Friday, 1 July 2011

செய்திகள் 01/07


விரைந்து விசாரிக்க கோரிக்கை
போர்க்குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறிலங்கா அரசாங்கம் அதிக காலம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று கூறியுள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் நவிபிள்ளை, நம்பகமான விசாரணையை முன்னெடுக்கத் தவறினால் அனைத்துலக நடவடிக்கைக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.
குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறிலங்கா தீவிரமாக விசாரிக்க வேண்டும் என்று ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் மத்தியில் வலுவான எதிர்பார்ப்பு இருப்பதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
சிறிலங்காவில் முன்னர் நடத்தப்பட்ட உள்ளக விசாரணைகள் முழுமை பெறாமல் தோல்வியடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்தகைய விசாரணை அறிக்கைகள் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என்றும், ஒருவருக்கேனும் தண்டனையை கொடுக்கப்படவில்லை என்றும் ஐ.நா மனிதஉரிமைகள் ஆணையாளர் குற்றம்சாட்டியுள்ளார்.
அதுபோன்றே மீண்டும் நடந்தால், அனைத்துலக சமூகத்தின் தலையீட்டின் மூலம் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ள நவிபிள்ளை, ஐ.நா மனிதஉரிமைகள் பேரவை இந்த விவகாரத்தில் தீவிரமாகச் செயற்படும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் கூறியுள்ளார்.
போர்க்குற்றங்கள் தொடர்பாக சிறிலங்கா விரைவான விசாரணைகளை நடத்த வேண்டும் என்று கடந்த செவ்வாயன்று அமெரிக்கா வலியுறுத்தியிருந்த நிலையிலேயே, ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் இந்த எச்சரிக்கை வெளிவந்துள்ளது.
**************
தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகளாக மாறத்துடிக்கும் அரசு!
அரசாங்கமோ அரசுத் தலைவரோ தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதியாக எவரையும் ஏற்றுக் கொள்ளவில்லை என ஸ்ரீலங்கா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சகலரும் மக்கள் பிரதிநிதிகள் என்பதாலேயே இனப்பிரச்சினைத் தீர்வுக்காக பாராளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானத்தை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் தெளிவுபடுத்திய அமைச்சர், 2009 மே மாதத்திற்கு முன்பிருந்த நிலை நாட்டில் இன்றில்லை. மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன எனத் தெரிவித்தார்.
இத்தகைய சூழலில் பாராளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றின் மூலம் சிறந்த தீர்வொன்றைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை அரசாங்கத்திற்கு உள்ளது எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளைத் தீர்மானிக்கும் செய்தியாளர் மாநாடு பதில் அமைச்சரவைப் பேச்சாளர் அநுர பிரியதர்ஷன யாப்பாவின் தலைமையில் நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்றது.
இம் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர் சுசில் பிரேம் ஜயந்த் மேலும் கருத்து தெரிவிக்கையில், தற்போது பயங்கரவாதம் இல்லை. சகலரும் சுதந்திரமாக கருத்துத் தெரிவிக்கக்கூடிய நிலை உள்ளது.
இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் அரசாங்கம் அதன் கருத்துக்களையும் யோசனைகளையும் முன்வைக்கும்.
அதே போன்று பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் மக்கள் பிரதிநிதிகளும் தமது கருத்துக்களையும் யோசனைகளையும் சுதந்திரமாக தெரிவிக்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
குழப்பமான தேர்தல்களை நடத்தி தமிழ் மக்களின் வாக்குகளைச் சூறையாடி அரைகுறைத் தீர்வையும் திணித்து தமிழ் மக்களையும் சர்வதேச சமூகத்தையும் ஏமாற்ற முனையும் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் திட்டம் நேற்றைய அமைச்சரவை முடிவுகளை அறிவிக்ககும் மகாநாட்டில் அம்பலமாகியுள்ளது என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
**************
அமெரிக்காவில் ரணில்
அமெரிக்காவிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நடவடிக்கை காரியாலயத்திற்கான பிரதி துணை செயலாளர் பேராசிரியர் அலிசியா அயர்சை சந்தித்துள்ளார்.
இருவருக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதன்போது, இலங்கையின் சமகால அரசியல் நடவடிக்கைகள் குறித்து எதிர்கட்சித் தலைவர், பேராசிரியர் அலிசியா அயர்சுக்கு விளக்கமளித்துள்ளார்.
இதேவேளை, அண்மையில் கட்டுநாயக்கவில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும், சனல்4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படம் தொடர்பிலும் இருதரப்பினரும் கருத்துக்களை பறிமாறிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஐக்கிய தேசிய கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூனை எதிர்வரும் 5ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இந்த சந்திப்பு நியூயோர்க்கில் நடைபெறவுள்ளதாக இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது
**************
அமெரிக்காவிற்கு பதில் வழங்க முடியாது - அடம்பிடிக்கும் அமைச்சர்
போர்க்குற்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் எச்சரிக்கைக்கு அரசாங்கம் பதில் வழங்க வேண்டிய அவசியம் இல்லையென சிறீலங்கா அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அழுத்தங்கள் எதற்கும் சிறீலங்கா அரசாங்கம் அடிபாணியாதென அரச அதிபர் மஹிந்த ராஜபக்ச தெளிவாக கூறிவிட்ட நிலையில் மீண்டும் மீண்டும் ஆலோசனை வழங்குவது, எச்சரிக்கை செய்வது போன்ற அறிக்கைகள் வெளியிடுவதை அமெரிக்கா போன்ற நாடுகள் தவிர்க்க வேண்டுமென அமைச்சர் கூறியிருக்கின்றார்.
சிறீலங்காவில் புரியப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து அரசு விரைவில் நடவடிக்கை எடுக்காவிட்டால், சர்வதேச ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்ற அழுத்தம் அதிகரிக்குமென அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்திருந்தது.
இது தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, சிறீலங்கா படையினர் குற்றம் புரிந்திருந்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டியது சிறீலங்கா அரசாங்கத்தின் பொறுப்பெனவும், படையினர் மீது விசாரணை நடத்துமாறு கூட சர்வதேச நாடுகள் அழுத்தம் கொடுக்க முடியாதெனவும் குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள் அனைத்துக்கும் ஒரேமாதிரியான நடைமுறை பின்பற்றப்பட வேண்டுமெனவும், பெரிய நாடுகள் சிறிய நாடுகள் மீது தமது பலத்தை பிரயோகிப்பதை யாராலும் ஏற்க முடியாதெனவும் சிறீலங்கா அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல மேலும் குறிப்பிட்டார்.
**************
மனித உரிமை மீறலை கவனிக்க நேரமற்ற ஐநா செயலர்!
சனல்4 தொலைக்காட்சி வெளியிட்டுள்ள சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை நேரம் கிடைக்கும் போது ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் பார்வையிடுவார் என்று அவரது பதில் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் தெரிவித்துள்ளார்.
இந்த ஆணவப்படத்தை பான் கீ மூன் பார்வையிட்டாரா என்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கையிலேயே பர்ஹான் ஹக் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த ஆவணப்படத்தை ஐ.நா பொதுசெயலருடன் பகிர்ந்து கொண்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஹக், நேரம் கிடைக்கும் போது அவர் அதைப் பார்வையிடுவார் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
**************
வடக்கில் சிவில் நிர்வாகம் வேண்டும்!
வடக்கில் சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட வேண்டும் என ஜே.வி.பி கட்சி வலியுறுத்தியுள்ளது.
வடக்கு கிழக்கில் இன்னமும் முழுமையாக சிவில் நிர்வாகம்ஏற்படுத்தப்படவில்லை எனவும் இராணுவத்தினரே நிர்வாகம் மேற்கொண்டு வருவதாகவும் ஜே.வி.பிநாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
போர் நிறைவடைந்து இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் தொடர்ந்தும் வடக்கு கிழக்கில் இராணுவத்தினர் நிலை நிறுத்தப்பட்டிருப்பது மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரும் இடையூறாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இராணுவத்தினரின் நடவடிக்கைகளினால் பிரதேசத்தில் மீண்டும் குழப்பங்கள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வடக்கு கிழக்கில் தாக்குதல்கள் அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் போன்ற சம்பவங்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலைமைகள் குறித்து அரசாங்கம் தெளிவுடன் செயற்படாவிட்டால் அனர்த்தங்கள் ஏற்படக் கூடுமென எச்சரிக்கை விடுத்துள்ளார்.
**************
முஸ்லீம்களின் கோரிக்கை!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அரசாங்கத்துக்குமிடையில் நடைபெற்று பெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ{ம் ஒரு தரப்பாகக் கலந்து கொள்ள வேண்டுமென்பதே அவர்களின் கோரிக்கையாக இருந்தால் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது என சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு கலந்து கொள்வதன் மூலம் மனத்தடைகளையே தோற்றுவிக்கும் என டெலோ இயக்கத்தின் அரசியல் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.
தற்போது அரசு- கூட்டமைப்பு நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளில் தாமும் பங்கு கொள்ள வேண்டுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வலுவான கோரிக்கையை முன்வைத்துள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கருத்துக் கூறுகையிலேயே சிவாஜிலிங்கம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் சேர்ந்து செயற்படும் ஒரு கட்சி.
இந்த நிலையில் அவர்களும் பேச வேண்டுமானால் அரசாங்கத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குச் சமாந்திரமாகவோ பேசிக் கொள்ளலாம்.
இந்த விடயத்தில் தாம் தடையாக இருக்கப் போவதில்லை. ஆனால், தற்போது இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் தாமும் ஒரு தரப்பாகக் கலந்து கொள்ள வேண்டுமென்று அடம்பிடித்தால் அது மனத்தடைகளையே தோற்றுவிக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போது இடம்பெற்று வரும் பேச்சுவார்த்தைகளில் தமிழ் மக்களின் தாயகத்துக்கு என்ன கொடுப்பது என்று பேசப்பட்டுத் தீர்மானிக்கப்படுமாயின் அதில் முஸ்லிம்களுக்கு என்ன பங்கு கொடுப்பது என்பது பற்றி முஸ்லிம் காங்கிரசுடனும் பேசித்தான் முடிவெடுக்கப்படும்.
வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்கள் தாயகம் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் முஸ்லிம்களுக்கும் அனைத்து உரிமைகளும் உண்டு.
அவர்களைக் குறைத்து மதிப்பிட முடியாது. அத்துடன் முஸ்லிம்களின் சம்மதம் இல்லாமல் ஒருபோதும் இணைந்த வட,கிழக்கையும் பெறமுடியாது.
எது எவ்வாறெனினும் இறுதித் தீர்வு என்று ஒன்று எட்டப்படுமானால் அது முஸ்லிம் மக்களின் அபிலாஷைகளையும் உள்ளடக்கியதாகவே அமையும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
**************