Wednesday 20 July 2011

செய்திகள் 20/07

மமதையில் மகிந்த - அனைத்துலக நெருக்கடிக் குழு
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வெற்றிக்களிப்புடன் மமதை மனோபாவத்தில் இருப்பதாகவும், நல்லிணக்கத்தில் இருந்து சிறிலங்கா வெகுதொலைவில் நிற்பதாவும் நெருக்கடிகளுக்கான அனைத்துலக குழு குற்றம்சாட்டியுள்ளது.
பிரசெல்சை தளமாகக் கொண்டியங்கும் நெருக்கடிகளுக்கான அனைத்துலக குழு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.
சிறிலங்கா அரசின் மூர்க்கத்தனம் மற்றும் கருத்து மாறுபடுபவர்களை சகித்துக் கொள்ளாத தன்மை காரணமாக அங்கு மீண்டும் மோதல்கள் ஏற்படக்கூடிய அபாயம் இருப்பதாக இந்தக் குழு அச்சம் வெளியிட்டுள்ளது.
சிறிலங்கா அரசு தமிழ்ப் புலிகளை இரண்டாண்டுகளுக்கு முன்னர் தோற்கடித்ததில் இருந்து, சிறுபான்மை தமிழர்களின் குறைகளை அங்கீகரிக்கவோ அல்லது தீர்க்கவோ தவறிவிட்டதாகவும் நெருக்கடிகளுக்கான அனைத்துலக குழு குற்றம்சாட்டியுள்ளது.
கடந்தகால முரண்பாடுகளால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதை விட, சிறிலங்கா அதன் கொள்கைகளை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு நல்லிணக்க முயற்சிகளிலிருந்து தொலைவிலேயே தள்ளி வைத்திருப்பதாகவும் இந்த அமைப்பு கூறியுள்ளது.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் அரசாங்கம், வெற்றிக்களிப்புடன் மமதை மனோபாவத்துடனேயே இருப்பதாகவும், சிறுபான்மை மக்கள் அவர்களின் எதிர்காலம் பற்றிய தீர்மானங்களின் போது ஒதுக்கப்படுவதாகவும், தேர்தல்களில் மோசடிகள் செய்து, குடியியல்சார் சிவில் சமுகத்தினர் வாய்கள் கட்டப்பட்டு மௌனிகளாக்கப்பட்டுள்ளதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வன்முறைகளிலும் மோசடிகளிலும் ஈடுபடும் தமிழ் துணைக் குழுக்களைப் பயன்படுத்தி, முன்னர் போர் நடந்த பிரதேசங்களில் அரசியல் நடவடிக்கைகள் நசுக்கப்பட்டு வருவதாகவும் இந்த அமைப்பு கூறியுள்ளது.
சிறிலங்காவில் நீண்டகாலம் நடந்த போரை, தனியே மோசமான பயங்கரவாதத்துக்கு எதிரான போர் என்று மட்டும் கருதாமல், அதனை அநீதி, அடக்குமுறைகளால் உருவான ஒரு பெரும் இனமுரண்பாட்டின் பகுதி என்று சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் இந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, இந்த அறிக்கை முட்டாள்தனமானது என்று சிறிலங்காவின் அரசாங்க தரப்பு நடாளுமன்ற உறுப்பினரும் அதிபர் மகிந்த ராஸஜபக்சவின் ஆலோசகருமான ராஜீவ விஜேசிங்க நிராகரித்துள்ளார்.
இது தொடர்பாக பிபிசிக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், அண்மைக்கால தேர்தல்கள் எல்லாம் நியாயமாக நடந்ததாகவும், பழைய ஏற்பாட்டு சித்தாந்தங்களுடன் பழிக்குப் பழி என்ற தோரணையில் நெருக்கடிகளுக்கான அனைத்துலக குழு செயற்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
*****************
ஆலோசனை தேவையில்லை - மகிந்த
சிறிலங்காவின் பிரச்சினைகளைத் தீர்க்க எந்தவொரு நாடும் தமக்கு ஆலோசனை கூறத் தேவையில்லை என மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடுகளோ அல்லது வேறு எந்த சக்தியோ கூறுகின்ற ஆலோசனைகளை காது கொடுத்துக் கேட்வும் தாம் தயாரில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கிளிநொச்சியில் நேற்று நடைபெற்ற தேர்தல் பேரணி ஒன்றில் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சிறிலங்காவின் உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காணுகின்ற ஆற்றல் தம்மிடம் உள்ளதாகவும் சிறிலங்கா அதிபர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
பரஸ்ரபர புரிந்துணர்வு, கலந்துரையாடல் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர கூறியுள்ளார்.
சில சக்திகள் தமிழ் இளைஞர்களை மீளவும் தவறான வழிக்கு கொண்டு செல்ல முனைவதாகவும் குற்றம்சாட்டியுள்ள மகிந்த ராஜபக்ச அத்தகைய பொறியில் எவரும் விழுந்து விடக் கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
*****************
வெளிப்படைத் தன்மையற்ற அதிகாரம் - சரத் என் சில்வா
இலங்கையில் நிறைவேற்று அதிகாரத்தின் வெளிப்படை தன்மையற்ற காரணங்களே நாட்டில் பிரச்சினைகளுக்கு வித்திடுகின்றன என முன்னாள் பிரதமநீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
நிறைவேற்று அதிகாரம் மக்கள் இறைமைக்கு சவாலாக உள்ளதா என்ற தலைப்பில் நேற்று கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின் போது சரத் என் சில்வா இந்த கருத்தை வெளியிட்டார்.
நீதித்தன்மை பொதுமக்களுக்கு கிடைக்கவேண்டியது ஒன்றாகும்.
எனினும் இலங்கையின் நிறைவேற்று அதிகார நடவடிக்கைகளில் இரகசிய தன்மைகள் உள்ளதாக சரத் என் சில்வா கூறினார்.
நிறைவேற்று அதிகாரத்தின் வெளிப்படையற்ற தன்மை காரணமாகவே ஹெட்ஜிங் உடன்படிக்கையின் கீழ் பல மில்லியன் டொலர்களை அரசாங்கம் நட்டஈடாக செலுத்தவேண்டியேற்பட்டுள்ளது.
தரங்குறைந்த பெற்றோல் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதனால் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது என்று சரத் என் சில்வா சுட்டிக்காட்டினார்.
நாட்டில் இருந்து ஊழல்களை ஒழிக்க பொதுமக்கள் பல நடவடிக்கைகளை கடந்த காலங்களில் மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
*****************
ஐநா பிரதிநிதி வடக்கிற்கு பயணம்
புதிதாக நியமனம் பெற்ற ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுப்நாய் நான்டி வடபகுதிக்கு பயணம் செய்துள்ளார்.
அவர் இலங்கைக்கான ஐக்கிய நாடுகளின் புதிய இணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் வவுனியாவுக்கு சென்று மெனிக்பாம் அகதிகள் முகாமை பார்வையிட்ட பின்னர் மீள்குடியேற்றம் தொடர்பிலும் ஆராய்ந்தார்.
இதன்போது கருத்துரைத்த அவர் பாதிக்கப்பட்ட மக்களின் தேவைகளை அறிவதும் அவர்களின் வாழ்வாதார நிலைமைகளை பார்வையிடுவதுமே தமது பயணத்தின் நோக்கம் என்று குறிப்பிட்டார்.
இலங்கை அரசாங்கம் வடக்கில் மேற்கொண்டு வரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை ஆதரவளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
*****************
அரச தேர்தல் பிரச்சாரத்தில் தென்னிந்திய பாடகர் குழு
வடக்கு உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளுக்காக தென்னிந்திய திரையிசைப் பாடகர்கள் மூவர் சிறிலங்கா அரசினால் கிளிநொச்சிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் இன்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச பங்கேற்கும் பரப்புரைக் கூட்டத்தில் இவர்கள் இசை நிகழ்ச்சி நடத்தி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு தேடவுள்ளனர்.
தென்னிந்திய திரைப்பட பின்னணிப் பாடகர்களான மனோ, கிரிஸ், சுசித்ரா ஆகியோரே இன்று சிறிலங்கா அரச தலைவர் பங்கேற்கும் பரப்புரைப் பேரணில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதுதொடர்பாக நேற்று முழுவதும் கிளிநொச்சி மாவட்டத்தில் சிறிலங்கா படையினர் ஒலிபெருக்கி மூலம் அறிவித்தல்களை விடுத்திருந்தனர்.
தென்னிந்திய திரைப்படக் கலைஞர்கள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்வதற்கு சென்னையில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில், திரையிசைப் பாடகர்கள் மூவரும் சிறிலங்கா அதிபரின் மேடையில் பரப்புரை செய்யச் சென்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
*****************
கண்காணிப்பு அவசியம்
யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைமை தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கண்காணிக்க வேண்டியதன் அவசியம் குறித்து தேர்தல் கண்காணிப்பாளர்கள் வற்புறுத்திக் கூறியுள்ளனர்.
யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறுவதற்கு இன்னமும் ஒரு வாரமே இருக்கின்ற நிலையில் இவர்களின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுதந்திரமானதும் நீதியுமானதுமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கை அமைப்பினர் இது தொடர்பாகக் கூறுகையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் விதிகளை மீறும் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
எதிர்க் கட்சியினர் தமது தேர்தல் பிரசார வேலைகளை முன்னெடுத்துச் செல்வதில் இடையூறுகளைச் சந்திப்பதாக முறையிட்டுள்ளனர் எனக் கூறியுள்ளனர்.
பவ்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் தமது கருத்தைத் தெரிவிக்கையில் இந்த உள்ளூராட்சித் தேர்தலானது தேசிய ரீதியில் நடைபெறும் ஒரு தேர்தல் போன்றே காணப்படுகின்றது.
அரசின் கொள்கைகளுக்கு யாழ்ப்பாண மக்கள் தெரிவிக்கும் அபிப்பிராயத்தை அளவிடும் ஓர் அமிலச் சோதனையாகவே இந்தத் தேர்தல் அரசுக்கு அமைந்துள்ளது.
இதுவொரு குட்டித் தேர்தலாக இருந்தபோதிலும் அரசுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகவே காணப்படுகின்றது.
தாம் தமது கட்சியினர் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடமுடியாத நிலையில் உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும், ஜே.வி.பியினரும் தெரிவித்துள்ள பல முறைப்பாடுகளை தாம் பெற்றுக் கொண்டுள்ளோம்.
இதனால் யாழ்ப்பாணத்துக்கு ஒரு குழுவினரை அனுப்பி அங்குள்ள நிலைமையைக் கண்காணிக்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவை எழுத்துமூலம் கேட்டுக் கொண்டுள்ளோம்.
அத்துடன் தாமும் ஒரு விசேட குழுவினரை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைக்கவுள்ளோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
*****************
தேர்தல் பிரச்சாரம் செய்தோர் கைது
திருக்கோவில் பிரதேசத்தில் தேர்தல் பிரசார சுவரொட்டிகளை ஒட்டிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் ஒருவர் உட்பட நால்வர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் நால்வரும் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டனர் என திருக்கோவில் காவல் நிலைய பொறுப்பதிகாரி சமிந்த ஜெயகசூரிய தெரிவித்தார்.
பேரம்பலம் விஜயராஜா என்பவரும் அவரது ஆதரவாளர்கள் உட்பட நான்கு பேருமே நள்ளிரவு 12.15 மணியளவில் திருக்கோவில் பிரதான நகர் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் பிரசார சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்கள் விநியோகத்துக்கான காலக்கெடு முடிவடைந்துள்ள நிலையில் பிரசார சுவரொட்டிகளை ஒட்டினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இந்த நால்வரும் கைது செய்யப்பட்டதாக காவல் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் காவல்துறையினர் மேற்கொண்டு வருவதாக காவல் நிலைய பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.
*****************
கூட்டமைப்பின் கேள்வி?
அரசாங்கத்துடன் தமிழ்க் கூட்டமைப்பு இதுவரை 9 சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்தியிருக்கின்ற போதிலும் அதிகாரப்பகிர்வு பற்றி பேசுவதற்கு அரசு விரும்பவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஏதிலிகளாக கையேந்த வைத்தோர் இன்று வாக்கு கேட்பதாகச் சாடியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் இணைச் செயலாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று விடுத்திருக்கும் பத்திரிகை அறிக்கையில் இந்தக் குற்றச்சாட்டுகளை தெரிவித்ததுடன், தமிழ் மக்களின் காணிகளை கபளீகரம் செய்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டுமா என்று சிந்தித்துப் பாருங்கள் என்று வினா எழுப்பியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச மட்டத்தில் மேற்கொண்ட பரப்புரையால் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட ஏனைய நாடுகள் இலங்கை அரசுக்கு தொடர்ச்சியாகக் கொடுத்துவரும் அழுத்தம் காரணமாகத் தடுப்பில் உள்ள சில இளைஞர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அதியுயர் பாதுகாப்பு வலயங்களிலும் சில இடங்கள் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இன்றும் பல ஆயிரம் இளைஞர்கள் இராணுவத் தடுப்பில் உள்ளார்கள்.
பல கிராமங்களில் மக்கள் மீள்குடியேற்றப்படவேண்டியுள்ளனர். அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் முற்றாக நீக்கப்படவில்லை.
இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகள், வாழ்வாதாரங்கள் எதுவும் சரியான முறையில் இல்லை.
வடக்கு, கிழக்கின் சகல மாவட்டங்களிலும் தமிழ் மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன.
இராணுவம் ஆக்கிரமிக்கிறது. தங்களுடைய ஆட்சி என்ற மமதையில் சாதாரண சிங்கள மக்களும் சிங்கள வியாபாரிகளும் கூட ஆக்கிரமிக்கின்றனர்.
இதனால் பலநூறு மக்கள் தமது சொந்த நிலத்திற்குப் போக முடியாமல் நடுத்தெருவில் நாதியற்று அலைகின்றார்கள்.
வடக்கு இராணுவமயப்படுகின்றது. நிரந்தர இராணுவ முகாம்கள், பயிற்சி முகாம்கள், இராணுவக் குடியிருப்புகள் போன்றவை அமைக்கப்பட்டு வருகின்றன.
நாவற்குழியில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் அரச அனுசரணையுடன் குடியேறியுள்ளார்கள்.
மன்னார் மடு வீதியில் சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
பல்வேறு இடங்களில் இதுதான் நடைபெறுகின்றது. தாய் தந்தைக்கு முன்பாக இராணுவத்திடம் சரணடைந்த பலர் இன்று தம்மிடம் இல்லை என்று அரசால் கூறப்படுகின்றது.
இறுதி யுத்தத்தில் 40,000 இலிருந்து 150,000 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என பல சர்வதேச நிறுவனங்கள் கூறுகின்றன.
ஒருவர்கூட கொல்லப்படவில்லை என அரசு கூறுகின்றது. ஆனால், ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவ விஜயசிங்க ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என்று இங்கிலாந்தில் கூறியுள்ளார்.
இப்படி தமிழ் மக்களுக்கெதிரான பல்வேறுபட்ட அடக்கு முறைகளையும் கட்டவிழ்த்து விட்டவர்கள் தான் இன்று மக்கள் மத்தியில் வாக்குக் கேட்டு வந்துள்ளனர்.
இதில் ஒரு விடயத்தையாவது இவர்களால் மறுதலிக்க முடியுமா? இதனைப் பற்றி மக்கள் மத்தியில் விவாதிக்க எந்த அமைச்சராவது தயாராக இருக்கின்றனரா? இன்று இலங்கை அரசு பல கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நெருக்கடிக்குள் தள்ளப்பட்டுள்ளது எனவும் சுரேஸ் பிரேமச் சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
*****************