தமிழறிஞரின் இறுதிக் கிரியையகள் இன்று
கடந்த புதன்கிழமை காலமான, தமிழ் பேரறிஞர் கார்த்திகேசு சிவத்தம்பியின் இறுதிக்கிரியைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளன.
தெஹிவளை வண்டேவர்ட் பிளேஸிலுள்ள அவரின் இல்லத்தில் இன்று நண்பகல் ஈமக்கிரியைகள் நடைபெறும் எனவும், பிற்பகல் 4 மணிக்கு பூதவுடல் தகனக் கிரியைகளுக்காக பொரளை பொதுமயானத்திற்கு கொண்டு செல்லப்படும் எனவும் அவரின் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் பூதவுடல் பெருந்திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலியுடன் இன்று மாலை அக்கியில் சங்கமமாகின்றது.
கடந்த செவ்வாய்க்கிழமை இரவு 8.20 க்கு இவ்வுலகை விட்டு உயிர்நீத்த பேராசிரியர் சிவத்தம்பியின் பிரிவுச் செய்தி கேட்டு தமிழ் உலகே உறைந்து போயுள்ளது.
தமிழை வளர்க்க தனது இறுதிமூச்சு வரை பாடுபட்ட அன்னாரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு இன, மத, பாகுபாடு இன்றி மக்கள் வெள்ளம் அன்னாரின் இல்லம் நோக்கி திரண்ட வண்ணம் உள்ளனர்.
யாழில் இருந்து அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு அஞ்சலி செலுத்துவதற்காக, பேராசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மாணவர்கள், இலக்கிய ஆர்வலர்கள், அன்னாரின் வழிப்படுத்தப்பட்டு, வளப்படுத்தப்பட்ட கல்விமான்கள் எனப்பெருந் திரளானோர் கொழும்பை நோக்கி படையெடுத்த வண்ண முள்ளனர்.
இந்நிலையில் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் உறவுகள் தமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்த வண்ணமுள்ளனர்.
தமிழக முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியும் தனது இரங்கல்களை தெரிவித்துள்ள அதேவேளை, தமிழக அரசியல்வாதிகள் வைகோ, பழநெடுமாறன், உட்பட பெருமளவானோர் அன்னாரின் இழப்பை ஈடுசெய்ய முடியாது எனத் தமது இரங்கல் செய்திகளை அனுப்பிய வண்ணமுள்ளனர்.
இந்நிலையில் இன்று மாலை தெஹிவளை வெண்டவர்ட் பிளேசில் உள்ள அன்னாரின் இல்லத்தில் சமயச் சடங்குகள், கிரியைகள் நடைபெற்று, பெருந்திரளான மக்களின் கண்ணீர் அஞ்சலிக்கு மத்தியில் அக்கினியில் சங்கமமாகிறார்.
**************
நீதிக்காக குரல் கொடுப்போம் - பிரித்தானிய பாராளுமன்றம்
தமிழ் மக்களுக்கு நீதியும் நியாயமும் கிடைக்கும் வரை தாம் ஓயமாட்டோம் என பிரித்தானிய நாடாளுமன்றத்தின் 52 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட தமிழர்களுக்கான குழு கூறியுள்ளது.
தமிழ் மக்களுக்கான நீதியை நிலை நாட்ட சர்வதேச விசாரணை ஒன்றே தேவை எனவும் அந்த குழு கூறியுள்ளது.
குழுவின் தற்போதைய தலைவரான லீஸ் ஸ்கொட் கையெழுத்திட்ட உத்தியோகபூர்வ அறிக்கை வெளியாகியுள்ளது.
**************
விசாரணையை வலியுறுத்திய பொக்ஸ்
இலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள சர்வதேச மனித உரிமைகள் மீறல் மற்றும் மனிதாபிதானத்துக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை தீவிரமான முறையில் எடுத்துக்கொண்டு, இலங்கை அரசாங்கம் உரியமுறையில் கவனத்தில் எடுத்து விசாரணைகளை மேற்கொள்ளவேண்டும் என்று பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியாம் பொக்ஸ் கோரியுள்ளார்.
கதிர்காமர் நிலையத்தில் நேற்று நடைபெற்ற சொற்பொழிவின் போது அவர் இந்தக் கோரிக்கையை விடுத்தார்.
இலங்கையில் அமைக்கப்பட்டுள்ள நல்லிணக்க ஆணைக்குழு இனங்களுக்கு இடையில் இணக்கத்தை கொண்டு வர முக்கிய பங்கை வகிக்கவேண்டும் என்றும் அவர் இதன்;போது கேட்டுக்கொண்டார்.
அந்தக்குழு அனைத்து சாட்சியங்களையும் உரிய முறையில் விசாரணை செய்து இலங்கை அரசாங்கத்துக்கு இறுதி பரிந்துரையை செய்யவேண்டும் என்றும் லியாம் பொக்ஸ் கோரிக்கை விடுத்தார்.
இந்தக்குழு எதிர்வரும் நவம்பர் மாதத்தில் தமது பரிந்துரைகளை இலங்கை அரசாங்கத்துக்கு வழங்கும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
சமாதானத்துக்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படவேண்டும்.
பேச்சு சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் உட்பட்ட அனைத்தும் உரிய முறையில் செயலாக்கம் பெற்று சட்டத்தின் கீழ் பயத்தில் இருந்து விடுதலை கிடைக்கவேண்டும் என்று லியாம் பொக்ஸ் கேட்டுக்கொண்டார்.
**************
சிங்கள மக்களுக்கு நாடகமாடும் ஸ்ரீலங்காவின் உள்ளுர் சண்டித்தனம் ஏமாற்றே!
சிறிலங்காவின் கொலைக்களங்கள் என்ற ஆவணப்படத்தை ஒளிபரப்பியதற்காக சனல் 4 தொலைக்காட்சிக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கத்தினால் சட்டநடவடிக்கை எடுக்க முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.
இந்தக் காணொலியில் இடம்பெற்றுள்ள எவரேனும் வேண்டுமானால் பிரித்தானியா நீதிமன்றத்தில் மானநட்ட வழக்குத் தொடர முடியுமே தவிர, ஒரு அரசாங்கத்தினால் வெளிநாடுகளில் அத்தகைய வழக்கைத் தாக்கல் செய்ய முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படத்தை வெளியிட்டு நாட்டின் பெயரைகட களங்கப்படுத்தியதற்காக சனல் 4 தொலைக்காட்சி மன்னிப்புக் கோர வேண்டும் அல்லது நட்டஈடு தர வேண்டும் என்று கோரி பிரித்தானியாவில் வழக்குத் தொடரப் போவதாக சிறிலங்கா அரசாங்கம் கூறி வருகிறது.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்காவின் முன்னாள் தலைமை நீதியரசர் சரத் என் சில்வா, வெளிநாட்டுத் தொலைக்காட்சி ஒன்றுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுப்பதானால், எல்லை விவகாரங்கள் அல்லது மனிதஉரிமைகள் தொடர்பான விவகாரங்கள் குறித்தே அனைத்துலக நீதிமன்றம் ஒன்றில் வழக்குத் தொடர முடியும் என்று கூறியுள்ளார்.
இந்தக் காணொலிக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியும் என்று கருதினால், தமது நாடுகளை விமர்சித்ததாகக் கூறி பிரித்தானியா, அமெரிக்கா போன்ற நாடுகள் சிறிலங்காவை நீதிமன்றத்துக்கு இழுக்க முடியும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேவேளை பிரித்தானியாவின் ஒளிபரப்பு அதிகாரசபைக்கு இதுபற்றி நடவடிக்கை எடுக்குமாறு கோரி சிறிலங்கா அரசாங்கம் கடிதம் எழுதலாம் என்றும் சரத் என் சில்வா மேலும் தெரிவித்துள்ளார்.
**************
அனுமதிக்காக அமைதி காத்திருக்கும் பூனை
அனைத்துலக சமூகத்தின் கவலைகளுக்கு பதிலளிப்பதற்கு சிறிலங்காவுக்கு மேலதிக காலஅவகாசத்தை வழங்க ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூன் இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஆனால், இதற்கென காலவரையறையற்ற காலத்தை வழங்க முடியாது என்றும் அவர் கண்டிப்பாகக் கூறியுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை நியுயோர்க்கில் ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனை சிறிலங்காவின் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போருக்குப் பிந்திய சூழலில் அரசியல் தீர்வு ஒன்றுக்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டிருப்பதாகவும், எனவே மேலதிக கால அவகாசத்தை வழங்க வேண்டும் என்றும் பான் கீ மூனிடம் ரணில் விக்கிரமசிங்க கேட்டிருந்தார்.
ஐ.நா பொதுசெயலர் எதிர்க்கட்சித் தலைவர்களைச் சந்திக்கும் வழக்கத்தைக் கொண்டிராத நிலையில், அசாதாரணமான வகையில் ரணில் விக்கிரசிங்கவுடனான சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பில் ஐ.நா பொதுச்செயலருடன் அவரது தலைமை அதிகாரி விஜய் நம்பியாரும், ரணில் விக்கிரமசிங்கவுடன் அமெரிக்காவுக்கான சிறிலங்காவின் முன்னாள் தூதுவர் தேவிந்த சுபசிங்கவும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்தச்சந்திப்பின் போது போரின் இறுதிக் கட்டத்தில் இடம்பெற்ற மனிதஉரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்பது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது கருத்து வெளியிட்டுள்ள ஐ.நா பொதுச்செயலர் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த சிறிலங்கா அரசாங்கம் உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்றும் தற்போது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் போதாது என்றும் கண்டிப்பாக கூறியுள்ளார்.
ஐ.நாவிலோ அதற்கு வெளியிலோ சிறிலங்கா விவகாரம் காணாமற் போய்விடப் போவதில்லை என்றும் தாம் இன்னமும் இதுபற்றிய தீர்மானம் ஒன்றுக்கு வரவில்லை என்றும் பான் கீ மூன் மேலும் கூறியுள்ளார்.
அத்துடன் சிறிலங்காவில் போரின் போது என்ன நடந்தது என்பது மட்டுமே ஐ.நாவின் கவலைகள் அல்ல, பொதுப்படையான மனித உரிமை விவகாரங்கள், பரந்துபட்ட ஜனநாயகம் ஆகியவை கூட ஐ.நாவின் கரிசனையாக உள்ளது என்றும் ஐ.நா பொதுச்செயலர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறியுள்ளார்.
ஐ.நா பொதுச்செயலருடனான இந்தச் சந்திப்புத் தொடர்பாக சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவை சந்தித்து விளக்கிக் கூறவுள்ளதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
**************
குப்பைக் கூடைக்கு செல்லத் தயாராகும் தெரிவுக்குழுத் திட்டம்
தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணும் நோக்கில் அரசாங்கத்தினால் திட்டமிடப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைக்கும் யோசனை பெரும்பாலும் கைவிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக லங்காதீப பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த யோசனைத் திட்டம் பெரும்பாலும் கைவிடப்படலாம் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிப்பதாக குறித்த பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நாடாளுமன்றக் குழுவில் அங்கம் வகிக்கப் போவதில்லை என அறிவித்துள்ளதாகவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு இன்றி நாடாளுமன்றத் தெரிவுக்குழு அமைப்பில் அர்த்தமில்லை என இந்தியா அறிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
எனினும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவுடன் இந்த நாடாளுமன்ற தெரிவுக்குழுவை முன்னெடுக்க அரசாங்கம் எண்ணம் கொண்டிருப்பதாக அரசாங்க தரப்புகள் தெரிவித்துள்ளன.
தேசியப் பிரச்சினைக்கு தீர்வு காணும் செயன்முறையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்களிப்பு முக்கியமானது என இந்தியா வலியுறுத்தியுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்கக் கூடிய சாத்தியமும் மிகவும் குறைவாகக் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதன்படி, தெரிவுக்குழுவிற்கு பதிலாக பேச்சுவார்த்தை ஊடாக தீர்வுத் திட்டமொன்றை முன்வைப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்த தீர்மானித்துள்ளது.
இதேவேளை, அண்மையில் நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவுக்குழு நிச்சயமாக நியமிக்கப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
**************
மன்னாரில் கொள்ளை ஆரம்பம்
மன்னார் வளைகுடாவில் பெற்றோலிய பொருள் ஆய்வுப் பணிகளில் புதிய மாற்றங்களுடன் ஓகஸ்டில் தொடங்க இருக்கின்றது.
இதற்காக துழையிடும் பணிகளை மேற்கொள்ள ஜப்பான் நாட்டின் ஐந்தாம் தலைமுறை தொழில் நுட்ப வசதிகளைக்கொண்ட கப்பல் மன்னாரை நோக்கி பயணித்துள்ளது.
இதற்கிடையில் ஏற்கனவே முன்வைக்கப்பட்ட திட்டத்தில் எண்ணெய் அகழ்வு இட அமைவில் சில மாற்றங்களை ஏற்படுத்த, அகழ்வுப்பணிகளை மேற்கொள்ளும் கெயார்ன் நிறுவனம் கோரி இருந்தது.
இந்த நிலையில், திட்டமிடப்பட்டதற்கு மாறாக மூன்று கினறுகளை தோண்டவும், ஆய்வு செய்யும் இடத்தை மாற்றவும், அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக, நிறுவனத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
**************
தமிழரின் பயணத்தைக் கூட பொறுக்க முடியவில்லை
வெள்ளவத்தையிலிருந்து யாழ்ப்பாணம் செல்லும் தனியார் பஸ்கள் இனிமேல் இராமகிருஷ்ண மிஷன் முன்பாகவுள்ள தரிப்பிடத்திலிருந்து புறப்படவேண்டுமென முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெள்ளவத்தை காவல் நிலையத்தில் நேற்று சனிக்கிழமை முற்பகல் உதவி காவல்துறை அத்தியட்சர் தலைமையில் நடைபெற்ற கொழும்பு - யாழ்.தனியார் பஸ் உரிமையாளர்களுடனான சந்திப்பின் போதே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமிடையே வெள்ளவத்தையிலிருந்து சேவையிலீடுபடும் தனியார் பஸ்கள் வெள்ளவத்தை காலி வீதியிலிருந்து செல்வது காவல்துறையினரால் கடந்த இரு தினங்கள் தடுக்கப்பட்டன.
இதனால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட அதேசமயம், பஸ் உரிமையாளர்களும் தமது அதிருப்தியை வெளியிட்டனர். இதையடுத்தே இக்கூட்டம் நடைபெற்றது.
இதன்போது தற்காலிகமாக இராமகிருஷ்ண மிஷன் முன்பாக பயணிகளை புறப்படும் நேரத்துக்கு பஸ்களை கொண்டுவந்து ஏற்றிச் செல்லமுடியுமென்றும் பகல் வேளையில் கடற்கரை வீதியில் பஸ்களை நிறுத்தக்கூடாதென்றும் முடிவெடுக்கப்பட்டது.
காலி வீதியில் எந்தவொரு பயணியையும் ஏற்றிச் செல்ல முடியாதெனவும் இராமகிருஷ்ண மிஷனுக்கு அண்மையாகவுள்ள கடற்படை முகாமுள்ள இடத்தை பஸ்தரிப்பிடமாக்க பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடன் பெற்று தருவதாகவும் உதவி காவல்துறை அத்தியட்சர் பிரியந்த தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
**************