Tuesday, 12 July 2011

செய்திகள் 12/07

தொடரும் இந்திய மௌனம்!
சிறிலங்காவின் கொலைக்களங்கள் ஆவணப்படம் இந்தியத் தொலைக்காட்சியல் ஒளிபரப்பாகி நான்கு நாட்களாகி விட்ட பின்னரும், இந்த மனிதஉரிமை மீறல்கள் தொடர்பாக இந்திய அரசாங்கம் எந்தக் கருத்தையும் வெளியிடவில்லை என்று இந்திய ஊடகமான இந்தியா ருடே தகவல் வெளியிட்டுள்ளது.
தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா இராணுவம் நிகழ்த்திய கொடூரங்கள் குறித்த சாட்சியங்களை ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி ஒளிபரப்பாகி நான்கு நாட்களாகி விட்டன.
ஆனாலும் இந்தியா தொடர்ந்து இதுபற்றி மௌனம் சாதித்து வருவதாகவும் இந்தியா ருடே குற்றம்சாட்டியுள்ளது.
அதேவேளை, இவை விடுதலைப் புலிகளால் இழைக்கப்பட்டவை என்று சிறிலங்கா கூறியுள்ளது என்றும் அந்த ஊடகம் தெரிவித்துள்ளது.
சனல்- 4 தொலைகாட்சி ஒளிபரப்பிய சிறிலங்காவின் கொலைக்களங்கள் என்ற- மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்களின் சாட்சியான- ஆவணப்படத்தை ஹெட்லைன்ஸ் ருடே தொலைக்காட்சி கடந்த வியாழக்கிழமை ஒளிபரப்பியது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்ப் போராளிகளுக்கு எதிராக சிறிலங்கா படைகளால் நடத்தப்பட்ட போரின்போது போர்க்குற்றங்கள் நிகழ்ந்துள்ளதை இந்த ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள காட்சிகள் உறுதி செய்வதாகவும் 'இந்தியா ருடே' தெரிவித்துள்ளது.
ஆனாலும் இநதிய வெளிவிவகார அமைச்சு இதுபற்றிக் கருத்து வெளியிடுவதைத் தவிர்த்து வருகிறது.
இந்திய வெளிவிவகாரச் செயலர் நிருபமா ராவிடம் இது குறித்துக் கேட்டபோது அவர், இந்த விவகாரம் குறித்து தான் கருத்து வெளியிடப் போவதில்லை என்று கூறிவிட்டார் என்றும் இந்தியா ருடே மேலும் தகவல் வெளியிட்டுள்ளது.
*******************
பாதுகாப்பு வேண்டும்?
உள்ளூராட்சி சபைத்தேர்தலில் யாழ்ப்பாணம் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு வேட்பாளர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் உறுதியளித்துள்ளார்.
தமிழ் தேசியகூட்டமைப்பு வேட்பாளர்கள் படையினராலும் ஆயுதக்குழுக்களினாலும் அச்சுறுத்தப்படுகின்றமை தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்த முறைப்பாட்டுக்கு தேர்தல்கள் ஆணையாளர் பதிலளித்திருப்பதாக கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
உள்ளுராட்சி சபைத்தேர்தல்கள் சுதந்திரமாகவும் நீதியாகவும் இடம்பெற தேர்தல்கள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கும் என்றும் வேட்பாளர்களை அச்சுறுத்தும் நபர்கள், குழுக்கள் கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் ஆணையாளர் உறுதியளித்துள்ளதாக சுமந்திரன் கூறியுள்ளளார்.
வடபகுதியில் போட்டியிடும் அரசதரப்பு வேட்பாளர்கள் அல்லாத ஏனைய கட்சி வேட்பாளர்கள் அச்சுறுத்தப்படுகின்றமை தொடர்பாக ஐக்கியதேசிய கட்சி, ஜே.வி.பி ஆகிய கட்சிகளும் தேர்தல்கள் ஆணையாளரிடம் முறைப்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
*******************
யார் மக்களின் உண்மையான பிரதிநிதிகள்?
வடக்கில் மக்களை அச்சுறுத்தி கூட்டமைப்புக்கு வாக்களிக்க விடாமல் தடுத்து, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் தொடர்பான மாயையை உருவாக்க அரசு முயற்சிக்கின்றது.
பின்னர் இவர்களுடன் பேச்சு நடத்தி அரசுக்குத் தேவையான தீர்வைத் தமிழ் மக்கள் மீது திணிப்பதே அரசின் நோக்கம் என்று புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகத் தொடர்ந்தும் திட்டமிட்டபடி வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்படுகின்றன.
இதனை தாம் வன்மையாகக் கண்டிப்பதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தாம் தெற்கில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமசமாஜக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகியன இதில் பங்கேற்கும்.
அரசுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு இடையில் இனப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது தொடர்பாக நடைபெற்றுவரும் பேச்சுகளை திசை திருப்பும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
வடக்கு, கிழக்கு மக்களுக்கு அந்தப் பிரதேச மக்களின் நம்பிக்கையை வென்ற கட்சி என்ற அடிப்படையில் கூட்டமைப்புடன் பேசியே அரசியல் தீர்வை அரசு வழங்கவேண்டும் என சர்வதேசம் கூறியுள்ளது.
இதனைத் தடுத்து நிறுத்தும் முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளது.
நடைபெறவுள்ள தேர்தலில் வடக்கு மக்களின் வாக்குகளைப் பலவந்தமாகப் பறித்து, கூட்டமைப்பின் அரசியல் செல்வாக்கைச் சீர்குலைத்து, அவர்கள் ஏகப் பிரதிநிதிகள் அல்லர் என்பதை எடுத்துக் காட்டுவதே அரசின் நோக்கமாக உள்ளது.
அதற்காகவே கூட்டமைப்புக்கு எதிராகத் தொடர்ந்தும் வன்முறைச் சம்பவங்கள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
இவ்வாறு அரசு வாக்குகளைக் கொள்ளையடித்துக் கொண்டு, தமிழ் மக்களின் ஏகப் பிரதிநிதிகள் கூட்டமைப்பினர் அல்லர், அப் பிரதேச மக்கள் தங்களுக்கும் வாக்களித்துள்ளனர் என சர்வதேசத்துக்குக் கூற முயற்சிக்கின்றது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
*******************
மக்களை அச்சுறுத்தும் அரசு!
வடக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் தேர்தல் வன்முறைச் சம்பவங்களால் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொள்வதற்கு மக்கள் அஞ்சுகின்றனர்.
எனவே, வடக்கில் அரசியல் சுதந்திரத்தை நிலைநாட்டி நீதியானதும், நியாயமானதுமான தேர்தலை நடத்துவதற்கு வழிசமைத்துக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்று நீதியானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் இயக்கமான கபே அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடவடிக்கைகளைக் கண்காணிப்பதற்காக வடக்கின் பல பகுதிகளுக்கு கபே அமைப்பினர் விஜயம் செய்தனர்.
அப்பிரதேசங்களின் நிலைமைகள் தொடர்பாகக் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
குறிப்பாக வடக்கு மக்கள் தேர்தல் நடவடிக்கைகளில் ஆர்வம் காட்ட அஞ்சுகின்றனர்.
தொடர்ச்சியாக அப்பிரதேசங்களில் இடம்பெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள்தான் இதற்குப் பிரதான காரணம்.
மக்களின் அரசியல் உரிமைகள் மறுக்கப்பட்டு தேர்தல் நடத்துவதில் எவ்வித பிரயோசனமுமில்லை.
எனவே அரசு வடக்கில் தேர்தல் சுதந்திரத்தை நிலைநாட்டி நீதியானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கு வழிசமைத்துக் கொடுக்கவேண்டும்; இது அரசின் கடமையுமாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
பிரதான எதிர்க்கட்சிகளுக்கு வடக்கில் தேர்தல் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஏதுவான ஓர் சூழ்நிலை அங்கு இல்லை.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகிய கட்சிகளுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நடத்திய மூன்று பிரதான கூட்டங்களின் போது இராணுவத்தினர் அப்பிரதேசங்களுக்குச் சென்று வீடுவீடாக சோதனையிட்டுள்ளனர்.
பிரசாரக் கூட்டத்துக்கு வரும் மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியுள்ளனர்.
இது தொடர்பாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.
*******************
வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர் வேண்டும்
எதிர்வரும் 23 ஆம் திகதி இடம்பெறவுள்ள வடக்கு உள்ளுராட்சி தேர்தல் வாக்களிப்பின் போது வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் அழைக்கப்படவேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கோரியுள்ளது.
இந்தநிலையில் தமது கட்சி மீது வடக்கில் தினந்தோறும் தாக்குதல்களும் வன்முறைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.
இது தொடர்பில் கடிதம் ஒன்றை தாம் தேர்தல்கள் ஆணையாளருக்கு அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுபபினர் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
வடக்கில் உள்ளூட்சி தேர்தலில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைபபின் வேட்பாளர்களின் வீடுகளுக்கு கல்லெறி மற்றும் நாய்களை சுட்டு அதன் தலைகளை வீட்டு வாசலில் தொங்கவிடல் போன்ற வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக சுமந்திரன் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
*******************
நட்டஈடு செலுத்த உத்தரவு
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் சுமார் 162 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் அதற்கான வட்டியுடன் சேர்த்து ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கிக்கு வழங்க வேண்டும் என லண்டன் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹெஜிங் உடன்படிக்கையின்படி ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கிக்கு வழங்கப்பட வேண்டிய பணத்தை செலுத்தாததால், அவ்வங்கிக்கு சுமார் 162 மில்லியன் டொலர்களையும் அதற்கான வட்டியையும் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமே வழங்க வேண்டியுள்ளதாக லண்டன் நீதிமன்றமொன்று தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீபெட்கோவிலிருந்து கருத்து கூறுவதற்கு ஒருவரும் கிடைக்கவில்லை எனவும் ஆனால் தமக்கு சாதகமாக தீர்ப்பு கிடைத்ததால் தாம் மகிழ்ச்சியடைவதாக ஸ்டான்டர்ட் சார்டர்ட் வங்கியின் பேச்சாளர் ஒருவர் கூறியதாக ராய்ட்டர்ஸ் செய்திச்சேவை தெரிவித்துள்ளது.
*******************
காமுகர்களின் கொலைகளம்
கதிர்காமத்திற்கு கால்நடையாக சென்ற போது காட்டு மிருகத்தின் தாக்குதலில் தமிழ் பெண் உயிரிழந்ததாக முன்னர் கூறப்பட்ட போதிலும் அப்பெண் இராணுவ சீருடை அணிந்த சிலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக தெரியவந்துள்ளது.
இந்த பெண்ணின் உடலில் காணப்படும் காயம் மிருகங்களின் தாக்குதலில் ஏற்பட்ட காயம்போல் காணப்படவில்லையென அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது கதிர்காமம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள இந்த பெண்ணின் மரணம் தொடர்பாக பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக கூறும் உறவினர்கள் இது தொடர்பில் உரிய நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை உயிரிழந்த பெண்ணின் மரண ஓலம் கேட்டபோது அப்பகுதிக்கு பொதுமக்கள் சிலர் சென்றவேளையில் இராணுவ சீருடையில் இருந்த மூவர் அப்பகுதியில் இருந்து ஓடியதை தாம் கண்டதாக தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த இராணுவத்தினரும் வன இலாகா அதிகாரிகளும் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை சம்பவ இடத்தில் வைத்து எரிக்க முற்பட்டதாகவும், உறவினர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்தே சடலம் வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டதாகவும் அப்பெண்ணின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
*******************
தப்பியயோடியோரை தப்பியோடவுள்ளோர் தேடுதல்?
இராணுவத்திலிருந்து சட்டவிரோதமாக தப்பிச்சென்ற 40 ஆயிரத்துக்கும் அதிகமானவர்களை குறி வைத்து பாரிய தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதோடு அண்மையில் அதிகரித்து வரும் பல்வேறு வகையான குற்றச் செயல்களின் பின்னணியிலும் தொடர்புபட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது என்று இராணுவ பேச்சாளர் மேஜர் ஜெனரல் உபயமெதவல தெரிவித்தார்.
இதுவரையில் தப்பிச்சென்ற 9 ஆயிரம் பேரை இராணுவ காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
ஏனையோரையும் விரைவில் கைது செய்து தண்டனை வழங்ப்படும் எனவும், எனவே தப்பிச் சென்றவர்கள் சரணடைந்து சட்டபூர்வமான விலகலைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த யுத்த காலப் பகுதியில் பெருந்தொகையான இராணுவத்தினர்  சட்டவிரோதமாக படைகளில் இருந்து தப்பிச்சென்றிருந்தனர்.
இவர்கள் அனைவரையும் கைது செய்யும் நோக்கில் பல தேடுதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
அது மட்டுமன்றி சட்டபூர்வமான விலகலை பெற்றுக்கொள்ள கால அவகாசமும் வழங்கப்பட்டது.
ஒரு சிலர் சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டு இராணுவத்திலிருந்து உத்தியோகபூர்வமாக விலகிக் கொண்டனர்.
ஆனால் பெருந்தொகையானோர் சரணடையவில்லை.
இதுவரையில் 40 ஆயிரம் பேர் சட்டவிரோதமாக இராணுவத்திலிருந்து தப்பிச் சென்று பொது வாழ்க்கையில் ஈடுபடுகின்றனர்.
இது இராணுவ சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
உத்தியோகபூர்வமான விலகலைப் பெற்றுக்கொள்ளாமல் இராணுவத்தினரால் பொது வாழ்லில் ஈடுபட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
*******************