Tuesday 19 July 2011

செய்திகள் 19/07

பேசுவதைக் கூட தடுக்க முயலும் இந்தியா!
அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் தொடர்பாக பேசுவதை தடுக்க இந்தியா முயற்சிப்பதாக இந்தியாவின் ஆங்கில இணைய ஊடகம் ஒன்று குற்றம்சாட்டியுள்ளது.
இரண்டுநாள் பயணமாக நேற்றிரவு புதுடெல்லியை சென்றடைந்துள்ள அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரன் இன்று இந்தியப் பிரதமருடன் முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
நேற்றிரவு 8.40 மணியளவில் சிறப்பு விமானம் ஒன்றில் புதுடெல்லியை அடைந்த ஹிலாரியுடன் 25 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவொன்றும் சென்றுள்ளது.
இவர்களில் ஒபாமா நிர்வாகத்தின் உயர்நிலைப் பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவர்.
இன்று காலை இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்எம்.கிருஸ்ணாவுடன் பேச்சு நடத்தும் ஹிலாரி அதையடுத்து இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கையும் சந்தித்துப் பேசவுள்ளார்.
ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் விவகாரங்கள் தொடர்பாக இந்தச் சந்திப்பின் போது பேசப்படும் என்று புதுடெல்லி தகவல்கள் கூறுகின்றன.
ஹிலாரி கிளின்ரன் இன்று காங்கிரஸ் தலைவி சோனியா காந்தியையும், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் உள்ளிட்ட அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளார்.
நாளை சென்னைக்குச் செல்லும் ஹிலாரி அங்கு தமிழ்நாடு முதல்வர் ஜெயலலிதாவுடன் பேச்சுக்களை நடத்தவுள்ளார்.
இந்தச் சந்திப்பின்போது சிறிலங்கா விவகாரம் முக்கிய இடத்தை பெறும் என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர் றொபேட் ஓ பிளேக் கூறியிருந்தார்.
ஆனால், ஹிலாரி கிளின்ரன் சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள், இனப்படுகொலைகள் தொடர்பாக பேசுவதைத் தடுக்கவே இந்தியா முனைவதாக இந்திய ஆங்கில இணைய ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
இருதரப்பு பேச்சுக்களின் போது இந்த விவகாரத்தை உள்ளடக்காமல் விடுவதற்கு இந்தியதரப்பு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.
அத்துடன் சென்னையிலும் சிறிலங்கா விவகாரம் குறித்து தமிழ்நாடு முதல்வருடன் ஹிலாரி கிளின்ரன் பேசுவதை தடுக்கவும் இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாகவும் அந்த ஊடகம் குற்றம்சாட்டியுள்ளது.
அதற்காகவே, அரசசார்பற்ற பயணமாகவே சென்னை செல்வதால் வெளிவிவகாரம் சார்ந்த விடயங்கள் குறித்து ஹிலாரி பேசமாட்டார் என்று முன்கூட்டியே இந்திய இராஜதந்திரிகள் அவருக்கு தடைபோட முயன்றதாகவும் அந்த இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, தமிழ்நாடு முதல்வருடனான நாளைய சந்திப்பின் போது சிறிலங்கா விவகாரம் குறித்த ஹிலாரி கலந்துரையாடாமல் போனால்- அது இருவரது நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தி விடும் என்றும் இந்திய ஊடகம் கருத்து வெளியிட்டுள்ளது.
*******************
அடையாள அட்டை கூட இல்லத நிலையில் வன்னி வாக்களார்களின் துயரநிலை!
உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிப்பதற்கு தமது அடையாளத்தை நிரூபிப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட வாக்காளர்கள் பெரும்பாலானோரிடம் தேசிய அடையாளஅட்டை இல்லை என்று மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 61ஆயிரத்து, 217 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ள போதும், அவர்களில் 60 வீதமானவர்களிடம் தேசிய அடையாளஅட்டை இல்லை என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இவர்களில் பலர் தமது சொந்த இடங்களை விட்டு வந்து குடியேறியவர்கள் என்றும், ஏனையோர் பலமுறை இடம்பெயர்ந்ததால் தமது அடையாள ஆவணங்களை தொலைத்தவர்கள் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அடையாள அட்டைகளை இழந்துள்ள இவர்களுக்கு தற்காலிக அடையாளஅட்டைகளை வழங்க தமது செயலகம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கஅதிபர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தற்காலிக அடையாளஅட்டையைப் பெறமுடியும் என்றபோதும், பெரும்பாலானோர் அதற்கு விண்ணப்பிக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்காலிக அடையாள அட்டையை பெறுவதற்கு ஒளிப்படம் எடுப்பதற்கும், பேருந்து செலவுக்கும் 400 ரூபா தேவை என்றும் அந்தப் பணத்துக்கு தாம் எங்கே போவது என்றும் வாக்காளர்கள் கேள்வி எழுப்புவதாகவும் கிளிநொச்சி அரசாங்க அதிபர் மேலும் கூறியுள்ளார்.
*******************
கூட்டமைப்புக்கே தமிழர்கள் வாக்களிக்க வேண்டும் - விக்கிரமபாகு
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் பொருட்டு அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் நடைபெற்றுவரும் பேச்சுகளில் தமிழ் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டுமானால், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும். அதுவே புத்திசாலித்தனமாகும் என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன கோரிக்கை விடுத்துள்ளார்.
அரசு எந்தவிதமான யுக்திகளைக் கையாண்டாலும் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சக்தியை அணு அளவாவது அசைக்க முடியாது.
நீதியானதும், சுதந்திரமானதுமான முறையில் இம்முறை தேர்தல் நடைபெறுமானால் அதிலும் கூட்டமைப்புக்கே வெற்றி. அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்கள் எப்பொழுதும் கூட்டமைப்புப்பக்கமே என்பது அனைவருக்கும் நன்கு தெரியும்.
இருந்தாலும் அரசு பல்வேறு யுக்திகளைக் கையாண்டு வாக்குகளைப் பலவந்தமாகப் பறித்தெடுக்க முயற்சிக்கின்றது.
எனவே மக்கள் தங்களது நிலைப்பாட்டில் தெளிவாக இருக்கவேண்டும்.
தமிழர்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டுமானால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கே வாக்களிக்க வேண்டும்.
இல்லையேல் மீண்டும் துன்பம் தான் நேரிடும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமைச்சர்கள் பட்டாளம் யாழ். குடாநாட்டில் தற்போது நிலைகொண்டு இலவசமாகப் பொருள்களை வாரி வாரி வழங்குகின்றது.
வடக்கு கிழக்கில் எந்தவிதமான தந்திரோபாயங்களைக் கையாண்டாலும் கூட்டமைப்பின் சக்தியை அசைக்க முடியாது என்பதைத் அரசுக்கு கூறஜக்கொள்ள விரும்புவதாக தெரவித்த அவர், ஏனென்றால் தமிழ் மக்கள் அவர்களின் பக்கம் தான் என்பதால் மக்கள் சக்திக்கு முன்னால் அரசின் சக்தி தோற்றுப்போய்விடும் என்றும் அவர் தெரிவித்தார்.
*******************
மோசடியை எதிர்த்து பதவி துறக்க தயார் - தேர்தல் ஆணையாளர்?
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் ஏதேனும் தவறு இழைக்கப்பட்டால் பதவியை துறக்கவும் தயங்கப் போவதில்லை என தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரியா தெரிவித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் முறைகேடுகள் இடம்பெற்றதாக ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டாலோ, அதிகாரிகள் வேண்டுமென்றே குற்றச் செயல்களில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டாலோ பதவியை இராஜினாமா செய்யப் போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
பதவியை இராஜினாமா செய்ததன் பின்னர் ஏதேனும் தூதுவர் பதவியோ அல்லது வேறும் பதவியையோ பெற்றுக்கொள்ளப் போவதில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தினமன்று மோசடிகள் இடம்பெற்றால் குறித்த வாக்களிப்பு நிலையத்தின் தேர்தல் முடிவுகளை சூன்யமாக்குவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தேர்தல்களுக்கு முன்னர் சுவரொட்டிகள் மற்றும் பதாகைகள் அகற்றப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.
வடக்கில் தேர்தல்களை உரிய முறையில் நடாத்துவதற்கு தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
*******************
இடையூறு விளைவிக்கும் காவல்துறை
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று சுன்னாகத்தில் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது இரவு 10 மணியளவில் அங்கு வந்த காவல்துறையினர் ஒலிபெருக்கிகளை நிறுத்தி இடையூறு விளைவித்தனர்.
வலிகாமம் தெற்கு பிரதேச சபைக்கான வேட்பாளர்களை ஆதரித்து சுன்னாகம் கதிரமலைச் சிவன் கோவிலை அண்மித்த பகுதியில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே காவல்துறையினர் இவ்வாறு நடந்துகொண்டனர்.
பிரசாரக் கூட்டம் இலங்கை தமிழரசுக்கட்சியின் மானிப்பாய் தொகுதியின் செயலாளர் பா.கஜதீபன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான பொன்.செல்வராசா, யோகேஸ்வரன், சிவசக்தி ஆனந்தன், வினோ நோகராதலிங்கம், மாவை சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ். சிறிதரன், ஈ.சரவணபவன், தமிழர் விடுதலைக்கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், புளொட் அமைப்பின் தலைவர் த.சித்தார்த்தன், ஆகியோருடன் கட்சி முக்கியஸ்தர்கள், மாநகர சபை எதிர்க்கட்சி உறுப்பினர்கள், வவுனியா மற்றும் மன்னார் பிரதேச உறுப்பினர்கள் கலந்துகொண்டு உரையாற்றினர்.
மாலை 5.30க்கு ஆரம்பமாகி இரவு 10.15 மணிவரை கூட்டம் இடம்பெற்றது.
இதற்கென சுன்னாகம் காவல்துறையினரிடம் உரிய அனுமதிகள் பெற்றிருந்தபோதும் சுன்னாகம் நகர்ப்பகுதியில் கட்டப்பட்டிருந்த ஒலிபெருக்கியை உடன் அகற்றுமாறு கூறியதுடன் 10 மணி தாண்டி 5 நிமிடங்கள் கூட ஆவதற்கிடையில் கூட்ட மேடைக்கு வந்த காவல்துறையினர் ஒலிபெருக்கியை நிறுத்துமாறு உத்தரவிட்டதுடன் அதனை நிறுத்தினர்.
இதன்போது சரவணபவன் உரையாற்றி முடிந்து தமிழர் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி உரையாற்றிக்கொண்டிருந்தார்.
எனினும் ஒலிபெருக்கி நிறுத்தப்பட்ட பின்னரும் அவர் 5 நிமிடங்கள் தனது உரையை தொடர்ந்தார்.
அங்கு கலந்துகொண்டிருந்த மக்கள் உரை முடிந்தபின்னரே கலைந்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
*******************
சுதந்திரத்தைப் பற்றி பேசும் (சு)தந்திரமற்றவர்!
பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ள ஹெஜிங் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் வெளியில் சுதந்திரமாக நடமாடித் திரிகின்றனர் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயக தேசியக் கூட்டணியின் தலைவருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சைப் பெறுவதற்கென சரத் பொன்சேகா நேற்று திங்கட்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையொன்றுக்கு சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகளால் அழைத்து வரப்பட்டிருந்தார்.
இதன்போது அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஹெஜிங் ஒப்பந்தத்தின் மூலமாக அதிகமான ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளமை தற்போது அம்பலமாகியுள்ளது.
இது தொடர்பில் அரசாங்கம் பல்வேறு கதைகளை கூறுகின்ற போதிலும் மோசடி நிறைந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் சுதந்திரமாக வெளியில் சுற்றித் திரிகின்றனர் என்றும் அவர் குறிப்பிட்டார்.
*******************
ஸ்ரீலங்காவில் இன்ரபோலின் துஷ்பிரயோகம்!
உலகளாவிய ரீதியில் குற்றவாளிகளைத் தேடும் சர்வதேச காவல்துறையான இன்ரபோல் இலங்கை, பாகிஸ்தான், ஈரான், ரஷ்யா, வெனிசூலா உட்பட சில நாடுகளால் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டதாக வாஷிங்டனைத் தளமாகக் கொண்ட அமைப்பான இன்வெஸ்ரிக்கேற்றிவ் ஜேர்ணலிஸ்ற் இன்ரநெஷனல் கொன்ஸோற்றியம் தெரிவித்திருக்கிறது.
அரசியல் கருத்து வேறுபாடு கொண்டவர்களையும் எதிராளிகளையும் தண்டிப்பதற்காக இன்ரபோலை இந்த நாடுகள் தவறான முறையில் பயன்படுத்தியதாக இந்த அமைப்பு மேற்கொண்ட புதிய விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்ரபோலின் சிவப்பு அறிக்கை முறைமையானது ஈரான், வெனிசூலா போன்ற அரசுகளினால் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றது.
அரசியல் எதிரிகளை சுற்றிவளைக்க நாடுகள் இன்ரபோலைப் பயன்படுத்துகின்றன என்று ஐ.சி.ஐ.ஜே.யின் பிரதிப் பணிப்பாளர் மரீனா வோல்கர் குவேரா கூறியுள்ளார்.
அரசாங்கத்தினை விமர்சிக்கும் கட்டுரைகளை பிரசுரிக்கும் இணையத்தளத்தின் உரிமையாளரின் பின்னால் செல்வதற்கு இன்ரபோலை இலங்கை பயன்படுத்தியதாக ஐ.சி.ஐ.ஜே. தெரிவித்துள்ளது.
உச்சூர் அரசியல் தலைவர் டொல்கூன் இஸாவை இலக்குவைக்க சீனா இன்ரபோலைப் பயன்படுத்தியது.
அவரை அரசியல் அகதியாக ஜேர்மனி அறிவித்திருந்தது.
எந்தவொரு கடுமையான கண்காணிப்புக்கும் உட்படாத வகையில் பதிவு இல்லாத வகையிலும் கணிசமானளவு நாடுகளை இந்த சர்வதேச காவல்துறை முகவரமைப்பு வைத்துள்ளது என்பதை விசாரணை ஆய்வுகள் உள்ளடக்கியுள்ளன.
அரசியல் விடயங்களில் வெளிப்படைத்தன்மை குறைவானதாக இன்ரபோலின் நடவடிக்கைகள் இருப்பதாகவும் வெளிப்புற மேற்பார்வை அல்லது பதிலளிக்கும் கடப்பாட்டு முறைமை அங்கு இருக்கவில்லை எனவும் ஐ.சி.ஐ.ஜே. கண்டறிந்துள்ளது.
கொலையாளிகள், போர்க் குற்றவாளிகள், சிறுவர் பாலியல் குற்றமிழைத்தோர், வனவாழ்வைப் பாதிக்கச் செய்வோர் ஆகியோரை தேடிக் கண்டுபிடிக்க இன்ரபோல் உதவுகிறது.
ஆனால், சர்வதேச சட்ட அமுல்படுத்தல் அமைப்பான இன்ரபோலானது ஆட்சியாளர்களின் அரசியல் எதிரிகளுக்கு எதிராகச் செயற்படுவதற்கும் பயன்படுத்தப்படுகிறது என்று ஐ.சி.ஐ.ஜே. தெரிவித்துள்ளது.
அரசுத் தலைவர் கியூவோ சாவேஸின் அரசியல் எதிராளிகளுக்கு எதிராக வெனிசூலா அதிகளவான சிறப்பு அறிக்கைகளை விடுத்திருந்தது.
அவற்றில் 24 இற்கும் மேற்பட்டவற்றை இன்ரபோல் அண்மையில் தடுத்து வைத்திருந்தது என்று ஏசியன் ஏஜ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
*******************
தமிழ் மக்களிடம் வேண்டுகோள்!
முழு அமைச்சர்களும் கோடி கோடியாக அரச பணத்தை செலவு செய்து தமிழ் மக்களை அடிபணிய வைக்கமுடியும் என எண்ணி வடக்கில் தற்போது செயற்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசங்களை தமிழ் மக்களே ஆட்சி செய்யும் என்பதை அரசுக்கும் சர்வதேசத்திற்கும் உணரவைக்க நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் தமது உரிமைக்காக பல்வேறு வடிவங்களில் போராடி இன்று அரசியல் ரீதியான போராட்டத்திற்கு நிர்ப்பந்திக்கப்பட்ட நிலையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 14 பிரதேச சபைகளை கைப்பற்றி இன்று அரசுக்கு எதிரான பிரதான எதிர்கட்சியாக நிற்கின்றது.
இவ்வாறான நிலையில் ஒத்திவைக்கப்பட்ட யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, போன்ற மாவட்டங்களிலும் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் காரைதீவு, திருக்கோவில் பிரதேச சபைகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ள இத்தருணத்தில் அரசாங்கம் தமிழ் மக்களின் பூர்வீக பிரதேசங்களை தமிழ் மக்கள் ஆளக்கூடாது என கங்கணம்கட்டிக் கொண்டு தமிழ் மக்களின் நலனில் அக்கறையுள்ளவர்கள் போல நடிக்கின்றது.
இடம்பெயர்ந்த வன்னி மற்றும் அம்பாறை கஞ்சிக்குடியாறு, தங்கவேலாயுதபுரம் போன்ற பிரதேச மக்களை அரசாங்கம் இன்றுவரை மீள்குடியேற்றாமல் அபிவிருத்தி என சர்வதேசத்திற்கு பூச்சாண்டி காட்டி தமிழ் மக்களின் நீண்டகால அபிலாசைகளை முழுப்பூசனிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போல மறைக்க முற்படுகின்றது.
அரசாங்கத்தின் இச்செயற்பாட்டிற்கு தாங்கள் தமிழர்களின் ஏக பிரதிநிதிகள் என சில அரசியல்வாதிகள் ஊதுகுழலாக செயற்படுகின்றனர்.
இன்று வடக்கில் முழு அமைச்சர்களும் கோடி கோடியாக அரச பணத்தை செலவு செய்து தமிழ் மக்களை அடிபணிய வைக்கமுடியும் எனவும் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றி பெற்று தமிழ் மக்களின் பிரதேசங்களை ஆட்சி செய்யலாம் என செயற்படுகின்றது.
இவைகளுக்கு எல்லாம் தமிழ் மக்கள் அடிபணியாது தமிழ் மக்கள் தன்மானமுடையவர்கள் என நடைபெறவிருக்கின்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து அரசுக்கு உணரவைக்க வேண்டும்.
எனவே அம்பாறை மாவட்ட காரைதீவு, திருக்கோவில் பிரதேச சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வாக்களித்து தமிழ் மக்கள்தான்; கூட்டமைப்புதான் தமிழ் மக்கள் என உலகறியச் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
*******************