Monday 25 July 2011

செய்திகள் 25/07


அமெரிக்க உதவிக்காக ஏங்கும் நிலை ஏற்படுமா?
இலங்கைக்கான உதவிகளை நிறுத்துவது என முன்வைக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமெரிக்க செனட் மற்றும் காங்கிரஸ் தரப்பு அங்கீகாரமளித்துள்ளது என சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
வொஷிங்டனால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு இலங்கை பொறுப்பு கூறாத பட்சத்தில் அபிவிருத்திக்காக வழங்கும் 13 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழக்க நேரிடும்.
அவசரகால நடமுறைகளை மீளப்பெறுதல், ஊடக சுதந்திரத்துக்கு உறுதியளித்தல் மற்றும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை அரசு பொறுப்பு கூறாதிருப்பதால் இலங்கைக்கான உதவிகளை நிறுத்துவது தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என அமெரிக்க வெளிவிவகார செயற்குழு கடந்த வியாழக்கிழமை தீர்மானம் எடுத்திருந்தது.
ஒபாமாவின் நிர்வாக்குழுவின் உயரதிகாரியான அமெரிக்க காங்கிரஸ் கொவார்ட் பேர்மன் இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை முன்வைத்திருந்தார்.
காங்கிரஸ் அரங்கத்தில் இலங்கையின் கொலைக்களங்கள் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதை அடுத்தே இவ்வாறான தீர்மானம் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
******************
13 மில்லியனை இழக்கத் தயாராகும் ஸ்ரீலங்கா!
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா நிதித்தடை விதிக்குமானால் 13 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கை இழக்கநேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு பதிலளிக்கத் தவறுதல், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தத் தவறுதல் மற்றும் அவசரகாலச்சட்டம் போன்றவற்றை நீக்கத் தவறினால் இலங்கைக்கான அமெரிக்காவின் நிதி உதவிகளை தடை செய்வதற்கான தீர்மானமொன்றை அமெரிக்காவின் வெளிவிவகாரக்குழு கடந்த வியாழக்கிழமை எடுத்துள்ளது.
பிரித்தானிய தொலைக்காட்சியான சனல் 4 வில் ஒளிபரப்பிய ஆவணப்படத்தை அமெரிக்க காங்கிரஸ் அரங்கத்தில் திரையிடப்பட்டதன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன் அமெரிக்க உதவி நிறுவனம் எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் திகதியில் இருந்து 2012 ஆம் ஆண்டு செப்டம்பர் வரையிலுமான நிதி ஆண்டுக்காக இலங்கைக்காக 6 பில்லியன் ரூபாய்களை அமெரிக்க அரசாங்கத்திடம் கோரியுள்ளது.
நிதித்தடை காரணமாக அந்த நிதியும் இலங்கைக்கு கிடைக்காமல் போகும் அபாயம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
******************
சிங்களத்தின் கோர முகத்தை உணர்ந்த முன்னாள் அரசுத் தலைவர்?
கொழும்பில் நேற்று நடைபெற்ற மறைந்த முன்னாள் நீதியரசர் அனந்த் பாலகிட்ணரின் நினைவுப் பேருரையில் சொற்பொழிவாற்றிய முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்க உரையின் இறுதிக்கட்டத்தின் போது கண் கலங்கியதுடன் தழுதழுத்த குரலில் உரையாற்றினார்.
இனங்களுக்கிடைலான நல்லிணக்கம், சமத்துவம், அரசியல் தீர்வு, அதிகாரப் பகிர்வு, சமமான அபிவிருத்தி உள்ளிட்ட துறைகளின் முக்கியத்துவம் தொடர்பில் தனது உரையில் சுட்டிக்காட்டிய சந்திரிகா குமாரதுங்க உரையின் இறுதிப் பகுதியில் அண்மையில் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த இலங்கையின் கொலைக்களம் என்ற காணொளி தொடர்பில் கருத்து வெளியிட்டார்.
அதாவது இந்தக் காணொளியை பிரித்தானிய தொலைக்காட்சியொன்றில் பார்வையிட்ட 28 வயதான தனது மகன் தான் சிங்களவன் என்று கூற வெட்கப்படுவதாக விம்மியழுதவாறு கூறியதாக சந்திரிகா குறிப்பிட்டார்.
மேலும் தனது மகளும் இதே கருத்தை வெளிப்படுத்தியதாகவும் அவர் கூறினார்.
28 வயதான தனது மகன் பிரித்தானிய தொலைக்காட்சியில் பார்த்தபின்னர் தான் ஓர் இலங்கையர் எனவும் பௌத்தர் எனவும் கூறுவதற்கு வெட்கப்படுவதாக தனக்கு தொலைபேசி மூலம் தெரிவித்த காலை வேளையை தான் தனது வாழ்நாள் முழுதும் மறக்கமாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் கண் கலங்கிய முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிகா சற்றுநேரம் அமைதியாகிவிட்டு மீண்டும் தழுதழுத்த குரலில் உரையைத் தொடர்ந்தார்.
மேலும் தனது பிள்ளைகள் பாதிக்கப்பட்ட ஏனையவர்களின் நலன் குறித்து சிந்திப்பது தொடர்பில் தான் பெருமையடைவதாகவும் குறிப்பிட்டார்.
அரசுத் தலைவர் சட்டத்தரணி எம்.ஏ. சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இராஜதந்திரிகள், ஊடகவியலாளர்கள், சமூக அமைப்பின் பிரதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சமூகங்களையும் சமாதானத்தையும் உள்ளடக்கும் வகையிலான பொருளாதார அபிவிருத்தி என்ற தலைப்பில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்நிகழ்வில் சொற்பொழிவாற்றியமை குறிப்பிடத்தக்கது.
******************
ஏக பிரதிநிகளை பிரகடனப்படுத்திய தேர்தல்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தான் தங்களின் ஏக பிரதிநிதிகள் என வடக்கு மக்கள் இந்த உள்ளூராட்சி சபைத்தேர்தல்களின் மூலம் ஆணித் தரமாக முழு உலகத்துக்கும் பறைசாற்றியுள்ளனர் என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
நடைபெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு 26 சபைகளில் போட்டியிட்டு 21 சபைகளைக் கைப்பற்றி அமோக வெற்றி ஈட்டியது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றி குறித்து கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
அரசு தமிழ் மக்களின் வாக்குகளை பறித்தெடுப்பதற்குப் பல்வேறு யுத்திகளைக் கையாண்டது.
பட்டுவேட்டி, பட்டுச்சேலை, தண்ணீர் பம்புகள், தையல் இயந்திரங்கள் என ஏராளமான பொருள்களை இலவசமாக அமைச்சர்கள் வாரிவாரி வழங்கினர்.
அதுமட்டுமன்றி தென்னிலங்கையிலிருந்து கவர்ச்சிக் கன்னிகளை அழைத்துச் சென்று கூத்து கும்மாளம் என வடக்கு மக்களைக் குதூகலிக்க வைத்தனர்.
ஆனால் வடக்கு மக்கள் தாங்கள் பட்டுவேட்டிக்கும், பட்டுச் சேலைக்கும் சோரம் போகிறவர்கள் அல்லர் என்பதை நிரூபித்துவிட்டனர்.
பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியிலும் அவர்கள் புத்திசாலித்தனமாகக் கூட்டமைப்புக்கே வாக்களித்தனர்.
தமது கொள்கையில் சற்றும் தளராத அவர்கள் உறுதியாக இருந்துள்ளனர்.
இது பாராட்டுக்குரியதொரு விடயமாகும். இதற்கு தான் வடக்கு மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று எவரும் இல்லை என அரசு கூறிவருகின்றது.
மக்களின் ஏக பிரதிநிதிகள் யார் என்பதை தேர்தலே நிர்ணயிக்கும்.
வடக்கு மக்கள் தங்களின் பொன்னான வாக்குகள் மூலம் கூட்டமைப்பினர்தான் தங்களின் ஏக பிரதிநிதிகள் என முழு உலகத்துக்கும் எடுத்துக்காட்டியுள்ளனர்.
எனவே அரசு இனியும் இவ்வாறு பூச்சாண்டித் தனம் காட்டும் வேலைகளைச் செய்யாது, கூட்டமைப்பினருடன் சுமுகமான முறையில் பேச்சு நடத்தி, இனப்பிரச்சினைக்கு அவர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வை வழங்க முன்வரவேண்டும்.
இனியும் மௌனம் காத்தால் சர்வதேச தலையீடுகள் தவிர்க்கமுடியாததாகிவிடும் எனவும் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்களுக்கு இந்தத் தேர்தல் வெற்றியானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது.
எனவே தமது உரிமைகளை வென்றெடுப்பதற்கு இது உந்துசக்தியாக அமையும்.
சர்வதேச அழுத்தங்களிலிருந்து தப்பிக் கொள்வதற்காக இந்தத் தேர்தல்களைப் பயன்படுத்த முனைந்த அரசு, வடக்கு மக்களை இலகுவில் ஏமாற்றிவிடலாம் என்றும் நினைத்தது.
ஆனால் அங்குள்ள மக்கள் அரசுக்கு தக்க பாடம் புகட்டியுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
******************
ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்திய தேர்தல்
தேர்தலின் மூலம் தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தின் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தியுள்ளார்கள் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
2004ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவினால் தான் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தலில் வெற்றியீட்டியதாக பலர் தெரிவித்தனர்.
ஆனால் இன்று விடுதலைப் புலிகள் இல்லை இப்போதுகூட தமிழ் மக்கள் தம்மை வெற்றிபெறச் செய்திருக்கிறார்கள் என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில் தமிழ் மக்கள் தமக்கு வழங்கியுள்ள ஆணையினை அரசும் சர்வதேச சமூகமும் மதித்து ஏற்றுநடக்க வேண்டும்.
இனப்பிரச்சினைக்கு தமிழ் மக்கள் தம்மை தாமே ஆழக்கூடிய தீர்வு குறித்து மக்களால் ஆணை வழங்கப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் மாத்திரமே பேசப்பட வேண்டும் என்றும் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
******************
அரசை துணிந்து நிராகரித்த தமிழர்கள்
சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் இடம்பெறாத நிலையிலும் வட பகுதி மக்கள் துணிச்சலுடன் அரசாங்கத்தை நிராகரித்துள்ளனர் என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது.
நாட்டில் சவாலுக்கு முகம் கொடுத்துள்ள ஜனநாயகத்தை பாதுகாக்க மக்கள் முன்வர வேண்டுமென்றும் அக்கட்சி அறிவித்துள்ளது.
நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாக ஜே.வி.பி. யின் அரசியல் பீடம் விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச வளங்களை, அதிகாரத்தை பயன்படுத்தியதோடு மக்களை அச்சுறுத்தி தாக்குதல்களை நடத்திய சூழ்நிலையிலேயே அரசாங்கம் தேர்தலை நடத்தியது.
விசேடமாக வட பகுதி மக்களின் வாக்குகளை பறிப்பதற்கு இராணுவத்தை பயன்படுத்தி பலாத்காரம் மேற்கொள்ளப்பட்டது.
இவ்வாறான செயற்பாடுகள் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருக்கும் காவல்துறை மா அதிபருக்கும் பல முறைப்பாடுகள் செய்யப்பட்டன.
இத்தேர்தலிலும் மக்களின் விருப்பத்தை சுதந்திரமாக வெளியிட முடியாது தடுக்கப்பட்டது.
இவ்வாறானதொரு சூழ்நிலையிலும் வட பகுதி மக்கள் அரசாங்கத்தை நிராகரித்துள்ளனர்.
வழமையாக இத் தேர்தலுக்கு பின்னரும் மக்கள் மீதான வரிகளை அரசாங்கம் அதிகரிக்கும்.
அச்சுறுத்தல்கள் இருந்தபோதும் தமது கட்சிக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றியை தெரிவிப்பதாகவும் ஜே.வி.பி. அறிவித்துள்ளது
******************