இனவாதிகளுக்கு தமிழர் சொன்ன செய்தி?
உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பினை இனவாதக் கட்சிகளும் சிங்கள மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று புளொட் அமைப்பின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் வலியுறுத்தியுள்ளார்.
அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென்ற சர்வதேசத்தின் அழுத்தத்திற்கு தமிழர்களின் தீர்ப்பானது உந்து சக்தியாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் பெறுபேறுகள் தொடர்பாக கருத்துத் தெவிக்கையிலேயே புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் இவ்வாறு தெரிவித்தார்.
உரிமைகள், அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென்பதிலேயே தமிழ் மக்கள் அக்கறை காட்டியுள்ளனர்.
இதனை அரசாங்கத்தின் பங்காளிக் கட்சிகளான இனவாத ரீதியில் சிந்திக்கும ஜாதிக ஹெல உறுமய மற்றும் அமைச்சர் விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி போன்றவர்கள் புரிந்து கொள்ளவேண்டும்.
அரசாங்கம் மட்டுமல்ல, தென்பகுதி பெரும்பான்மை இன மக்களும் இதனைப் புரிந்து கொள்ளவேண்டும்.
இந்தியா உட்பட சர்வதேச நாடுகள் தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வை வழங்க வேண்டுமென அரசாங்கத்திற்கு அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றன.
இந்த அழுத்தத்திற்கு தமிழ் மக்கள் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வழங்கிய தீர்ப்பு மேலும் உந்து சக்தியாக அமைந்துள்ளது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
*****************
புரிந்து கொண்டது இதுவா?
வடக்குத் தேர்தல் முடிவுகளானது முக்கியமான சில செய்திகளை விடுத்துள்ளது.
அதாவது தமிழ்த் தேசிய கூட்டமைப்பானது எதிர்காலத்தில் ஐக்கிய தேசியக் கட்சியை விடுத்து ஆளும் கட்சியுடனேயே பேச்சுக்களை நடத்த வேண்டும் என்று கூட்டமைப்புக்கு ஒரு செய்தியையும் அபிவிருத்தி மட்டுமின்றி தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்கும் வகையிலான அரசியல் தீர்வை விரைவாக முன்வைக்க வேண்டும் என்ற செய்தியை அரசாங்கத்துக்கும் வடக்கு மக்கள் விடுத்துள்ளனர் என்று வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
தான் வல்வெட்டித்துறை உள்ளுராட்சி மன்றத்துக்கு ஆளும் கட்சி சார்பில் பொறுப்பாக செயற்பட்டதாகவும், 1000 வாக்குகள் வல்வெட்டித்துறையில் ஆளும் கட்சிக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தபோதும் 679 வாக்குகளே கிடைத்தன எனத் தெரிவித்தார்.
எனினும் வடக்கு மக்ககளின் தீர்ப்பை தாங்கள் ஏற்பதாகவும் எது எவ்வாறெனினும் வடக்கில் ஜனநாயகம் பாரிய வெற்றியை பெற்றுவிட்டது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
*****************
தீர்ப்பை ஏற்கலாம் கொள்கையை ஏற்க முடியாது - தடுமாறும் இனவாதம்!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாகவும், ஆனால் தமிழ் தேசியக் கூட்டமைப்பை கொள்கை ரீதியாக புறக்கணிப்பதாகவும் ஜாதிக ஹெல உறுமய தெரிவித்துள்ளது.
கூட்டமைப்பினன் வெற்றியின் ஊடாக தேர்தல் நியாயமானதாகவும் நீதியானதுமாக நடைபெற்றுள்ளது என்பது உறுதியாகின்றது.
அரச வளங்கள் மற்றும் இராணுவம் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்தப்பட்டது என்ற குற்றச்சாட்டு போலியானது என்பதுவும் வெளிப்பட்டுள்ளதாகவும் அக் கட்சி குறிப்பிட்டது.
இது தொடர்பாக ஜாதிக ஹெல உறுமயவின் பேச்சாளரும் ஊடகச் செயலாளருமான நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க கூறுகையில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிட்ட ஜாதிக ஹெல உறுமயவின் வேட்பாளர்கள் 7 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
இதற்காக பொது மக்களுக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் உள்நாட்டில் மாத்திரமல்லாது சர்வதேசத்திலும் மிகவும் ஆர்வத்தோடு எதிர்பார்க்கப்பட்ட முடிவுகள் தான் வடக்கு மற்றும் கிழக்கு உள்ளூராட்சி சபை முடிவுகளாகும்.
வடக்கு கிழக்கில் அரசாங்கம் பின் தள்ளப்பட்டுள்ளதுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் வழங்கிய தீர்ப்பை கௌரவிப்பதாகவும் அம்மக்களின் ஜனநாயக உரிமை முழுமையாக வெளிப்பட்டுள்ளதுடன் தமது பிரதிநிதிகளை சுதந்திரமாகவும் தெரிவு செய்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
எனவே வடக்கில் தேர்தல் மோசடிகள் நடைபெற்றதாக யாரும் கூற முடியாது.
கூட்டமைப்பினரைப் பொறுத்தவரையில் பிரிவினைவாதத்துடன் செயற்படுபவர்களாவர்.
ஐக்கிய இலங்கையை துண்டாடும் சக்திகளை ஏற்றுக் கொள்ள முடியாது. ஆகவே கொள்கை ரீதியாக கூட்டமைப்பை புறக்கணிக்கணிப்பதாகவும் தெரிவித்தார்.
உள்ளூராட்சி சபைகளில் பொதுமக்களுக்காகவும் அப்பிரதேசத்தின் அபிவிருத்திக்காகவும் மாத்திரமே கூட்டமைப்பு செயற்பட வேண்டும்.
பிரிவினைவாதத்தைத் தூண்டி விட்டு மக்களை அழிவுப் பாதையில் இட்டுச் செல்லக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
*****************
ஊடகவியலாளர் மீது தாக்குதல்
கொழும்பின் அண்மித்த பிரதேசமான கிரிபத்கொடவுக்குச் செய்தி சேகரிக்கச் சென்ற சிரச ஊடக நிறுவனத்திக் செய்தியாளர்கள்மீது மிலேச்சத்தனமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்குதல்களை நடத்தியவர்கள் அமைச்சர் மேர்வின் சில்வாவின் குண்டர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
கிரிபத்கொடவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டடத் தொகுதியில் தமக்கும் இடம் வழங்க தர வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்து வர்த்தகர்களால் அங்கு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் மீதே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த அமைச்சர் மேர்வின் சில்வாவின் குண்டர் படையினர் சிரச ஊடக நிறுவனத்தின் செய்தியாளரையும் புகைப்படப் பிடிப்பாளரையும் தாக்கியுள்ளனர்.
அத்துடன் வீடீயோக்களையும் பறித்துச் சென்றுள்ளனர் என காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
*****************
ஞானம் பிறந்த கதை!
தமிழர்களுடனான அரசியல் பிரச்சினையைத் தீர்த்துக் கொள்ளும் விடயத்தில் சமஷ்டி ஆட்சிமுறையை நிராகரித்ததன் மூலம் அரசுத் தலைவர் ராஜபக்ஷ அரசு தவறிழைத்துவிட்டதாக முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்தார்.
இரண்டு பதவிக் காலத்துக்கு அரசுத் தலைவராக இருந்த சந்திரிகா, அதன் பின்னர் தீவிர அரசியலில் இருந்து விலகி இருந்தார்.
கடந்த 5 ஆண்டுகளாக அவர் தீவிர அரசியல் கருத்துக்களைத் தெரிவிப்பதில் இருந்து ஒதுங்கி இருந்தார்.
இப்போது மௌனம் கலைத்து மஹிந்த அரசு மீது குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி உள்ளார்.
அரசு விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றிருந்தாலும்கூட, அதைவிடச் சிக்கலான அமைதிக்கான போராட்டத்தை இன்னும் ஆரம்பிக்கவே இல்லை என்றும் சந்திரிகா தெரிவித்துள்ளார்.
முன்னாள் நீதியரசர் கே.பாலகிட்ணர் நினைவு நிகழ்வில் கொழும்பில் உரையாற்றிபோதே அவர் அரசு மீதும் அரசுத் தலைவர் மீதும் குற்றச்சாட்டுக்களைத் தெரிவித்தார்.
அதிகாரங்களைப் பகிராமல் உண்மையான நல்லிணக்கம் எப்போதுமே சாத்தியம் இல்லை என்பதையும் அவர் இங்கு குறிப்பிட்டார்.
அதிகாரங்கள் இன்றி பொருளாதார அபிவிருத்தியைக் கூட மேற்கொள்ள முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
14ஆம் நூற்றாண்டில் தென்னிந்திய அரசர்கள் இலங்கை மீது 52 தடவைகள் படையெடுத்தனர் என்று குறிப்பிட்ட சந்திரிகா, அதனால் சிங்களப் பெரும்பான்மையினர் மத்தியில் காணப்படும் அச்ச உணர்வு கூட அகற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இருப்பினும் தற்போதைய நிலையில் சிங்கள மக்கள் தமிழர்களுடன் சமஷ்டி அடிப்படையில் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வது அவசியம் என்றும் சந்திரிகா வலியுறுத்தினார்.
சமஷ்டியைப் பின்பற்றியதாலேயே, பல இனங்களைக் கொண்டிருந்த போதும் கடந்த 60 வருடங்களாக இந்தியா ஒற்றுமையுடன் இருக்கின்றதும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
*****************
அதிகார பகிர்வு?
காணி மற்றும் காவல்துறை அதிகாரங்களைப் பகிராமல் வடக்கில் இறுதியான அமைதி, நீதி மற்றும் ஜனநாயகத்தைக் கொண்டு வருவதும், அரசியல் தீர்வு ஒன்றை அடைவதும் சாத்தியமற்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிறேமச்சந்திரன் கூறியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் வெற்றியின் தாக்கத்தை புரிந்து கொண்டதோ இல்லையோ, தமிழ் சமூகத்தின் அபிலாசைகளையும், அவர்களின் உண்மையான பிரச்சினைகளையும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்பது துரதிஷ்டமே என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காவல்துறை மற்றும் காணி அதிகாரங்கள் என்பனவற்றை பகிர்ந்து கொள்ள முடியாது அவை பேச்சுக்களுக்கு அப்பாற்பட்ட விடயங்கள் என்ற சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் நிலைப்பாடு குறித்து கருத்து வெளியிட்டுள்ள சுரேஸ் பிறேமச்சந்திரன், இந்த இரண்டுமே நீடித்த அமைதி, நீதி, ஜனநாயகம் மற்றும் வடக்கின் வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானவை என்று குறிப்பிட்டுள்ளார்.
காவல்துறை மற்றும் காணி அதிகாரங்களை பகிர முடியாது என்று சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்தும் பிடிவாதமாக இருந்தால் தற்போதைய பேச்சுக்கள் தொடரும் என்று எதிர்பார்க்கக் கூடாது என்றும் அவர் கூறியுள்ளார்.
ஒன்றுபட்ட இலங்கைக்குள் இனப்பிரச்சினைக்கு கண்ணியமான தீர்வு ஒன்றை காண்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகவே உள்ளது என்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா அரசாங்கத்துடன் தீவிரமான பேச்சுக்களை நடத்த வேண்டிய தேவை உள்ளது.
ஆனால் அதை சிறிலங்கா அரசாங்கம் சரியாகப் புரிந்து கொள்ளாதது வருத்தத்துக்குரியது.
இந்தநிலையை சிறிலங்கா அரசாங்கத்துக்கு எவ்வாறு புரிந்து கொள்ளச் செய்வது என்று தனக்கு தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐ.நா, அனைத்துலக மன்னிப்புச்சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், மற்றும் அனைத்துலக சமூகம் ஆகியன கோருவது போன்று நம்பகம் வாய்ந்த உள்நாட்டு விசாரணைப் பொறிமுறை ஒன்றை சிறிலங்கா அரசாங்கம் ஏற்படுத்தத் தவறினால், அனைத்துலக சமூகத்திடம் இருந்து சிறிலங்கா தனிமைப்படுத்தப்படுவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் சுரேஸ் பிறேமச்சந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இனப்பிரச்சினைக்கு அரசியல்தீர்வு காண்பதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைப்பது காலத்தை வீணடிக்கும் செயல் என்று கூறியுள்ள அவர், நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சிங்கள தீவிரவாத சக்திகளான ஜேவிபி மற்றும் ஜாதிக ஹெல உறுமய ஆகியனவற்றினால் தீர்வு ஒன்றை எட்டுவது சாத்தியமற்றது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
*****************
ஸ்ரீலங்காவின் பிரித்தாளும் தந்திரம் அமெரிக்காவில் பலிக்குமா?
சிறிலங்காவுக்கான உதவிகளை தடை செய்வதற்கு அமெரிக்க காங்கிரசின் வெளிவிவகாரக் குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், சில பல்தேசிய நிறுவனங்கள் சிறிலங்காவுடனான வர்த்தக உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குமாறு அமெரிக்க அரசுக்கு அழுத்தம் கொடுக்க முனைவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொகா கோலா, போயிங் உள்ளிட்ட 12 பல்தேசிய நிறுவனங்கள் சிறிலங்கா-அமெரிக்க வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் வகையிலான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஹிலாரி கிளின்ரனுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன.
இந்தக் கடிதத்தில் சிறிலங்காவின் பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருவதைக் காண்பிக்கும் புள்ளிவிபரங்களைச் சுட்டிக்காட்டி, சிறிலங்கா- அமெரிக்க வர்த்தக உறவுகள் வலுப்படுத்தப்படுவது இருநாடுகளுக்கும் நன்மையை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
சிறிலங்காவுக்கான உதவிகளை அமெரிக்கா தடை செய்யவுள்ளது பற்றி இந்தக் கடிதத்தில் நேரடியாக எதுவும் குறிப்பிடப்படாத போதும் அமெரிக்க அரசுக்கு மறைமுகமாக அழுத்தம் ஒன்றைக் கொடுக்கும் முயற்சியாகவே இது கருதப்படுகிறது.
போர்க்குற்றங்களுக்குப் பொறுப்புக் கூறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் வரை சிறிலங்காவுக்கான உதவிகளைத் தடைசெய்ய அமெரிக்க வெளிவிகாரக்குழு எடுத்துள்ள தீர்மானம் அமெரிக்க செனெட் மற்றும் காங்கிரசில் விவாதிக்கப்பட்டே இறுதி முடிவு எடுக்கப்படும்.
இந்தத் தடை நடைமுறைப்படுத்தப்பட்டால் சிறிலங்கா ஆண்டுதேர்றும் 13 மில்லியன் டொலர் அபிவிருத்தி நிதியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையிலேயே பல்தேசிய நிறுவனங்கள் சிறிலங்காவுடனான வர்த்தக உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக அமெரிக்க அரசுக்கு அழுத்தம் ஒன்றைக் கொடுக்க முனைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
*****************
பீதியோடு வாழும் மக்கள்
மூன்று தசாப்த காலமாக போரினால் பாதிக்கப்பட்ட வடக்கு மக்கள் தொடர்ந்தும் பீதியுடன் வாழ்ந்து வருவதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
நீண்ட கால போர் மற்றும் பொருளாதார நெருக்கடிகளினால பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் போது அவர்களின் மனோநிலை கவனத்திற் கொள்ளப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
லங்காதீப பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கின் பல பகுதிகளில் பௌதீக ரீதியான அபிவிருத்தி ஏற்பட்டுள்ள போதிலும் மக்கள் மத்தியில் இன்னமும் அச்சம் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
வட பகுதி மக்களின் அச்சத்தைப் போக்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே தமது கருத்து என குறிப்பிட்டுள்ளார்.
ஜனநாயக உரிமைகள் மற்றும் ஏனைய வரப்பிரசாதங்களை அனுபவிப்பத்தில் வட பகுதி மக்கள் இன்னமும் பின்தங்கிய நிலையில் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
வடக்கு மக்களின் தீர்க்கப்படாத பல பிரச்சினைகள் இன்னமும் எஞ்சியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மக்களின் பிரச்சினைகளை அடையாளம் கண்டு அவற்றுக்கு காத்திரமான வகையில் தீர்வுத் திட்டங்களை முன்வைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
போர் நிறைவடைந்துள்ள நிலையில் ஓரளவு சுயாதீனத்தன்மை தங்களுக்கு கிடைக்க வேண்டும் என வடக்கு மக்கள் கருதுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரச நிர்வாக சேவைகளில் தமிழ் மக்கள் உள்வாங்கப்படதா காரணத்தினால் தாம் ஒதுக்கப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அண்மையில் அரச நிர்வாக சேவைக்காக 269 பேர் புதிதாக சேவையில் இணைக்கப்பட்ட போதிலும் இதில் ஒரு தமிழருக்குக் கூட சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வேலையற்ற இளைஞர்கள் தொடர்பில் அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
2009ம் ஆண்டு போரின் பின்னர் வடக்கில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றை மறுப்பதற்கில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளனர்.
எனினும், மக்களின் தேவைகளை அறிந்து அவற்றுக்கு ஏற்ற வகையில் திட்டமிட்டு இந்த அபிவிருத்தித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டால் சாதகமான பலன்களை அடைய முடியும் என பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை குறிப்பிட்டுள்ளார்.
*****************