தொடரும் இழுத்தடிப்பு!
அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான நேற்றைய பேச்சுவார்த்தையின் போது ஏற்கனவே கூட்டமைப்பினால் கேட்கப்பட்டிருந்த கேள்விகளுக்கு எழுத்து மூலம் பதிலளிப்பதற்கென கால அவகாசம் கோரியிருப்பதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
இரு தரப்புக்கும் இடையில் தொடர்ந்தும் பேச்சுக்களை நடத்தி, சுமூகமானதொரு தீர்வினை எட்டுவதற்கும் தீர்மானிக்கப்பட்டிருக்கின்ற அதேவேளை, மீண்டும் அடுத்த மாதம் 4 ஆம் திகதி கூடிப் பேசுவதெனவும் இணக்கம் காணப்பட்டிருக்கின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழர் பிரச்சினை மற்றும் அரசியல் தீர்வு தொடர்பில் அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் இடம் பெற்றுவருகின்ற தொடர் பேச்சுவார்தத்தையின் 9 ஆவது கட்டப் பேச்சு நேற்று பிற்பகல் பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் இடம்பெற்றது.
இதன்போது, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இரா. சம்பந்தன் மற்றும் எம்.சுமந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இதேவேளை, அரசாங்கத்தின் சார்பில் அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா, பேராசியர் ஜீ.எல்.பீரீஸ் மற்றும் சஜின் வாஸ் குணவர்த்தன ஆகியோர் இந்தப் பேச்சில் கலந்துகொண்டனர்.
ஏழாவது சுற்றுப் பேச்சுவார்த்தை வரையில் பேசப்பட்ட இணங்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் பல கேள்விகளை முன்வைத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அதற்கு அரசாங்கம் எழுத்து மூலமான பதிலைத் தரவேண்டும் என உறுதியாகக் கூறியிருந்த நிலையில் அதற்கு அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருந்தது.
எனினும், இதுவரையிலும் அரசாங்கத்தினால் எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை.
இது தொடர்பாகவும் நேற்றைய பேச்சின் போது கலந்துரையாடப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகளுக்குப் பதிலளிக்க அரசாங்கம் தயாராக இருக்கின்றது.
எனினும், அதற்கு கால அவகாசம் தேவைப்படுகின்றது.
இதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் எடுத்துக் கூறியுள்ளோம்.
தமது கோக்கையை கூட்டமைப்பும் ஏற்றுக் கொண்டுள்ளது.
இரு தரப்புக்கிடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முன்னெடுப்பதென இங்கு இணக்கம் காணப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
நேற்றைய பேச்சுக்களின் போது கலந்துரையாடப்பட்ட விடயங்கள் மற்றும் தீர்மானங்கள் தொடர்பில் இன்று அறிவிக்கப்படவிருப்பதாகவும் தெரியவருகிறது
***************
தெரிவுக்குழுத் திட்டம் பின்போடப்பட்டது!
நாடாளுமன்றத் தெரிவுக் குழு யோசனைத் திட்டம் தற்போதைக்கு முன்வைக்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்படுகிறது.
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கத்தினால் நாடாளுமன்றத் தெரிவுக் குழுவொன்றை உருவாக்கும் யோசனைத் திட்டமொன்று முன்வைக்கப்படவிருந்தது.
கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த இவ் உத்தேச பிரேரணை நாடாளுமன்றில் முன்வைக்கப்படவிருந்தது.
எனினும், இறுதி நேரத்தில் இந்தத் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
குறித்த திட்டத்தை முன்வைப்பதற்கு இணக்கம் தெரிவித்து ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பலை காரணமாக சில காலத்திற்கு அரசாங்கம் இந்த உத்தேச திட்டத்தை கைவிடத் தீர்மானித்திருக்கலாம் என சுட்டிக்காட்டப்படுகிறது.
***************
இந்திய அழுத்தமா?
இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே இலங்கை அரசு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அமைக்கும் பிரேரணையை நேற்று சபையில் சமர்ப்பிக்கவில்லை என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் கலாநிதி விக்கிரமபாகு கருணாரட்ன நேற்றுத் தெரிவித்தார்.
அரிசியில் ஆசனிக் அமிலம் அடங்கியுள்ளது, பெற்றோலில் திரவம் கலக்கப்பட்டுள்ளது.
ஆனால், இவை எப்படி நடந்தன என்று தமக்குத் தெரியாது என பொறுப்புவாய்ந்த அமைச்சர்கள் கூறுகின்றனர்.
அமைச்சர் சம்பிக்க ரணவக்க தனக்கு கடவுள் கனவில் கூறினார் எனத் தெரிவிக்கின்றார்.
இந்த அரசை நம்பி எதிர்வரும் தேர்தல்களில் மக்கள் அவர்களுக்கு வாக்களிப்பார்களாயின் அது நமக்கு நாமே வெட்டிக்கொள்ளும் குழியாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் பிரேரணை சபையில் சமர்ப்பிக்கப்படாமை தொடர்பாகவும், 23ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் தொடர்பாகவும் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
பிரதான எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக் காரணமாகவே அரசு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்கும் பிரேரணையை நேற்று சபையில் சமர்ப்பிக்கவில்லை எனக் கூறுப்படுவதில் எவ்வித உண்மையுமில்லை.
இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே அரசு பிரேரணையை சபையில் சமர்ப்பிக்கவில்லை. இதுவே உண்மை எனவும் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமாராவ் மஹிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு, அரசு ஏற்கனவே இந்திய அரசுக்கு வழங்கிய உறுதிமொழிகளுக்கமைய தமிழ் மக்களுக்குத் தீர்வை வழங்க முன்வரவேண்டும் என கடுந்தொனியில் வலியுறுத்தினார் என தனக்கு அறியவந்துள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
***************
பாலியல் போராயுதம்!
சிறிலங்கா உள்ளிட்ட சில நாடுகளில் சிறுபான்மையினப் பெண்கள் மீது பாலியல் வல்லுறவு போரின் போதான ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாக அனைத்துலக சிறுபான்மையினர் உரிமைகளுக்கான குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த அமைப்பு நேற்று லண்டனில் வெளியிட்ட 2011ம் ஆண்டுக்கான அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சுதேச மற்றும் சிறுபான்மை இனக்குழுமங்களைச் சேர்ந்த பெண்கள் பாலியல் வல்லுறவு மற்றும் ஏனைய வடிவங்களிலான பாலியல் கொடுமைகளையும் சித்திரவதைகள், கொலைகளையும் சந்திப்பதாகவும் அனைத்துலக சிறுபான்மையினர் உரிமைகளுக்கான குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் மற்றும் சுதேச இனக்குழுமங்களைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்துக்காவே இந்தப் பெண்கள் இத்தகைய கொடுமைகளை எதிர்கொள்வதாகவும் இந்த சுட்டிக்காட்டியுள்ளது.
சிறுபான்மையின மற்றும் சுதேச இனக்குழுமங்களைச் சேர்ந்த பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து வருவதாகவும், தெரிவித்துள்ள இந்த அமைப்பு அமைதியான நிலையை விடவும் போரின் போது தான் இவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் கூறியுள்ளது.
சிறிலங்கா, ஈராக், ஆப்கானிஸ்தான்,கொங்கோ, கௌதமாலா, சூடான், சோமாலியா,கொலம்பியா, கிர்கிஸ்தான், பர்மா போன்ற நாடுகளில் இத்தகைய நிலைமை காணப்படுவதாகவும் அனைத்துலக சிறுபான்மையினர் உரிமைகளுக்கான குழுவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
போரின்போது இந்த நாடுகளில் சிறுபான்மையினப் பெண்கள் மீது பாலியல் வல்லுறவுகள் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்படுவதாகவும் இந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
***************
நாடு திரும்பிய மகிந்தவின் தூதுவர்
எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தமது அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு இன்று அதிகாலை நாடு திரும்பினார்.
ரணில் விக்கிரமசிங்க தமது பயணத்தின் போது அமெரிக்க ராஜதந்திரிகளுடனும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனுடனும் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.
ரணில் விக்கிரமசிங்கவுடன் ஐ.நாவுக்கான இலங்கையின் பிரதி வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திரசில்வாவும் இந்தச் சந்திப்புக்காக பான் கீமூனின் செயலகத்துக்குச் சென்றிருந்தார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பின்போது புகைப்படம் எடுப்பதற்கு ஊடகவியலாளர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இந்தச் சந்திப்பை புகைப்படம் எடுப்பதற்கு அனுமதிக்குமாறு ஊடகவியலாளர்கள் விடுத்த வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
கடந்தவாரம் இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவர் சிபிலிவ்னி, ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கீமூனைச் சந்தித்தபோது அதை புகைப்படம் எடுக்க அனுமதித்த ஐ.நா. அதிகாரிகள் இந்தச் சந்திப்பை புகைப்படம் எடுக்க ஊடகவியலாளர்களை அனுமதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, வழக்கமாக ஐ.நா. செயலாளர் நாயகத்தின் சந்திப்புகள் தொடர்பாக அவரது அதிகாரபூர்வ இணையதளத்தில் புகைப்படங்கள் வெளியிடப்படுவது வழக்கமாக இருந்தாலும், அதிலும் எந்தப் புகைப்படமும் வெளியிடப்படவில்லை.
இந்தச் சந்திப்புப் பற்றிய தகவல்களும் அதில் பிரசுரிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
***************
வேட்பாளரை அச்சுறுத்தும் மர்ம நபர்கள்
யாழ். மானிப்பாயில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலிகாமம் தென்மேற்கு பிரதேச சபை வேட்பாளரின் வீட்டில் நாய் ஒன்றை வெட்டி எறிந்து நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் அட்டகாசம் புரிந்துள்ளனர்.
மானிப்பாய் பிரதேசத்தில் உள்ள கட்டுடை பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலி.தென்மேற்கு பிரதேச சபை வேட்பாளரான ஓய்வுபெற்ற கிராம சேவையாளர் ச.சிவகுமாரின் வீட்டில் நேற்றிரவு மர்ம நபர்கள் சிலரால் நாய் ஒன்று வெட்டப்பட்டு உடல் வீட்டின் வாசற் கதவருகில் போடப்பட்டதுடன் நாயின் தலையை தடியில் செருகி வாயிற் கதவில் கட்டியிருந்தனர்.
அத்துடன், வாயிற் கதவையும் மர்ம நபர்கள் இரும்புச் சங்கிலியால் பிணைத்து பூட்டினால் பூட்டியிருந்தனர்.
காலையில் மர்ம நபர்கள் சிலர் காணியின் சுவரில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளைக் கிழித்ததுடன், நேற்றிரவு இத்தகைய அட்டகாசத்தையும் மர்ம நபர்கள் புரிந்ததாகவும் வேட்பாளர் சிவகுமாரினால் தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக மானிப்பாய் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
***************
அதிகாரம் வழங்காமல் தீர்வில்லை!
மாகாணசபைகளுக்கு அதிகாரங்களை வழங்குவதன் மூலம் வடக்கு கிழக்கு பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது என சிரேஸ்ட சட்டத்தரணி கொமின் தயாசிறி தெரிவித்துள்ளார்.
செனல்4 ஊடகத்தின் காணொளி போலியானது என்ற போதிலம் வெறுமனே அதனை நிராகரிப்பதன் மூலம் மட்டும் குற்றச்சாட்டுக்களிலிருந்து மீள முடியாது எனவும், அவற்றைப் பொய்பிக்கக் கூடிய ஆதாரங்கள் முன்வைக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசாங்கம் விரிவான விசாரணைகளை நடத்தி சர்வதேச ரீதியாக எழும் குற்றச்சாட்டுக்களை முறியடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச விசாரணைகளுக்கு அனுமதி அளித்தல் நாட்டின் சுயாதீனத்தன்மைக்கு குந்தகம் ஏற்படக் கூடுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போரின் பின்னர் சர்வதேச சமூகத்தின் அழுத்தங்கள் அதிகரிப்பதற்கு இலங்கை தூதுவராலயங்களின் குறைபாடே பிரதான காரணி என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
போர் இடம்பெற்ற காலத்தில் வெளிவிவகார அமைச்சின் பணிகளை அரசுத் தலைவர் நேரடியாக கண்காணித்து வந்ததாகவும் பின்னர் அந்த நடைமுறையில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
13ம் திருத்தச் சட்ட மூலத்தை நடைமுறைப்படுத்த அனுமதிக்கக் கூடாது எனவும் அது இந்தியாவின் விருப்பத்திற்கு அமைய உருவாக்கப்பட்ட யோசனைத் திட்டமாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அரசியல்வாதிகளுக்கு அதிகாரத்தை வழங்காது தமிழ் மக்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படக் கூடிய வகையிலான தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
***************
அரசின் நோக்கம் என்ன?
யுத்தத்தால் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றம் செய்யும் மீள்குடியேற்ற அமைச்சுக்கு 170 கோடி ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் பாதுகாப்பு படைத் தலைமையக புதிய கட்டிடத்தை மட்டும் நிர்மாணிப்பதற்கென 2000 கோடி ரூபாவை அரசாங்கம் செலவிடுவதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பாதுகாப்பு அமைச்சுக்கான குறைநிரப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே ஹர்ச டி சில்வா இந்த தகவலை வெளியிட்டார்.
2011 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டத்தின் மூலம் பாதுகாப்பு செலவினங்களுக்கென 215.2 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இது மொத்தச் செலவினத்தின் 20 சதவீதமாகும்.
தற்போது இந்த 20 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்படுகிறது.
இதன் மூலம் பாதுகாப்பு அமைச்சுக்கான மொத்த செலவின் 235.2 பில்லியன் ரூபாவாக அதிகரித்துள்ளது.
ஆகவே, மொத்தச் செலவினத்தில் பாதுகாப்பு செலவினம் 21.8 சதவீதமாக அதிகரித்துள்ளது.
எனினும் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் மீள்குடியேற்ற அமைச்சுக்கென்று 1.7 பில்லியன் ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
30 வருடகால யுத்தத்தில் இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றம் செய்ய இந்த தொகையே ஒதுக்கப்பட்டிருக்கிறது.
இவ்வாறான நிலையில் செலவு செய்வதில் எதற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என்பது பற்றி சிந்திக்க வேண்டியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
***************