Saturday, 2 July 2011

செய்திகள் 02/07


தவறைத் தீர்மானிப்பது எப்படி?
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின் இறுதிக் கட்டத்தின் போதான தனது சொந்தச் செயற்பாடுகளை எவ்வாறு மீளாய்வு செய்வது என்பதைத் தீர்மானிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா. நேற்று தெரிவித்துள்ளது.
தமது சொந்த நடவடிக்கைகளை எப்படி மீளாய்வு செய்வது என்பதை தீர்மானிப்பதற்கான பணிகளை ஐ.நா. செயலகம் ஆரம்பித்துள்ளது.
இந்த மீளாய்வுக்கான வகைகள் குறித்து ஆராய்வதற்காக ஐ.நா.வின் பல்வேறு முகவரகங்களை செயலகத்திலுள்ள அதிகாரிகள் அணுகியுள்ளனர்.
எனவே இப்பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் மீளாய்வு இன்னும் ஆரம்பமாகவில்லை என ஐ.நா. செயலாளர் நாயகத்தின் பதில் பிரதிப் பேச்சாளர் பர்ஹான் ஹக் நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
*****************
மகிந்த அரசு வீடு செல்ல நேரிடும்!
அமெரிக்கா மற்றும் இந்திய அரசுகள் விடுத்துள்ள வேண்டுகோளுக்கிணங்க இலங்கை அரசு விரைவில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க முன்வரவேண்டும். இல்லையேல், அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து மஹிந்த அரசை வீட்டுக்கு அனுப்பும் நாள் வெகு தொலைவில் இல்லை என புதிய இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைப்பதற்குப் பிரதான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
அத்துடன், தாம் அங்கம் வகிக்கப் போவதில்லை என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளன.
எனினும், அரசு நாடாளுமன்ற தெரிவுக்குழுவை அமைக்கும் முயற்சியில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றது.
தெரிவுக்குழுவை அமைப்பதற்கான பிரேரணையை அரசு 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளது.
இந்தக் குழுவில் 31 உறுப்பினர்களை உள்ளடக்குவதற்கும் அரசு தீர்மானித்துள்ளது.
அரசிடம் அரசியல் தீர்வு ஒன்று இல்லாததன் காரணமாகவே அரசு காலத்தை இழுத்தடிக்கின்றது.
இதனை மேலும் இழுத்தடிக்கவே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை அரசு நியமிக்க முனைகிறது என அரசியல் ஆய்வாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்நிலையில், அரசிடம் உண்மையாகவே அரசியல் தீர்வு உள்ளதா, அப்படி இருந்தால் ஏன் காலத்தை இழுத்தடிக்கின்றது, இதனால் அரசுக்கு சர்வதேச அழுத்தங்கள் ஏற்படுமா என கேட்டபோதே விக்கிரமபாகு இதனைத் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுமாறே அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
அண்மையில் இலங்கை சென்ற ரொபட் ஓ பிளேக்கிடம் அரசு இது விடயம் தொடர்பில் இணங்கியது.
இந்தியாவும் இதனையே கூறியுள்ளது.
ஆனால், அரசு தற்போது தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் என்று எவரும் இல்லை எனக் கூறுகின்றது.
அதனாலேயே நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்து அதனூடாகத் தீர்வு வழங்கப்படும் எனக் கூறி வருகின்றது.
ஏகப் பிரதிநிதிகள் யார் என்பதை தேர்தலே தீர்மானிக்கும்.
வடக்கு, கிழக்கு மக்கள் கூட்டமைப்பினர்தான் தங்களின் ஏகப் பிரதிநிதிகள் என்பதை தங்களின் வாக்குரிமை மூலம் நிரூபித்துள்ளனர்.
உண்மையாகவே தீர்வு இருந்தால் கூட்டமைப்பினருடன் பேசி வடக்கு, கிழக்கு மக்களுக்கு அரசு அரசியல் தீர்வை வழங்க முன்வரவேண்டும். இதுவே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
*****************
கொள்ளையை தடுக்க முடியாத பயங்கரவாத முறியடிப்புப் படை!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது இடம்பெற்று வரும் குற்றச் செயல்களுடன் அரசியல்வாதிகளுக்குத் தொடர்புள்ளதாக கிழக்கு கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் பொனிபஸ் பெரேரா தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இன்னும் சில குழுக்களிடம் ஆயுதங்கள் உள்ளன.
இந்த ஆயுதங்களை உடனடியாக ஒப்படைக்க வேண்டும். இல்லையேல் தேடி அழிப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.
வெள்ளிக்கிழமை காலை மட்டக்களப்பு டேர்பா மண்டபத்தில் நடைபெற்ற மட்டக்களப்பிலுள்ள வங்கி உத்தியோகத்தர்கள், தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கான கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஆயுதம் வைத்திருப்பவர்கள் தொடர்பில் தங்களுக்கு நம்கமான சில தகவல்கள் கிடைத்துள்ளன.
ஆயுதம் வைத்திருப்பவர்களை கண்டு பிடித்து அவற்றை களைந்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் எனவும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு புதூரில் இடம்பெற்ற வங்கிக்கொள்ளை சம்பவமானது தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்பட்ட சம்பவமாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
*****************
மலேசிய மக்கள் சக்திக் கட்சி வேண்டுகோள்
சிறிலங்காவிலும் பலஸ்தீனத்திலும் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கு எதிராக ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மலேசிய மக்கள் சக்தி கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
நேற்று கோலாலம்பூரில் உள்ள ஐ.நா பணியகத்துக்கு மூன்று பேருந்துகளில் சென்ற மலேசிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் இதுதொடர்பான மனுவொன்றைக் கையளித்துள்ளனர்.
கட்சியின் பொதுச்செயலர் ஆர்.கண்ணன் தலைமையிலான இந்தக் குழுவினர் மலேசியாவுக்கான ஐ.நா செயலக பாதுகாப்பு அதிகாரி தேவேந்திர பட்டேலிடம் இரண்டு பக்க மனுவைக் கையளித்தனர்.
இந்த மனுவில் சிறிலங்காவில் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகள் பட்டியலிடப்பட்டுள்ளதாகவும் ஆர்.கண்ணன் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் மோசமான மனிதஉரிமை மீறல்கள் இடம்பெற்றுள்ள அதிர்ச்சியான சாட்சியங்களை ஐ.நா அறிக்கை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அதன் அடிப்படையில் மகிந்த ராஜபக்ச மீதும் அவரது அரசாங்கத்தின் மீதும் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றில் ஐ.நா நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் மேலும் கூறியுள்ளார்.
சிறிலங்காவில் முதலீடு செய்துள்ள மூன்றாவது பெரிய நாடான மலேசியா, தமிழர்களை நியாயமாக நடத்துமாறு சிறிலங்காவுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் ஆர்.கண்ணன் வலியுறுத்தியுள்ளார்.
போர்க்குற்றங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மலேசியா எடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த மனுவைக் கையளிக்கும் நிகழ்வில் மலேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதித் தலைவர் வனெசன் மைக்கல், இளைஞர் அணி தலைவர் ராமு உள்ளிட்ட சுமார் 80 இற்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
*****************
பதிலுக்கு காட்சி வெளியிடும் பதிலளிக்க முடியாத அரசு!
சிறிலங்காப் படையினரால் தமிழர்கள் சுட்டுப்படுகொலை செய்யப்படும் காட்சியை உள்ளடக்கிய சனல் 4 தொலைக்காட்சி ஒளிபரப்பிய காணொளியின் மூலப்பிரதி என்று கூறி சிறலங்கா பாதுகாப்பு அமைச்சு காணொளிப்பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவில் நேற்றிரவு சுவர்ணவாகினி தொலைக்காட்சியில் இந்தக் காணொளிப் பதிவு ஒளிபரப்பப்பட்டது.
இந்தக் காணொலி சீருடை அணிந்தவர்கள் தமிழில் உரையாடிக் கொண்டு ஆண்களையும் பெண்களையும் சுட்டுக்கொல்வது போன்ற காட்சியை உள்ளடக்கியுள்ளது.
சனல் 4 வெளியிட்ட உண்மையான காணொளிப் பதிவில் சீருடை அணிந்த சிறிலங்காப் படையினர் சிங்களத்தில் உரையாடிக் கொண்டே ஆண்களையும் பெண்களையும் சுட்டுக்கொல்வது பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா இராணுரவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபய மெடவெல, இதுவே மூலப்பிரதி என்றும் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இதனை பிரித்தானியாவில் இருந்து பெற்றுக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.
சனல் 4 வெளியிட்ட ஆவணப்படம் போலியானது என்று கூறிவரும் சிறிலங்கா அரசாங்கம் இதுதொடர்பான குற்றச்சாட்டுகளை அடியோடு நிராகரித்துள்ளது.
சனல்4 ஆவணப்படம் அனைத்துலக ரீதியாக சிறிலங்காவுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே போலியானதொரு காணொளிப் பதிவை வெளியிட்டு குழப்பம் ஏற்படுத்த முனைவதாக கருதப்படுகிறது.
நேற்றிரவு சுவர்ணவாகினி தொலைக்காட்சிக்கு இந்தக் காணொளியை வழங்கியுள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு, அரச ஊடகங்களிலோ அல்லது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரபூர்வ இணையத்தளத்திலோ இதுவரை அந்தக் காணொளியை வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
சிறிலங்கா அரசாங்கம் சனல் 4 காணொளிப் பதிவு போலியானது திருத்தம் செய்யப்பட்டது என்று கூறினாலும், அது உண்மையானதே என்று அனைத்துலக வல்லுனர்கள் உறுதி செய்திருப்பதாக சனல் 4 தொலைக்காட்சியும் ஐ.நாவின் உயரதிகாரிகளும் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
*****************
சித்திரவதை தொடர்கின்றது! ஏற்றுக் கொள்ளுமா கனேடிய அரசு?
கனடாவின் குடியுரிமையை பெற்ற இலங்கை தமிழர் ஒருவர் இலங்கையின் சிறையில் சித்திரவதை செய்யப்பட்டதாக தெ நெசனல் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
சுமார் 3 ஆண்டுகளாக 40 வயதான ரோய் மனோஜ்குமார் சமாதானம் என்பவர் இலங்கை சிறையில் வைக்கப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் தாம் ஆயுதம் கடத்தியதாக பொய்யான வாக்குமூலம் வழங்கும் வரை சித்திரவதை செய்யப்பட்டதாகவும் பயமுறுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது கனடாவுக்கு திரும்பியுள்ள அவர், தாம் இலங்கையில் மூன்று இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டு அடைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
தாம் மிகமோசமான முறையில் இலங்கையின் பயங்கராத தடுப்பு பிரிவினரால் நடத்தப்பட்டதாக அவர் குறிப்பி;ட்டுள்ளார்.
இலங்கை அரசாங்கம், அதன் மேல் சுமத்தப்பட்டுள்ள போர்க் குற்றச்சாட்டுக்களை நிராகரித்து வருகிறது.
எனினும் அந்த நாட்டின் சிறைகளில் சித்திரவதைகள் இடம்பெறுவதற்கு தாம் ஒரு சாட்சி என்று மனேஜ்குமார் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் பயங்கரவாத தடுப்புபிரிவினர் தமிழ் வர்த்தகர்களிடம் கப்பம் பெறுகின்றனர்.
அத்துடன் பணம் பறிப்பதற்காக எப்போது பயங்கரவாத தடுப்பு பிரிவில் 50 பேர் வரை தடுத்து வைக்கப்பட்டு விசாரணை செய்யப்படடு வருகிறார்கள் என்றும் மனோஜ்குமார் தெரிவித்துள்ளார்.
*****************
தீர்வைக் குழப்பத் தீர்மானம்!
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் நாடாளுமன்றத் தெரிவுக் குழு அமைக்கப்பட வேண்டும் என்ற யோசனைத் திட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பூரண ஆதரவளிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த யோசனைத் திட்டத்திற்கு பூரண ஆதரவளிப்பது என கட்சி உறுப்பினர்கள் ஏகமனதாகத் தீர்மானித்துள்ளனர்.
நாடாளுமன்றத் தெரிவுக் குழுவிற்காக விசேட குழுவொன்றை நியமிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் நடைபெற்ற போது இந்தத் தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன.
*****************
பாதுகாப்புக் கோரும் பாதுகாப்பற்றோர்!
உயிரச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ள சுதந்திர வர்த்தக வலய ஊழியர்களுக்குப் போதுமான பாதுகாப்பை வழங்குமாறு கோரி அரசியல்கட்சிகளின் கூட்டு ஆர்ப்பாட்டமொன்று நடைபெறவுள்ளது.
தனியார் ஓய்வூதியச் சட்டத்திற்கு எதிராக அண்மையில் கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களின் பின்னணியில் செயற்பட்ட முக்கியஸ்தர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் சுமார் ஐநூறு வரையான ஊழியர்கள் தற்போது உயிரச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளனர்.
அதன் காரணமாக அவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து எழுத்து வடிவ ஆவணமொன்றில் கையொப்பமிட்டு, தங்கள் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு கோரி முறைப்பாடொன்றைச் செய்துள்ளனர்.
எனவே அவர்களைப் பாதுகாக்கும் விடயத்தில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவைத் தலையிடக் கோரும் விசேட மகஜர் ஒன்றை அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கையளித்துள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சி, புதிய இடதுசாரி முன்னணி, ஐக்கிய சோசலிஷ முன்னணி ஆகிய கட்சிகளும் சுதந்திரத்திற்கான மேடை அமைப்பும் ஒன்றிணைந்தே பிரஸ்தாப அரசியல் கட்சிக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
*****************