Saturday 23 July 2011

செய்திகள் 23/07


நோர்வே தாக்குதலில் 87 பேர் பலி!
நோர்வேயில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இரு பாரிய தாக்குதல் சம்பவங்களில் 87 பேர் பலியானதாக தெரிவிக்கப்படுகிறது.
நோர்வே நாட்டின் ஆளும் கட்சியின் இளம் உறுப்பினர்களுக்கான ஒன்றுகூடல் நிகழ்வில் புகுந்த ஒரு நபரே, கண்மூடித்தனமாக துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளார்.
அந்த நபர் காவல்துறை சீருடை அணிந்த நிலையில் காணப்பட்டதாகத் தெரியவருகின்றது.
தலைநகர் ஒஸ்லோவுக்கு அருகே உட்டோயா தீவில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடைபெற்ற கோடைகால முகாமுக்கு, நோர்வேயின் பிரதமர் வருகை தருவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.
அவரது வருகை சற்றுத் தாமதமாகியதில், இந்தத் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்திலிருந்து அவர் தப்பித்துக்கொண்டார்.
கோடைகால முகாமிலிருந்த கட்சி உறுப்பினர்களில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தாக்குதல், பிரதமருக்காக குறிவைக்கப்பட்டதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
அன்சார் அல்-ஜிகாத் அல்-அலாமி என்ற தீவிரவாத அமைப்பு குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது.
ஆப்கானிஸ்தானிலுள்ள நேட்டோ படைகளில் நோர்வேயும் இணைந்திருப்பதாலேயே, இத்தாக்குதல்கள் நடாத்தப்பட்டன என்று அந்த தீவிரவாத இயக்கம் அறிவித்துள்ளது.
தலைநகர் ஒஸ்லோவில் முக்கிய அரசாங்கக் கட்டிடங்கள் அமைந்துள்ள பகுதியில் வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற இரு குண்டுவெடிப்புகளில் குறைந்தபட்சம் 7 பேர் பலியானதுடன் 15 பேர் காயமடைந்தனர்.
இத்தாக்குதல் இடம்பெற்று சிறிது நேரத்தில், ஒஸ்லோவிலிருந்து 50 கிலோமீற்றர் தூரத்திலுள்ள உதோயா எனும் தீவில் ஆளும்கட்சியின் இளைஞர் முகாமில் கலந்துகொண்டவர்கள் மீது காவல்துறை சீருடை அணிந்த நபர் ஒருவர் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் குறைந்தபட்சம் 80 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்விரு தாக்குதல்களுக்கும் தொடர்பிருப்பதாக நோர்வே காவல்த் துறையினர் தெரிவித்துள்ளனர்.
காவல்துறை சீருடையில் வந்த இந்த நபர் தான் பாதுகாப்பு நடவடிக்கைகளை சோதனையிட வந்திருப்பதாக கூறி தனது அடையாள அட்டையை காண்பித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்பின் உதோயா தீவுக்கு செல்வதற்கான வள்ளத்தில் ஏனைய பயணிகளுடன் அவர் ஏறிக்கொண்டார்.
அந்த வள்ளம் தீவை அடைந்தவுடன் துப்பாக்கியை உருவி அவர் கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தார்.
பிரதமர் ஜேன்ஸ் ஸ்டோல்டென்பேர்க் தலைமையிலான நோர்வே தொழிற்கட்சி நடத்திய இளைஞர் மாநாட்டில் சுமார் 700 பேர் கலந்துகொண்டிருந்தனர்.
துப்பாக்கிப் பிரயோகம் ஆரம்பித்தவுடன் பெரும் அல்லோல கல்லோலம் ஏற்பட்டது.
இளைஞர்கள் பலர் ஓடி ஒளிய முயன்றனர். சிலர் மரங்களில் ஏறினர். சிலர் பற்றைகளுக்குள் பதுங்கினர். சிலர் தண்ணீரில் குதித்து நீந்தி தப்ப முயன்றனர். எனினும் துப்பாக்கிதாரி அவர்களை துரத்திச் சுட்டுக் கொன்றுள்ளார்.
இறுதியில் நோர்வே காவல்துறையினரால் அந்நபர் கைது செய்யப்பட்டார்.
அவர் நோர்வேயைச் சேர்ந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
ஓஸ்லோவில் இடம்பெற்ற தாக்குதலில் நோர்வே பிரதமரின் அலுவலகமும் சேதமடைந்தது.
எனினும் அவ்வேளையில் வீட்டிலிருந்து பணியாற்றிக்கொண்டிருந்த பிரதமர் ஸ்டோல்டென்பேர்க்கிற்கு பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.
அல் கயீடாவுடன் தொடர்புடையதாக கூறப்படும் அன்சார் அல் ஜிஹாத் அல் ஆலமி எனும் இயக்கம் மின்னஞ்சல்கள் மூலம் இத்தாக்குதல்களுக்கு உரிமை கோரியிருப்பதாக செய்திவெளியாகியுள்ளது.
எனினும் இது ஒரு பயங்கரவாத தாக்குதலாக அல்லாமல் பைத்தியம்பிடித்த ஒரு மனிதனின் நடவடிக்கையாக தென்படுகிறது என நோர்வே காவல்துறை பணிப்பாளர் ஒய்டெய்ன் மீலன்ட் கூறியுள்ளார்.
எண்ணெய் வளம் கொண்ட, உலகின் மிக செல்வந்த நாடுகளில் ஒன்றான நோர்வே அமைதியான நாடுகளில் ஒன்றாக விளங்கியது.
இரண்டாம் உலக யுத்தத்தின்பின் நோர்வேயில் இடம்பெற்ற மிக மோசமான தாக்குதல் நேற்றைய தாக்குதல்களாகும்.
*****************
இன்று கறுப்பு யூலை
1983 ஜூலை 23 இலங்கை வரலாற்றில் கறுப்புதினம். இரத்தக்கறை படிந்த நாள். பேரினவாதிகள் மிருகங்களாக மாறி தமிழர்களை வேட்டையாடிய கொடுமை மிகு நாள்.
ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் படுகொலையுண்ட 28 ஆவது ஆண்டு நினைவு நாள். இன்றும் ஜூலை 23. தமிழ் மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கும் நாள்.
27 ஆண்டுகளுக்கு முன் 1983 ஜூலை 23 ஆம் திகதி முதல் சுமார் ஒருவார காலம் நாடு முழுவதும், குறிப்பாக தலைநகரில் தமிழர்கள் உயிருடன் எரியூட்டப்பட்ட, கண்டதுண்டமாக வெட்டிக் கொல்லப்பட்ட, வீடுகள், வர்த்தக நிலையங்கள் சூறையாடப்பட்ட, எரியூட்டப்பட்ட கொடூரமிக்க சம்பவங்கள் இடம்பெற்ற நாளாகும்
அந்த சில நாள்களில் 3ஆயிரம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.
25ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அங்கவீனம் அல்லது காயங்களுக்கு இலக்காகினர்.
ஒரு லட்சத்து 50 ஆயிரம் தமிழர்கள் வீடுகள், வர்த்தக நிலையங்களை இழந்து நிர்க்கதியாகினர்.
துயரம் மிகுந்த அந்த நினைவு நாளில் இன்று தமிழன் தன் தலைவிதியை நிர்ணயிக்க பேரினவாதிகளுடன் பெரும் போராட்டம் புரிந்து வருகின்றனர்.
*****************
28 ஆண்டுகளாகியும் நீதி கிடைக்காத தமிழினம்!
1983 யூலை கறுப்பு நாட்கள் இலங்கைத்தீவில் தமிழீழ மக்களின் இருப்பும் வாழ்வும் தொடர்பாக அடிப்படையான பல கேள்விகளை எழுப்பி அவைக்கான பதில்களையும் வழங்கி நின்றன.
இனப்படுகொலைக்குள்ளாகியுள்ள தமிழீழ மக்கள் பாதுகாப்பாகவும் கௌரவமாகவும் வாழ்வதற்கு தமிழீழத் தனியரசினை அமைப்பதே ஒரேவழி என்பதனை மனிதில் இருத்தி வீச்சுடன் செயற்படுவதற்கு இக் கறுப்பு யூலை நினைவு நாளில் நாம் உறுதி கொள்வோமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழீழ மக்களுக்கு எதிராகச் சிங்களப் பேரினவாதம் புரிந்த இனப்படுகொலைக் குற்றங்களின் ஒரு பதிவாக - தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நெருப்பு நினைவுகள் சுமந்த நாட்களாய் அமைந்து விட்ட கறுப்பு யூலைப் படுகொலைகள் நிகழ்ந்து 28 ஆண்டுகள் கழிந்து போயுள்ளன.
1983 ஆம் ஆண்டு கறுப்பு யூலைப் படுகொலைகள் நடைபெற்ற போது வெலிக்கடைச் சிறைச்சாலைக்குள்ளும், கொழும்பு உட்பட சிறிலங்காவின் ஏனைய பகுதிகளிலும் சிங்கள அரசின் துணையுடன் சிங்களக் கொலை வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட அனைத்துப் போராளிகளுக்கும் மக்களுக்கும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இத் தருணத்தில் தனது மரியாதை வணக்கத்தைச் செலுத்தி நிற்கிறது எனவும் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
*****************
வாக்காளரட்டைகள் கொள்ளை
கிளிநொச்சி மக்களிடம் கருப்பு உடையணிந்து வந்து ஆயுதத்துடன் வந்த குழுவினர் மக்களிடம் வாக்கட்டைகளையும் அடையாள அட்டைகளையும் பயமுறுத்தி வாங்கிச் சென்றுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தாம் வாக்கட்டைகளை பெறுவதை வெளியிலே எவரிடமாவது சொன்னால் வெட்டி கொலை செய்து விடுவதாகவே குறித்த குழுவினர் மக்களை மிரட்டியுள்ளனர்.
இதேவேளை வாக்கு நிலையங்களின் முன்பு ஈ.பி.டி.பியைச் சேர்நதவர்கள் பிரசாரங்களில் ஈடுபட்டுவருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் பாரதிபுரம் ராமநாதபுரம் மலையாளபுரம் வட்டக்கச்சி ஆகிய பிரதேசங்களில் உள்ளவர்களின் வாக்கட்டகளை சிலர் வந்து வாங்கிச்செல்வதாக தேர்தல் கண்காணிப்புக் குழுவான கபே அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அது தொடர்பில் முறைப்பாடு கிடைக்கப் பெற்றதும் அவ்விடத்திற்கு காவல்துறை அதிகாரிகள் குழு ஒன்றை அனுப்பியதாகவும் அவ்விடத்தில் இவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறவில்லை எனவும் வடமாகாண பிரதி காவல்துறை மா அதிபர் காமினி சில்வா தெரிவித்துள்ளார்.
பச்சிலைப்பள்ளி பெரிய தம்பகாமத்தில் இரவு 11 மணியளவில் வீடுகளிற்கு சென்ற ஆயுததாரிகள் நித்திரையில் இருந்த மக்களை மிரட்டி அவர்களது வாக்காளர் அட்டைகளை பறித்துச் சென்றுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.
அத்துடன் அவர்களது கையடக்கத் தொலைபேசிகளின் ளுஐஆ அட்டைகளையும் பறித்து விட்டு வாக்களிக்க செல்ல வேண்டாம் என்றும் கடிமையான தொனியில் மிரட்டப்பட்டுள்ளனர்.
*****************
தேர்தல் சட்ட மீறல்?
இன்று உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் நிலையில், யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் தேர்தல் சட்டங்களை மீறும் வகையில் ஆளும்கட்சியின் தேர்தல் விளம்பரங்கள் இன்னமும் அகற்றப்படாதுள்ளதாக சிறிலங்காவின் தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தமக்கு இரண்டு மாவட்டங்களினதும் அரசாங்க அதிபர்களிடம் இருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
எனினும் தேர்தலுக்கு முன்னர் அனைத்து சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளையும் அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு சிறிலங்கா காவல்துறைக்கு தேர்தல் ஆணையாளர் உத்தரவிட்டிருந்தார்.
ஆனால் தேர்தல் விளம்பர சுவரொட்டிகள் மற்றும் பதாகைகளை அகற்ற போதிய காலஅவகாசமோ தொழிலாளர்களோ இல்லை என்று சிறிலங்கா காவல்துறை கூறியுள்ளது.
எதிர்க்கட்சிகளின் தேர்தல் விளம்பரங்களை அகற்றுவதில் மட்டும் காவல்துறை அக்கறை காண்பிப்பதாகவும் ஆளும்கட்சியின் விளம்பரச் சுவரொட்டிகள் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சியில் உள்ள சுவர்கள் எங்கும் அகற்றப்படாமல் நிறைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
*****************
அதிகாரத்தை கைப்பற்றி உலகை ஏமாற்ற முயலும் ஸ்ரீலங்கா!
வடக்கிலுள்ள 20 உள்ளூராட்சி சபைகள் அடங்கலாக, 65 உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் இன்று சிறிலங்காவில் நடைபெறுகின்றது.
01 மாநகரசபை, 09 நகரசபைகள், 55 பிரதேசசபைகளின் உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான இந்தத் தேர்தலில், காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு மாலை 4 மணியுடன் நிறைவடையும்.
முறைகேடுகளைத் தடுக்க நேரகாலத்துடன் சென்று வாக்களிக்குமாறும் சிறிலங்கா தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
875 உள்ளூராட்சி உறுப்பினர்களைத் தெரிவு செய்ய நடைபெறும் இந்தத் தேர்தலில் 26 லட்சத்து 30ஆயிரத்து 985 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
20 அரசியல் கட்சிகள், 72 சுயேச்சைக் குழுக்கள் சார்பில் 5ஆயிரத்து 619 வேட்பாளர்கள் இந்தத் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
வடக்கில் 20 உள்ளூராட்சி சபைகளுக்கு நடைபெறும் தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஈபிடிபியுடன் இணைந்து இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கு பாரிய முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளது.
இதனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பெரும் சவாலுக்கு முகம் கொடுத்துள்ளது.
மாலை 4 மணியளவில் வாக்களிப்பு நிறைவடைந்ததும், வாக்குப்பெட்டிகள் மாவட்ட செயலகங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வாக்குகளை எண்ணும் பணிகள் இரவு 8 மணியளவில் ஆரம்பிக்கப்படும்.
அதற்கு முன்னதாக அஞ்சல் வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படும்.
ஆனால் இம்முறை அஞ்சல் வாக்களிப்பு முடிவுகள் தனியாக வெளியிடப்படாது என்று தேர்தல் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
முதலாவது தேர்தல் முடிவு இன்றிரவு 10 மணியளவில் வெளியாகும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அனைத்து முடிவுகளும் நாளை அதிகாலைக்கு முன்பாக வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு நிலையங்களுக்குள் ஒளிப்படம் எடுப்பதற்குத் தடை விதித்துள்ள தேர்தல் ஆணையாளர், எந்தவொரு ஊடகத்திலும் வாக்களிக்கும் போது எடுக்கப்பட்ட படங்கள் வெளியானால் குறித்த வாக்களிப்பு நிலைய பொறுப்பதிகாரியே அதற்குப் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார்.
வடக்கில் நீதியாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடைபெற வாய்ப்பில்லை என்று கூறியுள்ள தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் அதிகளவிலான கண்காணிப்பாளர்களை பணியில் அமர்த்தியுள்ளன.
இன்று நடைபெறும் தேர்தலில் பாதுகாப்பை உறுதிப்படுத்த 25ஆயிரத்துக்கும் அதிகமான காவலர்களை சிறிலங்கா காவல்துறை பணியில் அமர்த்தியுள்ளது.
25 ஆயிரம் காவல்துறையினரும், 500 சிறப்பு அதிரடிப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக சிறிலங்கா காவல்துறை திணைக்களம் கூறியுள்ளது.
*****************
வன்முறைத் தேர்தலை சந்திக்கும் தமிழர்கள்!
1977ம் மற்றும் 1981ம் ஆண்டு தேர்தல் வன்முறைகளை ஒத்த தேர்தல் வன்முறைச் செயற்பாடுகள் தற்போது வடக்கில் மிக வேகமாகத் தொடங்கியுள்ளன.
தற்போது கிடைக்கப் பெற்றுள்ள தகவல்களின்படி யாழ் மாவட்ட வாக்களிப்பு நிலையங்களிற்கு பொறுப்பான தேர்தல் உத்தியோகத்தர்களிற்கு விநியோகிப்பதற்காக பலத்த பாதுகாப்பின் மத்தியில் கொண்டு வரப்பட்ட வாக்குப்பெட்டிகளில் சுமார் 4,000 வாக்குகளை உள்ளடக்கிய வாக்களிப்பு நிலையங்களிற்கான பெட்டிகளை காணவில்லை எனத் தெரியவருகிறது.
இந்த வாக்குப் பெட்டிகளை விநியோகிக்கும் பணியில் காவல்துறையினரும் அதற்குப் பாதுகாப்பு வழங்கும் பணியில் இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ள நிலையில் காலவல்துறையினரிடம் வாக்களிப்பு நிலையங்களிற்கான பெட்டிகள் வந்து சேரவில்லை எனத் தெரியவருகிறது.
தேர்தல் தினத்திற்கு முந்தைய தினமான நேற்றுப் பிற்பகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவாளர்களின் சொத்துக்கள் மாற்றுக் கட்சிக்காரர்களினால் எரியூட்டப்பட்டதாகவும் தெரிய வருகிறது.
*****************
வன்முறையில்லாத தேர்தல் இல்லையாம் - கண்டுபிடித்த அமைச்சர்!
நூறு சதவீதம் வன்முறைகளற்ற தேர்தலை ஒருபோதும் நடத்த முடியாது என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறானதொரு தேர்தல் இதுவரை நடைபெறவில்லை என்றும் தெரிவித்துள்ளத.
அதேபோன்று 1981ஆம் ஆண்டில் ஐக்கிய தேசியக் கட்சியினர் யாழ். நூலகத்தை எரித்து நடத்திய தேர்தலைப் போன்று அரசு தேர்தலை நடத்தாது என்றும் அத்துடன், வடக்கில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் தேர்தலை நோக்காகக் கொண்டவை அல்ல என்றும் அமைச்சரும், சபை முதல்வருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்றுமுன்தினம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, வடக்கில் தேர்தல் நிலைவரம் தொடர்பாக விசேட கூற்று ஒன்றை முன்வைத்து உரையாற்றினார்.
இதற்குப் பதில் அளித்து உரையாற்றியபோதே அமைச்சர் இதனைக் கூறினார்.
இதற்கு முன்னரும் தேர்தல்கள் அப்பிரதேசங்களில் நடத்தப்பட்டு, வாக்களிக்கப்பட்டு, பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டனர்.
எனினும், அந்தத் தேர்தலில் தோல்வியடைந்த கட்சிகளால் குறைபாடுகள் தெரிவிக்கப்படவில்லை.
அவ்வாறு முறைப்பாடு கிடைத்திருந்தால் முடிவுகள் இரத்துச் செய்யப்பட்டிருக்கும் ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
*****************
நாட்டைக் கொள்ளையடிக்கும் ஆட்சி!
யுத்தத்தால் நாட்டை மீட்டெடுத்தார்கள் என்பதற்காக நாட்டை கொள்ளையடித்து சூறையாடுவதற்கு இடமளிக்க முடியாது எனத் தெரிவிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி ஹெஜிங் உடன்படிக்கை தொடர்பில் அரசுத் தலைவரும் அமைச்சரவையுமே பொறுப்பு கூற வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டின் நீதிமன்ற தீர்ப்புக்களை மதிக்காது அதற்கு அப்பால் சென்று அமைச்சரவை செயற்பட்டமையே இந்த ஹெஜிங் பிரச்சினைக்கான காரணமென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஹெஜிங் உடன்படிக்கையால் ஏற்பட்டுள்ள பாரிய பிரச்சினையால் 1800 கோடி ரூபாய் செலுத்த வேண்டியுள்ளது.
இந்த பிரச்சினையின் முழுமையான வழக்குகள் நிறைவடைந்தால் 5 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்த வேண்டி ஏற்படும்.
இதனை மக்கள் மீது சுமத்த முடியாது. அதனை அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
*****************