Saturday, 9 July 2011

செய்திகள் 09/07

குற்றம் சாட்டும் ஐதேக
சனல்4 காணொளி தொடர்பில் அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது.
நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
இராஜதந்திர வழிமுறைகளைப் பின்பற்றி அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமானது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் சனல்4 ஊடகம் இவ்வாறான ஓர் காணொளியை ஒளிபரப்புச் செய்ததாகவும், அப்போது அந்த ஊடகத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் அறிவித்திருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இதுவரையில் எவ்வித சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுக்களை பொய்ப்பிப்பதற்கு பல்வேறு வழிகள் காணப்பட்ட போதிலும் அரசாங்கம் அந்த வழிகளை பின்பற்றத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
**************
செஞ்சிலுவைச் சங்கம் செயற்படுமா?
இலங்கை செங்சிலுவை சங்கத்தின் முல்லைத்தீவு கிளையின் செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு கட்டமாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனை பிரிவிற்கு உட்பட்டவர்களுக்கான இதய சுவாச மீள உயிர்ப்பித்தல் பயிற்சி தொடர்பான கருத்தரங்கு நேற்று இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் பணிமனையில் இந்த கருத்தரங்கு நடைபெற்றது.
இதற்கான ஏற்பாடுகளை முல்லைத்தீவு கிளையின் நிறைவேற்று அதிகாரி எஸ்.சதீஸ்வரன் மற்றும் மாவட்ட சுகாதார தினைக்களத்தினர் இனைந்து மேற்கொண்டிருந்தனர்.
இந்த நிகழ்வில் சுகாதார வைத்திய அதிகாரிகள், பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும் மருத்துவ தாதியர்கள் உள்ளிட்டோர் பங்குபற்றினர்.
**************
ஸ்ரீலங்காவுக்கு பொக்ஸ்
பிரித்தானிய பாதுகாப்பு செயலாளர் லியம் பொக்ஸ் நேற்று இரவு இலங்கையை சென்றடைந்தார்.
அவர் இன்று லக்ஷ்மன் கதிர்காமர் நினைவு சொற்பொழிவு நிகழ்த்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
லியாம் பொக்ஸ் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என பிரிட்டன் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மஹிந்த ராஜபக்ஷ மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோருடன் லியாம் பொக்ஸ் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
2002ம் ஆண்டு முன்னாள் அரசுத் தலைவர் சந்திரிக்காவிற்கும், முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முனைப்புக்களில் லியாம் பொக்ஸின் பங்களிப்பு முதன்மையானது என சுட்டிக்காட்டப்படுகிறது.
சனல்4 காணொளி விவகாரம் மற்றும் பிரிட்டனின் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் ஆகியவற்றின் பின்னணியில் லியாம் பொக்ஸ் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லக்ஷ்மன் கதிர்காமர் நினைவுப் பேருரையில் கலந்துகொள்வதற்காக கடந்த ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்ய லியாம் பொக்ஸ் திட்டடமிட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் பயணத்தை கைவிட்டார்.
**************
தமிழக சட்டசபையில் திரையிடுக
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தகுற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொணரும் சனல் 4 ஆவணத் திரைப்படத்தை தமிழக சட்டசபையில் திரையிடுமாறு உலகத் தமிழர் பேரவையின் ஊடகப்பேச்சாளர் எஸ்.சுரேந்திரன் தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதாவிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சனல் -4 நிர்வாகம் தாம் வெளியிட்ட இந்த ஆவணத் திரைப்படத்தின் இரண்டு பிரதிகளைத் தம்மிடம் ஒப்படைத்துள்ளது எனவும், அதில் ஒன்றை தமிழக முதலமைச்சருக்கும் மற்றொன்றை இந்திய அரசுக்கும் வழங்குமாறு தம்மிடம் கேட்டுக்கொண்டதாகவும் எஸ்.சுரேந்திரன் இணையதளமொன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
**************
இந்தியாவை அரவணைக்கும் பீரிஸ்
சிறிலங்கா மீது இந்தியா ஆதிக்கம் செலுத்தவில்லை, உதவி செய்வதற்கே முன்வந்துள்ளது என்று சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றுக்குப் பதிலளித்துப் பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தியாவுடன் இணைந்து கூட்டறிக்கையே வெளியிடப்பட்டது. இது உடன்பாடு அல்ல. சிறிலங்காவின் தேசியப் பிரச்சினைக்கு உதவவே இந்தியா விரும்புகிறது என்றும் தெரிவித்தார்.
தேசிய ரீதியான ஒரு தீர்வையே காண நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்க முடிவு செய்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இது காலத்தை இழுத்தடிக்கும் வேலை என சிலர் எண்ணலாம். ஆனால் உண்மையில் இது காலத்தை இழுத்தடிக்கும் வேலையல்ல. தீர்வை மிக விரைவாக பெற்றுக் கொடுப்பதே தமது நோக்கம் என்றும் விளக்கமளித்துள்ளார்.
இப்போது புலிகளின் இராணுவ ரீதியான தாக்குதல்கள் இல்லாவிட்டாலும் அவர்கள் வேறுவிதமான தாக்குதல்களை தொடர்ந்துள்ளனர்.
பொருளாதார ரீதியாக தம்மைப் பலமிழக்கச் செய்ய முற்படுகிறார்கள் எனவும் குறிப்பிட்டார்.
சிறிலங்காவுக்கு வரும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளை தடுக்க முற்படுகின்றனர்.
சூடானுடன் சிறிலங்காவைச் சிலர் ஒப்பிட முற்படுகின்றனர். ஆனால் சூடானுடன் சிறிலங்காவை ஒப்பிட முடியாது.
நாடு கடந்த அரசு என்று எதுவும் கிடையாது. இவ்வாறான ஒன்றை எந்த நாடும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை.
சிறிலங்காவின் 50 வீதத்துக்கும் அதிகமான ஏற்றுமதிகள் ஐரோப்பிய நாடுகளுக்கே செல்லுகின்றன.
எனவே பொருளாதார ரீதியில், உலகமயமாக்கல் ரீதியில்- இந்த நாடுகளுடன் இணைந்து தமது பொருளாதாரத்தை வலுப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதற்காக அந்த நாடுகளுக்கு தாம் அடிபணிகிறோம் என்று பொருளல்ல என்றும் விளக்கமளித்துள்ளார்.
இந்தியாவைக் தொடர்பாக குரோத மனப்பான்மையுடன் பார்க்க வேண்டாம். இந்தியாவை ஒதுக்கி விட்டு சிறிலங்காவினால் பொருளாதார வளர்ச்சி இலக்கை எட்டமுடியாது.
இந்தியா ஊடாகத் தான் தமது இலக்கை அடைய முடியும் என்றும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.
**************
கூட்டமைப்பை தீய சக்தி என்று வர்ணித்த படைத்தளபதி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டத்தின் மீது சிறிலங்காப் படையினரை ஏவிவிட்டுத் தாக்குதல் நடத்திய யாழ்.படைகளின் தளபதி மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க, கூட்டமைப்பை தீயசக்தி என்று விமர்சித்துள்ளார்.
கொழும்பு அரச ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வி ஒன்றிலேயே அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தீயசக்திகள் என்று வர்ணித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பற்ற சூழல் காணப்படுவதாகவும், இயல்பு நிலை உருவாகவில்லை என்றும் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பாக கருத்து வெளியிட்டபோதே மேஜர் ஜெனரல் மகிநத ஹத்துருசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ். குடாநாட்டில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக சிலர் பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாகவும், இத்தகைய செய்திகளில் எந்த உண்மையும் கிடையாது என்றும் மேலும் தெரிவித்துள்ளார்.
தேர்தல் காலங்களில் இது போன்ற பரப்புரைகளில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட சில தீயசக்திகள் ஈடுபடுவது வழக்கமே என்றும் அரசியல் நலன் கருதியே அவர்கள் இத்தகைய பரப்புரைகளில் ஈடுபடுவதாகவும் மேஜர் ஜெனரல் மகிந்த ஹத்துருசிங்க கூறியுள்ளார்.
தனிப்பட்ட சம்பவங்களையும் சிலர் அரசியல் மயப்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள யாழ். படைகளின் தளபதி, சிறிலங்கா அரசின் அபிவிருத்திச் செயற்பாடுகளை விரும்பாத சிலரே இது போன்ற உண்மைக்குப் புறம்பான பரப்புரைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.
**************
கூட்டமைப்பை நசுக்கும் ஸ்ரீலங்கா அரசின் நடவடிக்கை
வடக்கில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை பல்வேறு வகையிலும் இடையூறுகளை ஏற்படுத்தி முடக்குவதற்கு அரச தரப்பு முயன்று வருவதுடன் இந்த நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரை மறைமுகமாக ஈடுபடுத்துகின்றது என்று நீதியானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான கபே அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் நேற்று தெரிவித்துள்ள தகவலில் தெற்கிலும், அரசியல் அச்சுறுத்தல்கள், வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுகின்றன.
ஆனால், அவை ஒரே கட்சிக்கு எதிராகத் தொடர்ந்தும் இடம்பெறுவதில்லை.
ஆனால், வடக்கில் அவ்வாறு இல்லை. கூட்டமைப்புக்கு எதிராகத் தொடர்ந்தும் அச்சுறுத்தல்கள், வன்முறைகள் என்பன திட்டமிட்டபடி கட்டவிழ்த்து விடப்படுகின்றன என்று தெரிவித்துள்ளார்.
கூட்டமைப்பினர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க முனையும் போது, அந்தப் பிரதேசத்தை அண்டிய பிரதேசங்களில் இராணுவத்தினரும், காவல்துறையினரும் வீடுகளுக்குச் சென்று சோதனை நடவடிக்கையில் ஈடுபடுகின்றனர்.
இதனால், மக்கள் அச்சத்தில் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொள்வதில்லை. இவ்வாறு இடம்பெறுவதை திட்டமிட்ட சதி என்றே கூறலாம்.
வடக்கில் அரச தரப்பு தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றது.
கிளிநொச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்ற தேர்தல் பிரசார நடவடிக்கையின்போது அதிகளவான அரச சொத்துகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் பாவித்துள்ளனர்.
இவ்வாறான நடவடிக்கைகள் கண்டிக்கப்பட வேண்டியவையாகும் எனவும் தெரிவித்தார்.
அரசு வடக்கில் சுதந்திரமாகத் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வது போன்று ஏனைய அரசியல் கட்சிகளுக்கும் வழிசமைத்துக் கொடுக்கவேண்டும்.
வடக்கில் இன்னும் அரசியல் சுதந்திரம் நிலைநாட்டப்படவில்லை. அதனை நிலைநாட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
யாழ். குடாநாட்டில் தேர்தல் நிலவரங்கள் தொடர்பில் ஆய்வு செய்வதற்காக தான் இன்று சனிக்கிழமை அங்கு செல்லவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
**************
கல்லெறியும் காடையர்
சாவகச்சேரி நகரசபை, பிரதேசசபை ஆகியவற்றில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களின் வீடுகளுக்கு கடந்த சில தினங்களாக இரவு வேளையில் கல்வீச்சு நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
சாவகச்சேரி பிரதேச சபையின் வேட்பாளர் கணபதிப்பிள்ளை யோகராசாவின் வரணி இயற்றாலை வீட்டின் மீதும் வேட்பாளர் சுந்தரம் என்பவரின் குடமியன் வீட்டின் மீதும் கடந்த 6 ஆம் திகதியும் சாவகச்சேரி நகரசபை வேட்பாளர் இ.தேவசகாயம்பிள்ளை என்பவரின் வீட்டின் மீது 7 ம் திகதியும் கற்கள் எறிந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என்று கூட்டமைப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
**************