Tuesday 2 August 2011

செய்திகள் 02/08


வாக்காளர் இடாப்பு பதிவு!
வெளிநாடுகளுக்குக் கல்வி கற்கச் சென்றவர்கள், வேலை செய்வதற்குச் சென்றவர்கள் மற்றும் வெளிநாடுகளில் நிரந்தரக் குடியுரிமை பெறாதவர்களின் பெயர் விவரங்களை வாக்காளர் இடாப்பில் பதிவு செய்ய முடியும் என அறிவிவக்கப்பட்டுள்ளது.
அவர்களின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவரே அவ்வாறு பதிவை மேற்கொள்ள முடியும் என யாழ். மாவட்டத் தேர்தல் திணைக்கள உதவித் தேர்தல் ஆணையாளர் ஆ.சு.கருணாநிதி தெரிவித்தார்.
2011 ஆம் ஆண்டு வாக்காளர் பதிவு தொடர்பாகவே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மக்கள் இன்னும் மீளக்குடியமர அனுமதிக்கப்படாத பகுதிகளில் மட்டும் 2010 ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பே மீண்டும் பயன்படுத்தப்படும்.
அத்துடன் 2010 மே இருந்து 2011 ஆம் ஆண்டு மே மாதத்துக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 18 வயதைப் பூர்த்தி செய்தவர்கள் தம்மைப் புதிய வாக்காளர் இடாப்பில் பதிவு செய்து கொள்ளமுடியும்.
இதனைத் தவிர 2010 ஆம் ஆண்டுவாக்காளர் இடாப்பில் பெயர்கள் பதிவு செய்யப்படாத வர்கள் 2011 ஆம் ஆண்டு வாக்காளர்களாகப் பதிவு செய்வதற்கு இந்த ஆண்டு டிசெம்பர் மாதம் விநியோகிக்கப்படும் உரிமைக் கோரிக்கை படிவத்தைப் பூரணப்படுத்தி சமர்ப்பிப்பதன் மூலமே தம்மை வாக்காளர்களாகப் பதிவு செய்யமுடியும்.
வெளிநாடுகளில் குடியுரிமை பெறாதவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் யாழ்ப்பாணத்தில் இருந்தால் அவர்களின் பெயர்களையும் புதிய வாக்காளர் இடாப்பில் பதிவு செய்துகொள்ள முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
****************

முல்லைத்தீவில் மீன்பிடி உரிமை யாருக்கு?
கொக்கிளாயிலிருந்து கொக்குத்தொடுவாய், நாயாறு, செம்மலை, அளம்பில், முல்லைத்தீவு ஆகிய பகுதிகளில் முன்னர் இருந்த 44 கரைவலை பாடுகளில் ஓரிரு பாடுகளுக்கே சிங்களவர்கள் உரிமம் வைத்திருந்துள்ளதாகவும் மற்றைய பாடுகளுக்குரிய உரிமத்தை தமிழர்களே வைத்திருந்ததாகவும் முல்லைத்தீவு கடற்தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினரான முன்னாள் கல்வியதிகாரி அண்டனி ஜெகநாதன் சுட்டிக்காட்டியுள்ளார்.
1984 இல் தமிழர்கள் இராணுவத்தால் வெளியேற்றப்பட்டு, அங்கு சிங்கள மீனவர்கள் வரவழைக்கப்பட்டு கரைவலை உரிமங்கள் கொடுக்கப்பட்டதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
முன்னர் இருந்த 44 பாடுகள் இன்று 150 ஆக அதிகரித்துள்ளதாகவும் அண்டனி ஜெகநாதன் தெரிவித்தார்.
கொக்கிளாய் பகுதிக்கு உரிம ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்ற தமிழ் மீனவர்கள், அங்கு சிங்கள முதலாளிமார் உரிமங்களை காட்டி தொழில் செய்து கொண்டிருப்பதைப் பார்த்து ஏமாற்றத்துடன் திரும்பி வந்துவிட்டதாகவும் முல்லைத்தீவு கடற்றொழிலாளர்கள் தெரிவித்தனர்.
ஆனால், இலங்கையின் மீன்வளத் துறை அமைச்சரான ராஜித சேனாரத்ன இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.
அந்தப் பகுதியில் பாரம்பரியமாக மீன்பிடித்து வந்து, விடுதலைப் புலிகளால் துரத்தப்பட்ட அந்தப் பகுதியைச் சேர்ந்த சிங்கள மீனவர்களுக்கு மாத்திரமே அங்கு மீண்டும் கரைவலைத் தொழில் அனுமதி வழங்கியுள்ளதாக அவர் கூறினார்.
அதுதவிர, தென்பகுதியில் இருந்து எவரும் புதிதாக அங்கு அனுமதிக்கப்படவில்லை என்றும் தமிழர்களின் உரிமங்கள் சிங்களவர்களுக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுவதிலும் உண்மை எதுவும் கிடையாது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேவேளை அவ்வாறு தமிழர்கள் எவருக்காவது உரிமம் இருந்து, அவர்கள் அங்கு கரைவலை தொழில் செய்வதிலிருந்து தடுக்கப்பட்டால், தன்னிடம் புகார் செய்யும் பட்சத்தில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழர்களை தடுத்து நிறுத்தும் இராணுவம் தனது பணியைச் செய்ய தமிழர்கள் எப்படி அமைச்சரிடம் முறையிடுவது என பாதிக்கப்பட்ட மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
****************
தலைமைத்துவத்தில் மாற்றம் இல்லை!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவத்தில் இந்த வருடம் எதுவித மாற்றமும் ஏற்படாது என்று கட்சியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
கட்சியின் யாப்பு திருத்தி அமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் கட்சியின் தலைவரும் ஏனைய நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.
அந்த யாப்பின் அடிப்படையில் இந்த வருடம் தலைமைத்துவப் பதவியிலோ அல்லது வேறு பதவிகளிலோ மாற்றங்கள் எவையும் இடம்பெறாது.
கட்சிக்குள் பிளவு ஏற்பட்டால் அந்தப் பிளவை இல்லாது செய்து ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டும்.
அந்தப் பணியை தமது கட்சி சரிவர நிறைவேற்றும். தமது கட்சியைக் குறைகூறும் தகுதி இந்த அரசுக்குக் கிடையாது என்றும் தெரிவித்துள்ளார்.
அரசுக்குள் ஊழல், மோசடிகள் மலிந்துவிட்டன. தரக்குறைவான பெற்றோலை இறக்குமதி செய்து விநியோகித்ததன் மூலமும் யஹட்ஜிங் சூதாட்டம் மூலம் இலங்கைக்குப் பெரும் நட்டம் ஏற்பட்டுள்ளது.
இந்த நட்டத்தை இலங்கை மக்கள்தான் சரிசெய்ய வேண்டிவரும்.
மக்களின் பணத்தைக் கொண்டுதான் இந்த நட்டம் ஈடுசெய்யப்படும்.
ஆனால் இந்த ஊழல் மோசடிக்குக் காரணமானவர்கள் தப்பிவிடுகின்றனர்.
இவ்வாறான ஊழல், மோசடிமிக்க அரசை வீட்டுக்கு அனுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து போராடவேண்டும்.
இதற்கு கட்சிக்குள் பிளவுபட்டு நிற்காமல் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
****************
காணொளிப் போர்!
போரின் இறுதிக்கட்டத்தில் சிறிலங்காப் படையினரால் போர்க்குற்றங்கள் இழைக்கப்பட்டதாக சனல்-4 தொலைக்காட்சி சுமத்தி வரும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையிலான காணொளி ஒன்றை சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு நேற்று வெளியிட்டுள்ளது.
இந்தக் காணொலி 58 நிமிட நேரத்தைக் கொண்டது.
இந்தக் காணொளியில், போரின் போது மருத்துவமனைகள் மீது ஷெல் தாக்குதல்கள் நடத்தப்பட்டதான குற்றச்சாட்டை நிராகரிக்கும் வகையில் போர் வலயத்தில் பணியாற்றிய தமிழ் மருத்துவர்கள் கூறிய கருத்துகளும், ஆயுதம் ஏந்தாத எவரும் கொல்லப்படவில்லை என்று அங்கிருந்த பொதுமக்கள் சிலர் வெளியிட்டுள்ள கருத்துகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
அத்துடன் கொலை செய்யப்பட்ட தமிழ்த் தொலைக்காட்சி ஊடகவியலாளர் இசைப்பிரியா ஒரு போராளி என்றும் இந்தக் காணொலியில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
போர்க்குற்றச்சாட்டுகளுக்கு நேரடியாகப் பதில் கூறும் வகையில் இந்தக் காணொளி தயாரிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ள போதும், சனல்-4 இன் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கும் வகையிலான பரப்புரைகளே இதில் அடங்கியுள்ளன.
சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இந்தக் காணொலியை வெளியிட்டுள்ளது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அனைத்துலக ஊடகம் ஒன்று இதனை காணொளிப் போர் என்று வர்ணித்துள்ளது.
****************
உரிமை வழங்க வேண்டும் - அமைச்சர்
வடபகுதி மக்களின் அபிலாஷைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் 13 ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று சுயநிர்ணய உரிமையுடன் கூடிய அரசியல் தீர்வினை அரசாங்கம் வழங்கவேண்டும் என்று ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில அரசியல் கட்சிகள் எதிர்த்தாலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட மஹிந்த ராஜபக்ஷவினால் இதனை வழங்க முடியுமென்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
சென்னையில் இடம்பெற்ற இந்திய மாக்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் இலங்கையில் வடபகுதி மக்களுக்கு சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டுமென நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் நிலைப்பாட்டை கேட்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும், இனங்களிடையேயான நல்லிணக்கம் தொடர்பிலான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில், வடபகுதி மக்களுக்கு தம்மைத் தாமே ஆளும் சுயநிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டுமென்பது தமது நிலைப்பாடாகும் எனத் தெரிவித்தார்.
இது தொடர்பில் அம் மக்களின் விருப்பத்தை அறிந்து கொண்டு அதற்கமைய இதனை வழங்க வேண்டும்.
அத்தோடு தற்போதைய சூழ்நிலையில் 13 ஆவது திருத்தத்திற்கமைவான தீர்வு பொருந்தாது.
அதேவேளை இத் திருத்தத்திலுள்ள மத்திய அரசுக்கும், மாகாண சபைகளுக்கும் அதிகாரங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன.
அதேவேளை இந்தத் திருத்தத்தை ஒதுக்கி வைத்து விட்டு பேச்சுவார்த்தைகளை நடத்தி அதிகாரப் பகிர்வுடனான தீர்வுகளை வழங்க வேண்டும்.
அத்தோடு காவல்துறை அதிகாரங்களையும் வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளார்.
இவ் அதிகாரங்களிலுள்ள முக்கியமானவற்றை அதாவது தேசிய பாதுகாப்புடன் தொடர்புபட்ட விடயங்களை மத்திய அரசாங்கம் வைத்துக் கொண்டு சிறு குற்றங்களை விசாரிக்கும் காவல்துறை அதிகாரத்தை மாகாண சபைகளுக்கு வழங்க முடியும்.
நாட்டில் அரசாங்கத்திற்கு சொந்தமான காணிகளே அதிகம் உள்ளது.
எனவே காணி அதிகாரங்களை மத்திய அரசாங்கமும் மாகாண சபைகளும் இணைந்த குழுவை அமைத்து வழங்க முடியும். அதனை தாம் ஆதரிக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சில பேரினவாதக் கொள்கைகள் கொண்ட அரசியல் கட்சிகள் எதிர்த்தாலும் நிறைவேற்று அதிகாரமுடைய மஹிந்த ராஜபக்ஷவினால் இதனை வழங்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு இணைப்பு என்பது ஜனநாயக ரீதியாக தீர்க்கப்பட வேண்டிய விடயமாகும்.
இவ் இணைப்பு தொடர்பாக கிழக்கு மாகாண மக்களின் விருப்பத்தை அறிய வேண்டும்.
இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிறைவேற்றியுள்ள தீர்மானமானது ஜனநாயக ரீதியில் தீர்க்கப்பட வேண்டிய விடயமாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
****************
ஆர்ப்பாட்டம் இன்று!
உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் மீதான தாக்குதலைக் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெறவுள்ளது.
கொழும்பு லிப்டன் சுற்று வட்டத்தில் நண்பகல் 12 மணிக்கு நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஊடகவியலாளர்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் உறுப்பினர்கள் பங்கு கொள்ளவுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை இரவு இவர் தாக்கப்பட்ட நிலையில் ஊடகவியலாளர் சங்கங்கள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கண்டணத்தை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
****************
அமைச்சரின் கண்டனம்
உதயன் பத்திரிகையின் செய்தியாசிரியர் ஞானசுந்தரம் குகநாதன் இனந்தெரியாத குழுவினரால் தாக்கப்பட்ட சம்பவத்தை இ.தொ.கா.வன்மையாகக் கண்டிப்பதாக இ.தொ.கா.தலைவரும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சருமான முத்து சிவலிங்கம் தெரிவித்துள்ளார்.
மக்களுக்கு சரியான தகவல்களை உரிய வடிவத்தில் வழங்குகின்ற ஊடகத்துறையினரை அராஜக செயற்பாடுகளினால் முடக்குவது வேதனை அளிப்பதுடன் கண்டிக்கத்தக்க விடயமுமாகும்.
சமூக அந்தஸ்து அற்ற காடையர்களைக் கொண்டு அரசியல் இலாபத்திற்காகவும் சுயலாபத்திற்காகவும் ஊடகத்துறையினரை தாக்குவதும் அவர்களுக்கு அச்சுறுத்தல் விடுவதும் தங்களது தவறுகளை மறைப்பதற்கான செயற்பாடுகள் ஆகும்.
இவ்வாறான கீழ்த்தரமான செயல்களை கைவிட்டு நீதியான செயற்பாடுகளை முன் எடுத்துச் செல்வதற்கு சம்பந்தப்பட்டவர்கள் முன்வர வேண்டும்.
ஊடகத்துறை மூலம் மக்களுக்கு பல உண்மைகள் தெரியவருகின்றன.
இதனூடாக பல நன்மைகளை மக்கள் அடைகின்றார்கள்.
ஆகையால் ஊடகத்துறையை கருத்துப் பரிமாற்றங்களை மேற்கொள்ளுவதற்கும் சுதந்திரமாக செயற்படுவதற்கும் உதவ வேண்டியது அனைவரதும் கடமையாகும்.
அவர்களுக்கான பாதுகாப்பையும் கௌரவத்தையும் வழங்குவதற்கு அரசு உரிய நடவடிக்கையினை மேற்கொள்வதுடன் நாட்டினதும் அரசினதும் நற்பெயரை கெடுக்கும் வகையில் இவ்வாறான கீழ்த்தரமான செயற்பாடுகளில் ஈடுபடும் கும்பல்களை இனங்கண்டு சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனைகளை பெற்றுக் கொடுக்க காவல் துறையினர் துரிதமாக விசாரணைகளை மேற்கொண்டு செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொள்வதாக பிரதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
****************