Thursday 21 July 2011

செய்திகள் 21/07


அக்கறை வெளியிடும் அமெரிக்கா ஆக்கபூர்வமாக செய்யுமா?
சிறிலங்காவில் தமிழர் பிரச்சினைகளைத் தீர்ப்பதில் உள்ள முட்டுக்கட்டைகளை நீக்குவதற்கு அமெரிக்கா புதிய ஆக்கபூர்வமான சில திட்டங்களை நடைமுறைப்படுத்தவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் கூறியுள்ளார்.
சென்னையில் நேற்று மாலை தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்து பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சென்னை கோட்டையில் உள்ள தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகத்தில் இந்தச் சந்திப்பு நேற்று பிற்பகல் 4.05 மணி தொடக்கம் 4.55 மணி வரை நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, சிறிலங்காவில் போர் முடிவுக்கு வந்து இரண்டு ஆண்டுகளாகி விட்ட நிலையிலும், தமிழ் மக்கள் தாம் வாழ்ந்த வீடுகளுக்குச் செல்ல முடியாமல் இன்னமும் முகாம்களில் தங்கியுள்ளது குறித்து அமெரிக்க இராஜாங்கச் செலயர் ஹிலாரியிடம் தமிழ்தாடு முதல்வர் ஜெயலலிதா கவலை வெளியிட்டார்.
இது குறித்து கவலை வெளியிட்ட ஹிலாரி கிளின்ரன், முகாம்களிலுள்ள தமிழர்கள் தமது சொந்த இடங்களுக்குத் திரும்புவதற்கு வழி அமைக்கக் கூடிய வகையிலும் தமிழர் பிரச்சினையிலுள்ள முட்டுக்கட்டைகளை நீக்குவதற்கு அமெரிக்கா புதிய யோசனைகளை நடைமுறைப்படுத்தும் என்று ஜெயலலிதாவிடம் உறுதியளித்துள்ளார்.
அதேவேளை, தமிழ்நாட்டில் உள்ள ஈழத்தமிழ் அகதிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்ட போது, உள்ளூர் குடிமக்களுக்கு வழங்கப்படும் அனைத்து வசதிகளும் ஈழஅகதிகளுக்கும் வழங்கப்படுவதாக தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதா எடுத்துக் கூறியுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது அரசியல், பொருளாதார விவகாரங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக தமிழ்நாடு அரசின் அதிகாரபூர்வ செய்திக் குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, இந்தச் சந்திப்பின் போது தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்த ஹிலாரி கிளின்டன் அவரை அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ளுமாறும் அழைப்பு விடுத்துள்ளார்.
*****************
அச்சநிலையிலேயே மக்கள்!
இலங்கையில் பாதிக்கப்பட்டோர் இன்னமும் செய்தியாளர்களிடம் தமது கருத்துக்களை கூற பயப்படுவதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
சர்வதேச நெருக்கடிகளுக்கான குழுவின் அறிக்கையின் அடிப்படையில் இந்த கருத்து வெளியிடப்பட்டுள்ளது.
சர்வதேச நெருக்கடிகளுக்கான குழு நேற்று முன்தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.
அதில், இலங்கையின் அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்சவும் அவருடைய அதிகாரம் மிக்க சகோதரர்களும் தொடர்பில் ஊடக அடக்குமுறையை கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன் அடிப்படையில் கருத்துரைத்துள்ள எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, கடந்த காலங்களில் வெள்ளை வேனில் கடத்திச்செல்லப்பட்ட கலாசாரத்தின் பாதிப்பு இன்னும் தொடர்வதாக கூறியுள்ளது.
இன்னமும் மக்கள் தமது கருத்துக்களை ஊடகங்களிடம் கூறுவதற்கு அச்சம் கொண்டிருப்பதாக எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது
*****************
தமிழனை ஆள யாருக்கு அருகதை?
தமிழர்களின் தாயகபூமியை ஆளவும் அதிகாரம் செய்யவும் தென்னிலங்கை சிங்களக் கட்சிக்கு என்ன அருகதை இருக்கிறது? என யாழ்.மாவட்டத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று முன்தினம் சாவகச்சேரியில் நடைபெற்ற கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய சரவணபவன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் 16 பிரதேச சபைகளுக்கும் மூன்று நகர சபைகளுக்கும் போட்டியிடுகின்றனர்.
இந்தத் தேர்தலில் போட்டியிடும் ஒரே ஒரு தமிழ்க் கட்சி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமேதான் எனத் தெரிவித்தார்.
தென்னிலங்கைப் பேரினவாதக் கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு என்ற பெயரில் வந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இலங்கை சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே தமிழ் இன ஒழிப்பில் தீவிரமாகச் செயற்பட்டார்கள்.
தமிழ் இனத்துக்கு இவர்கள் செய்த துரோகத்தையும் இனப்படுகொலைகளையும் மக்கள் இன்னும் மறந்துவிடவில்லை.
இவர்கள் தான் இன்று யானையிலும், வெற்றிலையிலும் போட்டியிடுகின்றனர். இந்த இனவாதக் கட்சிகளை நாம் நம்பலாமா? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
சாதாரண உள்ளூராட்சி சபைக்கான தேர்தலை அரசு ஒரு பெரிய யுத்தம் போல் ஊதிப் பெரிதாக்கி விட்டது.
கொழும்பில் இருந்து அமைச்சர்களும், நாடாளுமன்ற உறுப்பினர்களும் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளனர்.
இப்பொழுது அரசுத் தலைவரும் களம் இறங்கிவிட்டார்.
தமிழ் மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான ஒரு சாவாலாகவே இந்தத் தேர்தல் காணப்படுகின்றது.
தமிழனின் தன்மானமா? அல்லது தமிழ் அன்னைக்குச் செய்யும் துரோகமா? என்ற கேள்விக்கு விடைகாணும் பொறுப்பு தன்மானத் தமிழர்களிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் சரவணபவன் தெரிவித்துள்ளார்.
*****************
விதிகளை மீறும் அரசு?
தேர்தல் ஆணையாளரின் உத்தரவுகளை அரசாங்கம் மீறிச் செயற்படுவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் இணைப் பிரதித்த தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகள் அமுல்படுத்தப்படுகின்றனவா என கண்காணிக்குமாறு தேர்தல் ஆணையாளரிடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்க சொத்துக்கள் உச்ச அளவில் பயன்படுத்தப்பட்டு வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
ஜனநாயகத்தை ஒடுக்குமுறைக்கு உட்படுத்தும் வகையிலான செயற்பாடுகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து, பேச்சு சுதந்திரத்தை முடக்கி வரும் அரசாங்கத்தின் பயணம் தடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
*****************
மீன்பிடிக்கு புதிய விதி?
வடக்கு மற்றும் கிழக்கு உட்பட கரையோரப் பிரதேசங்களில் இழுவைப் படகுகள் மூலம் மீன்பிடிப்பதற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடை உடனடியாக இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது என்று மீன்பிடித் துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்றுத் தெரிவித்தார்.
கடற்றொழிலில், நீரியல்வளங்கள் சட்டத்தின் கீழ் அங்கீகரிப்பதற்கான 4 பிரேரணைகளை நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றியபோதே அவர் இதனைக் கூறினார்.
அண்மையில் வெளியான அறிக்கையின்படி 13 பேர் போசாக்கின்மை காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்வரும் 2013 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கையைக் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டில் நாளொன்றுக்கு தனிநபர் மீன் நுகர்வு 31 கிராமாக உள்ளது.
இதனை எதிர்வரும் 2013 ஆம் ஆண்டில் 60 கிராமாக அதிகரிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.
தற்பொழுது இயந்திரப்படகுகள், வலைகள் தயாரிக்கக்கூடிய உரிய தொழில் நுட்பங்கள் இல்லாததன் காரணமாக படகு கவிழ்தல், மூழ்குதல் போன்ற விபத்துகள் ஏற்படுகின்றன.
தேசிய தரத்துக்கு ஏற்றவாறு அவை தயாரிக்கப்படுவதில்லை.
அத்துடன், மீன் ஏற்றுமதி 21 ஆயிரம் மில்லியன் கிலோவாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக கடந்த வருடத்தில் 10 சதவீத அதிகரிப்பு காணப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடுகளின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை நீக்கப்பட்ட பின்னர் மீன் ஏற்றுமதி அதிகரித்திருக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
*****************
விசாரணக்கு என கைது!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சாவகச்சேரி அமைப்பாளரும் கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டவருமான க. அருந்தவபாலன் குற்றப்புலனாய்வுப் பிரிவினால் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டார்.
உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவு கோரி அவர் வெளியிட்ட துண்டுப் பிரசுரம் ஒன்று தொடர்பாகவே தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார் என்று அருந்தவ பாலன் தெரிவித்தார்.
அருந்தவபாலனின் வீட்டுக்கு நேற்று முன்தினம் சென்ற குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவரை விசாரித்தனர்.
நேற்று மாலை 4.30 மணிக்கு சாவகச்சேரி காவல் நிலையத்துக்கு வருமாறு அவருக்கு அழைப்பு விடுத்தனர்.
4.30 மணிக்கு அங்கு சென்ற அவரை தேர்தல் துண்டுப் பிரசுரம் ஒன்று தொடர்பாக விசாரித்த குற்றப் புலனாய்வு காவல்துறையினர்  கொழும்பில் மேலதிக விசாரணை செய்ய வேண்டியுள்ளதாகத் தெரிவித்து தமது வாகனத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.
*****************
மோசடித் தேர்தலுக்கு அரசு தயார்!
ஜே.ஆர். ஆட்சிக் காலத்தில் 17 வாக்குப்பெட்டிகள் காணாமல் போனது போல் இந்த எம்.ஆர். ஆட்சிக் காலத்திலும் காணாமல் போகலாம் என விக்கிரமபாகு கருணாரத்தின தெரிவித்துள்ளார்.
வடக்கில் வாக்கு மோசடிகளைத் தடுக்க, மக்கள் காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்குச் சென்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் அரசின் பின்னாலேயே நிற்கின்றனர் எனக் கூறி சர்வதேச அழுத்தங்களில் இருந்து தப்பிக் கொள்வதற்கு எம்.ஆர். அரசு எதை வேண்டுமானாலும் செய்யலாம்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசு தனது நலனுக்குப் பயன்படுத்தவே முனைகிறது.
வெற்றி பெறுவதற்காக எதையும் செய்யலாம்.
எனவே, வடக்கு மக்கள் வாக்கு மோசடி இடம்பெறுவதைத் தவிர்ப்பதற்கு காலையிலேயே வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்குரிமை என்ற ஆயுதத்தை சரிவரப் பயன்படுத்தவேண்டும்.
உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமானால், தமிழ் கூட்டமைப்புக்கு வாக்களிப்பதே புத்திசாலித்தனமானது என்பதை மீண்டும் ஞாபகப்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
*****************