அச்சுறுத்தும் ஆணைக்குழு
பாதுகாப்பு அச்சுறுத்தல், இரகசியத்தன்மை ஆகிய அடிப்படைக் காரணங்களைக் கருத்திற்கொண்டே கணிசமானளவு மக்கள் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை நல்லிணக்க ஆணைக்குழுவிடம் கூறவில்லை.
அந்த ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த விதவைப் பெண்ணுக்கு சி.ஐ.டி. அழைப்பாணை விடுத்துள்ளதன் மூலம் இந்த விடயம் உலகுக்கு அம்பலமாகியுள்ளது.
இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை அரசுத் தலைவரிடம் கையளிக்கப்படவுள்ள நிலையில், இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதானது பலத்த சந்தேகத்தைத் தோற்றுவித்துள்ளது என்றும் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த கல்முனையைச் சேர்ந்த 45 வயதான விதவைப் பெண்ணான இரத்தினம் பூங்கோதை என்பவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.
நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தான் வழங்கிய சாட்சியம் தொடர்பாக விசாரிப்பதற்கு சி.ஐ.டியினர் தன்னை விசாரணைக்கு வருமாறு அழைத்தனர் என்ற விடயத்தை குறித்த பெண் நேற்று உறுதிப்படுத்தினார்.
ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இலங்கையின் பக்கம் திரும்பியுள்ள நிலையிலும், அறிக்கை வெளியாக இன்னும் சில நாள்களே எஞ்சியுள்ள நிலையிலும் நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியம் வழங்கியவர் தொடர்பான இரகசியம் கசிந்துள்ளதானது அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்களிடம் சாட்சியங்களைத் திரட்டும்போது இரகசியத்தன்மை 100 சதவீதம் பேணப்படும் என உறுதியளிக்கப்பட்டே நல்லிணக்க ஆணைக்குழு சாட்சியங்களைத் திரட்டியது.
ஆனால், இப்போது இரகசியம் எப்படி அம்பலமானது என்று அரசியல் ஆய்வாளர்கள் கேள்விக்கணைகளைத் தொடுக்கின்றனர்.
நல்லிணக்க ஆணைக்குழுவிடம் சாட்சியமளித்த பொதுமக்கள் தொடர்பான பெயர், அவர் தொடர்பான விவரம் கசிந்துள்ளதானது அறிக்கை மீதுள்ள நம்பகத்தன்மையை திசை திருப்பியுள்ளது என்றும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த இரத்தினம் பூங்கோதை என்பவருக்கு சி.ஐ.டியினர் விசாரணை அழைப்பாணை விடுத்துள்ளதானது அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அதேவேளை, பல்வேறு கோணங்களில் சந்தேகங்களையும் தோற்றுவித்துள்ளது.
இந்நிலையில், இந்த விடயம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனிடம் கருத்துக்கேட்டபோது நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கினால் இரகசியத்தன்மை பேணப்படாது என்றும் அதேபோன்று பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும் என மக்கள் கருதினர் எனத் தெரிவித்தார்.
இந்தக் காரணிகளைக் கருத்திற்கொண்டே கணிசமானோர் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் தங்களுக்கு நேர்ந்த அவலங்களைக் கூறுவதற்கு முன்வரவில்லை.
மக்கள் அன்று நினைத்த எதிர்வு கூறிய உண்மைகள், நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த பெண்ணிடம் சி.ஐ.டியினர் விசாரணை மேற்கொள்ளவுள்ள விடயம் அம்பலப்படுத்தியுள்ளது. இதனை ஒருபோதும் ஏற்கமுடியாது எனவும் தெரிவித்தார்.
**************
சுவீகரித்ததை மீள ஒப்படைக்கத் தயார்?
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சி பொறுப்பை ஏற்றுக் கொண்டால் சுவீகரிக்கப்பட்ட சொத்துக்களை மீளவும் உரிமையாளர்களிடம் வழங்கும் என பதில் எதிர்க்கட்சித் தலைவர் ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
அவசரமான சட்ட மூலமொன்றின் மூலம் அரசாங்கம் நட்டமடையும் சொத்துக்களை சுவீகரித்துக் கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.
சொத்துக்களை திடீரென சுவீகரித்து கொண்ட நடவடிக்கை ஓர் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாகவே கருதப்பட வேண்டும்.
அரசாங்கத்தின் இந்த எதேச்சாதிகார நடவடிக்கை குறித்து தற்போது வெளிநாட்டு விஜயம் செய்துள்ள கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க வெளிநாட்டுத் தலைவர்களுக்கு தெளிவுபடுத்தி வருவதாக ஜோன் அமரதுங்க தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க நாடு திரும்பியதன் பின்னர் இது தொடர்பில் கட்சி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
**************
அச்சுறுத்தப்படும் மாணவர்கள்
பல்கலைக்கழக வளாகங்களினுள் காவல்துறை காவலரண்கள் அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பல்கலைக்கழக வளாகங்களினுள் கலகங்கள் ஏற்படுவதனை தடுக்கும் நோக்கில் இவ்வாறு காவலரணங்கள் அமைக்கப்பட உள்ளதாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி .திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக காவல் நிலையங்கள் என்ற பெயரில் இந்த காவலரண்கள் இயங்கும்.
ஆண் பெண் காவல்துறை உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
காவலரண்களை அமைப்பது குறித்து ஏற்கனவே பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக வளவில் மாணவர்களுக்கு இடையில் ஏற்படக் கூடிய மோதல் நிலைமைகளை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, பல்கலைக்கழகங்களின் பாதுகாப்பு பொறுப்பை தனியார் பாதுகாப்புப் பிரிவினருக்கு வழங்கியமைக்கு மாணவர் அமைப்புக்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் காவல்துறையினர் பல்கலைக்கழகங்களினுள் கடமையாற்றுவது தொடர்பில் மாணவர்கள் அமைப்புக்களும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் அதிருப்தி வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
**************
புரட்சிக்கு அழைப்பு
இலங்கையில் சோசலிஸ புரட்சிக்கு ஜே வி பியின் கிளர்ச்சியாளர்கள் அறைகூவல் விடுத்துள்ளனர்.
அத்துடன் கட்சியின் ஸ்தாபக தலைவர்களை போன்று உயிர்தியாகம் செய்யவும் கட்சி உறுப்பினர்கள் தயாராகவேண்டும் என்று கிளர்ச்சியாளர்கள் கோரியுள்ளனர்.
கார்த்திகை வீரர்கள் தினத்தை ஜே வி பி நேற்று இரண்டு பிரிவாக அனுஸ்டித்தது.
சோமவன்ச தலைமையிலான குழு தனியாகவும் கிளர்ச்சிக்குழு தனியாகவும் இந்த நிகழ்வை அனுஸ்டித்தன.
கிளர்ச்சிக்குழுவின் நிகழ்வில் உரையாற்றிய சோசலிஸ மாணவர் அமைப்பின் அமைப்பாளர் சமிந்திர கொஸ்வத்த, முதலாளித்துவ நடைமுறையை தோற்கடிக்க இன்று உண்மை புரட்சி அவசியம் என்று குறிப்பிட்டார்.
அதற்கான போராட்டத்திற்கு ஆயத்தம் மேற்கொள்ளப்படவேண்டும்.
இதன்போது 1971 மற்றும் 1989 ஆண்டுகளில் இடம்பெற்றது போன்ற உயிர்களை தியாகம் செய்வதற்கு தயாராகவேண்டும் என்றும் கொஸ்வத்த தெரிவித்தார்.
சோமவன்ச தலைமையிலான ஜே வி பியின் நடவடிக்கைகளையும் அவர் கண்டித்தார்.
அத்துடன் கடந்த காலங்களில் ஜே வி பி தலைவர்கள், படைத்தரப்பினருடன் மோதிய சம்பவங்ளையும் அவர் நினைவுகூர்ந்தார்.
**************
விபசார விடுதி முற்றுகை
யாழ். நகரப்பகுதியில் நடத்திச் செல்லப்பட்டு வந்த விபச்சார விடுதி ஒன்றை முற்றுகையிட்ட காவல்துறையினர் அங்கிருந்த எட்டு ஆண்களையும், ஜந்து பெண்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்துள்ளனர்.
யாழ். நகரப்பகுதியில் உள்ள சுமங்கலி என்ற தனியர் விடுதியில் நீண்ட நாட்களாக விபச்சார நடவடிக்கை நடைபெற்று வந்துள்ளது.
யாழ்.காவல்துறையினரின் வேட்டையில் இந்த விபச்சார விடுதி முற்றுகையிடப்பட்டு உரிமையாளர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடுதி தமிழ் அரசியல் கட்சி ஒன்றின் முக்கியஸ்தர் ஒருவரினால் நடத்தப்பட்டு வந்துள்ளதாக யாழ்.காவல் நிலையத் தலைமை காவல் அதிகாரி சமன் சிகேர தெரிவித்துள்ளார்.
விபச்சாரத்தில் ஈடுபட்டவர்கள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டவர்கள் இன்று திங்கட்கிழமை யாழ்.நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
**************
சேவைப் புறக்கணிப்பு
தபால் மா அதிபர் எம்.கே.பி.திஸாநாயக்கவை உடனடியாக பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி தபால் சேவை தொழிற்சங்கங்களின் ஒன்றியம் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.
கொழும்பு மத்திய தபாலகத்தின் ஊழியர்கள் இன்று அதிகாலை முதல் சேவை புறக்கணிப்பில் ஈடுபட்டு வருவதாக ஒன்றியத்தின் ஊடகப் பேச்சாளர் கே.எம்.சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் திஸாநாயக்க தபால் மா அதிபராகக் கடமை புரிவாராயின் அவர் தபால் சேவையாளர்கள் மீது அடாவடித்தனமாக நடந்து கொள்வார் என பண்டார சுட்டிக்காட்டினார்.
எனவே தபால் மா அதிபரை உடனடியாக பணிநீக்கம் செய்து தகுதியான ஒருவரை நியமிக்க வலியுறுத்தி மத்திய தபாலகத்திற்கு முன்னால் இன்று உண்ணாவிரதப் போராட்டத்ததை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
**************
தீர்ப்பை நினைத்து கவலை கொள்ளும் முன்னாள் நீதிபதி!
ஆழிப்பேரலை அனர்த்த காலத்தில் நடைபெற்ற ஹெல்பிங் அம்பாந்தோட்டை நிதி மோசடி வழக்கில் மஹிந்த ராஜபக்ஷவுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டிருக்காவிட்டால், அன்றே அவர் அரசியலில் இருந்து ஒதுங்கியிருப்பார்.
இதில் கேள்விக்கே இடமில்லை என்று முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என்.சில்வா கருத்து வெளியிட்டுள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை மற்றும் தமக்கெதிராகச் சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் குறித்து அவர் மனம் திறந்து கருத்துகளை கூறியுள்ளார்.
தனது பதவிக்காலத்தில் இடம்பெற்ற விடயங்களைப் பற்றி விசாரணைகள் நடத்தப்படவேண்டுமென்ற அழுத்தத்தை அரசுத் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவே வழங்கி வருகிறார் என்று குற்றஞ்சாட்டிய முன்னாள் பிரதம நீதியரசர், நாடாளுமன்றத் தெரிவுக்குழு ஒன்றை அமைத்து தமக்கு எதிராக நடவடிக்கை எடுக்கமுடியாதென்றும் சுட்டிக்காட்டினார்.
**************
தாக்குதலுக்குள்ளான ஜே.வி.பி
ஜே.வி.பியின் உறுப்பினர்கள் ஏழு பேர் மீது ஆளுங்கட்சி அரசியல் பிரமுகர் ஒருவர் தலைமையிலான குழு நடத்தியிருக்கும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல், அரசமைப்பில் குறிப்பிட்டுள்ள அடிப்படை மனித உரிமைகள் மீதான தாக்குதலாகவே கருதவேண்டியுள்ளது என்று ஜே.வி.பி. விடுத்திருக்கும் அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கட்சி உறுப்பினர்கள் தாக்கப்பட்டமை குறித்து கண்டனம் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் கட்சிக்காக உயிர்நீத்த தோழர்களின் ஞாபகார்த்த விழாவுக்கான சுவரொட்டிகளை நேற்றுமுன்தினம் நொச்சியாகம நகரத்தில் ஒட்டிக்கொண்டிருந்த தமது கட்சி உறுப்பினர்கள் ஏழு பேர் மீது கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளனர்.
நொச்சியாகம பிரதேச சபையின் உப தலைவர் நளின் திஸாநாயக்க உட்பட்ட குழுவினர் இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
பொல்லுகளால் கடும் தாக்குதலுக்கு இலக்கான தோழர் கருணாரத்ன கடுமையான காயங்களுடன் நொச்சியாகம வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு பின்னர் அநுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருக்கிறார்.
இந்தத் தாக்குதல் குறித்து முறைப்பாடு செய்ய சென்றபோதும் நொச்சியாகம காவல்துறையினர் அதனை ஏற்றக்கொள்ளவில்லை.
இதனால் அநுராதபுரம் வைத்தியசாலை காவல்துறை பிரிவில் முறைப்பாட்டைச் செய்யவேண்டியேற்பட்டது.
மனிதச் சுதந்திரம், ஜனநாயக உரிமைகள் மற்றும் சட்டத்தின் நியாயாதிக்கத்தை முற்றுமுழுதாக ஒழித்துக்கட்டியிருக்கும் மஹிந்த ராஜபக்ஷ அரசு, ஆளுங்கட்சி உறுப்பினர்கள் வீதியில் கொலை செய்து மோதிக்கொள்ளும் நிலைமையை உருவாக்கி, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் முன்மாதிரியை நாட்டின்முன் வைத்துள்ளது.
இதனால் உத்வேகமடைந்துள்ள பிரதேச ரீதியான அரசியல் காடையர்கள் இவ்வாறான வன்முறைகளைச் செய்வது ஒன்றும் புதுமையான விடயமல்ல.
இவ்வாறான சூழ்நிலையில், நாட்டின் சட்டத்தை மீறுதல், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்தை இல்லாமற் செய்யும் அரசின் முயற்சியை தோல்வியடையச் செய்யவேண்டியதன் அவசியத்தை தாம் வலியுறுத்த விரும்புவதாக அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
**************