Monday 1 August 2011

செய்திகள் 01/08


சவாலா?
ஸ்ரீலங்கா அரசாங்கத்திற்கும் ராணுவத்தினருக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியதாகத் தெரிவித்து பிரித்தானிய சனல்-4 தொலைக்காட்சிக்கு எதிராக வழங்குத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதன்படி, வெஸ்மினிஸ்டர் நீதிமன்றில் வழங்குத் தொடர்வதற்கு பிரித்தானியாவில் இயங்கும் ஸ்ரீலங்கா பயங்கரவாத ஒழிப்பு ஒன்றியம் தயாராகி வருகிறது.
ஒரு ட்ரில்லியன் பவுண் நட்ட ஈடுகோரி இந்த வழக்குத் தொடரப்படவுள்ளதாக அந்த ஒன்றியத்தின் உறுப்பினர் அனுர மெதகெதர தெரிவித்துள்ளார்.
*************
இல்லாதததை எப்படி காப்பது?
நாட்டின் நற்பெயரை பாதுகாப்பதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு முடியாமற் போயுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டுள்ளார்.
சனல்-4 இரு வருடங்களுக்கு முன்னர் முதற்கட்ட காட்சிகளாக நான்கு அல்லது ஐந்து புகைப்படங்களை ஒளிபரப்பியபோது அதற்கெதிராக வழக்குத் தாக்கல் செய்யப்போவதாக அமைச்சர் மஹிந்த சமரசிங்க கூறினார், ஆனால் வழக்குத் தொடரப்பட்டதா என அவர் கேள்வி எழுப்பினார்.
அதன் பின்னர் பல காணொளிகள் ஒளிபரப்பப்பட்ட போதிலும் நாட்டின் நற்பெயரை பாதுகாப்பதற்கு தற்போதைய அரசாங்கத்திற்கு முடியாமற் போயுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை நிராயுதபானிகளான மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்படன் செயற்படும் அரசாங்கத்திற்கு எதிராகவே இத்தகைய ஆதாரமற்ற குற்றம் சுமத்தப்படுவதாக கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
முழு உலகும் உணரும் வகையில் சனல்-4 தொலைக்காட்சிக்கு எதிராக மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும், அதனைக் கண்டு மேலும் பித்துப்பிடித்த சனல்-4 மீண்டும் மாறுபட்ட ஆவணப்படமொன்றை சர்வதேச மட்டத்தில் வெளியிட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
நிராயுதபானிகளான அப்பாவி மக்களின் உரிமைகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் அரசாங்கத்திற்கு எதிராகவே தொடர்ச்சியான அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.
*************
இந்தியாவை சுற்றிப் பார்க்கப் பறக்கிறார்களோ?
சபாநாயகர் சமல் ராஜபக்­ச தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று இந்தியாவுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளது.
இலங்கை-இந்திய நாடாளுமன்றங்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் மேற்கொள்ளப்படுகின்றது என சபாநாயகரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள், குடியரசுத் தலைவர், துணைக் குடியரசுத் தலைவர், நாடாளுமன்றங்களுக்கிடையிலான நட்புறவுச் சங்க பிரதிநிதிகள் ஆகியோரை இலங்கைக் குழுவினர் சந்தித்துப் பேச்சு நடத்துவர்.
இந்தக் குழுவில் அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, ஜோன் செனிவிரத்ன, ரிஷாத் பதியுதீன், பிரதியமைச்சர் முத்து சிவலிங்கம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரஜீவ விஜேசிங்க, செல்வம் அடைக்கலநாதன், டி.எம்.சுவாமிநாதன், மாலினி பொன்சேகா ஆகியோரும் அங்கம் வகிக்கின்றனர்.
*************
அழைப்பு விடுக்கும் அரசு!
களநிலவரங்களை அறிந்து கொள்வதற்கு சிறிலங்கா வருமாறு பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சிக்கு சிறிலங்கா அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா, சனல்-4 தொலைக்காட்சியின் வெளிவிவகாரச் செய்திப் பிரிவின் செய்தியாளர் ஜொனாதன் மில்லருக்கும், சனல்-4 தொலைக்காட்சியின் தலைமைப்பீடத்துக்கும் இது தொடர்பாக அறிவித்துள்ளார்.
சனல்-4 தொலைக்காட்சி சிறிலங்காவின் களநிலவரங்களை அறிந்து கொள்வதற்கான பயணத்துக்கு அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
வவுனியா முகாம்களில் இடம்பெயர்ந்த மக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது அதனை படம்பிடிக்க முயன்ற சனல்-4 செய்தியாளர் குழுவை சிறிலங்கா அரசாங்கம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் நாட்டை விட்டு வெளியேற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.
*************
அச்சுறுத்தும் அரச பிரதிநிதி!
பிரித்தானிய ஊடகங்கள் சிறிலங்கா அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதாக ஐ.நாவுக்கான சிறிலங்காவின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குற்றம்சாட்டியுள்ளார்.
பிரித்தானியாவில் உள்ள விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களின் உத்தரவுக்கு அமையவே பிரித்தானியா ஊடகங்கள் அவ்வாறு நடந்து கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார்.
இராஜதந்திர முனையில் சிறிலங்கா மீது நெருக்கடி கொடுப்பதற்காக விடுதலைப் புலிகளின் செயற்பாட்டாளர்களால் சனல் -4 தொலைக்காட்சி குத்தகைக்கு அமர்த்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
விடுதலைப் புலிகளுக்காக மேலதிக நேர வேலைகளை செய்யும் சனல்-4 வலையமைப்பு தன்னிடம், பெறப்பட்ட செவ்வியை முழுமையாக ஒளிபரப்ப முடியுமா என்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா சவால் விடுத்துள்ளார்.
அந்தச் செவ்வியை தாங்கள் பதிவு செய்வோம் என்றோ அல்லது சிறிலங்கா வலையமைப்புகள் ஊடாக வெளியிடுவோம் என்றோ அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை என்று கூறிய அவர், தற்போது அது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
பணியகம் செல்லும் வழியில் அவர்கள் தன்னைத் தொடர்ச்சியாக பின்தொடர்ந்து வந்ததால், அந்த இடத்தில் செவ்வியை ஒளிப்பதிவு செய்ய தயார் நிலையில் இருந்ததாகவும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கூறியுள்ளார்.
சரணடைவோரின் கதையை முடித்து விடுமாறு பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச தனக்கு உத்தரவிட்டதாக கூறிய அந்த இராணுவ அதிகாரியின் அடையாளத்தை வெளிப்படுத்துமாறும் சனல்4 தொலைக்காட்சியின் வெளிவிவகார செய்தியாளர் ஜொனாதன் மில்லரிடம் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா சவால் விடுத்துள்ளார்.
மரபுவழி இராணுவப் பலத்தை இழந்துள்ள நிலையிலும், விடுதலைப் புலிகளின் குழுக்கள் தமது இலக்குகளை அடைவதற்கு பிரித்தானிய ஊடகங்கள் மேலதிக நேரத்தை ஒதுக்கி பணியாற்றுவதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
சனல்-4 தொலைக்காட்சியின் தகவல்களை வைத்துக் கொண்டு போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறும் அனைத்துலகப் பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் நாடுகள், அவர்களுக்குத் தகவல் வழங்கியவர்களின் அடையாளத்தை வெளிப்படுத்துமாறு கோர வேண்டும் என்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா கேட்டுக் கொண்டுள்ளார்.
அவர்கள் சிறிலங்கா இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டதாக் கூறும் நீதிக்குப் புறம்பான படுகொலைகள், பாலியல் வல்லுறவுகள் மற்றும் ஏனைய குற்றங்கள், 40ஆயிரம் பேரின் கொலைகள் தொடர்பாக உண்மையிலேயே கரிசனை கொண்டிருந்தால், அனைத்துலக சமூகத்தின் முன்பாக அவர்கள் தமக்கு தகவல் வழங்கியவர்களின் விபரங்களை வெளியிட வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
முகம் தெரியாதவர்களின் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு தம்மால் பொறுப்புக் கூற முடியாது என்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.
ஊடகத்தின் அடிப்படைகளைக் கூட சரியாகப் புரிந்து கொள்ள முடியாத ஸ்ரீலங்காவின் ஐநா வதிவிடப் பிரதிநிதி சவேந்திர சில்வா, இத்தகைய வேண்டத்தகாத சவால்களை விடுத்து தனது அறியாமையை மேலும் மேலும் வெளிக்காட்டி வருவதாக அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
*************
தொடரும் கடத்தலை தடுக்க முடியா விட்டாலும் தவறாது எண்ணி கணக்குவைக்கும் சமத்துக் காவல்துறை!
இலங்கையில் கடந்த இருவருடங்களில் சுமார் 1,700 பேர் கடத்தப்பட்டுள்ளனர் என்றும் இந்தக் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட 202 இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர் என்றும் காவல்துறை திணைக்கள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டள்ளது.
இந்த அறிக்கையின்படி, பெரும்பாலானோர் கப்பம் கோருவதற்காக கடத்தப்பட்டுள்ளதாக சிரேஷ்ட காவல்துறை அதிகாரி ஒருவர் கூறினார்.
2009 ஆம் ஆண்டில் 926 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் கடந்த வருடம் 774 பேர் கடத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
தனிப்பட்ட காரணங்களால் கடத்தப்பட்டவர்களும் இந்த எண்ணிக்கையில் அடங்குகின்றனர்.
202 சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட வேண்டியுள்ளதாகவும் 275 சம்பவங்கள் தொடர்பாக சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அல்லது அதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
*************
கண்டிக்கும் கருணாரட்ண!
யாழ்.குடாநாட்டில் பாரபட்சமின்றித் துணிகரமாகச் செய்திகளை வெளியிடும் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞா.குகநாதன் மீது மேற்கொள்ளப்பட்டுள்ள கண்மூடித்தனமான தாக்குதலை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள கண்டன அறிக்கையில், உதயன் பத்திரிகை பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் துணிகரமாக செய்திகளை வெளியிட்டு வருகின்றது.
அவ்வாறானதொரு ஊடகத்தை முடக்குவதற்கான முயற்சியே செய்தி ஆசிரியர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவமாகும்.
இதனைப் புதிய இடதுசாரி முன்னணி வன்மையாகக் கண்டிக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.
உதயன் செய்தி ஆசிரியர் ஞா.குகநாதன் இதற்கு முன்னரும் இலக்கு வைக்கப்பட்டார்.
அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்நிலையிலேயே கடந்த வெள்ளிக்கிழமை அவர் மீது கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
2006ஆம் ஆண்டு உதயன் பத்திரிகை அலுவலகத்திற்குள் நுழைந்த ஆயுததாரிகள் அங்கிருந்த ஊழியர்களைச் சுட்டுச் சென்றனர்.
எனவே இந்த விடயத்தில் காவல்துறை தொடர்ந்தும் மௌனம் காக்காது சந்தேக நபர்களை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் முடிவடைந்த கையோடு இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன் மூலம் தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் அரசியல் உள்ளது என்பது தெட்டத்தெளிவாகப் புலப்படுகின்றது.
அரச தரப்பினரே இந்தக் கோழைத்தனமான தாக்குதலை நடத்தியிருப்பர் என தான் நினைப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
*************
தாக்குதலை கண்டித்து ஆர்ப்பாட்டம்
ஊடகவியலாளரும் உதயன் செய்தி ஆசிரியருமான ஜி.குகநாதன் மீதான தாக்குதலைக் கண்டித்து நாளை ஐந்து ஊடக அமைப்புகள் ஒன்றிணைந்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளன.
இந்த ஆர்ப்பாட்டம் நாளை செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணிக்கு லிப்டன் சுற்றுவட்டத்தில் இடம்பெறும்.
குகநாதன் மீதான தாக்குதலை சகல உள்நாட்டு, வெளிநாட்டு ஊடக அமைப்புகளும் கண்டித்துள்ளன.
இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம், சுதந்திர ஊடக அமைப்பு, இலங்கை தமிழ்ப் பத்திரிகையாளர் ஒன்றியம், ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரம், இலங்கை ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் ஆகிய உள்ளூர் ஊடக அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
சர்வதேச ஊடகவியலாளர் ஒன்றியம் , எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு, ஜெனிவாவில் இயங்கும் இலங்கையின் ஜனநாயகத்துக்கான ஊடகவியலாளர் அமைப்பு உட்பட பல ஊடக அமைப்புகள் இந்தத் தாக்குதலைக் கண்டித்துள்ளன.
*************
சட்ட நடவடிக்கை எடுக்கத் தயார் - ததேகூ
பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை குறைக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கான பாராளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்கப்பட உள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அண்மையில் அறிவித்திருந்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிககை குறைப்பு தொடர்பில் தேர்தல் ஆணையாளருடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் அதேவேளை, சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
சனத்தொகை பரம்பலின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கை தீர்மானிக்கப்படும் என தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், யுத்தம் காரணமாக பலர் வடக்கை விட்டு வெளியேறியுள்ளதாகவும் இதனால் வாக்காளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதாகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
எனவே பாராளுமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை குறைப்பது பொருத்தமாகாது என சுட்டிக்காட்டியுள்ளனர்.
*************