Monday 4 July 2011

செய்திகள் 04/07


உறவு கொண்டாடும் அமெரிக்கா
இலங்கையுடன் அமெரிக்க அரசாங்கம் பேணிவரும் உறவுகளில் எவ்வித பாதிப்புகளும் ஏற்படமாட்டாது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இவ்விரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் பெட்ரிசியா புட்டினாஸ் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இளைஞர் விவகாரங்களை ஊக்குவிப்பது தொடர்பில் இந்த ஆண்டு கொண்டாட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் மொத்த சனத்தொகையில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் இளைஞர்கள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பல்வேறு வழிகளில் இலங்கை இளைஞர் யுவதிகளுக்கு அமெரிக்கா உதவிகளை வழங்கி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
******************
தீர்வு தமிழருக்கே
தேசிய இனப்பிரச்சினைக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்படாத எந்தவொரு தீர்வையும் தமிழ்மக்கள் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகபிரதிநிதிகள் அல்ல.
ஆனால் முன்னைய தேர்தல்களின் மூலம் தமிழ்மக்கள் கூட்டமைப்பின் மீதான தமது நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர் எனறும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் ஏற்றுக் கொள்ளப்படாத எந்தவொரு தீர்வையும் தமிழ்மக்கள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
தாம் தமிழ்மக்களின் ஏக பிரதிநிதிகளாக இல்லாது போனாலும், தமிழ்மக்களின் உண்மையான பிரதிநிதிகள் என்றும் அவர்கள் தங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.
******************
மீண்டும் மரமேற தயாராகும் வேதாளம்
அரசியல் தீர்வு யோசனைகளைத் தயாரிப்பதற்கான உத்தேச நாடாளுமன்றத் தெரிவுக் குழுவில் கலந்துகொள்வதா, இல்லையா என்ற தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அரசியல் கட்சிகள் தெரிவிக்கவேண்டும் என்று அரசு கேட்டுக்கொண்டது.
அமைச்சரும் சபை முதல்வருமான நிமால் சிறிபால டிசில்வா இது தொடர்பாக கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசியல் தீர்வு தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்வது தொடர்பாக எதிர்க்கட்சிகள் தெரிவித்திருக்கும் கருத்துக்களை தாம் ஊடகங்களின் வாயிலாக அறிந்ததாகவும், அநேகமாக எதிர்க்கட்சிகள் இந்தத் தெரிவுக்குழுவில் கலந்துகொள்ளப் போவதில்லை என்றே கூறியிருக்கின்றன என்றும் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊடகங்களில் வெளியாகியிருக்கும் கருத்துகளைக் கொண்டு அரசு ஒரு முடிவுக்கு வர முடியாது.
தெரிவுக்குழுவில் இடம்பெறுவது தொடர்பாகத் தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அரசியல் கட்சிகள் நாடாளுமன்றில் தெரிவிக்கவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
தெரிவுக்குழுவை எதிர்ப்பதாக எந்தவோர் அரசியல் கட்சியும் அரசிடம் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லை.
அவர்கள் அவ்வாறு அறிவிக்கும்வரை ஊடக அறிக்கையை மாத்திரம் வைத்துக்கொண்டு அரசு ஒரு முடிவுக்கு வராது.
அக்கட்சிகள் உடனடியாக தமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அறிவிக்கவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பதற்கான தனது தீர்மானத்தை அரசு நாளை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கும் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இத் தெரிவுக்குழுவில் அரசைச் சேர்ந்த 31 உறுப்பினர்களும் எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 12 உறுப்பினர்களுமாக 43 உறுப்பினர்கள் அடங்குவர்.
தெரிவுக்குழுவில் இடம்பெறப்போவதில்லை என்று ஜே.வி.பி. அறிவித்துவிட்டது.
தெரிவுக்குழு அமைக்கப்பட்டதன் பின்னரே இது தொடர்பாக ஒரு முடிவுக்கு வர முடியும் என்று ஐக்கிய தேசியக்கட்சி தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இது தொடர்பாக இன்னும் உத்தியோகபூர்வ அறிவிப்பு எதனையும் விடுக்கவில்லை.
தமது அரசியல் உயர்பீடம் இது தொடர்பாக இறுதி முடிவை எடுக்கும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
இருப்பினும், எதிர்க்கட்சிகள் அனைத்தும் தெரிவுக்குழுவை எதிர்ப்பது போன்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
******************
பாதாள உலக குழு தலைவர் ஒருவர் சுட்டுக்கொலை
பாதாள உலகக் குழுகக்களின் பிரபல தலைவர்களில் ஒருவரான நெலுவ பிரியந்த சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
விசேட அதிரடிப்படையினர் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த போதே அவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
சுமார் 25 கொலைகளுடன் தொடர்புபட்ட பாதள உலக குழுத் தலைவர்களில் ஒருவரான நெலுவ பிரியந்த நேற்றிரவு சூரியவௌ பகுதியில் வைத்து காவல்துறை விசேட அதிரடிப்படை பிரிவினராலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
நேற்றுக்காலை கைது செய்யப்பட்ட நெலுவ பிரியந்த, விசாரணைகளை அடுத்து ஆயுதம் பதுக்கி வைக்கப்பட்டதாக அவர் கூறிய இடமான சூரியகந்த மோர்னிங்கந்த என்ற இடத்திற்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
அங்கு சென்ற போது அங்கு மறைத்து வைக்கப்பட்ட துப்பாக்கியினால் விசேட அதிரடிப் படையினரை சுடுவதற்கு அவர் முயன்றுள்ளார்.
இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் நடத்திய சூட்டுச் சம்பவத்தில் காயமுற்ற அவர், சூரியவௌ வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
நெழுவ பிரியந்த பல கொலை வழக்குகளுடன், போதை பொருட் கடத்தல்களுடன் சம்பத்தப்பட்டவர் என தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன் மாகாண சபை உறுப்பினர் ஒருவரின் கொலை வழக்குடனும் இவர் சம்பந்தப்பட்டவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
******************
தமிழ் மாணவர் புறக்கணிப்பு
ஈழத்தமிழ் மக்களின் உரிமைப் போராட்டம் எங்கிருந்துஆரம்பித்ததோ, அதற்கு எவைகள் காரணிகளாக இருந்தனவோ அந்த இடத்துக்கும் அந்தக் காரணிகளுக்கும் மீண்டும் தமிழினத்தைக் கொண்டு செல்லும் நடவடிக்கைகளை சிறிலங்கா சிங்கள அரசு ஆரம்பித்து விட்டது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்புத் தெரிவித்துள்ளது.
இதற்கு ஓர் உதாரணமே பல்கலைக்கழக மாணவர் அனுமதியில் தமிழ் மாணவர்களுக்கு விழுந்துள்ள அடி என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகத்துக்குத் தமிழ் மாணவர்கள் பெருவாரியாகத் தெரிவாகிச் செல்வதனைத் தடை செய்யும் நோக்கத்தின் முதல் கட்டமாக வன்னித் தேர்தல் மாவட்டத்தில் சிறிலங்கா அரசு இந்த நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னித் தேர்தல் மாவட்டத்திலிருந்து பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை இந்த வருடம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தான் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்திலும் தெரிவிக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அனுமதி குறைப்பானது இன்று வன்னி, நாளை யாழ்ப்பாணம், மறுதினம் மட்டக்களப்பு என்று தொடர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
யுத்தம் காரணமாகப் பாரிய அழிவைச் சந்தித்த வன்னியிலேயே சிறிலங்கா அரசு இந்தப் பாரபட்சத்தை ஆரம்பித்து வைக்கிறதென்றால் ஏனைய தமிழ்ப் பகுதிகள் தொடர்பில் கூறத் தேவை என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தத் தீர்மானம் குறித்த முடிவுகளை மீள்பரிசீலனை செய்யுமாறு பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
******************
தீர்வை வலியுறுத்தும் பீடாதிபதி
வடக்கில் வாழும் மக்கள் நிம்மதியாக வாழும் வகையில் அவர்கள் மீது விசேட கவனம் செலுத்தி அரசியல் தீர்வு ஒன்றை வழங்கவேண்டும் என மல்வத்தை பீடாதிபதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அரசு தமது அறிவுரைகளை உதாசீனம் செய்தால் பழைய நிலைமை மீண்டும் ஏற்படலாம் என மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் தெரிவித்துள்ளார்.
மலையக மக்கள் முன்னணி அரசியல் பிரிவுத் தலைவர் வே.இராதாகிருஷ்ணன் உட்பட ம.ம.முன்னணி தூதுக்குழுவினர் சமீபத்தில் அஸ்கிரிய, மல்வத்தை பீடாதிபதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினர்.
இதன்போதே மல்வத்த பீடாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள பல்கலைக்கழகங்களை இன்று இழுத்து மூடும் நிலைமையே உருவாகியுள்ளது.
நாட்டின் பல்கலைக்கழகங்களைப் பேணிப் பாதுகாக்கத் திராணியற்றவர்கள் இன்று கட்டணம் செலுத்தி அங்கு வெளிநாட்டு மாணவர்கள் பயில்வதற்கு வாய்ப்புகளை உருவாக்க முனைந்துள்ளனர்.
மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்தும் தான் நன்கறிவேன் எனத் தெரிவித்த அவர் அவர்களுக்காக தானும் தலையிட்டுச் செயற்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கைப் பொறுத்தவரை அந்த மக்களின் பிரச்சினைகள் இன்னமும் தீர்த்து வைக்கப்படவில்லை.
தனக்கும் வட பகுதிக்குச் செல்லச் சந்தர்ப்பம் கிடைத்தது. தான் அவர்களது பிரச்சினைகள் பற்றி அறிந்துள்ளேன் என்றும் தெரிவித்தார்.
வடக்கின் பிரச்சினை பற்றி தாம் தொடர்ச்சியாக அரசுக்கு அறிவுறுத்தி வருவதாகவும் தமது கருத்துகள் எதையும் அரச தரப்பினர் கேட்பதாக இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
******************
யாழில் தொடரும் கொலைகள்
கடந்த ஆறு மாதங்களில் யாழ்ப்பாணத்தில் 30 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.
இது போருக்குப் பின்னர் மேற்கொள்ளப்படும் மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கு ஒரு கெட்டசகுனம் என்று கொழும்பு வார இதழ் ஒன்று கருத்து வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து கொழும்பு ஆங்கில வாரஇதழில் எழுதப்பட்டுள்ள பத்தியில் யாழ்.குடாநாட்டின் விவசாய நகரான ஆவரங்காலில் உள்ள வீட்டில் இருந்து ஜுன் 25ம் நாள் தனது உந்துருளியில் 30 வயதான பாலச்சந்திரன் சற்குணநாதன் புறப்பட்டுச் சென்றிருந்தார்.
மறுநாள் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அந்த வீட்டில் இருந்து 2 கி.மீ தொலைவில் உள்ள புத்தூரில் விளையாட்டு மைதானத்தின் கோல் கம்பம் ஒன்றில் அவரது சடலம் தொங்கிக் கொண்டிருந்தது.
அந்தச் சடலத்தில் சித்திரவதை செய்யப்பட்டதற்கான தடயங்கள் இருந்தன.
அவரது இரண்டு கைகளிலும் இருந்த நகங்கள் பிடுங்கி எடுக்கப்பட்டிருந்ததாக தனது பிரேத பரிசோதனை அறிக்கையில் சட்ட மருத்துவர் எஸ்.சிவரூபன் கூறியுள்ளார்.
நைலோன் கயிற்றால் கழுத்தில் தொங்க விடப்பட்டிருந்த அவர் தற்கொலை செய்து கொண்டதற்கான தடயங்கள் இல்லை என்றும் கூறியுள்ளார். விசாரணைகள் இன்னமும் தொடர்கின்றன.
யாழ்.குடாநாட்டில் 50ஆயிரம் படையினரும், காவல்துறையினரும் நிலை கொண்டுள்ள நிலையிலும் இதுபோன்ற சம்பவங்கள் திரும்பத் திரும்ப இடம்பெறுவது பாரிய கேள்வியை எழுப்புகிறது.
போர் முடிந்து இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையிலும் அங்கு இயல்புநிலை மீள உருவாக்கப்படவில்லை.
கடந்த ஆறு மாதங்களில் குறைந்தது 30 கொலைகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளன. இவற்றில் நான்கு சிறிலங்கா படையினரும் அடங்குவர்.
உள்ளூராட்சிசபைத் தேர்தல்கள் இந்த மாதம் அங்கு நடக்கவுள்ளன.
அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வடக்கு மாகாணசபைக்கு தேர்தல் நடத்தப்படும் என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் அதிகரித்து வருவது மக்கள் மத்தியில் மேலும் அச்சத்தை உருவாக்குவதுடன், குழப்ப நிலையையும் உருவாக்கும். இது ஒன்றும் இரகசியமானது அல்ல.
இது போருக்குப் பிந்திய மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கு ஒரு கெட்ட சகுனத்தை காட்டுகிறது என்று அந்தப் பத்தியில் மேலும் கூறப்பட்டுள்ளது
******************
தேர்தல் பிரச்சாரம் தீவிரம்
எஞ்சிய உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில் தேர்தல் நடைபெறவுள்ள பிரதேங்களில் அரசியல் கட்சிகளும் சுயேட்சை குழுக்களும் தீவிரமாக பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன.
இதன்படி யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாட்டங்களில் பிரசார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினர் இம்மாவட்டங்களில் மக்கள் சந்திப்புகளை நடத்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் குழுவினர் கிராமங்கள் தோறும் சென்று மக்களைத் தெளிவுபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து பிரசாரங்களை மேற்கொள்கின்றனர்.
இதனிடையே மக்கள் விடுதலை முன்னணி வட மாகாணத்திலேயே தமது பிரசாரங்களைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்கின்றது.
இதேவேளை, உள்ளூராட்சித் தேர்தல்கள் நடைபெறவுள்ள பிரதேசங்களில் ஒரே கட்சி வேட்பாளர்களிடையேயும் மற்றும் ஆதரவாளர்களுக்கு இடையேயும் மோதல்களும் முரண்பாடுகளும் அதிகரித்து வருவதாகத் தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான மோதல் சம்பவங்கள் குறித்து தங்களுக்கு பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகச் சுதந்திரமானதும் சமாதானத்திற்குமான மக்கள் அமைப்பின் ஊடகப் பேச்சாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்
******************