Saturday, 23 July 2011

செய்திகள் 22/07


கறுப்பு ஜூலை நினைவேந்தல்
தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் முக்கிய நாளான கறுப்பு ஜூலை படுகொலைகளை நினைவேந்தி, பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன்பாக அணி திரள்வோம் என பிரித்தானிய தமிழர் பேரவை அழைப்பு விடுத்துள்ளது.
இது தொடர்பாக பிரித்தானிய தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ் மக்கள் மீதான இன அழிப்பின் முக்கிய நாளான கறுப்பு ஜூலை படுகொலைகளை நினைவேந்தி, பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன்பாக நினைவேந்தல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈழத்தமிழ் மக்கள் மீது சிறீலங்கா இனவெறி அரசாங்கங்கள் மேற்கொண்டுவந்த இன அழிப்பின் ஆரம்ப நிகழ்வுகளில் ஒன்றாக 1983 கறுப்பு ஜூலைப் படுகொலைகள் திகழ்கின்றன.
இவ்வாறான இன அழிப்பின் உச்சகட்டமாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் திகழ்ந்துவரும் பின்புலத்தில், தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பினை நினைவேந்தும் அதேவேளை, அதனை ஏனைய மக்களிற்கும் மீண்டும் நினைவூட்டுவோம்.
ஜூலை 23ஆம் நாள் நாளை சனிக்கிழமை மாலை 6:00 மணிமுதல் இரவு 9:00 மணிவரை இல.10, டவுணிங் வீதியிலுள்ள பிரித்தானியப் பிரதமர் அலுவலகம் முன்பாக நினைவேந்தல் நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கறுப்பு உடை அணிந்து இந்த நிகழ்வில் கலந்துகொண்டு, எமது உள்ளக்கிடக்கைகளை வெளிப்படுத்தும் அதேவேளை, இழந்த எம் உறவுகள் மீது ஒன்றாய் இணைந்து உறுதியெடுக்க மக்கள் அனைவரும் அணிதிரண்டு வர வேண்டும் என அன்பாகக் கேட்டுக்கொள்ளுவதாக பிரித்தானிய தமிழர் பேரவை விடுத்துள்ள அறிக்கையில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
*****************
ஸ்ரீலங்காவுக்கான அமெரிக்க உதவி நிறுத்தம்?
வன்னி இறுதிக் கட்ட யுத்தத்தில் சிறிலங்கா அரசினால் நிகழ்த்தப்பட்ட போர்க் குற்றங்கள் தொடர்பில் விரிவான விசாரணை ஒன்றை முன்னெடுக்காவிட்டால் சிறிலங்காவுக்கான உதவிகளை நிறுத்துவதென அமெரிக்கக் காங்கிரஸ் நேற்றுத் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளை தவிர்ந்த ஏனைய அனைத்து நிதியுதவிகளும் நிறுத்துவதற்கு அமெரிக்க காங்கிரஸின் வெளிநாட்டு விவகார குழு அனுமதி வழங்கியுள்ளது.
அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் குழுவே இந்தத் தீர்மானத்தை நேற்று நிறைவேற்றியுள்ளது.
இது தொடர்பான தீர்மானத்தை அமெரிக்க அரசுத் தலைவர் பராக் ஒபாமாவின் ஜனநாயக கட்சியை சேர்ந்த ஹவாட் பேர்மன் முன்மொழிந்தார்.
இலங்கை மீதான போர்க்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை நடத்துதல், ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்தல், அவசரகால சட்டத்தை நீக்குதல் ஆகியன தொடர்பில் குறிப்பிட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
*****************
ஸ்ரீலங்காவுக்கான இந்திய உதவி!
காங்கேசன்துறை துறைமுகத்தின் முதல்கட்ட அபிவிருத்திக்காக 20 மில்லியன் டொலரை வழங்கவுள்ளதாக இந்திய அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது.
தொடர்ந்தும் இந்த துறைமுக அபிவிருத்திக்காகவும் வட மாகாணத்தின் வேறு அபிவிருத்தி திட்டங்களுக்காகவும் நன்கொடைகள், சலுகைக் கடன்கள் என பல வழிகளிலும் உதவ உள்ளதாகவும் இந்தியா கூறியுள்ளது.
இது தொடர்பான ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இலங்கையும் இந்தியாவும் இன்று கைச்சாத்திட்டுள்ளன.
துறைமுகத்தில் நீரில் மூழ்கியுள்ள ஆறு கப்பல்களை மீட்டெடுத்தல், அலைத்தடை அணையினை மறுசீரமைத்தல் போன்ற விடயங்களில் இந்தியா முதலீடு செய்யும் என இந்திய உயர்ஸ்தானிகராலய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த துறைமுக அபிவிருத்தி, இலங்கையின் புனர்நிர்மான வேலைகளை துரிதப்படுத்தி வடக்கில் வழமை நிலையை கொண்டுவரவும், பொருளாதார நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும் பங்களிப்பு செய்யும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே காந்தா கூறினார்.
காங்கேசன்துறை துறைமுகம் இரண்டு கட்டங்களில் அபிவிருத்தி செய்யப்படும்.
அபிவிருத்தி வேலை பூர்த்தியாகும்போது அத்தியாவசியமான நுகர்வுப் பொருட்களையும் வேறு உற்பத்திப் பொருட்களையும் யாழ்ப்பாணத்துக்கு கடல் மூலம் எடுத்துச் செல்ல முடியும்.
இதனால் இப்பிராந்தியத்தில் நுகர்வுப் பொருட்களை குறைந்த விலையில் தாராளமாக பெறக்கூடியதாக இருக்கும் என துறைமுக, பெருந்தெருக்கள் அமைச்சு அதிகாரிகள் கூறினர்.
*****************
இந்தியாவிடம் இருந்து தீர்வுக்கான அழுத்தம் இல்லை
இலங்கையில் அரசியல் தீர்வை காணவேண்டும் என்பது தொடர்பான விடயத்தில் இந்தியாவிடம் இருந்து எவ்விதமான அழுத்தங்களும் பிரயோகிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கா அரசாங்கம் உறுதிபடத் தெரிவித்துள்ளது.
ஆனால் இலங்கையில் இந்திய எதிர்ப்புப் போக்கை விதைக்க பலர் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொருளாளரும் அமைச்சருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
அரசியல் தீர்வு செயற்பாட்டில் இந்தியாவின் செயற்பாடுகள் மற்றும் நகர்வுகள் தொடர்பில் விபரிக்கையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.
அரசியல் தீர்வு விடயத்தில் இந்தியாவிடம் இருந்து எவ்விதமான அழுத்தங்களும் இலங்கைக்கு பிரயோகிக்கப்படவில்லை.
இந்தியா இலங்கையுடன் உயர்ந்தமட்ட உறவுகளைக் கொண்டுள்ள நாடாக உள்ளது.
ஆனால் இலங்கையில் இந்திய எதிர்ப்புப் போக்கை விதைக்க பலர் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர்.
இதே சக்திகள் சுமார் இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் இந்த நாட்டில் இந்திய எதிர்ப்பை உருவாக்கி நெருக்கடிகளை ஏற்படுத்தியிருந்தன.
இன்று மேற்கின் சில சக்திகளினால் தூண்டப்படும் இவ்வாறான சக்திகள் இந்திய எதிர்ப்புப் போக்கை ஏற்படுத்த முயற்சிக்கின்றன.
இந்தியாவில் நெருக்கடியை ஏற்படுத்தவும் இந்திய அரசியலில் தளம்பல் நிலையை உருவாக்கவும் வேறு வெளிநாட்டு சக்திகளுக்கு தேவையேற்பட்டுள்ளது.
அந்த தேவையை நிறைவேற்றும் பொருட்டு இலங்கையில் உள்ள இந்திய எதிர்ப்பு சக்திகளை பயன்படுத்தி நகர்வுகளை முன்னெடுக்க முயற்சிக்கின்றது.
எனவே இந்தியாவினால் அரசியல் தீர்வு விடயத்தில் அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுவதை தாங்கள் நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இந்தியாவின் தம்முடனான தொடர்புகள் தவிர்க்கப்பட முடியாதவையாகும்.
இந்தியா மிக அருகில் உள்ள நாடு. இந்தியாவில் 65 மில்லியன் தமிழ் மக்கள் வாழ்கின்றனர்.
கலாசார விவகாரங்களுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட நாடாக அந்நாடு திகழ்கின்றது.
அத்துடன் தமிழகத்தினால் முன்வைக்கப்படும் நெருக்குதல்கள் மத்திய அரசாங்கத்தில் தாக்கத்தை செலுத்தும்.
எனினும் தென்னிந்தியாவில் பாரிய எதிர்ப்புக்கள் இருந்த நிலையில்தான் இந்திய மத்திய அரசாங்கம் யுத்த நடவடிக்கையின்போது தங்களுக்கு உதவிகளை வழங்கியது. எனவே தாம் இந்தியாவுக்கு நன்றி தெரிவிக்க வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
*****************
பிரச்சனையைத் தீர்க்க அறிவுரை அவசியமில்லை - பிரதமர்
சர்வதேசத்தின் தீர்வு தமக்குத் தேவையில்லை தமது பிரச்சினையை தாமே தீர்த்துக்கொள்ள முடியும் என பிரதமர் டி.எம். ஜயரட்ன பூநகரியில் தெரிவித்துள்ளார்.
தமிழ், சிங்கள மக்கள் தமக்கிடையில் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் இரு சமூகங்களுக்கிடையிலுள்ள இடைவெளி குறைந்து ஒற்றுமை வலுப்பெறும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
கிளிநொச்சி பூநகரி பகுதிகளில் நேற்று முன்தினம் 20 ஆம் திகதி அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தலைமையில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.
தமது எழுச்சியைத் தடை செய்வதற்கு சில சர்வதேச நாடுகளும் அமைப்புக்களும் முயற்சிக்கின்றன.
ஒன்றிணைந்து செயற்படுவது முக்கியம். ஒரு பலமான அரசாங்கம் உள்ளது. பெருமளவிலான பாராளுமன்ற, மாகாண, பிரதேச அதிகாரங்கள் அரசாங்கத்திடமே உள்ளதால் உள்ளூராட்சி சபைகளும் அரசாங்கத்திடம் இருந்தால் உச்ச நன்மையை அடைய முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தினதும் மாகாண சபைகளினதும் சட்டங்களை அங்கீகரிக்கின்ற பலம் அரசுத் தலைவருக்கு உண்டு என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.
*****************
தேர்தலில் இராணுவ தலையீடு
வடக்கில் பணியாற்றும் இராணுவத்தினராலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியாலும் எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரசாரங்களுக்கு இடையூறு விளைவிக்கப்படுவதாகவும் மற்றும் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான புத்திஜீவிகள் ஒன்றியத்தின் தேர்தல்களைக் கண்காணிக்கும் வலையமைப்பு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனைத் தெரிவித்துள்ளது.
542ஆவது படையணித் தலைமையகத்தில் பணியாற்றும் லெப்டினன்ட் ரட்ணாயக்க என்ற அதிகாரி, கரைச்சி பிரதேசசபை எல்லைக்குட்பட்ட தர்மபுரம் கிராம மக்களை அழைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களிக்கும்படி கேட்டார் என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசியல்வாதிகள் தேர்தல் சட்ட விதிகளுக்கு முரண்பட்ட வகையில் பெருந்தொகையான உலர் உணவுப் பொதிகளை தேர்தல் நடைபெறும் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் விநியோகித்துள்ளனர் எனவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
வடக்கில் கடந்த 20 ஆம் திகதி அரசுத் தலைவர் கலந்துகொண்ட பிரசார கூட்டத்துக்கு மக்களை அழைத்துச் செல்வதற்காக தென் பகுதியிலிருந்து இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான 250இற்கும் மேற்பட்ட பஸ்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன என்றும் கண்காணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அரச வளங்கள் மற்றும் அரச அதிகாரத்தைத் தமது தேர்தல் நடவடிக்கைகளுக்குப் பாவிப்பது தேர்தல் சட்ட விதிகளை மீறும் செயல் என்றும் இது சுமார் 15 வருட காலம் வாக்களிக்கும் உரிமையை இழந்திருந்த வட மாகாண மக்கள் தமக்கு விருப்பமான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்குக் கிடைத்த வாய்ப்பை பலாத்காரமாகப் பறிக்கும் செயல் என்றும் மனித உரிமைகள் தொடர்பான புத்திஜீவிகள் அமைப்பின் தேர்தலைக் கண்காணிக்கும் வலையமைப்பு தெரிவிக்கின்றது.
*****************
தேர்தல் சட்ட மீறல்
யாழ்ப்பாணத்திலும் கிளிநொச்சியிலும் சுவரொட்டிகள், பதாதைகள் போன்ற தேர்தல் பிரசார சாதனங்கள் காவல்துறையினரால் அகற்றப்படவில்லை என தேர்தல்கள் திணைக்களத்திற்கு பல புகார்கள் கிடைத்திருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
இந்த பகுதிகளில் பல தேர்தல் கூட்டங்கள் நடைபெற்றன.
இதன்போது பயன்படுத்தப்ட்ட தேர்தல் பிரசார சாதனங்களே அகற்றப்படாமல் உள்ளன என காவல்துறையினர் கூறியதாக தேசப்பிரிய தெரிவித்தார்.
எனினும் இவை விரைவில் அகற்றப்படும் என தேர்தல்கள் திணைக்களத்திடம் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
இதேவேளை, தேர்தல் வன்முறை குறித்து முன்னர் முறைப்பாடுகள் கிடைக்கப்பெறாத பகுதிகளிலும் இம்முறை பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்தார்.
ருவன்வெல்ல, சிலாபம் நகர சபை பகுதிகளிலிருந்து பாரதூரமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என அவர் கூறினார்.
குண்டர்களின் நடமாட்டம், முறையான இலக்கத் தகடு இல்லாத வாகனங்கள், மிரட்டல் சம்பவங்கள் குறித்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அவர் கூறினார்.
*****************