Saturday, 16 July 2011

செய்திகள் 16/07

அமெரிக்காவில் ஸ்ரீலங்காவின் கொலைக் களம்
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான சனல் 4 இன் ஆவணப்படத்தை அமெரிக்காவின் செனட்சபை உறுப்பினர்கள் நேற்றுப் பார்வையிட்டுள்ளனர்.
மனித உரிமைகள் கண்காணிப்பகம், சர்வதேச மன்னிப்புச் சபை, நெருக்கடிகளுக்கான சர்வதேசக் குழு மற்றும் பகிரங்க சமூக மன்றம் ஆகியவற்றைச் சேர்ந்தவர்களும் செனட்சபை உறுப்பினர்களுடன் இணைந்து இந்த ஆவணப் படத்தைப் பார்த்தனர்.
அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்றக் கேட்போர் கூடத்தில் இப்படம் திரையிடப்பட்டது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இணைத் தலைவரும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினருமான ஜிம் மெக்கோவான் அறிமுக உரையை வழங்கி ஆவணப்படத்தை ஆரம்பித்து வைத்தார்.
படத்தைப் பார்த்து முடித்ததும் ஐ.நா.நிபுணர்கள் குழுவின் அறிக்கை உள்ளிட்ட இலங்கையின் பொறுப்புடமை தொடர்பாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் குறித்து அங்கு கலந்துரையாடப்பட்டது.
****************
அனைத்துலக விசாரணைக்கான வலுப்பெற்று வரும் கோரிக்கை
சிறிலங்காவில் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும் ஆவணப்படம் நேற்று வொசிங்டனில் காண்பிக்கப்பட்டதை அடுத்து, அது குறித்து அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள், மனிதஉரிமை ஆர்வலர்கள் மத்தியில் வலுவடைந்துள்ளதாக அனைத்துலக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அமெரிக்க நாடாளுமன்றமான காங்கிரசின் கப்பிரல் வளாகத்தின் உள்ளே நேற்று சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் திரையிடப்பட்டது.
இந்த நிகழ்வில் கருத்து வெளியிட்ட அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினரும், காங்கிரசின் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் இணைத் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளவருமான ஜேம்ஸ் மைக் கொவென், மிகமோசமான மனிதர்களுக்கு இவர்கள் பயங்கரமான எடுத்துக் காட்டாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இந்தக் காட்சிகள் வெறுமனே அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாக அமைவதுடன் மட்டுமன்றி குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களை பொறுப்புக் கூற வைக்கும் சுதந்திரமான விசாரணைகளுக்குத் தேவையான சக்திவாய்ந்த ஆதாரமாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்கா அரசாங்கம் அதைச் செய்யவில்லையென்றால்,அனைத்துலக சமூகம் அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும் ஜேம்ஸ் மைக் கொவென் வலியுறுத்தியுள்ளார்.
போர்க்குற்றங்கள் புரிந்தது கண்டறியப்பட்டால், அவர் யாராக இருந்தாலும் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆவணப்படம் காண்பிக்கப்பட்டதை அடுத்து, இந்த நிகழ்வில் பங்கேற்ற அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐ.நா தலைமையிலான போர்க்குற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளனர்.
இந்த ஆவணப்படத்தை வொசிங்டனில் திரையிட அனைத்துலக மன்னிப்புச்சபை ஆதரவு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
****************
இந்திய மௌனம் கலைந்ததன் நோக்கம் என்ன?
போர்க்குற்றச்சாட்டுகள் தொடர்பாக சிறிலங்கா விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.
இந்திய வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் விஸ்ணு பிரகாஸ் புதுடெல்லியில் நேற்று இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவின் இடம்பெற்ற போர்க்குற்றங்களை வெளிப்படுத்தும்- சனல் 4 தொலைக்காட்சி தயாரித்த சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் கடந்தவாரம் இந்தியாவின் ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகியிருந்தது.
இதையடுத்து ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி இதுபற்றிய இந்தியாவின் நிலைப்பாடு என்ன என்று தொடர்ச்சியாக கேள்வி எழுப்பி வந்தது.
அதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் நிருபமா ராவ் இதுபற்றித் தாம் கருத்து வெளியிடப் போவதில்லை என்று கூறியிருந்தார்.
போர்க்குற்ற ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்ட எட்டு நாட்களின் பின்னர் இந்தியாவின் மௌனம் கலைந்துள்ளதாக ஹெட்லைன்ஸ் ருடேயின் இணை ஊடகமான இந்தியா ருடே தெரிவித்துள்ளது.
இந்த ஆவணப்படம் உலகெங்கும் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் சிறிலங்காப் படையினருக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை எழுப்பியுள்ளதாகவும் இந்தியா ருடே தெரிவித்துள்ளது.
ஆவணப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் குறித்து சிறிலங்கா முழுஅளவிலான விசாரணை நடத்த வேண்டும் என்று இந்தியா முதல்முறையாக கருத்து வெளியிட்டுள்ளது.
ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சிக்கு செவ்வி அளித்துள்ள இந்திய வெளிவிகார அமைச்சு பேச்சாளர், மனிதஉரிமை மீறல்கள் பற்றிய கவலைகள் குறித்து சிறிலங்கா பதிலளிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் சிறுபான்மை இனங்களின் கவலைகளை தீர்க்க உண்மையானதும் அர்த்தபூர்வமானதுமான அரசியல்தீர்வு ஒன்றுக்கு சிறிலங்கா முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதுவரை சிறிலங்காவின் உள்விவகாரம் என்று கூறிவந்த இந்தியா முதல்முறையாக தனது மௌனத்தைக் கலைத்துள்ளதாக இந்தியா ருடே கருத்து வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் ஒளிபரப்பப்பட்டதை அடுத்து எழுந்துள்ள நெருக்கடிகளால் தான் இந்தியா முழு அளவிலான விசாரணைக்கு அழைப்பு விடுத்துள்ளதாகவும் இந்தியா ருடே தெரிவித்துள்ளது
****************
வடக்கில் நேர்மையான தேர்தல் நடக்காது!
வடக்கில் இராணுவ ஆட்சி இருக்கும்வரை அந்தப் பிரதேசங்களில் நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல்களை எதிர்பார்க்க முடியாது என இடதுசாரி முன்னணித் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் வாக்குகளைக் கொள்ளையடிப்பதற்காக அமைச்சர்கள் பட்டாளமொன்று வடக்குக்குப் படையெடுத்துள்ளது.
அங்கு நிலைகொண்டு அதற்குத் தேவையான நடவடிக்கைகளை சுதந்திரமாக அவர்கள் முன்னெடுத்து வருகின்றனர் என்றும் கருணாரட்ண தெரிவித்துள்ளார்.
வடக்கில் இராணுவ ஆட்சியே நிலவுகின்றது. அங்கு அரசியல் சுதந்திரமில்லை.
இராணுவத்தினரும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
வடக்கில் இராணுவ ஆட்சி இருக்கும் வரை சுதந்திரமான தேர்தல்கள் என்ற பேச்சுக்கே இடமில்லை.
சுதந்திரமான தேர்தல் பரப்புரை நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கான சூழல் எதிர்க்கட்சிகளுக்கு அங்கு இல்லை.
அரசு மாத்திரம் சுதந்திரமாகச் செயற்படுகின்றது. அபிவிருத்தி என்ற போர்வையில் அரசு நிகழ்வுகளையும் பிரசாரத்துக்குப் பயன்படுத்திக் கொள்கின்றது.
வாக்குப் பெட்டிகளை வைத்து அதனை நிரப்புவதே தேர்தல் என அரசு நினைத்துக்கொண்டிருக்கின்றது.
அது மட்டுமன்றி, வாக்குகளைப் பலவந்தமாகப் பறித்தெடுக்கும் முயற்சியையும் முன்னெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
****************
மக்கள் மீது நம்பிக்கை - ததேகூ
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது, தமிழ் மக்கள் வைத்துள்ள நம்பிக்கை இந்தத் தேர்தலிலும் பிரதிபலிக்கும் என சுரேஸ் பிரேமச் சந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
பல வருடங்களாகத் திறக்கப்படாமலிருந்த வீதிகளைத் திறப்பதனாலோ, ஆசைவார்த்தைகளுக்காகவோ, அற்பசொற்ப சலுகைகளுக்காகவோ ஏமாந்து தமிழ் மக்கள் வாக்களிக்கமாட்டார்கள் எனவும் குறிப்பிட்டார்.
இந்தத் தேர்தலிலும் கூட்டமைப்பு பெரு வெற்றி அடையும் என்பது நிச்சயம் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
போலியான பிரசாரங்களுக்குத் தமிழ்மக்கள் ஏமாறமாட்டார்கள்.
சலுகைகளுக்கும், அற்ப சொற்ப விடயங்களுக்கும் ஆசைப்பட்டு தமிழர்கள் வாக்குகளை விற்கமாட்டார்கள்.
யுத்தத்துக்குப் பின்னர் இடம்பெற்ற உள்ளூராட்சி, நாடாளுமன்ற மற்றும் அரசுத் தலைவர்த் தேர்தல்களில் யாருக்கு வாக்களிக்கும்படி மக்களிடம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு கேட்டுக்கொண்டதோ, அவர்களுக்கே தமிழ்மக்கள் வாக்களித்துள்ளார்கள்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொடுக்கும் என்ற திடமான நம்பிக்கை தமிழ் மக்களின் உள்ளங்களில் உள்ளது.
எனவே, அதை வலுப்படுத்தவே அவர்கள் முனைவார்கள் என்றும் அவர் நம்பிக்கை லெளியிட்டுள்ளார்.
****************
தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீடு
நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான தனது உத்தியோகபூர்வ தேர்தல் விஞ்ஞாபனத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது.
இலங்கையில் 2010 ஏப்பிரல் திங்களில் நடைபெற்ற பொதுத் தேர்தல் முடிந்து 15திங்கள் நிறைவதற்குள் உள்ளுர் அதிகாரசபைத் தேர்தல் ஒன்றுக்கு இருமுறை முகங்கொடுக்க மக்கள் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனா.;
குறிப்பாக வடக்கு கிழக்கில் வாழ்ந்த மக்கள் சுனாமிப் பேரலைக்குள் மூழ்கி அந்த அழிவிலிருந்தும் பேரவலத்திலிருந்தும் ஜந்து ஆண்டுகளாகியும் மீட்சி கொள்ளவில்லை.
போர் முடிவடைந்து விட்டதாக அரசு அறிவித்த பொழுதிலும் தமிழ்ப் பிரதேச மக்கள் அந்தப் பேரவலத்திலிருந்து இரண்டு ஆண்டுகள் கடந்த பின்னும் தங்கள் வாழ்விடங்களில் முழுமையாக மீள்குடியமர்த்தப்படவில்லை.
வாழ்வாதாரங்களைத்தானும் மீளக்கட்டியெழுப்ப முடியவில்லை.
போர் முடிந்துவிட்டதென்ற செய்தியை விட அந்த முடிவின் விளைவுகள் பாரதூரமானவையாகவுள்ளன.
அதன் விளைவுகள் வரலாற்று ரீதியான பாரம்பரியமிக்க தமிழ்த்தேசிய இனத்தின் அடையாளங்களையும் அத்திபாரத்தையும் அழித்தும் தகர்த்தும் வருகின்றன.
இலங்கையில் வன்னிப் போரின் முடிவுகள் தமிழ் மானுடத்தைப் பாதித்து வருகின்றமையை நாம் அனுபவித்து வருகின்றோம்.
வரலாற்றுப் பெருமைமிக்க தமிழ்த் தேசிய இனம் வளமிக்க தமிழ்மொழி, தமிழ்ப்பண்பாடு, மனித நாகரிகம் அழிக்கப்படும் அவலத்தை நாம் எதிர்நோக்கி நிற்கின்றோம்.
இராணுவப் பாதுகாப்புடன் இராணுவக் குடியிருப்புக்களும் சிங்களக் குடியமர்வுகளும் எங்கும் எதிலும் இராணுவத் தலையீடும் அரசு மற்றம் அரசு சாரா நிறுவனங்களின் நிர்வாகம் இராணுவமயப்படுத்தப்படுதலும் சிங்கள குடியேற்றங்களினால் சிங்களமயமாக்கலும்; புத்த சமய சின்னங்களின் பரம்பலினால் பௌத்தமயமாக்கலும்; பொருளாதாரச் சுரண்டல்களும் சூறையாடல்களும் தமிழர் நில ஆக்கிரமிப்புகளும் தாராளமாகவே தமிழ்ப் பேசும் மக்களிடத்திலும் வாழ்விடங்களிலும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
****************
நாட்டை காப்பாற்றிய மகிந்த?
அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி பீடத்தில் ஏறியிருக்கா விட்டால், சூடானுக்கு நேர்ந்த நிலைமை இலங்கைக்கும் ஏற்பட்டிருக்கும் என அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க அல்லது வேறும் ஒருவர் நாட்டை ஆட்சி செய்திருந்தால் நிச்சயமாக நாடு பிளவு பட்டிருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெளிநாட்டு சக்திகளின் அழுத்தங்களுக்கு அடி பணியாது உறுதியான தீர்மானங்களை எடுத்த காரணத்தினால் இன்று பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மக்கள் தற்போது சுதந்திரத்தை அனுபவித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டை மீளவும் பிளவு படுத்த சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது எனவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் தீவிரவாத செயற்பாடுகளுக்கு சந்தர்ப்பம் அளிக்கப்பட மாட்டாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
****************
சட்டவிரோத ஆயுதம் - ஆதரவு வழங்குவது யார்?
நாடு முழுவதிலும் ஐந்து லட்சம் சட்டவிரோத ஆயுதங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலம் சட்டவிரோத ஆயுத பயன்பாடு குறித்த தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.
சட்டவிரோத ஆயுதங்களை பொறுப்பேற்றுக் கொள்வதற்கு போதியளவு கால அவகாசமொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கால அவகாசமொன்றை வழங்கி அதன் பின்னர், சட்டவிரோத ஆயதங்களை வைத்திருப்போரை கைது செய்வதற்கான சுற்றி வளைப்புத் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என குறிப்பிடப்படுகிறது.
பாதாள உலகக் குழுக்கள் மற்றும் ஏனைய சட்டவிரோத அமைப்புக்கள் அதிகளவில் சட்டவிரோத ஆயுதங்களை பயன்படுத்தி வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாட்டின் சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதற்கு சட்டவிரோத ஆயுத பாவனை பெரும் தடையாக அமைந்துள்ளது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
போர் இடம்பெற்ற காலத்தில் சட்டவிரோத ஆயுத பயன்பாடு அதிகரித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
****************