Sunday, 17 July 2011

செய்திகள் 17/07

அமெரிக்க மாற்றம் அரசுக்கு அதிர்ச்சி
சிறிலங்கா அரசுக்கு ஆதரவாக இருந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இப்போது சிறிலங்காவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிர்ச்சியடைந்துள்ளது.
ஒரு காலத்தில் ஆதரவாக இருந்த அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவ்வாறு சிறிலங்கா அரசுக்கு எதிராகத் திரும்பினர் என்று தெரியாமல் சிறிலங்கா வெளிவகார அமைச்சு குழப்பமடைந்துள்ளது.
இவர்களில், குடியரசுக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் றொபேட் அடெனோல்ற் 2004இல் சுனாமிக்குப் பின்னர் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தவர்.
குடியரசுக் கட்சியின் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினராக பிராங் வூல்பீ விடுதலைப் புலிகளை மிகமோசமாக எதிர்த்து வந்தவர் என்பதுடன் சிறிலங்காவுக்கு அமெரிக்காகவின் ஆயுத உதவிகள் கிடைப்பதற்கும் காரணமாக இருந்தவர்.
மேலும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த ஜோய் பிற்ஸ், ஹெல்லி பேர்கெலி, சூமைரிக், ஜோன் கோஸ்ரெலோ, ஸ்கொட் கரெற், இலியானா றொய்ஸ்-லெரினென், பில் யூங், ஜிம் மோறன், டனா றொபாக்கர் மற்றும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னர் சிறிலங்காவுக்கு ஆதரவு வழங்கி வந்தனர்.
இவர்கள் அனைவரும் தற்போது சிறிலங்காவுக்கு எதிராகத் திரும்பியுள்ளனர்.
அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிறிலங்காவுக்கு எதிராகத் திரும்பியுள்ளது குறித்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு அதிர்ச்சியடைந்துள்ளதுடன் இதற்கான காரணங்கள் என்ன என்று ஆராயவும் தொடங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அமெரிக்காவில் சிறிலங்காவுக்கு ஆதரவான பரப்புரைகளை மேற்கொள்வதற்கு பல மில்லியன் டொலர்களைக் கொடுத்து பொதுமக்கள் உறவுக்கான நிலையம் ஒன்றுடன் உடன்பாடு செய்து கொள்ளப்பட்டிருந்தது.
சிறிலங்கா அரசின் இந்த பரப்புரைகளும் பிசுபிசுத்துப் போயுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக சனல்4 காணொளி தொடர்பாக, சிறிலங்கா அரசு பணிக்கு அமர்த்திய பொதுமக்கள் உறவு நிலையம் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் மேற்கொண்ட பரப்புரைகளும் எடுபடவில்லை என்றும் தெரியவந்துள்ளது.
*************
ஏமாற்றும் முயற்சி ஆரம்பம்!
சர்வதேச ரீதியில் இலங்கைக்கு எதிராக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
1981ம் ஆண்டு சனத்தொகை மதிப்பீடு மற்றும் பிறப்பு இறப்பு பதிவுத் தகவல்களின் அடிப்படையில் வடக்கு போரின் போது உயிரிழந்தவர்கள் பற்றிய புள்ளி விபரங்கள் வெளியிடப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பாதுகாப்பு அமைச்சினால் இந்த நவடடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
போரின் போது பொதுமக்கள் கொல்லப்பட்டதாக சர்வதேச ரீதியில் வெளியிடப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு உரிய பதலளிக்கும் நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
1981ம் ஆண்டு சனத்தொகை மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டு போரின் போது உயிரிழந்த பொதுமக்களின் புள்ளி விபரங்கள் வெளியிடப்பட உள்ளது.
அரசாங்கத்தின் இந்த நடவடிக்கை சர்வதேச ரீதியில் சாதகமான நிலைப்பாட்டை ஏற்படுத்தும் என அரசுத் தரப்பில் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
*************
நம்பிக்கையிழந்த தேர்தல்?
யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் 23ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில், நீதியான தேர்தல் தொடர்பில் பெரும்பாலான கட்சிகள் நம்பிக்கையிழந்துள்ளன.
எப்போதும் இல்லாத அளவில் தேர்தல் முறைகேடுகள் அரங்கேற்றப்படுவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி தரப்புகள் பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டி வருகின்றன.
ஐக்கிய தேசியக் கட்சி தலைமை, குற்றச்சாட்டுகளை பகிரங்கமாக முன் வைக்காத போதிலும் அதன் வேட்பாளர்கள் தேர்தல் முறைகேடுகள் தொடர்பில் சீற்றங் கொண்டுள்ளனர்.
கிராம மட்டங்களில் சாதாரண பிரசாரக் கூட்டங்களை நடத்துவதற்குகூட காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.
வாரக்கணக்கில் அலைந்து, திரிந்தும் வெறும் கையுடனே திரும்ப வேண்டியிருக்கின்றதென்று ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் கரவெட்டி பிரதேச சபைக்கான தேர்தலில் களமிறங்கியுள்ள எஸ். கிருபாகரன் தெரிவித்துள்ளார்.
கூட்டங்கள் மீது தாக்குதல் நடந்தால் எதுவுமே செய்ய முடியாதமையால் வீடு வீடாகப் போய் ஆதரவு கேட்பதே நல்லதென்று காவல்துறை அதிகாரிகள் ஆலோசனை வழங்குகின்றனர்.
பிரசாரக் கூட்டங்கள், தேர்தல் சுவரெட்டிகளென பெரும்பாலான பிரசார வழிகள் கூட்டமைப்பினருக்கு அடைக்கப்பட்டேயுள்ளன.
ஒட்டப்படுகின்ற சுவரொட்டிகள், இரவோடிரவாக கிழிக்கப்பட்டு விடுகின்றன.
சிலவேளையில் கழிவு ஓயில்கள் ஊற்றப்பட்டும் விடுகின்றன.
இராணுவ முகாம்கள், காவலரண்கள் உள்ள இடங்களில் ஒட்டப்படும் சுவரொட்டிகளுக்குக் கூட இதே நிலைதான்.
ஆனால் வீதியெங்கும் ஒட்டப்பட்டிருக்கும் வெற்றிலை சுவரொட்டிகள் எத்தனை நாளானாலும் பாதுகாப்பாகவே இருப்பதாக கூட்டமைப்பு வட்டாரங்கள் குற்றஞ்சாட்டுகின்றன.
பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ யாழ்ப்பாணத்திலேயே தங்கியுள்ளார்.
அதேபோன்று 13 இற்கும் மேற்பட்ட முக்கிய அமைச்சர்களும், பகுதி பிரித்து பிரசாரங்களில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.
காவல்துறை பாதுகாப்புடன் வீதிகள், ஒழுங்கைகளென அமைச்சர்களது வாகனங்கள் சுற்றிச் சுழன்று வருகின்றன.
தேர்தல் ஆணையாளரது பணிப்பின் பேரில் வந்து திரும்பும் தேர்தல் திணைக்கள அதிகாரிகள், இவற்றை பதிவு செய்து செய்வதை தவிர வேறு எந்தவொரு முன்னேற்றமும் ஏற்பட்டிருக்கவில்லை.
வாக்களிப்பு தினத்தன்று பெரிய அளவில் வன்முறைகள் ஏற்படலாமென்ற அச்சமும் உள்ளதாக கூறப்படுகிறது.
*************
அடக்குமுறை கொண்ட வன்முறைத் தேர்தல் வடக்கில் - ஜே.வி.பி
அரசின் அடக்கு முறைகளுக்குள்ளும், வன்முறைகளுக்குள்ளும் நீதியான நியாயமான தேர்தல் நடக்கும் என்று தாங்கள் நம்பவில்லை என்று ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க கிளிநொச்சியில் வைத்து நேற்றுத் தெரிவித்துள்ளார்.
நடைபெற இருக்கின்ற தேர்தல் ஜனநாயாக வழியில் பரப்புரைகளை நடத்தவோ அல்லது கூட்டங்களை நடத்தவோ இலங்கையில் சகல இடங்களிலும் தங்களுக்கு அனுமதிகள் மறுக்கப்பட்டிருக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
ஆளும் அரசாங்கமானது கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலோ, மாகாண சபைத் தேர்தலிலோ எதிலுமே நீதியான தேர்தலை நடத்தவில்லை.
அந்த வகையில் தான் இந்தத் தேர்தலும் எத்களுக்கு நம்பிக்கையீனத்தை தருகின்றது என்றும் குறிப்பிட்டார்.
சகல ஒடுக்குமுறைகளுக்கும் அநீதிகளுக்கும் எதிராக மக்கள் சக்தியை கட்டியெழுப்புகின்ற வகையிலே தான் தாங்கள் இந்தத் தேர்தலிலே போட்டியிடுவதாகவும் தெரிவித்தார்.
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.
கைது செய்யப்பட்டு, மறைமுகமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து கைதிகளின் பெயர் விவரங்களையும் வெளியிட வேண்டும்.
யுத்தத்தின் போது ஏற்பட்ட அழிவுகளுக்கும் இழப்புகளுக்கும் இந்த அரசு உரிய நட்டஈடுகளை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
நேற்றுக் முற்பகல் 10 மணிக்கு கிளிநொச்சியில் அமைந்துள்ள ஜே.வி.பி. அலுவலகத்திலிருந்து ஜே.வி.பியின் தலைவர் சோமவன்ஸ அமரசிங்க மற்றும் கட்சி தொண்டர்கள் கிளிநொச்சி நகரை நோக்கி நடைபயணமாக பயணித்து தமது தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்டனர்.
*************
சூடுபிடிக்கும் தேர்தல் பிரச்சாரம்
எதிர்வரும் 23 ஆம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பிரசாரக் கூட்டத்துக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனநாயகமக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் ஆகியோர் இன்று கிளிநொச்சி வருகின்றனர்.
இன்று மாலை 4 மணிக்கு கிளிநொச்சி மாவட்ட பணிமனையில் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். சிறிதரன் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் இவர்கள் உரையாற்றுவர்.
கூட்டமைப்பின் கிழக்குமாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களான பா.அரியநேந்திரன், இராசெல்வராசா, கீ.லோகேஸ்வரன், தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் வீ.ஆனந்தசங்கரி ஆகியோரும் உரையாற்றுவர்.
கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், வினோநோதராதலிங்கம் ஆகியோரும் உரையாற்றுகின்றனர்.
யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராசா, சுரேஷ் பிரேமச்சந்திரன், ஈ.சரவணபவன், எம்.ஏ.சுமந்திரன், அப்பாத்துரை விநாயகமூர்த்தி ஆகியோரும் உரையாற்றுவர் என தெரிவிக்கப்படுகிறது.
*************
வடக்கில் வெற்றிக்காக உழைக்க அரச குண்டர் படை!
வடக்கில் எதிர்வரும் 23ம் நாள் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக சிறிலங்கா அரசு குண்டர் குழுக்களை யாழ்ப்பாணத்துக்கு அனுப்பி வைத்துள்ளதாக கொழும்பு ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணத்தில் உள்ள விருந்தினர் விடுதிகள் அனைத்தும் நிரம்பி வழிவதாகவும், அவற்றில் பெரும்பாலானவற்றை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்களே தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
பரப்புரைகளை மேற்கொள்வதற்கு என்ற பெயரில் தங்கியுள்ள இவர்கள் மூலம், உள்ளூராட்சித் தேர்தலில் குழப்பங்களை விளைவித்து வெற்றி பெறவே ஆளும்கட்சி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தமிழ் தெரியாத ஓய்வுபெற்ற சிறிலங்கா காவல்துறை அதிகாரி ஒருவர் தனது குழுவினருடன் யாழ்ப்பாணத்தில் விடுதி ஒன்றில் தங்கியுள்ளதாகவும் தெரியவருகிறது.
தமிழ் தெரியாமல் எவ்வாறு பரப்புரை செய்கிறீர்கள் என்று அந்த ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியிடம் கேட்ட போது, வீடு வீடாகச் சென்று "வணக்கம்" என்று கூறிவிட்டு துண்டுப் பிரசுரங்களை வழங்கி வருவதாகக் கூறியுள்ளார்.
எப்படியும் உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்று விட வேண்டும் என்று கங்கணம் கட்டியே, சிறிலங்கா அரசாங்கம் தென்பகுதியில் இருந்து குண்டர் குழுக்களைக் கொண்டு வந்துள்ளதாகவும் யாழ்ப்பாணத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
*************
பல்டியடிக்கும் ஐக்கிய தேசியக் கட்சி தனிநபர் சொத்தா?
சிறிலங்கா அரசின் இரண்டு முக்கிய அமைச்சர்களுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் கொண்டு வரவிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கைவிட ஐதேக தீர்மானித்துள்ளது.
சிறிலங்காவின் பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்த் மற்றும் மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க ஆகியோருக்கு எதிராகவே ஐதேக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரத் திட்டமிட்டிருந்தது.
20 ஆயிரம் தொன் தரமற்ற பெற்றோலை டுபாயில் இருந்து இறக்குமதி செய்த விவகாரத்தினால் ஆயிரக்கணக்கான வாகனங்களின் இயந்திரங்கள் பழுதடைந்துள்ளன.
அத்துடன் இதனால் பாரிய பொருளாதார இழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
இதற்குப் பொறுப்பான பெற்றோலியத்துறை அமைச்சர் சுசில் பிறேம் ஜெயந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரவும், மின்விநியோகத்தை சீர்படுத்தத் தவறிய மின்சக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்கவுக்கு எதிராகவும் ஐதேக நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வரவும் ஐதேக முடிவு செய்திருந்தது.
ஆனால் திடீரென இந்த முடிவை மாற்றிக் கொண்டுள்ள ஐதேக சிறிலங்கா அரசின் அமைச்சர்கள் மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணைகளைக் கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளது.
எனினும் இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கான காரணத்தை ஐதேக அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
பின்னர் இதுதொடர்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்படும் என்று ஐதேக வட்டாரங்கள் கூறியுள்ளன.
அனைத்துலக நெருக்கடிகளில் இருந்த நாட்டை மீட்கவும், தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணவும் சிறிலங்கா அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதாக ஐதேக தலைவர் ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவித்திருந்தார்.
இதன் ஒரு கட்டமாகவே சிறிலங்காவின் முக்கிய அமைச்சர்களுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் கைவிடப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அத்துடன் வடக்கில் உள்ளூராட்சித் தேர்தல் பரப்புரைகளில் ஈடுபடுவதில்லை என்றும் ரணில் விக்கிரமசிங்க முடிவு செய்துள்ளார்.
கரு ஜெயசூரிய தலைமையிலான குழுவொன்றிடமே வடக்கில் பரப்புரைகளை மேற்கொள்ளும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.
வடக்கில் நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலில் ஆளும்கட்சி வெற்றி பெறுவது அனைத்துலக அளவில் சிறிலங்காவுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகளைக் குறைக்க உதவும் என்று ரணில் விக்கிரமசிங்க கருதுகிறார்.
இததால் தான் அங்கு ஐ.தே.க.வின் வெற்றி குறித்து அவர் அக்கறைப்படவில்லை என்றும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை பலப்படுத்தும் நோக்கில் எதிர்ப் பரப்புரைகள் கைவிட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ன.
*************