Thursday 28 July 2011

செய்திகள் 28/07


யார் குற்றவாளி!
சிறிலங்கா அதிபரால் பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கப்பட்டு சரணடையும் தமிழ்ப் போராளித் தலைவர்களின் கதையை முடித்து விடுமாறு சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச, பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்குப் பணித்திருந்ததாக சனல்-4 தொலைகாட்சியிடம் சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
அதேவேளை, 58வது டிவிசனில் பணியாற்றிய மற்றொரு சிறிலங்கா இராணுவ அதிகாரி, தேவையான நடவடிக்கைகளை எடுத்து வேலையை முடித்து விடுமாறு பிரிகேடியர் சவீந்திர சில்வாவுக்கு கோத்தாபய ராஜபக்ச உத்தரவிட்டிருந்ததாக சாட்சியம் அளித்துள்ளார்.
இது படையினர் கொலைகளைச் செய்வதற்கு வழங்கப்பட்ட அனுமதி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சனல்-4 தொலைக்காட்சி சிறிலங்காவின் போர்க்குற்றங்கள் தொடர்பான மேலும் இரண்டு புதிய சாட்சிகளின் செவ்விகளை நேற்று வெளியிட்டுள்ளது.
இதில் இறுதிக்கட்டத் தாக்குதலில் சிறிலங்கா இராணுவத்தின் 58வது டிவிசன் படைப்பிரிவில் பங்கெடுத்த பெர்னான்டோ என்ற படை அதிகாரி, சிறிலங்கா படையினரால் பெண்களும் சிறுவர்களும் எவ்வாறு கொல்லப்பட்டார்கள் என்பதை விபரித்துள்ளார்.
அவர் சனல்-4 தொலைக்காட்சிக்கு அளித்துள்ள செவ்வியில் அரசபடையினரால் ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் சிறிய ஆயுதங்களால் இலக்கு வைக்கப்பட்டதாகக் கூறியுள்ளார்.
தான் வெளியில் இருந்து பார்க்கும் போது அவர்களை வெறுமனே கொடூரமான விலங்குகள் என்று தான் நினைப்பதாகவும் அவர்களுடைய இதயங்களில் மனித உணர்வு இல்லை. விலங்குகள் போன்று தான் உணர்கிறேன் என அவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் பொதுமக்கள் மீது கண்டபடி சுட்டார்கள். பொதுமக்களைக் குத்தினார்கள். அவர்களின் நாக்குகளை அறுத்தார்கள். பெண்களின் மார்பகங்களை வெட்டினார்கள்.
இவற்றையெல்லாம் தான் தனது கண்களால் பார்த்ததாகவும் சிறுவர்கள் இறந்து கிடந்ததை கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
பெருமளவு சிறுவர்கள் இறந்து கிடந்தார்கள். அவர்கள் அப்பாவிகள். பெருமளவு முதியவர்களும் கொல்லப்பட்டுக் கிடந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.
நீரேரியைக் கடந்து வந்தபோது பெண்கள், சிறுவர்கள் என்று பொதுமக்கள் மீது படையினர் சுட்டார்கள்.
அவர்கள் புலிப்போராளிகள் அல்ல. சாதாரண பொதுமக்கள். சாதாரண குடிமக்கள் கொல்லப்பட்டதை தனது கண்களால் பார்த்ததாகவும் தெரிவித்துள்ளார்.
தாயும் மூன்று குழந்தைகளுமாக ஒரு சிறிய குடும்பம் தப்பிச் சென்று கொண்டிருந்ததை தான் கண்டதாகவும், அவர்களில் ஒரு சிறுவனின் காலில் சூடுபட்டு கிழே விழுந்தார்.
அந்தக் குழந்தையை தான் கைகளால் தூக்கியபோது தாயார் கதறி அழுதார் எனவும் அந்தத் துன்பத்தின் மத்தியிலும் தன்னை நன்றியுணர்வோடு பார்த்தனர் எனவும் குறிப்பிட்டார்.
ஒரு நாள் ஆறு படையினர் தமிழ்ப் பெண் ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்வதை தனது கண்களால் கண்டதாகவும், தான் ஒரு நடைப்பிணம் போலவே இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
ஒரு தமிழ் பெண்ணை வன்புணர்வு செய்ய வேண்டுமானால் அவளை அவர்களால் அடிக்க முடியும். அவளது பெற்றோர் அதைத் தடுக்க முனைந்தால் அவர்களை அடிக்கவோ கொல்லவோ முடியும். அங்கு அவர்களின் ஆட்சி தான் இருந்தது.
போர் முனையில் இருந்த படையினரின் இதயங்கள் கற்களாகிப் போயிருந்தன.
இரத்தம், கொலைகள், மரணம் என்று பார்த்துப் பார்த்து அவர்கள் மனிதஉணர்வுகளை இழந்து விட்டார்கள்.
அவர்களை தன்னால் காட்டேறிகள் என்று தான் கூற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
தலை மற்றும் பிற உடற்பாகங்கள் இல்லாத பெண்களின் உடல்களை தான் கண்டதாகவும், இறந்து கிடந்த தாய் மற்றும் குழந்தையின் சடலங்களையும் பார்த்தேன், ஆனால் குழுந்தையின் தலை இருக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.
போரின் இறுதிக் கட்டத்தில் பெரும் எண்ணிக்கையான சிறுவர்களும், பெண்களும், ஆண்களும் கொல்லப்பட்டனர்.
புதுமாத்தளனில் மட்டும் 1500இற்கும் அதிகமான பொதுமக்கள் இறந்து கிடந்ததை தான் கண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
புதுமாத்தளனில் 1500 சடலங்களை தான் கண்டதாகவும், ஆனால் அதுபோல 50,000 இற்கும் அதிகமான மக்களுக்கு நடந்திருக்கும் என்று தான் நினைப்பதாகவும் கூறியுள்ளார்.
**********************
பாடங்களை கற்றுக் கொள்ளுமா?
தென்னாபிரிக்காவிடமிருந்து மட்டுமே இலங்கை பாடத்தைக் கற்றுக்கொள்ள முடியுமென்று சர்வதேச நெருக்கடிக் குழுவின் தலைவரான லூயிஸ் ஆர்பர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு உதவ தென்னாபிரிக்காவால் செய்யக்கூடியது என்ன என்ற தலைப்பில் லூயிஸ் ஆர்பரின் கருத்தை பிரிட்டனின் த சன்டே டைம்ஸ் பத்திரிகை கடந்த 24 ஆம் திகதி பிரசுரித்திருந்தது.
கடந்த கால உண்மையை வெளியிடுவதற்கான உறுதியான முயற்சி இல்லாமல் பல தசாப்த கால உள்நாட்டு மோதலை வெற்றிகொள்ள ஆரம்பிக்க முடியாது என்பதுடன், நல்லிணக்கத்தையும் அர்ப்பணிப்புடன் முன்நகர்த்த இயலாது என்பதை எந்தவொரு நாடொன்றிலும் பார்க்க தென்னாபிரிக்கா நன்கறிந்துள்ளது.
அந்தப் பாடத்தை இலங்கை கற்றுக்கொள்ள முடியும்.
அதிகளவு ஜனநாயகம் மற்றும் சமத்துவமான சமூகம் என்பனவற்றை நோக்கியதான வலி நிறைந்த பாதையில் மெதுவாக பயணிப்பதிலும் பார்க்க அரசுத் தலைவர் மகிந்த ராஜபக்ஷவின் யுத்தத்தின் பின்னரான கொள்கைகள் நாட்டின் அரசியல் நிறுவனங்களை பாதிக்கச் செய்வதாகவும் இனப் பிளவுகளை ஆழமாக்குவதாகவும் காணப்படுகின்றன.
நல்லிணக்கத்தை நோக்கிய முன்னேற்றமானது எப்போதுமே நெருக்கடியானதாக இருக்கப்போகின்றது.
தசாப்த காலங்கள் நீடித்த அரசியல் வன்முறையும் உள்நாட்டு யுத்தமும் இலங்கையின் இன சமூகங்களை துருவமயப்படுத்தியிருப்பதுடன் நிறுவனங்களையும் அரசியல்மயமாக்கியுள்ளன.
குறிப்பாக சட்டம் ஒழுங்கில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அரசியல் மயமாக்கப்பட்டுள்ளன.
மோதல்களினால் பல்லாயிரக்கணக்கானோர் இறந்தும் காயமடைந்தும் அல்லது இடம்பெயர்ந்தும் பீதி, புரிந்துணர்வின்மை என்பனவற்றுடன் இருக்கின்றனர்.
இந்த சவால்களுக்கு தீர்வு காண்பதற்குப் பதிலாக அரசாங்கமானது சிறுபான்மையினர் தொடர்பாக அவர்களின் பொருளாதார அரசியல் எதிர்காலத்தைத் துண்டிக்கும் நடவடிக்கைகளை அதிகரித்துக்கொண்டிருக்கின்றன.
தென்னாபிரிக்காவின் உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவுக்கும் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவுக்கும் இடையில் பொருத்தமற்ற விதத்தில் நியாயபூர்வத் தன்மையை ஏற்படுத்தும்.
அந்த ஒப்பீட்டுத்தன்மைக்கு தென்னாபிரிக்கா எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும்.
வெளிப்படையாகக் கூறினால் அத்தகைய ஒப்பீட்டுத் தன்மையானது ஏளனப்படுத்துவதானதொன்றாகும்.
மீண்டும் ஏற்படாமல் தனது வன்முறை வரலாறு தொடர்பாக நீதியான முறையில் பொறுப்புக்கூறும் தன்மை இலங்கைக்குத் தேவைப்படுகிறது.
இதற்குக் குறைந்த எதற்கும் இலங்கை மக்கள் இணங்கியிருக்கக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
**********************
கருத்தில் கவனம் வேண்டும்!
உறுப்பினரொருவர் தெரிவித்த கூற்றை கொண்டு அது கட்சியினுடைய கருத்தாக கருதுவது தவறானது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் லண்டனில் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தவற்றை கூட்டமைப்பின் கருத்தாகவோ நிலைப்பாடாகவோ எடுப்பது தவறெனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பி.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
லண்டனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்த கருத்து தொடர்பில் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன.
அவர் தெரிவித்தவை அவரது கருத்தாகவுள்ளது.
இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாகவோ நிலைப்பாடாகவோ எடுத்துக்கொள்ள முடியாது.
அவ்வாறு எண்ணுவது தவறானதாகும். ஒவ்வொருவருக்கும் தமது கருத்துக்களை தெரிவிப்பதற்கு சுதந்திரம் உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
தமது கட்சி ஒரு தீர்மானத்தை எடுப்பதாயின் கட்சியிலுள்ள எல்லா பாராளுமன்ற உறுப்பினர்களுடைய கருத்தையும் கவனத்தில் கொண்டு முடிவினை மேற்கொள்கின்றது என்பதை சுட்டிக்காட்ட விரும்புவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தமிழ்த் தேசியத்துக்கு எதிரானவரோ அல்லது விரோதமானவரோ அல்ல. அவர் அதில் உறுதியாகவுள்ளார் என்பது தனக்கு தெரியும் எனவும் கூட்டிக்காட்டியுள்ளார்.
அவர் அந் நிகழ்வொன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கே பதிலளித்துள்ளார்.
அவர் தனது உரையில் அவ்வாறு தெரிவிக்கவில்லையென குறிப்பிட்டு கூற விரும்புவதாகவும், எனவே அவருக்குள்ள கருத்துச் சுதந்திரத்தினை கொண்டு கட்சி தீர்மானம் என்பது பிழையானது. விமர்சிப்பது தவறானது எனவும் அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 4 ஆம் திகதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசுக்குமிடையில் 10 ஆவது பேச்சுவார்த்தை இடம் பெறுகின்றது.
முழு இலங்கைக்கான தீர்வு தொடர்பில் பேசவில்லை.
வடக்கு, கிழக்கு தீர்வு குறித்தே பேச்சுவார்த்தை இடம்பெறுகின்றது.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே தமது பிரதிநிதிகள் என்பதை நிரூபித்துள்ளனர்.
எனவே தெரிவுக்குழுவெனவும் வேறு வழிகளிலும் இழுத்தடிக்காது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை அரசாங்கம் முன்வைக்க வேண்டுமெனவும் கோருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
**********************
வெற்றியை ஏற்க வேண்டும்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றியை கொச்சைப்படுத்துவதால் அரசுக்கு சர்வதேச அழுத்தம் ஏற்படும் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன எச்சரித்துள்ளார்.
நடைபெற்ற உள்ளூராட்சி சபைத்தேர்தல்களில் எப்படியாவது தமிழ் மக்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடனேயே அரசு செயற்பட்டது.
இதற்காக அரசுத் தலைவர், அமைச்சர்கள், அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் வடக்குக்குப் படையெடுத்துச் சென்றனர்.
அங்கு சென்று அப்பட்டமாகத் தேர்தல் விதிகளை மீறி செயற்பட்டனர்.
அதுமட்டுமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகத் திட்டமிட்டபடி வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டனர்.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் 26 சபைகளில் போட்டியிட்டு 20 சபைகளைக் கைப்பற்றி அமோக வெற்றியீட்டியது.
இதனை சாதாரண வெற்றி எனக் கருதிவிட முடியாது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியாகும்.
தமிழ் மக்கள் தாங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பின்னாலேயே நிற்கின்றோம் என்றும் அவர்களே தங்களின் ஏகப் பிரதிநிதிகள் என்றும் இந்தத் தேர்தலில் முழு உலகத்துக்கும் எடுத்துக் காட்டியுள்ளனர்.
ஆனால், அரசோ இன்னும் பழைய நிலைப்பாட்டிலேயே உள்ளது.
கூட்டமைப்பினர்தான் தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.
வடக்கில் தமக்கு ஏற்பட்ட படுதோல்வியை அப்படியே மூடி மறைக்க அரசுத் தலைவரும், அரச தரப்பினரும் முனைகின்றனர்.
இதற்காகக் கூட்டமைப்பினரின் வெற்றியை கொச்சைப்படுத்துகின்றனர்.
அரசு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு நடை பெற்றுவரும் பேச்சுகளை இழுத்தடிப்பதற்கான அரசின் சதிகளில் இதுவும் ஒன்றாகும்.
எனவே, அரசு சர்வதேசத்துக்கு அளித்துள்ள உறுதிமொழிகளின்படி தமிழ் மக்களுக்கு விரைவில் அரசியல் தீர்வை வழங்க முன்வரவேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரூடாகவே அத்தீர்வு தங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்பதை தமிழ் மக்கள் தேர்தல்களில் வெளிப்படுத்தியுள்ளனர்.
இதுவே சர்வதேசத்தின் எதிர்பார்ப்புகளாகும்.
இந்நிலையில், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கும், சர்வதேசத்தின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து அரசு, தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்க முன்வரவேண்டும்.
மாறாக கூட்டமைப்பினரின் வெற்றியைக் கொச்சைப்படுத்தி அரசியல் தீர்வு வழங்குவதற்கு காலத்தை இழுத்தடித்தால் சர்வதேச அழுத்தம் அரசுக்கு அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார
**********************
மாணவர்களைக் காணவில்லை
யாழ். வைத்தியஸ்வரக் கல்லூரியில் தரம் 9 கல்வி கற்கும் மாணவர்கள் இருவர் கடந்த 26 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக யாழ். காவல் நிலையத்தில் அவர்களது பெற்றோர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக யாழ். காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இம் மாணவர்கள் இருவரும் பாடசாலை முடிந்து வீட்டுக்கு வந்து பாடசாலை ஒப்படை ஒன்று இருப்பதாகவும் அதற்கு தாங்கள் களவேலை செய்யவேண்டும் என்று கூறிவிட்டு 26 ஆம் திகதி பிற்பகல் 3 மணிக்கு வெளியேறிச் சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் இவர்கள் இருவரும் இன்றுவரை வீடு திரும்பவில்லை என பெற்றோரின் முறைப்பாட்டிலிருந்து தெரியவந்துள்ளது.
இம் மாணவர்களை கண்டுபிடித்து தருமாறு யாழ். காவல் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
இச் சம்பவம் தொடர்பாக யாழ். காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
**********************
மீள்குடியேற்றம்
விடுதலைப் புலிகளுக்கும் அரச படைகளுக்கும் இடையிலான இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெயர்ந்த மக்களுக்காக அமைக்கப்பட்ட மெனிக் பாம் முகாமில் தற்போதும் 9ஆயிரத்து 287 பேர் அகதிகளாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனைவிட மேலும் சுமார் 100 பேர் யாழ்ப்பாணத்திலுள்ள ராமாவில் முகாமில் தங்கை வைக்கப்பட்டுள்ளனர்.
மெனிக்பாம் முகாமில் தஞ்சமடைந்தவர்களில் சுமார் 2லட்சத்து 70ஆயிரம் பேர் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு மீள்குயேற்றப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவிக்கின்ற போதிலும், இதில் பெரும்பாலானவர்கள் தமது சொந்த இடங்களுக்குச் செல்ல முடியாதவர்களாகவே தொடர்ந்தும் உள்ளார்கள்.
விடுவிக்கப்பட்டவர்களில் 2 இலட்சத்து 33ஆயிரத்து 628 இடம்பெயர்ந்த மக்கள் வவுனியா, மன்னார், திருணோமலை மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாவர்.
9ஆயிரத்து 851 இடம்பெயர்ந்த மக்கள் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள புதுக்குடியிருப்புப் பகுதி மக்களை மீளக்குயேற்றுவதற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அனுமதி மறுத்துவருவதாகத் தெரிகின்றது.
மெனிக் பாம் முகாமில் தற்போதுள்ளவர்கள் பெரும்பாலும் புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
**********************
உண்மைத் தரவுகளா?
வலிகாமம் வடக்கு பகுதியிலுள்ள பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தின் எல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள தெல்லிப்பழையில் 11ஆயிரத்து 879 குடும்பங்களை சேர்ந்த 38ஆயிரத்து 637 பேர் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் அங்கு இன்னும் 6ஆயிரத்து 928 குடும்பத்தை சேர்ந்த 25ஆயிரத்து 114 பேர் மீளக்குடியேற்றப்பட வேண்டியுள்ளதாகவும் சட்டமா அதிபர் - உயர் நீதிமன்றத்திற்கு நேற்று புதன்கிழமை அறிவித்தார்.
யாழ். குடாநாட்டில் வௌ;வேறு பிரதேசங்களில் குடியேற்றப்பட்ட குடும்பங்கள் மற்றும் குடும்ப அங்கத்தவர்களின் எண்ணிக்கை தொடர்பான புள்ளிவிபரங்களைக் கொண்ட யாழ். மாவட்ட அரசாங்க அதிபரின் கடிதமொன்றை பிரதி சொலிஸிட்டர் ஜெனரல் சவீந்தர பெர்ணான்டோ நீதிமன்றில் சமர்ப்பித்தார்.
எதிர்பார்க்கப்பட்ட மீள்குடியேற்றத்தில் 80 வீதத்திற்கு மேல் பூரணமாகியுள்ளதையிட்டு திருப்தி தெரிவித்த மனுதாரரின் சட்டத்தரணிகள், மீள்குடியேற முடியாதுள்ள சில தனியாட்கள் பற்றியே தாம் அக்கறைப்படுவதாக தெரிவித்தனர்.
இவ்வாறான தனியாட்கள் விபரத்தை கொண்ட பிரேரணை ஒன்றை தாக்கல் செய்ய நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
**********************