண்ணிக்கை வெகுவாக வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
யாழ்ப்பாணத்தில் 1 லட்சத்து 2ஆயிரம் பேரும், புத்தளத்தில் 55ஆயிரத்து 400 பேரும், வவுனியாவில் 37ஆயிரம் பேரும் இன்னமும் மீள் குடியேற்றப்படவில்லை என சுட்டிக்காட்டப்படுகிறது.
மீள்குடியேறுவோருக்கு ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிறுவனம் தலா 25ஆயிரம் ரூபா வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
***************