Monday 29 August 2011

செய்திகள் 29/08


3 பேருக்காக உயிர்த்தியாகம்: செங்கொடி உடல் நாளை அடக்கம்: தலைவர்கள், பொதுமக்கள் அஞ்சலி

காஞ்சீபுரம் ஓரிக்கையைச் சேர்ந்த பரசுராமன் என்பவரின் மகள் செங்கோடி (21). இவர் அப்பகுதியில் உள்ள மக்கள் மன்றம் என்ற அமைப்பில் சேர்ந்து பணியாற்றி வந்தார். தமிழ் இன உணர்வு பற்று அதிகம் கொண்ட செங்கொடி,
தமிழர் நலனுக்கு ஆதரவான போராட்டங்களில் தன்னை ஈடுபடுத்து வந்தார். ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 3 பேரை தூக்கிலிடக்கூடாது என்று தமிழ் நாடு முழுதும் நடந்து வரும் போராட்டத்தில் இவரும் கலந்து கொண்டார். 


நேற்று காலை காஞ்சீபுரத்தில் நடந்த மனிதச் சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டார். நேற்று மாலை 6 மணிக்கு காஞ்சீபுரம் தாலுகா அலு வலகம் வந்த அவர் திடீ ரென தன் மீது மண் எண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். உடல் முழுவதும் தீ பரவி, அதே இடத்தில் பலியானார். சிவகாஞ்சிபுரம் போலீசார் அவரது கருகிய உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள். 


செங்கொடியின் கைப்பை உடல் அருகில் கிடந்தது. போலீசார் அந்த பையை சோதனையிட்டபோது, அதனுள் அவர் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்று இருந்ததை கண்டனர். அந்த கடிதத்தில் தோழர் முத்துக்குமாரின் உடல் தமிழகத்தை எழுப்பியது போல் என்னுடைய உடல் இந்த 3 தமிழர்களின் உயிரை காப்பாற்ற பயன்படும் என்ற நம்பிக்கையுடன் செல்கிறேன் என்று செங்கொடி எழுதி இருந்தார். 


இதன் மூலம் பேரறிவாளன், முருகன், சாந்தனுக்காக செங்கொடி உயிர்த்தியாகம் செய்திருப்பது தெரிய வந்தது. தமிழகத்தில் இதுவரை எத்தனையோ உயிர் தியாகம் நடந்துள்ளது. ஆனால் தமிழனுக்காக ஒரு வீரப்பெண்மணி உயிர் தியாகம் செய்தது இதுதான் முதல்முறை. கடைசி வரை இது போன்ற உயிர் தியாகங்கள் போராட்டத்தின் முடிவுகள் அல்ல. 


நமது கொள்கைக்காக கடைசி வரை போராடி வெல்ல வேண்டும். இனிவரும் காலங்களிலாவது இளைய சமுதாயம் உயிர் தியாகம் செய்யாமல் போராடி ஜெயிக்க வேண்டும். தமிழக முதல்- அமைச்சர் உடனடியாக 3 பேரின் தூக்கு தண்டனையை கருணை உள்ளத்தோடு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். 


இவ்வாறு அவர் கூறினார். 


செங்கொடியின் உடல் இன்று அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பிறகு அங்கிருந்து உடல் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. காஞ்சீபுரம் காந்தி ரோட்டில் உள்ள பெரியார் தூண் அருகில் செங்கொடி உடல் வைக்கப்பட்டது. அரசியல் கட்சி தலைவர்களும், தமிழ் உணர்வாளர்களும், பொது மக்களும் திரண்டு வந்து செங்கொடி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். 


இன்று மாலை 4 மணி வரை செங்கொடி உடல் அங்கு வைக்கப்பட்டிருக்கும் அதன் பிறகு அவரது சொந்த ஊரான கீழ்கதிர்பூர் கிராமத்துக்கு உடல் எடுத்துச் செல்லப்படும். இன்றிரவு முதல் நாளை காலை வரை உறவினர்கள் அஞ்சலிக்காக செங்கொடி உடல் வைக்கப்பட்டிருக்கும். நாளை பகல் 11 மணிக்கு இறுதிச் சடங்குகள் நடத்தப்படும். 


அதன் பிறகு செங்கொடி உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அந்த ஊரில் உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்யப்படும். இதில் பல்வேறு கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள உள்ளனர்.


தூக்குத் தண்டனைக் கைதிகள் மூவருக்குமான நம்பிக்கை ஒளி தமிழக முதல்வரும், தமிழக ஆளுனருமே!!

செப்டம்பர் 9ம் திகதி தமிழர்களின் வரலாற்றில் ஒரு “கறுப்பு வெள்ளிக்கிழமையாக” அமையப் போகிறது என்பது தான் இப்போதைய முடிவு. இருந்த போதும் இந்த மூவருக்கும் உள்ள இறுதியான தெரிவுகள் தமிழக முதல்வரும், தமிழக ஆளுனரும் என்பதையே கடந்த காலத்தில் இடம்பெற்ற மரண தண்டனைக் குறைப்புக்கள் வலியுறுத்துகின்றன. 
ஜனாதிபதி இந்த மூவரின் கருணை மனுவை நிராகரித்தாலும் தமிழக மாநில அரசு மற்றும் தற்போதைய தமிழக மாநில ஆளுநர் இந்த மனுவை ஏற்றுக் கொள்ளக்கூடியதொரு சந்தர்ப்பம் மிக எளிதாக உள்ளது.
ஜனாதிபதி கருணை மனுவை மறுத்து விட்டார் என்ற காரணம் இவ் விடயத்தில் கருத்திலெடுக்கப்பட வேண்டிய தேவையில்லை. தமிழக அரசும், தமிழக ஆளுனரும் இந்த விடயத்தில் முடிவை எடுக்க முடியும்.
அதுபோலவே தமிழக மாநில அரசு ஏற்கனவே நான்கு மரண தண்டனைக் கைதிகளின் தண்டனையை ஆயுட் தண்டனையாக மாற்றியிருக்கிறது. தியாகி திலீபன் நற்பணி மன்றத்தின் தலைவர் தோழர் தியாகு, அவரது மாமனாரான தோழர் லெனின் எனப்படும் அரங்கசாமி மற்றும் தோழர் குருமூர்த்தி மற்றும் தோழர் கைலைப்பெருமாள் ஆகியோரது மரண தண்டனைகள் தமிழக சட்டசபையாலேயே ஆயுட் தண்டனையாகக் குறைக்கப்பட்டிருந்தன.
எனவே இப்போது இந்த வழக்கில் அவ்வாறு செயற்படுவது தமிழக அரசிற்கு அவ்வளவு சிரமமான காரியமல்ல, ஆனால் தனது ஆட்சியைத் தக்கவைப்பது என்ற காரணத்திற்காக அது தமிழர்களின் ஒட்டு மொத்த ஆதரவையும் இந்த விவகாரத்தில் பெற்றுச் செயற்பட முனையலாம்.
முருகன், நளினி, அறிவு, சாந்தன் நால்வரும் தமிழக ஆளுனரான பாத்திமா பீபியிடம் ஏப்ரல் 25, 2000ல் கருணை மனுச் சமர்ப்பித்தனர். பாத்திமா பீபி அவர்கள் நளினியின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்ததோடு மற்றையவர்களிற்கு மன்னிப்பு வழங்க மறுத்துவிட்டார்.
நளினியின் மரண தண்டனையை ஆயுட்தண்டனையாகக் குறைத்ததன் மூலம் தமிழக அரசு, தமிழக ஆளுனர் ஆகியோர் ஏற்கனவே தங்களிற்கு இந்தத் தண்டனைகளைக் குறைப்பதில் அதிகாரம் இருக்கிறது என்பதைத் தெரிவித்து விட்டனர். எனவே அறிவு, முருகன், சாந்தன் ஆகியோரது மனுக்களை மீள் பரிசீலனைக்கு எடுப்பது தமிழக அரசிற்கு அவ்வளவு சிரமமான வேலையாக இருக்காது.
அத்தோடு மேற்கண்ட நடவடிக்கைக்கு மேலாக ஜனாதிபதிக்கும் இவர்கள் மூவர் சார்பாக மீண்டும் கருணை மனுச் சமர்ப்பிக்கப்படலாம். 1998ல் அவ்வாறு ஆந்திரா மாநிலத்தைச் சேர்ந்த விஸ்ணுவர்த்தன் மற்றும் செல்லபதி ராவ் ஆகியோர் இவ்வாறு மீள் மனுச் சமர்ப்பிக்கப்பட்ட போது அதற்கு ஜனாதிபதி அலுவகம் பதிலிறுக்கவில்லை.
ஜனாதிபதி பதிலிறுக்காமல் விட்டது தவறு என்பதற்காக உச்சநீதிமன்றம் அவர்களது தண்டனையை ஆயுட்தண்டனையாக மாற்றியது இந்திய நீதித்துறையில் புதிய சகாப்தமெனக் கருதப்பட்டது.
அதுபோலவே சீ.ஏ.பாலன் என்பவரிற்கு வழங்கப்பட்ட மரணதண்டனையை குறைக்க மத்திய அரசு மறுத்த போது கேரள மாநில அரசு நேரடியாக மத்திய அரசை “நீங்கள் இந்தத் தண்டனையைக் குறைக்கவில்லையென்றால் நாங்கள் சட்டசபையின் அதிகாரம் மூலம் குறைப்போம்” எனத் தெரிவித்ததையடுத்து உடணடியாக அம் மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.
இதுபோல இந்திய நீதி வரலாற்றில் இடம்பெற்ற பல உதாரணங்களும் சுட்டிக்காட்டுவது யாதெனில் தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக ஆளுனர் ஆகியோரால் இந்தத் தண்டனைகளைக் குறைக்க வைக்க முடியும்.
இதற்கான அனைத்துத் தமிழக கட்சிகளின், தலைவர்களின் ஆதரவையும் தனது ஆட்சியைத் தக்க வைக்க ஜெயலலிதா எதிர்பார்ப்பார் என்பதோடு அவ்வாறன ஒரு ஒட்டுமொத்த ஆதரவு ஒரு தீர்மானமான வழிபாட்டிற்கு வழி செய்யும் என்பதே உண்மையாகும்.