அதிகரித்து வரும் சீன ஆதிக்கம்
இந்து சமுத்திரத்தில் தனது செல்வாக்கை அதிகரித்துக்கொள்ள விரும்பும் சீனா, இலங்கைக்கான உதவிகளை 2005 ஆம் ஆண்டிலிருந்து சடுதியாக அதிகரித்துள்ளதாக அமெரிக்க நாடாளுமன்ற ஆய்வறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் போர்க் குற்றங்கள் தொடர்பாக குற்றவியல் விசாரணை நடத்த வேண்டும் என ஐ.நாவும் சர்வதேச சமூகமும் நிர்ப்பந்திப்பது எதிர்மறையான விளைவை ஏற்படுத்தலாம் எனவும் அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சில ஆய்வாளர்கள் மற்றும் அவதானிப்பாளர்களின் கருத்தின்படி, சீனா தனது முத்து மாலை கடல் தந்திரோபாயத்தின் ஒரு பகுதியாக இந்து சமுத்திரத்தின் வடபிராந்திய துறைமுக அணுகலை விருத்தி செய்வதற்காக இலங்கை அரசாங்கத்துடனான செல்வாக்கை நாடுவதாக அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்பிராந்தியத்தில் துறைமுகங்களை அமைக்கும் சீனாவின் முயற்சி குறித்து இந்திய பாதுகாப்பு திட்டமிடலாளர்கள் கவலை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிவதாகவும் இலங்கை தொடர்பான 8 பக்கங்கள் கொண்ட இவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையின் தென்கிழக்கு கரையோரத்தில் ஹம்பாந்தோட்டையில் துறைமுகம் அமைப்பதற்காக குறிப்பிடத்தக்க முதலீடுகளை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தானின் கவாடர், பங்களாதேஷின் சிட்டகொங், பர்மாவின் சிட்டாவே ஆகிய துறைமுகங்களை அமைப்பதற்கு சீனா உதவியதாக தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையில் இடம்பெற்ற போர்க் குற்றங்கள் குறித்து விசாரிப்பதற்கான விசாரணைக் குழுவை அமைக்க வேண்டும் என்ற மனித உரிமை அமைப்புகளினதும் பல நாடுகளினதும் கோரிக்கையை வீட்டோ அந்தஸ்துள்ள இரு நாடுகளின் எதிர்ப்பு காரணமாக பாதுகாப்பு சபை நிறைவேற்றும் வாய்ப்பு குறைவு எனவும் அவ்வறிக்கை தெரிவித்துள்ளது.
****************
விமல் வீரவன்சவின் புதிய கண்டுபிடிப்பு
பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சமபள உயர்வுகோரி மேற்கொண்டு வரும் போராட்டங்களின் பின்னணியில் அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றோபேட் ஒ பிளேக் செயற்பட்டு வருவதாக அமைச்சர் விமல்வீரவன்ஸ குற்றம் சாட்டியுள்ளார்.
பொரளையில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போது அமைச்சர் விமல் வீரவன்ஸ இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தால் வழங்கமுடியாத சம்பள விகிதத்தை உயர்த்தக் கோரி விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதன் பின்னணியில் அமெரிக்காவின் துணை வெளிவிவகாரச் செயலாளர் றொபேட் ஒ பிளேக்கின் அனுசரணையுடன் இயங்கும் அரசசார்பற்ற நிறுவனங்களே செயற்பட்டு வருகின்றன.
ஆனால் இந்த போராட்டத்தை விரிவுரையாளர்கள் அல்லாத சிறுபான்மை குழுவே மேற்கொண்டு வருகின்றது.
ஊதிய உயர்வு வழங்கப்படும். ஆனால் இவர்கள் கேட்கும் சம்பள உயர்வு விகிதம் சாத்தியமற்றது.
நாட்டை சீர்குலைப்பதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் பல்கலைகழகங்களில் இருந்து தமது போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார்.
****************
அரசை எச்சரித்த சம்பந்தன்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்களுக்கு எதிராக அரங்கேற்றப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளையும் அரசு நிறுத்த வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
அப்படி நிறுத்தாவிட்டால் தனது தலைமையில் தமிழ் மக்களை ஒன்று திரட்டி அரச எதிர்ப்பு பிரசாரங்களை ஆரம்பிப்போம் என்றும் அரசும் தோற்கடிக்கப்படும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றில் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தற்போதைய நிலைவரம் மற்றும் அரசியல் தீர்வு தொடர்பான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை நேற்று நாடாளுமன்றில் முன்வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு சூளுரைத்தார்.
தமிழ் மக்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட தொடர்ச்சியான வன்முறைகள், தமிழ் மக்களின் நியாயமான அரசியல் மற்றும் ஏனைய அபிலாஷைகளை அரசியல் ரீதியாக நிறைவேற்றத் தவறியமை மற்றும் நாடு எந்த அரசமைப்பின் கீழ் சுதந்திரம் அடைந்ததோ அந்த அரசமைப்பை நீக்கிவிட்டு தமிழ் மக்களின் கருத்தொருமிப்பின்றிப் புதிய அரசமைப்பை இயற்றியமை ஆகியவையே சுய நிர்ணய உரிமைக்கான கோரிக்கைக்கும் சுமார் மூன்று தசாப்தகாலம் நீடித்த தமிழ் இளைஞர்களின் ஆயுதப் பேராட்டங்களுக்கும் இட்டுச்சென்றது.
இந்தப் பிணக்கு சம்பந்தப்பட்ட பிரதான விடயங்களைக் கையாளுவதற்கும் நீண்ட காலமாகப் புரையோடிப் போயுள்ள இந்தப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வொன்றை உருவாக்குவதற்கும் பல நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
ஆயுதப் போர் நடைபெற்ற காலம் முழுவதும் குறிப்பாக அதன் இறுதி வருடங்களிலும், இறுதிக் கட்டங்களிலும் அதிக எண்ணிக்கையான தமிழ்மக்கள் கொல்லப்பட்டு அல்லது அங்கவீனமாக்கப்பட்டு பல இலட்சக்கணக்கான தமிழ்மக்கள் இடப்பெயர்வுக்கு உட்பட்டு, அவர்களுடைய வீடுகளும், ஏனைய சொத்துகளும் அழிக்கப்பட்டு, அவர்கள் நிர்க்கதிக்குள்ளாக்கப்பட்டு அடிப்படை வசதிகளுடன் தமது வாழ்வை மீளத் தொடங்க முடியாது உள்ளது.
தற்போதைய சூழ்நிலையில் தம்மைத் தாமே காத்துக்கொள்ள முடியாதுள்ள இந்தளவு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பக்கூடிய வகையில் அவர்களது அவசர தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய எந்தவொரு வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சிநிரலும் இல்லாதுள்ளது.
இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டியது அரசின் கடமை.
முரண்பாட்டுக்குக் காரணமான அடிப்படை விடயங்களைத் தீர்ப்பதற்கான ஏற்றுக்கொள்ளக்கூடியதொரு அரசியல் தீர்வொன்றை துரிதமாகக் காணவேண்டும்.
இடம்பெயர்ந்த மற்றும் பாதிக்கப்பட்ட மக்கள் தமது வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பவும் மீள ஆரம்பிக்கவும் உதவும் பொருட்டு வடிவமைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரலொன்றைத் துரிதகதியில் நடைமுறைப்படுத்த வேண்டும்.
தமிழ் மக்கள் மீது பாதகமான அரசியல், சமூக, பொருளாதார மற்றும் கலாசார தாக்கங்களை ஏற்படுத்துகின்ற பல்வேறு நடவடிக்கைகளை மாற்றியமைப்பதற்கும் சீர்செய்யவும் மற்றும் நிவர்த்திசெய்யவும் அவசர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென வலியுறுத்துவதாகவும் சம்பந்தன் தனது உரையில் தெரிவித்துள்ளார்.
****************
விடிவைத் தேடும் யுத்த விதவைகள்
யுத்தம் மற்றும் காரணங்களினால் இலங்கையில் 5 இலட்சத்து 3684 பேர் விதவைகளாகியுள்ளனர்.
இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் சுயதொழில் வாய்ப்புகள் வழங்கவும் உதவிகள் வழங்கவும் பல்வேறு திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு இந்த வருடத்தில் 4 கோடி 50 இலட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஆளும் தரப்பு கொரடா அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார்.
வாய்மூல விடைக்காக சிறுவர் அபிவிருத்தி மகளிர் மேம்பாட்டு அமைச்சரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் சார்பாக பதிலளித்த அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மேல் மாகாணத்தில் ஒரு இலட்சத்து 30ஆயிரத்து 18 விதவைகளும் மத்திய மாகாணத்தில் 65ஆயிரத்து 880 விதவைகளும் ஊவா மாகாணத்தில் 33ஆயிரத்து 531 பேரும் சப்ரகமுவ மாகாணத்தில் 45ஆயிரத்து 989 பேரும் தென் மாகாணத்தில் 58ஆயிரத்து 221 பேரும் வட மேல் மாகாணத்தில் 74ஆயிரத்து 5 பேரும் வட மத்திய மாகாணத்தில் 36ஆயிரத்து 539 விதவைகளும் உள்ளனர்.
இவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தவும் சமூக அந்தஸ்தை மேம்படுத்தவும் சுயதொழில் பயிற்சி வழங்கவும் உதவிகள் அளிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து விதவைகளினதும் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த 2011 இல் 4 கோடி 50 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால் நடைமுறையில் அவர்கள் தமது நாளாந்த வாழ்க்கையை கொண்டு செல்ல எந்த அடிப்படை வசதிகளும் அற்றவர்களாகவே வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
****************
அவலங்களுக்கு முடிவு என்ன?
வன்னியில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு எதிராக இலங்கை இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்தில் ஒரு லட்சம் வரையிலான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளமை ஐ.நா. அறிக்கை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைக் குழு ஆகியன வெளியிட்ட அறிக்கைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக ரைம்ஸ் ஒப் இந்தியா என்ற ஊடகத்திற்கு வழங்கிய தகவல் ஒன்றில் இந்தியாவின் பெங்களூர் பல்கலைக் கழகத்தின் அரசறிவியற்துறைப் பேராசிரியர் போல் நியூமன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வன்னிப் போரின்போது இலங்கை இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டிருந்த மோதல் தவிர்ப்பு வலயத்திலிருந்து காயமடைந்த சுமார் பதினான்காயிரம் பேரை தாம் அரச பகுதிக்கு சிகிச்சைக்காக வெளியேற்றியிருந்ததாக சர்வதேச செஞ்சிலுவைக் குழு கணிப்பிட்டிருந்தது.
அத்துடன் இப்போரில் சுமார் ஐயாயிரம் பேர் வரை தமது உடலுறுப்புக்களை இழந்திருந்தனர்.
2008ம் ஆண்டில் சுமார் எழுபதாயிரம் மக்கள் கொல்லப்பட்டதாகவும் அது மேலும் குறிப்பிட்டுள்ளதை போல் நியூமன் சுட்டிக் காட்டியுள்ளார்.
அத்துடன் இராணுவத்தினரால் மருத்துவமனைகள், பாடசாலைகள் மற்றும் பொதுக் கட்டிடங்கள் என்பன மீது திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
****************
சந்திப்பின் இரகசியம் என்ன?
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஐக்கிய நாடுகள் சபையின் பொது செயலாளர் பான் கீ மூனுக்கும் இடையிலான சந்திப்பு தொடர்பில், நேற்றைய தினம் ஐக்கிய நாடுகள் சபையில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் போது இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பில் பேசப்பட்டதா என செய்தியாளர்கள், சபையின் பேச்சாளர் மார்ட்டின் நெசர்கீயிடம் கேள்வி எழுப்பினர்.
இது குறித்து தாம் அறியவில்லை என பதில் வழங்கிய பேச்சாளர், எனினும் இந்த விடயத்தை ஆராய்ந்து பின் அறிவிப்பதாக குறிப்பிட்டார்.
அத்துடன், இந்த சந்திப்பின போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் எவையும் வெளியாகவில்லை என கேட்கப்பட்ட கேள்விக்கு பேச்சாளர் பதில் வழங்கவில்லை.
இதேவேளை இந்த சந்திப்பின் போது, சபையின் தலைமை அதிகாரி விஜய்நம்பியாரும் கலந்துக் கொண்டதாக கேள்வி எழுப்பப்பட்டது.
இது குறித்தும் தமக்கு தகவல் கிடைக்கவில்லை என பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
****************
கொல்லப்பட்ட உண்மையை மறைக்கும் அரசு- ஐதேக!
இறுதி யுத்தத்தின் போது அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆனால் அரசு அதை மறுத்து வருகின்றது என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
அப்பாவி மக்கள் கொல்லப்பட்டமை உறுதி. ஆனால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தம்மிடம் இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நேற்றுத் தெரிவித்தார்.
வடக்கு, கிழக்கில் தற்போது நிலவுகின்ற நிலவரம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளுமன்றில் ஒத்திவைப்புவேளை பிரேரணை ஒன்றைக் கொண்டுவந்தார்.
இந்தப் பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றியபோதே லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்ற உறுப்பினர் இதனைக் கூறினார்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வைப் பெற்றுத்தருமாறு ஐக்கிய நாடுகள், ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகியன வலியுறுத்தி வருகின்றன.
இதில் அரசு பொறுப்புடன் செயற்படவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இனப்பிரச்சினைக்குத் தீர்வுத்திட்டத்தை முன்வைக்க புத்திஜீவிகள் குழு, சர்வகட்சிகள் பிரதிநிதிகள் குழு ஆகியவற்றை மஹிந்த ராஜபக்ஷ நியமித்தார்.
அந்தக் குழுக்களினால் பிரேரிக்கப்பட்ட யோசனைகளை ஐக்கிய தேசியக்கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் வரவேற்றன.
ஆனால் அரசு அவற்றை நடைமுறைப்படுத்தவில்லை.
இந்த நிலையில், நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க அரசு முயற்சித்து வருகிறது.
இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக அரசும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீர்க்கமான இணக்கப்பாட்டுக்கு வந்தால் அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பூரண ஆரவளிக்குமே தவிர இடையூறாக இருக்காது.
அதேபோன்று, இனப்பிரச்சினைக்கு இந்த வருடத்துக்குள் அரசு தீர்வு வழங்காவிட்டால் இலங்கை பாரதூரமான பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் என்பது உறுதி எனவும் தெரிவித்தார்.
இதேவேளை, 18ஆவது அரசமைப்புத் திருத்தத்தைக் கொண்டுவந்தபோது எதிர்க்கட்சிகள் எதிர்த்தன.
ஆனால் தான்தோன்றித்தனமாக அரசு அதை அமுல்படுத்தியது.
இருந்தும், சர்வகட்சிகள் பிரதிநிதிகள் குழு மற்றும் புத்திஜீவிகள் குழு ஆகியவற்றின் யோசனைகளை தாம் ஆதரித்தோம்.
ஆனால் அதை நடைமுறைப்படுத்த அரசு முன்வரவில்லை.
அவற்றை அடிப்படையாகக் கொண்டு ஏன் அரசு அரசியல் தீர்வு வழங்க முடியாது? எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
வடக்கிலும், கிழக்கிலும் இன்று இராணுவ ஆட்சியே நிலவுகின்றது.
அனைத்து விடயங்களிலும் இராணுவம் தலையிடுகின்றது.
அங்கு நிலவுகின்ற இராணுவ ஆட்சியை அகற்றி தமிழ் மக்களுடன் நல்லெண்ண சமூக உறவை அரசு ஏற்படுத்திக் கொள்ளவேண்டும்.
அத்துடன், அந்தந்த மாவட்டத்திலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
****************
ஐநாவைக் கட்டுப்படுத்தும் ஸ்ரீலங்கா
ஐ.நா நிபுணர்குழுவின் போர்க்குற்ற அறிக்கை ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படாது என்று ஸ்ரீலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அவ்வாறு சமர்ப்பிக்கப்பட்டால் கூட அது தோற்கடிக்கப்படும் என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
ஐ.நா நிபுணர் குழு அறிக்கை தொடர்பாக சில நாடுகள் கொண்டிருந்த நிலைப்பாட்டை மாற்றுவதில் சிறிலங்காவுக்கு வெற்றி கிடைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அணிசேரா நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் 22 நாடுகள் இந்த அறிக்கைக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
அத்துடன் சிறிலங்காவின் வெளிவிவகாரச் சேவையில் இராஜதந்திரிகளாக இராணுவ அதிகாரிகளை நியமித்துள்ளதால் தான் அனைத்துலக அழுத்தங்களை சந்திக்க வேண்டியுள்ளதாக ஐதேக நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் அமரதுங்க கூறிய குற்றசாட்டையும் ஜி.எல்.பீரிஸ் நிராகரித்துள்ளார்.
ஐ.நாவுக்கான பதில் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியாக உள்ள மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வா சனல் 4 குற்றச்சாட்டை முறியடிப்பதில் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இராணுவ அதிகாரிகளை வெளிநாடுகளில் இராஜதந்திரிகளாக நியமித்ததால் தான், அங்கு புலிகளை முடக்க முடிந்ததுடன், பல முக்கிய தலைவர்களையும் கைது செய்ய முடிந்துள்ளதாகவும் ஜி.எல்.பீரிஸ் மேலும் கூறியுள்ளார்.
****************
மறைந்த தமிழரிஞருக்கு மக்கள் அஞ்சலி
மறைந்த தமிழறிஞர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் பூதவுடலுக்கு நேற்று இரவு முதல் மக்கள் அஞ்சலி செலுத்திவருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு மாரடைப்பினால் மரணமடைந்த பேராசிரியர் சிவத்தம்பியின் பூதவுடல் நேற்று இரவு முதல் தெஹிவளையிலுள்ள அன்னாரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
அன்னாரது பூதவுடல் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு பொரளை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படுமென்று உறவினர்கள் அறிவித்துள்ளனர்.
பேராசிரியரின் மறைவையடுத்து உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெரு மளவானோர் அனுதாபம் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் மறைவையொட்டி அவரது பிறந்த மண்ணான கரவெட்டிப் பிரதேசம் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளது.
அன்னார் ஆரம்பக் கல்வியைப் பயின்ற கரவெட்டி மாணிக்கவாசகர் வித்தியாலயத்தில் அன்னாரின் உருவப்படம் வைக்கப்பட்டு சுடர் ஏற்றப்பட்டு, கறுப்புக்கொடியும் பறக்கவிடப்பட்டுள்ளது.
****************