Thursday 14 July 2011

செய்திகள் 14/07

புலம்பெயர் தமிழரின் போராட்ட வெற்றி!
மேற்கு ஐரோப்பிய நாடுகளில் இருந்து சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை சரிவடையத் தொடங்கியுள்ளதாக சிறிலங்காவின் சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம் வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை பற்றிய 2011 ஜுன் மாதப் புள்ளிவிபரங்களில் இருந்து பிரித்தானியாவில் இருந்து சிறிலங்கா செல்லும் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது தெரியவந்துள்ளது.
கடந்த ஆண்டு ஜன் மாதம் பிரித்தானியாவில் இருந்து 5ஆயிரத்து 188 சுற்றுலாப் பயணிகள் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தனர்.
ஆனால் இந்த ஆண்டு இதே காலப் பகுதியில் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகளின் வருகை 17.2 வீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த மே மாதமும் பிரித்தானிய சுற்றுலாப் பயணிகள் வருகை 0.4 வீதத்தினால் சரிவடைந்திருந்தது.
மத்திய கிழக்கு, இந்தியா, கிழக்காசியா, ஜப்பான், சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருந்து சிறிலங்காவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.
எனினும் அவுஸ்ரேலியாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் தொகை கடந்த மாதம் அதிகரித்துள்ள போதும் ஒப்பீட்டளவில் அது மிகவும் குறைவாகவே இருந்துள்ளது.
***************
ஸ்ரீலங்காவின் அமைச்சரவை மாற்றம்?
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச விரைவில் அமைச்சரவையை மாற்றியமைக்கவுள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதன்போது ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினரான சக்தி, மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவின் பதவி பறிக்கப்படலாம் என்று சிறிலங்காவின் மூத்த அமைச்சர் ஒருவர் கூறியுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த அமைச்சரவை மாற்றத்தின் போது பெற்றொலியத்துறை, விவசாயம், கல்வி, உயர்கல்வி, விளையாட்டுத்துறை அமைச்சுக்களில் மாற்றங்கள் கொண்டு வரப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னர் விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த சி.பி.ரத்நாயக்கவுக்கு மீளவும் அந்தப் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும், அதுபோலவே முன்னர் கல்வி அமைச்சர் பொறுப்பை வகித்த சுசில் பிறேம் ஜெயந்தவுக்கும் அதே பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் மாத்தறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் மகிந்த ராஜபக்சவின் உறவினருமான ஹேமல் குணசேகர, கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் லொகான் ரத்வத்தை, கம்பகா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுதர்சினி பெர்னான்டோ புள்ளே மற்றும் துமிந்த சில்வா ஆகியோர் பிரதிஅமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளதாகவும் ஆங்கில ஊடகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
***************
மடிப்பிச்சையேந்தி ரணில் பயணம்!
பிரித்தானியாவுக்கு இந்தவாரம் பயணம் ஒன்றை மேற்கொள்ளவுள்ள எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்கா அரசைக் காப்பாற்றும் நோக்கில் இரகசியப் பேச்சுக்களை நடத்தவுள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் 18ம் நாள் ஆரம்பமாகவுள்ள கொமன்வெல்த் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் பங்கேற்கவே சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க லண்டனுக்குச் வரவுள்ளார்.
இவருடன் சிறிலங்கா நாடாளுமன்ற சபாநாயகர் சமல் ராஜபக்சவும், பிரித்தானியாவுக்குப் பயணமாகவுள்ளார்.
இதன்போது சமல் ராஜபக்சவுடன் இணைந்து போர்க்குற்றச்சாட்டுகளில் இருந்து சிறிலங்கா அரசாங்கத்தைக் காப்பாற்றும் நகர்வுகளில் ரணில் விக்கிரமசிங்க ஈடுபடவுள்ளார்.
இதற்காக சமல் ராஜபக்சவுடன் இணைந்து அவர் பிரித்தானிய அரசியல் தலைவர்களுடன் இரகசியப் பேச்சுக்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அண்மையில் அமெரிக்கா சென்றிருந்த ரணில் விக்கிரமசிங்க சிறிலங்கா அரசாங்கத்தைப் பாதுகாக்கும் வகையிலான பேச்சுக்களை நடத்தியிருந்தார்.
இதன் ஒரு கட்டமாக ஐ.நா பொதுச்செயலர் பான் கி மூனை சந்தித்து சிறிலங்கா அரசுக்கு மேலதிக கால அவகாசத்தை வழங்குமாறு கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, லண்டனில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பங்கேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
***************
ஐனநாயக சூழலற்ற தேர்தல்?
யாழ்ப்பாணத்தில் நீதியான, சுதந்திரமான தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டும் என்று சிறிலங்கா காவல்துறையிடம் தேர்தல் திணைக்களம் கண்டிப்பாகக் கூறியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் வன்முறைகள் தொடர்பாக ஆராய பிரதி தேர்தல் ஆணையாளர் மொகமட் தலைமையில் நேற்று நடைபெற்ற உயர்மட்டக் கூட்டத்திலேயே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் விதிமீறல்கள் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு செய்திருந்த முறைப்பாடுகள் மற்றும் அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆராய்வதற்கே இந்தக் கூட்டம் நடைபெற்றிருந்தது.
இதில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுவதாகவும் அவர்களுக்குப் போதிய பாதுகாப்பு இல்லை என்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
சிறிலங்கா இராணுவ அதிகாரிகளும் சமூகமளித்திருந்த இந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகளுக்கும் சிறிலங்கா அரச அதிகாரிகளுக்கும் இடையில் கடும் வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இங்கு கருத்து வெளியிட்ட யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா நியாயமான தேர்தல் நடைபெறுவதற்கு வசதியாக வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
நெடுந்தீவில பரப்புரைகள் மேற்கொள்வதற்கு டக்ளஸ் தேவானந்தா தமக்குத் தடை விதிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனும் சிவாஜிலிங்கமும் முறைப்பாடு செய்தனர்.
அத்துடன் யாழ்ப்பாணத்தில் வைக்கப்பட்டுள்ள மகிந்த ராஜபக்ச, டக்ளஸ் தேவானந்தா மற்றும் முக்கிய அரசியல்வாதிகளின் கட்அவுட்களை அகற்ற வேண்டும் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
தேர்தல் சட்டத்தை மீறும் வகையில் வைக்கப்பட்டுள்ள இந்த கட்அவுட்களை முறைப்பாடு செய்யும் வரை காத்திருக்காமல், காவல்துறையினர் அகற்ற வேண்டியது அவர்களின் பெர்றுப்பு என்றும் கூட்டமைப்பு பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இதற்குப் பதிலளித்த சிறிலங்கா காவல்துறை அதிகாரி நெவில் பத்மகே, முறைப்பாடுகள் செய்யப்பட்டால் மட்டுமே விசாரணை நடத்தப்படும் என்று கூறியதுடன், கட்அவுட்களை அகற்றுவதற்கு போதிய ஆளணி வளம் தம்மிடம் கிடையாது என்றும் பதிலளித்துள்ளார்.
இந்தநிலையில் இதுவரை பதிவாகியிருக்கும் முறைப்பாடுகள் தொடர்பாக உரிய விசாரணைகளை நடத்துமாறு பிரதி தேர்தல் ஆணையாளர் மொகமட் காவல்துறை அதிகாரிகளைப் பணித்தார்.
அத்துடன் அமைதியாகவும், நீதியாகவும் தேர்தலை நடத்துவதற்கு ஏற்ற வகையில், தேர்தல் விதிமுறைகளை கடுமையாகப் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் சிறிலங்கா காவல்துறையினருக்கு அவர் பணிப்புரை விடுத்தார்.
அதற்கு சிறிலங்கா காவல்துறை அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்
***************
தமிழ்க் கூட்டமைப்பை அச்சுறுத்தும் தமிழின விரோத சக்திகள்!
தீவகப்பகுதிக்கு பிரச்சாரம் செய்வதற்கு தமிழரசுக் கட்சி செல்ல முடியாதுள்ளது.
இதேவேளை தீவகத்திலிருந்து தமிழரசுக் கட்சி வேட்பாளர்கள் யாழ் நகரிற்கு வரமுடியாததாக இருப்பதாக மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக பிரதித் தேர்தல் ஆணையாளர் எம். எம். முகமட் தலைமையில் யாழ் செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது இதனைத் தெரிவித்தார்.
மேலும் தீவகத்திற்கு பிரச்சாரம் செய்வதற்கு பாராளுமன்ற உறுப்பினர்களோ, தமிழரசுக் கட்சி உறுப்பினர்கள் செல்வதற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள வேட்பாளர்களுக்கும் இவ்வாறான நிலையே காணப்படுகின்றது.
தமிழரசுக் கட்சியின் பிரச்சார நடவடிக்கையின்போது, வேட்பாளர்களுக்கு முழுமையான காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், தேர்தல் நடவடிக்கைகளுக்கு வெளிநாட்டுக் கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் மாவை தெரிவித்துள்ளார்.
சிவாஜிலிங்கம் கருத்து தெரிவிக்கையில், காவல்துறையினரால் பக்கச் சார்பற்ற நிலையில் செயலாற்ற முடியாது ஒரு பக்கமாகவே செயலாற்றுகிறார்கள் எனத் தெரிவித்தார்.
கடந்த தேர்தல் கலந்துரையாடலின் போது நல்லூர்ப் பகுதியில் அமைச்சரின் கட்டவுட்டுகள் வைக்கப்பட்டுள்ளது எனவும், இதனை அகற்றுமாறு தெரிவித்துள்ள போதும் இதுவரை அகற்றவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
தனது வீட்டில் அதிகாலை வேளை கற்கள், கழிவுகளால் கொட்டப்பட்டுள்ள போதும் இதுவரை எவரையும் கைது செய்யவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
தனது வீட்டிலிருந்து 200 மீற்றர் தூரத்தில்தான் இராணுவம் மற்றும் காவல் நிலையங்கள் அமைந்துள்ளது எனத் தெரிவித்த அவர் இவ்வாறான நிலையில் அதிகாலை வேளை வந்தவர்களை ஏன் விசாரணை செய்யவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.
நெடுந்தீவிற்கு உள்ளுராட்சி சபைக்குப் பொறுப்பாக கிழக்கு மாகாண ஆளுநரை நியமனம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறானதொரு நிலை வேறெங்கிலும் இல்லை எனத் தெரிவித்தார்.
***************
தேர்தல் குறித்து அமெரிக்க மதிப்பீடு
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பிலும் அமெரிக்கத் தூதரகத்தின் அரசியல் அலுவலர் ஜோன் எம்.டிஸ்ரார் நேற்று நேரில் சென்று ஆராய்ந்தார்.
யாழ்.மாவட்டத்துக்கு நேற்று சென்ற அவர் பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடினார்.
யாழ்.செயலகத்துக்கு நேற்றுக் காலை விஜயம் செய்து அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், உதவித் தேர்தல் ஆணையாளர் ஆ.சு.கருணாநிதி ஆகியோரைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இதன்போது எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
தேர்தல் நடவடிக்கைகள் எந்தளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளன? வாக்காளர் இடாப்பு மக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டதா? எத்தனை பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்? என்பது தொடர்பான விவரங்களைக் குழுவினர் பெற்றுக் கொண்டுள்ளனர்.
மேலும் வேட்பாளர்கள் மீதான தாக்குதல்கள், அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும் அதற்கு மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலும் அரச அதிபரிடம் கேட்டு அறிந்து கொண்டுள்ளனர்.
***************
விரிவுரையாளர் சம்பளம் என்ன?
பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு 1 லட்சத்து 15ஆயிரம் ரூபா சம்பளம் வழங்குவதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.
எனினும், இதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கங்கள் பூரணமாக ஏற்றுக் கொள்ளவில்லை.
அண்மையில் மஹிந்த ராஜபக்ஷவுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் தொழிற்சங்கங்கள் பேச்சுவார்த்தை நடத்திய போது இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டதாக உயர்கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஜயரட்ன தெரிவித்துள்ளார்.
எனினும், இதனை பல்கலைக்கழக விரிவுரையாளர் தொழிற்சங்கங்கள் பூரணமாக ஏற்றுக் கொள்ளவில்லை.
சில விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தப்பட வேண்டியுள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இதனால் தொடர்ச்சியாக தொழிற்சங்கப் போரட்டத்தை முன்னெடுப்பது என தீர்ர்மானிக்கப்பட்டுள்ளது.
சிரேஸ்ட விரிவுரையாளர்களுக்கு மட்டுமே இந்த சம்பள உயர்வு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய விரிவுரையாளர்களுக்கு வழங்கப்படும் சம்பள உயர்வுகள் குறித்து தெளிவாக குறிப்பிடப்படவில்லை எனவும் தொழிற்சங்க சம்மேளனத்தின் செயலாளர் நிர்மால் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
சம்பள உயர்வு தவிர்ந்த ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கத்தின் நிலைப்பாடு தெளிவுபடுத்தப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே இந்தப் பிரச்சினை குறித்து மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
***************
மன்னிப்பு கிடையாத தளபதி?
முன்னாள் சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு பொதுமன்னிப்பு வழங்கப்படக் கூடிய சாத்தியம் கிடையாது என புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலை திணைக்கள சிரேஸ்ட அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார்.
இராணுவ நீதிமன்றினால் விதிக்கப்பட்ட தண்டனைக்கு பொதுமன்னிப்போ, தண்டனை சலுகைகளோ வழங்கப்படக் கூடிய சாத்தியம் கிடையாது என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி, எதிர்வரும் 2013ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் திகதி சரத் பொன்சேகா விடுதலை செய்யப்படுவார் என அறிவித்துள்ளார்.
பொதுமன்னிப்பு வழங்கப்படக் கூடிய பிரிவுகளின் கீழ் சரத் பொன்சேகாவிற்கு தண்டனை விதிக்கப்படவில்லை என தெரிவித்துள்ளார்.
இராணுவ நீதிமன்றம் தண்டனை விதிப்பதற்கு முன்னர், சரத் பொன்சேகா தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த காலம், தண்டனைக் காலத்துடன் இணைக்கப்பட மாட்டாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
***************